Sunday, 23 September 2012

நானும் ஒரு போட்டோகிராபர் ஆனேன்.


சின்ன வயதிலிருந்து எனக்கு ஒரு கேமரா வாங்க வேண்டும் என்று ஆசை. போட்டோகிராபி என்பது அதிக செலவு (Photography is an expensive hobby  ) என்று சொல்வார்கள். சைக்கிள் ஆசையே நிறைவேறாத போது கேமரா மட்டும் கிடைத்துவிடுமா? சென்னையில் இருக்கும் எனது மாமாவிடம் (அத்தையின் கணவர்) ஒரு ஆஃபா கிளிக் ( Agfa Click) கேமரா ஒன்று இருந்தது. அவர் ஒரு அட்வகேட். ரொம்பவும் கண்டிப்பானவர். எனவே எனது அப்பா மூலமாக கொஞ்ச நாளில் திரும்பத் தருவதாகச் சொல்லி அந்த கேமராவை வாங்கினேன். இது நடந்தது நான் பிஏ இறுதி ஆண்டு படிக்கும்போது. 

ஆஃபா கிளிக்  கேமரா (AGFA CLICK CAMERA):

நான் எனது மாமாவிடமிருந்து இரவல் வாங்கிய அந்த ஆஃபா கிளிக் , ஜெர்மன் கேமரா ஆகும். அந்த கேமரா மூலம் 12 படங்கள் மட்டுமே எடுக்க முடியும். இப்போது போல் அப்போது போட்டோ கடைகள் அதிகம் கிடையாது. அதிலும் கறுப்பு வெள்ளை பட பிலிம்கள்தான் கிடைக்கும். 

அப்போது திருச்சி தெப்பகுளம் பகுதியில் வாணப்பட்டறை தெருவில் ஒரு போட்டோ கடை இருந்தது. அந்த கடையில் போட்டோ பிலிமை டெவலப் செய்து பிரிண்டும் போட்டுத் தருவார்கள். எப்போதும் அவர் கடை வாசலில் டெவலப் செய்த பிலிம் ரோல்கள் ஈரம் காய்வதற்காக தொங்க விடப்பட்டு இருக்கும். தண்ணீர் நிரம்பிய ட்ரேக்களில் பிரிண்ட் போட்ட போட்டோக்கள் இருக்கும். பெரும்பாலும் அந்த கடையில் பெரிய சங்கராச்சாரியார் படங்களை பிரிண்ட் போட்டு வண்ணம் தீட்டி விற்பனைக்கு வைத்து இருப்பார்கள். அந்த கடையில் வேலை செய்த நண்பர் ஒருவர், எனக்கு கேமராவில்  எப்படி பிலிம் மாட்ட வேண்டும் எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். ஏற்கனவே நான் வாங்கி வைத்து இருந்த அந்நாளில் பிரபலமாக இருந்த ORWO  கறுப்பு வெள்ளை பிலிமை கேமராவில் மாட்டியும் கொடுத்தார். படம் எடுக்க வேண்டிய முறைகளையும் சொல்லிக் கொடுத்தார்.

நான் அந்த கேமராவை எடுத்துக்  கொண்டு எனது பாட்டி ஊருக்குச் சென்றேன். கொள்ளிடம் ஆறு, மரங்கள், பக்கத்து ஊரான திருக்கானூர் சிவன் கோவில், உறவினர்கள் என்று ஆசைதீர படம் எடுத்தேன். அந்த கேமராவில் எதிர் வெய்யிலில் படம் எடுத்தால் மட்டுமே நன்றாக இருக்கும். எல்லாம் கறுப்பு வெள்ளைதான். எனது போதாத நேரம் 1977 நவம்பர் வெள்ளத்தின் போது அந்த காமிராவில் சேறு புகுந்து பயன்படாமல் போய்விட்டது. அந்த அட்வகேட் மாமாவிடம் எதிர்பார்த்த திட்டு கிடைத்தது. கேமரா ஆசை போய் விட்டது.

நேஷனல் 35 எம்.எம் ( National C-300EF ) கேமரா:

அப்போது திருச்சி பர்மா பஜாரில் விதம் விதமான சின்ன பெரிய வெளிநாட்டு கேமராக்கள், பிலிம் ரோல்கள் தாராளமாக கிடைத்தன. எனது நண்பர் ஒருவர் நேஷனல் 110 கேமராவை வைத்து ஒரு சின்ன நிகழ்ச்சியை படம் எடுத்தார். கேமராவைப் பார்த்ததும் மறுபடியும் கேமரா மீது ஆசை. அப்போது நான் வேலையில் சேர்ந்து இருந்த நேரம். எனவே பர்மா பஜாரில் எனக்குத் தெரிந்தவர் மூலம் நேஷனல் 110 கேமராவுக்கு சொல்லி வைத்தேன். அவர் 110 வேண்டாம் என்று சொல்லி நேஷனல் 35 எம்.எம் என்ற பிலிம் கேமராவைப் பற்றி சொல்லியும், National C-300EF என்ற கேமராவை வாங்கியும் கொடுத்தார்.

அந்த கேமரா மூலம் ஆசை தீர வண்ணப் படங்களை எடுத்தேன். ஆட்டோ ப்ளாஷ் கேமரா என்பதால் பிரச்சினை இல்லை. அதற்குத் தகுந்தாற் போல அப்போது திருச்சியில் கலர் போட்டோ டெவலப்மெண்ட் கடைகள் வரத் தொடங்கிவிட்டன. கிராமத்தில் ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றால் நான் எனது கேமராவில் பதிவு செய்து, கடையில் பிரிண்ட் போட்டு கொடுப்பேன். பணம் வாங்க மாட்டேன். அதே போல கிராமத்து வயதானவர்களை படம் எடுத்து அவர்கள் வீட்டாருக்கு கொடுத்து விடுவேன். பின்னாளில் அந்த பெரியவர்கள் மறைந்தபோது அவ்வாறு எடுத்த படங்கள் அவர்களுக்கு நினைவஞ்சலி செய்ய உதவியாக இருந்தன. சிலர் பழைய படங்களில் இருக்கும் வயதானவர்களை மட்டும் பெரிதாக பிரிண்ட் போட்டு அனுப்பச் சொல்வார்கள். கிராமத்து சொந்தங்கள் என்பதால்  யாரிடமும் இதற்காக பணம் வாங்கியதில்லை.  

யாஷிகா எஃப் எக்ஸ் 3 சூப்பர் (YASHICA  FX 3 SUPER) கேமரா:

போட்டோகிராபி மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை நிறைய படிக்க வாங்கினேன். இது சம்பந்தமாக நான் வாங்கிய போட்டோகிராபி நூல்கள் விவரம் இதோ ( இப்போது இவைகள் கடையில் கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை)

செய்முறை புகைப்படக்கலை S. தியாகராஜன்
ஒளிப்படம் பிடிக்கும் கலை எம்.எஸ்பி.சண்முகம்
போட்டோ கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
        மணிமேகலை பிரசுரம்
கேமராவின் கதையும் அதன் வகைகளும்
        மணிமேகலை பிரசுரம்
THE 35MM HAND BOOK   -  Michael  Freeman
THE 35MM PHOTOGRAPHERS HANDBOOK  - Julian Calder and John Carrett
THE FOCAL GUIDE TO CAMERAS – Clyde Reynolds
THIS IS PHOTOGRAPHY ITS MEANS AND ENDS
                                                             – Thomas H.Miller And Wyatt Brummitt
PHOTOGRAPHY MADE SIMPLE – Derek Bowskill
THE RIGHT WAY TO USE A CAMERA – Laurence Mallory
HOW TO BECOME AN EXPERT IN PHOTOGRAPHY – Nirmal Pasricha
TAKING PHOTOS – Lu Jeffery
PRACTICAL  PHOTOGRAPHY   -  O.P.Sharma
PRACTICAL  PHOTOGRAPHY   -  S. Thiagarajan

தபால் மூலம் போட்டோகிராபி கற்றுக் கொள்ள ஆசைப் பட்டு கலைமதி நிலையம் ( நஞ்சைத் தலையூர், ஈரோடு மாவட்டம் ) மூலம் பாடங்கள் படித்தேன். மற்றும் Amateur Photography போன்ற இதழ்களையும் வாங்கினேன். எனவே பெரிய கேமரா வாங்கும் ஆசை வந்தது. அடிக்கடி சிங்கப்பூர் சென்று வரும் பர்மா பஜார் நண்பரிடம் சொல்லி யாஷிகா எஃப் எக்ஸ் 3 சூப்பர் கேமரா ஒன்றை வாங்கினேன். கூடவே மறக்காமல் நேஷனல் ப்ளாஷ் ஒன்றையும் வாங்கினேன். அந்த கேமரா மற்றும் புத்தகங்கள் வழியாக போட்டோ கிராபியின் பல நுட்பங்களை தெரிந்து கொண்டேன். அலுவலக நிகழ்வுகள், திருமண நிகழ்ச்சிகள், தொழிற்சங்க மாநாடுகள், சுற்றுலா என்று பலவற்றிற்கு இந்த கேமரா உதவியது. எனது நேரம் கேமராவில் சிறு பிரச்சினை. திருச்சியில் பிரபலமான போட்டோ சர்வீஸ் செய்பவர் வெளியூர் சென்று வர நாட்கள் ஆகும் என்றதால் இன்னொருவரிடம் கொடுத்தேன். அவர் சரியாக பார்க்கவில்லை. மேலும் பழுதாக்கி விட்டார். இப்போதும் அந்த கேமரா வீட்டில் அப்படியே உள்ளது. 


கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800)  

சில வருடம் போட்டோ எடுபபதையே விட்டுவிட்டேன். இப்போது Canon Powershot A800  என்ற கேமராவை எனது வலைப் பதிவு உபயோகத்திற்காக வாங்கியுள்ளேன். வலைப்பதிவில் படங்களை இணைப்பதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் இதன் தொழில் நுட்பம் நன்றாகவே உள்ளது. வீடியோ வசதியும் உள்ளது

போட்டோகிராபி என்பது இப்போது ரொம்பவும் எளிமையாக உள்ளது. முன்புபோல் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. எல்லாமே ஆட்டோமேட்டிக் டிஜிடல் தொழில் நுட்பம். ஒரு கேமரா இருந்தால் போதும். ( குறிப்பு: பிலிம் ரோலில் இருக்கும் நான் எடுத்த பழைய படங்களை CD  ஆக மாற்ற நேரமும் காசும் அதிகம் ஆகும் என்பதனால் இங்கு இணைக்கவில்லை. Canon Powershot A800 இல் எடுத்த பல படங்கள் எனது பதிவுகளிலேயே உள்ளன. )   

( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” ) *National C-300EF கேமராவின் படம் மட்டும் என்னால் எடுக்கப்பட்டது)


 42 comments:

 1. நானும் இதையெல்லாம் கடந்து வந்ததை நினைத்து
  மகிழ்வு கொண்டேன்
  அப்போதுபடங்கள் எடுத்துவிட்டு
  அது கழுவிப் பார்க்கும் வரையில் இருக்கும்
  ஆர்வமும் பதட்டமும்
  இப்போது இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. போட்டோக்ராபி கரைத்து குடித்திருக்கிறீர்கள்.பழைய கேமரா அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறீர்கள்.அவற்றை அவ்வளவாக நாங்கள் அறிந்ததில்லை.

  ReplyDelete
 3. தமிழ் இளங்கோ சார்,

  ஒளி ஓவியரா நீங்கள் :-))

  அக்காலத்தில் ஒன்றை செய்யனும் என்றால் பெரும்பிராயத்தனம் செய்ய வேண்டியது இருக்கும் என்பது தெரிகிறது.

  எனக்கும் கொஞ்சமே போட்டோகிராபியில் ஆர்வமுண்டு, ஆனால் பெரிதாக மெனக்கெடுவதில்லை, பெட்டர் போட்டொகிராபி என்ற ஒரு மேகசைன் மட்டும் தான் படித்தது,எனக்கு அதுவே ரொம்ப அதிகம் :-))

  என்னோட அனுபவத்திலேயே சாதாரணமான பாய்ண்ட் அன்ட் ஷூட் கேமராவில் படம் எடுத்துவிட்டு பிரின்ட் போட அலைந்த அனுபவம் எல்லாம் உண்டு.ஆனால் நல்ல வேளையாக சில ஆண்டுகளில் டிஜிட்டல் வந்து காப்பாற்றிவிட்டது.

  இப்போது சோனி சைபர் ஷாட் என்ற ஒன்றில் காலம் தள்ளுகிறேன். ஆனால் மொபைல் போன் தான் நல்லா கை கொடுக்கிறது.

