Thursday, 22 September 2016

தமிழ்நாட்டு சொத்து குவிப்பு வழக்கும் ஸ்ரீரெங்கனை தரிசிக்க வரும் கர்நாடக விஐபிகளும்


நான் எப்போதுமே ஃபேஸ்புக்கா, வலைப்பதிவா என்றால், வலைப்பதிவிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன். ஃபேஸ்புக்கை நேரம் கிடைக்கும் போது ஒரு ‘ஏரியல் பார்வை’ என்பதோடு சரி. இப்போது கொஞ்ச நாட்களாக எனக்கு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகம். எனவே வலைப் பக்கம் படிப்பதோடு சரி. அதில் பதிவுகள் எழுதவோ, மற்றவர்களூக்கு பின்னூட்டங்கள் போடவோ இயலாமல் போய் விட்டது.

ஃபேஸ்புக்கில்

எனவே, சும்மா நாலு வார்த்தைகள் கொண்ட ஒரு பதிவை எனது ஃபேஸ்புக் தளத்தினில் வெளியிட்டேன். அந்த பதிவும், அதற்கு மூத்த வலைப்பதிவர் திரு. நடனசபாபதி அவர்கள் தந்த பின்னூட்டமும் இங்கே.
 
/// உச்சநீதி மன்றமே உத்தர விட்டாலும், காவிரியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு தரக் கூடாது – என்று கர்நாடக அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் காவேரி பொறந்தது எங்க ஊர்தான் என்கிறார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி, கர்நாடக முன்னாள், இன்னாள் மத்திய, மாநில மந்திரிகளும் அடக்கம்.

அப்புறம் எதற்கு இவர்கள் தமிழ்நாட்டு சொத்து குவிப்பு (ஜெயலலிதா) வழக்கை மட்டும் பெங்களூரு கோர்ட்டில் நடத்த ஒப்புக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கன்னடம், தமிழ்நாடு என்று பிரித்துப் பேசும் இந்த கனவான்களில் பலர், சாமி கும்பிட மட்டும் தமிழ் நாட்டில் இருக்கும் ஸ்ரீரங்கம் வந்து , பரிவட்டம் கட்டிக் கொண்டு ரெங்கநாதனை தரிசித்து செல்வார்கள்.///

Nadanasabapathy Velayutham
Nadanasabapathy Velayutham சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவிற்கு மாற்றியது சென்னை உயர்நீதி மன்றம்.இதில் கன்னடர்களின் பங்கு எதுவும் இல்லை.
Thamizh Elango T
Thamizh Elango T அய்யா உங்க ஊரு வழக்கு, எங்களுக்கு எதற்கு என்று கர்நாடகம் , மறுத்து இருக்கலாம் அல்லது எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கலாம் அல்லவா?
Nadanasabapathy Velayutham
Nadanasabapathy Velayutham நீங்கள் சொல்வதும் சரிதான்.

காவிரி அரசியல்:

                                                      ( Picture courtesy: Indian Express)

இந்திய சுப்ரீம் கோர்ட் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டதால் கர்நாடகாவில் தீவிர கன்னட அமைப்புகள் கலவரம். சரி. ஒருவேளை கர்நாடகாவிற்கு ஆதரவாக உத்தரவு இருந்து இருந்தால்? அப்போதும் கலவரம்தான் செய்து இருப்பார்கள். எப்படி? தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பும். இங்கும் அங்குமாக சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்கும். இதனை எதிர்பார்த்து இருந்த தீவிர கன்னட அமைப்புகள் அப்போதும் கலவரம்தான் செய்வார்கள். இந்த காவிரி பிரச்சினையில் ஒளிந்து இருப்பது ஆட்சியைப் பிடிக்க கர்நாடக அரசியல்வாதிகள் நடத்தும் தமிழர், கன்னடர் என்று பிரித்துப் பார்க்கும் இனவாத அரசியல்.

தமிழ்நாட்டில் காவிரியை வைத்து யாரும் இனவாத அரசியல் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு பேர் செய்தாலும் இங்கு எடுபடுவதில்லை. 


காவேரி பொறந்தது:                                                                                                             

ஒரு பழைய எம்.ஜி.ஆர் படம். படத்தின் பெயர் பணக்கார குடும்பம்.  கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி கதாநாயகி. அந்த படத்தில் அவர் கல்லூரி மாணவியாக, கபடி விளையாடுவது போன்று ஒரு காட்சி. அதில் ஒரு பெண், 

காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தைப் பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டுப் பக்கம் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு சடுகுடு சடுகுடு

என்று தமிழ்நாட்டு புகழ் பாடுவார். அதற்கு மறுமொழியாக நம்ம சரோஜாதேவி


காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


என்று கர்நாடக புகழ் பாடுவார். பாடலை எழுதியவர் கவிஞர். கண்ணதாசன். தமிழ்நாட்டில் எப்போதுமே இவர் கன்னடர், இவர் தெலுங்கர், இவர் மலையாளி என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. எம்ஜிஆரைப் பார்த்தது போலவே பிறமொழி மக்களையும் நம்மில் ஒருவராகத்தான் நாம் நினைக்கிறோம்.

