Friday, 11 March 2016

தேனம்மை அவர்களுக்கு நன்றி.



நான் எனது வலைத்தளத்தில் பிறரது படைப்புகளை மேற்கோள்களாக எடுத்துக் கையாளும்போது , அவர்களுடைய பெயரையோ அல்லது அவர்களது இணையதள முகவரியையோ சுட்டுவது வழக்கம். யாருடைய முழு படைப்பையும் எனது படைப்பாக போட்டுக் கொண்டதில்லை. படங்களை வெளியிடும்போது எடுத்தவர் விவரம் சரியாகத் தெரியாவிடின், பொதுவாக கூகிளுக்கு நன்றி என்று சொல்லி விடுவேன்.

திருமதி இராஜராஜேஸ்வரி மறைவு:

அண்மையில் கண்ணீர் அஞ்சலி! - பதிவர் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள் மறைவு! http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_6.html என்று ஒரு பதிவு ஒன்றினை எனது வலைத்தளத்தில் எழுதி இருந்தேன். அவரது புகைப்படத்தை பதிவினில் இணைப்பதற்கு அவரது வலைத்தளதில் , அவரது தன்விவரத்தில் (PROFILE) அவருக்கே உரிய தாமரை படம் மட்டுமே இருந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் அவரது தளத்தில் அவரது படங்களை பார்த்ததாக நினைவு; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனவே எங்கள் கம்ப்யூட்டரில்  ஒரு போல்டரில் சேமித்து  வைத்து இருந்த அவரது படத்தினை இணைத்து வெளியிட்டேன். எனினும் அது அவரது படம்தானா அல்லது வேறு ஒருவருடைய படமாக இருந்தால் பிரச்சினையாகி விடுமே என்பதால், எனக்கு நன்கு பழக்கமான மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடம் இதுபற்றி போனில் பேசியபோது,, இராஜராஜேஸ்வரி மறைவுச் செய்தியைக் கேட்டதும் தான் ரொம்பவும் அதிர்ச்சியாகி விட்டதாகவும், தான் கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்தவுடன், வீட்டில் உள்ளவர்களும் ரொம்பவும் வருத்தம் அடைந்ததாகவும் சொன்னார். மேலும் எனது பதிவினில் உள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் மின்னஞ்சல் செய்வதாகவும் தெரிவித்தார்.

மின்னஞ்சல் செய்தி:

அவ்வாறே திரு V.G.K. அவர்களும் எனக்கு கீழ்க்கண்டவாறு , உடனேயே மின்னஞ்சல் செய்தார்.

/// Dear Sir, தாங்கள் இன்று வெளியிட்டுள்ள படமே இதோ இந்தப்பதிவினில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.  http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்.              அன்புடன் VGK ///

நானும் உடனே எனது பதிவினில் அன்றே புகைப்படத்தின் கீழ் courtesy என்று தேனம்மையின் வலைத்தளம் பெயரை சுட்டி இருந்தேன். இதனை மற்ற வலைப்பதிவர்களின் அஞ்சலி கட்டுரைகளில் கருத்துரை தெரிவித்த பலர் சரியாக கவனிக்கவில்லை என்பது அவர்களது கருத்துக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே, அதன் பிறகு எனது பதிவினில் கீழே உள்ள பிற்சேர்க்கையை இப்போது இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை (10.03.16) – தேனம்மைக்கு நன்றி!

ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கென்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கிய புதிதில், தமிழ்மணம் படிக்கத் தொடங்கியதிலிருந்து வலைப்பதிவர்களின் புகைப்படங்களை அவ்வப்போது ஒரு போல்டரில் சேமித்து வைத்து இருந்தேன். ஒருமுறை கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறில் எல்லாமே அழிந்து விட்டன; இப்போது மறுபடியும் அதே தவறு நேராதிருக்க, அவ்வப்போது பென்டிரைவிலும் சேமித்து விடுகிறேன். 

மேலே உள்ள திருமதி இராஜராஜேஸ்வரி படத்தை , சகோதரி தேனம்மை லட்சுமணன்  அவர்களது பதிவினில் இருந்துதான் எடுத்து சேமித்து வைத்து இருந்தேன். மேலே எனது பதிவினிலும், பதிவை வெளியிட்ட அன்றே  இதனை குறிப்பிட்டு இருக்கிறேன். (PICTURE COURTESY: http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html) ஆனாலும் சில நண்பர்கள், முதன்முதல் நான்தான் இந்த படத்தை வெளியிட்டது போலவும், சிலர் நான் இதுபற்றி எதுவும் குறிப்பிடாதது போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். எனவே மேற்கொண்டு விவரம் வேண்டுவோர்  ”சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்’ என்ற மேலே சொன்ன தேனம்மை பதிவினுக்கு சென்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது பேட்டியினை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் ’சாட்டர்டே ஜாலி கார்னர்’ என்ற தலைப்பின் கீழ், பல வலைப்பதிவர்களின் பேட்டிகளை , அவர்களது படங்களோடு வெளியிட்டு வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் மறைந்த ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புகைப்படத்தையும் பேட்டியையும் வெளியிட்டு இருந்த தேனம்மை அவர்களுக்கு நன்றி!