  ReplyDelete
 4. //இது நடந்தது நான் பிஏ இறுதி ஆண்டு படிக்கும்போது. //

  ஹி..ஹி எல்லாருக்கும் கல்லூரி போனப்பிறகே கேமிரா மேல ஆசை வருவதேன் ?

  கல்லூரியில் முதலாண்டு டூர் போகும் போது தான் காமிரா இல்லையேன்னு ஃபீல் ,ஆகி அடுத்த டூருக்குல் ஒரு டப்பா கேமராவச்சும் வாங்கிடணும்னு கோடாக்.கே.பி20 என நினைக்கிறேன் வாங்கி ஆசையை தீர்த்துக்கொண்டேன்.

  ReplyDelete
 5. REPLY TO ….. Ramani said...

  // அப்போதுபடங்கள் எடுத்துவிட்டு
  அது கழுவிப் பார்க்கும் வரையில் இருக்கும்
  ஆர்வமும் பதட்டமும் இப்போது இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை //

  உண்மைதான்! இப்போது கையில் கேமரா மட்டும் இருந்தால் போதும். கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 6. REPLY TO ….. T.N.MURALIDHARAN said...
  அன்பரின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 7. REPLY TO ….. வவ்வால் said... ( 1, 2 )

  // ஒளி ஓவியரா நீங்கள் :-)) //
  போட்டோகிராபருக்கு நல்ல பெயர் ஒளி ஓவியர். பேராசிரியர் நன்னனிடம் கேட்க வேண்டும்.

  // படம் எடுத்துவிட்டு பிரின்ட் போட அலைந்த அனுபவம் எல்லாம் உண்டு.ஆனால் நல்ல வேளையாக சில ஆண்டுகளில் டிஜிட்டல் வந்து காப்பாற்றிவிட்டது. //

  காலம் மாறுது. இப்போது எல்லாமே எளிமையாகி விட்டது.

  // ஹி..ஹி எல்லாருக்கும் கல்லூரி போனப்பிறகே கேமிரா மேல ஆசை வருவதேன் ? //

  சின்ன வயதில் சைக்கிள் ஆசை போலத்தான். அப்போதெல்லாம் சொந்த மாமன் மகளே என்றாலும் கையில் கேமரா இருக்கிறது என்பதற்காக உடனே படம் எடுத்து விடமுடியாது. BETTER PHOTOGRAPHY இப்போதும் வந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 8. இனிய நினைவலைகள். உங்களுக்கும் இந்த துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது....

  புதிய புகைப்படக் கருவி வாங்கியதற்கு வாழ்த்துகள்.

  பின் குறிப்பு: தற்போது திருச்சி வந்திருக்கிறேன். உங்கள் அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். முடிந்தால் சந்திப்போம்!

  ReplyDelete
 9. அனுபவம் பேசுகிறத அழகிய நினைவூட்டல் தங்களின் ஆர்வம் புலனாகிறது.

  ReplyDelete
 10. REPLY TO …. … வெங்கட் நாகராஜ் said...
  தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி! எனது செல்போன் எண்ணை மின்னஞ்சலில் தெரிவித்துள்ளேன். தங்களது திருச்சி பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. REPLY TO …. … Sasi Kala said...
  சகோதரி தென்றல் சசிகலாவின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 12. ஏனோ தெரியவில்லை படம் பிடிக்கவோ என்னைப் படம் எடுத்துக் கொள்ளவோ விரும்பியதில்லை. தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது!

  ReplyDelete
 13. தங்களின் ஆர்வத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது சார்...

  /// குறிப்பு: பிலிம் ரோலில் இருக்கும் நான் எடுத்த பழைய படங்களை CD ஆக மாற்ற நேரமும் காசும் அதிகம் ஆகும் என்பதனால் இங்கு இணைக்கவில்லை. ///

  Windows Movie Maker உபயோகித்து பாருங்கள்... மிகவும் எளிது...

  ReplyDelete
 14. அழகிய நினைவூட்டல் சார்! நானும் கலர் புகைப்படம் எடுக்கக்கூடிய பழைய கேமராவில் புகைப்படம் எடுத்திருக்கிறேன் அதில் அந்த ரோல் கழுவி வரும் வரை அத்தனை ஆர்வமாக இருக்கும்! இன்றோ அப்பொழுதே படத்தை பார்த்து அப்பவே மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்!

  ReplyDelete
 15. REPLY TO …. … புலவர் சா இராமாநுசம் said...
  புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 16. REPLY TO …. … யுவராணி தமிழரசன் said..

  // நானும் கலர் புகைப்படம் எடுக்கக்கூடிய பழைய கேமராவில் புகைப்படம் எடுத்திருக்கிறேன் அதில் அந்த ரோல் கழுவி வரும் வரை அத்தனை ஆர்வமாக இருக்கும்! இன்றோ அப்பொழுதே படத்தை பார்த்து அப்பவே மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்! //

  முன்பு படம் எடுத்து மற்றவர்கள் கையில் கொடுத்து காத்து இருக்க வேண்டி இருந்தது. இன்று எல்லாமே நம் கையில்.கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 17. REPLY TO …. … திண்டுக்கல் தனபாலன் said...
  // Windows Movie Maker உபயோகித்து பாருங்கள்... மிகவும் எளிது...//

  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தாங்கள் குறிப்பிட்ட Windows Movie Maker பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. உபயோகித்துப் பார்க்கிறேன் (கூகிளில் தேட வேண்டும்). தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 18. அன்புள்ள ஐயா, வணக்கம். தாமதமான வருகைக்கு முதலில் என்னை மன்னிக்கணும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

  நீங்கள் எழுதியுள்ளவை யாவும் சூப்பரோ சூப்பர்.

  இதில் நிறைய நானும் அனுபவப்பட்டுள்ளேன். அவஸ்தைகள் பட்டுள்ளேன்.

  தொடரும்......

  ReplyDelete
 19. 2]

  இன்றைய இளைஞர்களுக்கு நாம் சொல்லும் இவையெல்லாம் ஒன்றுமே புரியாது.

  செல்போனிலும், டிஜிடல் கேமராவிலும், வீடியோவிலும் புகைப்படம் எடுத்து உடனே சுடச்சுடப் பார்க்கும் வசதிகள், அதுவும் கலர்கலராகப் பார்க்கும் வசதி வாய்ப்புக்களை இன்றைய 2-3 வயது குழந்தைகள் கூட பெற்றுள்ளன.

  தொடரும்.....

  ReplyDelete
 20. நமக்குத்தான் அன்று எந்த வசதிகளும் இல்லை.

  1972 இல் திருமணம். கலர் போட்டோ எடுக்கும் முறை வரவே இல்லை. வீடியோ இந்தியாவில் எங்குமே கிடையாது.

  ப்ளாக் அண்டு ஒயிட் மட்டுமே. தாங்கள் சொல்வது போல போட்டோ எடுத்து ஃபிலிமைக் காயவைத்து உலர்த்தி, பிரிண்ட் போட்டு அவர்கள் நம் கண்ணில் காட்டுவதற்கே 10-15 நாட்கள் ஆகும். நெகடிவ் ஆகிய ஃபிலிமையும் கெஞ்சினாலும் நம்மிடம் தரமாட்டார்கள்.

  தொடரும்......

  ReplyDelete
 21. 4] சமீபத்தில் 1997 இல் என் பெரிய மகன் [அவனுக்கு அப்போது வயது 23 மட்டுமே] ஜெர்மனிக்குச் சென்று வந்தான்.

  உலகப்பிரசித்தி பெற்ற கேமரா என ஒன்று விலை அதிகமாக வாங்கி வந்திருந்தான்.

  அதுவும் ஃபிலிம் லோடு செய்து படம் எடுக்கும் கேமரா தான்.

  ஒரு முறை ஃபிலிம் போட்டால் 36 முதல் 40 படங்கள் மட்டும் எடுக்கலாம். பிறகு அதை கவனமாக திரும்ப சுற்ற விட்டு, இருட்டில் அன்லோடு செய்து, அதற்கான ஒரு டப்பியில் அடைத்து, வெளிச்சம் ஊடுருவிச் செல்லாமல், ஸ்டூடியோவுக்குக் கொண்டு போய் கொடுத்து பிரிண்ட் போட்டு வருவோம்.

  1997 இலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலும், டிஜிடல் கேமரா புழக்கத்தில் இல்லை என்பதைச் சொல்ல மட்டுமே இதை இங்கு எழுதுகிறேன்.

  இருந்திருந்தால் என் மகன் நிச்சயமாக அதைத்தான் வாங்கியிருப்பான்.

  அவன் எதுவுமே Costly + Latest Technology யாகப் பார்த்து தான் வாங்குவான்.

  தொடரும்......

  ReplyDelete
 22. 5]

  அந்த ஜெர்மன் கேமரா வந்த புதிதில் எங்கள் குடும்பத்தில் தான் எத்த்னை மகிழ்ச்சி! ;))))) அனாவஸ்யமாக தினமும் எதையாவது போட்டோ பிடித்துக்கொண்டே இருப்போம்.

  அதன் பிறகு துபாயிலிருந்து அவன் ஒவ்வொரு வருடம் வரும்போதும் ஒவ்வொரு கேமராவாக் புதிது புதிதாக எடுத்து வருவான். பழசு என்னாச்சு என்று நான் கேட்பேன். தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டாச்சு என்பான்.

  எனக்கும் என் மருமகள் சென்ற ஆண்டு மிகச்சிறந்த டிஜிடல் கேமரா கொடுத்திருக்கிறாள்.

  அதற்கு முந்திய ஆண்டு அவள் எனக்குக் கொடுத்ததும் என்னிடம் பத்திரமாக உள்ளது.

  அதைவிட இது சூப்பர் என்று சொன்னாள். நிஜமாலும் சூப்பராகவே உள்ளது. என்னிடமெ இப்போது 2 கேமராக்கள் புத்தம் புதிதாக உள்ளன.

  தொடரும் ......

  ReplyDelete
 23. 6]

  சமீபத்தில் ஒரு நாள் என் வீட்டுப் பரணையை சுத்தப் படுத்தினோம். அதில் ஓர் எலிகூடு இருந்தது. தூக்கினால் கனமாக இருந்தது. உள்ளே பெருச்சாளி போல பெரிய எலி ஏதும் விழுந்துள்ளதோ என பயமாகி விட்டது.

  திறந்து பார்த்தால் உலகப்பிரஸித்தி பெற்றதாக என் மகன் 1997 இல் ஜெர்மனியிலிருந்து வாங்கி வந்த கேமரா + அதன் உரை + அதற்கு ஒரு சின்ன ஸ்டாண்ட் [அதாவது நம்மை நாமே போட்டோ எடுத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட ஸ்டாண்ட் அது] எல்லாம் சப்ஜாடாக ஒரே புழுதியுடன் கிடைத்தது.

  பிறகு நானும் அதை குப்பைத்தொட்டிக்குத் தான் அனுப்பினேன். அப்போது நினைத்துக்கொண்டேன்.

  இது நம் வீட்டுக்கு வந்த அன்று அனைவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி அளித்தது. அடுத்தடுத்து எவ்வளவு செலவுகள் செய்தோம். [ஃபிலிம் வாங்க, பேட்டரி வாங்க, பேட்டரி சார்ஜர் வாங்க, ஃபிலிம் கழுவ, பிரிண்ட் போட, ஃப்ரேம் அல்லது லாமினேட் செய்ய என எவ்வளவு செலவு செய்திருப்போம்! ]

  இன்று சுமார் 15 ஆண்டுகளுக்குள் எவ்வளவு நவீனங்கள் வந்துள்ளன! மிகவும் ஆச்சர்யமாகத் தான் உள்ளது.

  பழைய நினைவலைகளைக் கிளறிவிட்டு, மிகவும் நல்ல பதிவாக எழுதியுள்ளீர்கள், ஐயா.

  என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள்
  VGK

  ReplyDelete
 24. REPLY TO ….. வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, 3, 4, 5, 6 )

  திரு VGK அவர்களின் அன்பான வருகைக்கு நன்றி!

  // இன்றைய இளைஞர்களுக்கு நாம் சொல்லும் இவையெல்லாம் ஒன்றுமே புரியாது. //

  உண்மைதான். இன்றைய இளைஞர்கள் கேமராவின் லென்ஸ் வகைகளைக் கூட தெரிந்து கொள்ள ஆசைப்படுவதில்லை.

  // நெகடிவ் ஆகிய ஃபிலிமையும் கெஞ்சினாலும் நம்மிடம் தரமாட்டார்கள். //

  சின்னவயதில் ஸ்டுடியோக்களில் நான எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்கள் பல என்னிடம் இப்போது இல்லை. மீண்டும் பிரிண்ட் போடலாம் என்றால் அந்த பிலிம் நெகடிவ்கள் இல்லை. அந்த புகைப்பட ஸ்டுடியோக்களும் இல்லை.

  // அந்த ஜெர்மன் கேமரா வந்த புதிதில் எங்கள் குடும்பத்தில் தான் எத்த்னை மகிழ்ச்சி! ;))))) அனாவஸ்யமாக தினமும் எதையாவது போட்டோ பிடித்துக்கொண்டே இருப்போம். //.

  நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் போட்டோகிராபியில் ஆர்வம் கொண்டவர்கள் என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சியாவே உள்ளது.

  உங்கள் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!  ReplyDelete
 25. நல்ல நினைவலைகள்.. இப்போது டிஜிட்டல் காமிரா இருக்கிறதென்றால் மறுபடியும் புகைப்படக் கலையில் கலக்கலாமே..

  ReplyDelete
 26. REPLY TO ….. அமைதிச்சாரல் said...
  போட்டோகிராபியில் ஆர்வம் மிக்க சகோதரியின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி! தங்கள் அன்பான ஆலோசனைக்கும் நன்றி!

  ReplyDelete
 27. உங்கள் பதிவு பல பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டது.
  அந்தக் காலத்தில் என் மாமா ஒருவர் தனது கருப்பு வெள்ளை காமிராவில் கவிதையே எழுதுவார்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 28. REPLY TO ….. Ranjani Narayanan said...

  // உங்கள் பதிவு பல பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டது.//

  மிக்க மகிழ்ச்சி! சகோதரி ரஞ்சனி நாராயணன் (http://ranjani-narayanan-ranjani.blogspot.in) கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 29. ரசித்தேன். நானும் கேமரா மேல் காதல்கொண்டு பல அட்வென்ட்சர்கள் செய்து இப்போதுதான் சோனி டிஜிடல் கேமரா வாங்கியுள்ளேன்.

  ReplyDelete
 30. REPLY TO ……. பழனி.கந்தசாமி said...

  அய்யா வணக்கம்! தாங்களும் தங்கள் போட்டோகிராபி அனுபவங்களை தங்களுக்கே உரிய நகைச்சுவை நடையில் எழுதலாமே. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 31. awesome post... prob in tamil font will come back soon.

  ReplyDelete
 32. REPLY TO ……. ஷைலஜா said...
  தங்கள் கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 33. போட்டோகிராபி என்பது இப்போது ரொம்பவும் எளிமையாக உள்ளது. முன்புபோல் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. எல்லாமே ஆட்டோமேட்டிக் டிஜிடல் தொழில் நுட்பம். ஒரு கேமரா இருந்தால் போதும்.

  இப்போது காமிராவுடன் கூடிய செல்போன் இல்லாத குழந்தைகளை பார்க்கமுடிவதில்லை..

  ReplyDelete
 34. REPLY TO … … .. இராஜராஜேஸ்வரி said...

  இன்றைய கால கட்டத்தில் நவீனமான எளிதில் கிடைக்கக்கூடிய கேமராக்களின் வருகையால் உண்மையிலேயே PHOTOGRAPHY MADE SIMPLE ஆகத்தான் உள்ளது. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 35. அன்புள்ள ஐயா,
  உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

  இணைப்பு:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
  வருகை தருக!

  நன்றி!

  ReplyDelete
 36. REPLY TO ……. Ranjani Narayanan said...

  வணக்கம்! நான்காம் நாள் வலைச்சரத்தில் எனது வலைப் பதிவினை அறிமுகப்படுத்திய சகோதரி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு நன்றி!
  ReplyDelete
 37. அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான அனுபவக் கட்டுரை - புகைப்படம் - புகைப்படக் கருவி பற்றிய கட்டுரை - கருவியின் வரலாறு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 38. REPLY TO … …cheena (சீனா) said...
  அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! தங்கள் நல்வாழ்த்துக்களை பெற்றமைக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 39. வணக்கம் நல்ல பகிர்வு ,.... மிக்க நன்றிங்க நானும் திருச்சியில்தான் வசிக்கின்றேன்..

  ReplyDelete
 40. வலைப் பதிவரான தாங்கள் திருச்சிக்காரர் என்பதில் மிக்க மகிழ்ச்சி! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


  ReplyDelete
 41. உங்கள் கதையேதான் என்னுடையது. கேமராவால் நிறைய அவமானங்களைச் சந்தித்துள்ளேன்... பெருமையும் பெற்றுள்ளேன்.

  ReplyDelete