பாடலைக் கண்டு கேட்க இங்கே க்ளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=O98bLpYUOl4  
 

24 comments:

  1. வழக்கம்போல தங்கள் பாணியில், கண்ணதாஸன் பாடல் வரிகளையும் சேர்த்து, அழகான பொருத்தமான படத்துடன்கூட, மிகவும் அருமையான யோசிக்க வைக்கும் அசத்தலான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும், பாராட்டினுக்கும் நன்றி.

      Delete
  2. இந்த மாதிரி பிரச்சனைகள் வராமலிருக்க மைய்ய அரசு நீர்ப்பங்கீட்டினை எடுத்துக் கொள்ள வேண்டும் இவர்கள் குடிக்க நீர் இல்லை என்கிறார்கள் அவர்கள் பாசனத்துக்கு நீர் இல்லை என்கிறார்களிதில் இனவாத அரசியல் செய்வோர் குளிர் காய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல மைய்ய அரசு நீர்ப்பங்கீட்டினை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறைமையையும் எதிர்க்கிறார்கள்.

      Delete
  3. மிக மிக அருமையாக வித்தியாசமாக
    யோசித்துத் தந்த பதிவு
    ஆழமாக யோசிக்கவும் வைக்கிறது
    பாடலை உதாரணமாகச் சொன்னது அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  4. நதிகளைத் தேசிய மயமாக்க வேண்டும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. அனைத்தையும் அரசியலாக்கி குளிர்காய்கின்றார்கள். வேதனையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  6. இது கர்நாடக தமிழகப் பிரச்சினை இல்லை !மதவாத அரசியல் கட்சிக்கும் ,இனவாத கட்சிக்களுக்கும் நடக்கும் பிரச்சினை ஆகி விட்டது !அவர்களுக்கு அடுத்த தேர்தல்தான் குறி :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இந்துமத தீவிரவாதம் என்றால் பெங்களூரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப்பேர் இந்துக்களே. இனவாத அரசியல் என்றால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கர்நாடகத் தமிழர்கள் என்ன செய்ய முடியும்?

      Delete
  7. மய்ய அரசு உடனே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும். இல்லாவிடில் இதே நிலைதான் தொடரும். இன்றைய தகவல்படி மய்ய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அவகாசம் கேட்டு உச்ச நீதி மன்றத்தை அணுக இருக்கிறதாம். எல்லாம் கர்நாடகத்தில் வர இருக்கின்ற மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு என்பது ஊரறிந்த இரகசியம்.
    கடவுள் இந்த நாட்டை காப்பாற்றுவாராக!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  8. தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamiln.in/

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர் தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

      Delete
  9. அருமையான திறனாய்வுப் பார்வை

    ReplyDelete
  10. அருமையான பதிவு!

    இருக்கிற தமிழர்களில் பாதி பேர் பெங்களூரில் இருக்கிறார்கள். அப்புறம் எப்படி தம்ழ்நாட்டுக்கோவில்களை அவர்கள் தரிசனம் செய்யலாம் என்று நாம் கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! வேற்றுமையில் ஒற்றுமை, கோர்ட் நடவடிக்கைகளை மதிப்பது, இந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருத்தல் போன்ற விஷயங்களில், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய, முன்னாள் பிரதமர் தேவகவுடா போன்றவர்களும் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் எனக்கு இப்படி எழுதத் தூண்டியது.

      சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க இயலாவிடின், அதே கோர்ட்டில் அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மனு செய்யலாம். கர்நாடக மாநிலத்திற்கு எதிராக எதுவும் செய்யாத பெங்களூரு தமிழர்களை விரட்டுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை.

      Delete
  11. நல்ல பகிர்வு. சொல்லிச் சென்றவிதம் அருமை ஐயா.
    வேதனைதான் ஐயா. நடந்தாய் வாழிக் காவேரி என்று இலக்கியங்களில் ஆளுமை செலுத்திய காவிரித்தாய் இன்று அரசியலில் சிக்கிக் கொண்டிருக்கின்றாள்...

    பாடல் அருமை....

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  12. நல்லதொரு பகிர்வு. இயற்கை தந்த வரங்களை பகிர்ந்து கொள்ளாமல் அடித்துக் கொள்கிறோம். அதில் அரசியல்வாதிகள் குளிர்காய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete