Wednesday, 9 March 2016

திருச்சி – புத்தகத் திருவிழா 2016



ஒவ்வொரு வருடமும், திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்போதும், “போகாமல் இருந்தால்தான் என்ன?” என்று தோன்றும். ஆனால், புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளை படித்ததும் அங்கு போகாமலோ அல்லது ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்காமலோ இருக்க முடிவதில்லை. இந்த வருடமும் அப்படித்தான். அதிலும் பாபாஸி (BAPASI) திருச்சியில் நடத்தும் முதல் புத்தகத் திருவிழா என்பதால் போகாமல் இருக்க இயலவில்லை.

மக்கள் வெள்ளம்:

எனவே நேற்று மாலை, ( 08.03.2016 – செவ்வாய்), நாங்கள் இருக்கும் கே.கே.நகரிலிருந்து பஸ்ஸில் தில்லைநகர் வந்து, அங்கிருந்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில்  உக்கிரகாளியம்மன் கோயில் எதிரில் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற, திருச்சி புத்தகக் கண்காட்சிக்கு (TRICHY BOOK FAIR) நடந்து சென்றேன். அதற்கு முன்னால் வீட்டில் ’தி இந்து தமிழ்’ பத்திரிகையில் புத்தக கண்காட்சி பற்றி வந்த செய்திகளை மீண்டும் படித்தேன். திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களும் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதில், 

/// அன்புள்ள தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு, வணக்கம். நம்பூவனம்வலைப்பதிவர் திரு. ‘ஜீவிஐயா அவர்கள் சமீபத்தில் சந்தியா பதிப்பகம் மூலம் ஒரு மிகச்சிறந்த நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்புமறக்க முடியாத தமிழ் எழுத்துலகம் .பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா.வரைஜீவி 264+4=268 பக்கங்கள் - விலை ரூ. 225 மேற்படி நூலின் மேல் அட்டைப்படத்தை இத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.  

ஸ்டால் நெ.   86 & 87 திருச்சிதென்னூர் மாநகராட்சி மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகக்கண்காட்சியில் இந்த நூல் கிடைக்கும்புத்தகக் கண்காட்சி  இந்த மாதம் 13ம் தேதி வரை மட்டும் நடைபெறும் என்று தெரிகிறதுஇது, புத்தகப்பிரியரான தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அதில் அவரால் எழுதப்பட்டுள்ள தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. இதைப்பற்றி என் பதிவினில் விரைவில் எழுதலாம் எனவும் நான் நினைத்துள்ளேன்அன்புடன் VGK ///

என்று குறிப்பிட்டு இருந்தார். எப்படியோ திரு V.G.K மீண்டும் வலைப்பக்கம் எழுத வருகிறார். மகிழ்ச்சியான தகவல்.

எப்போதுமே திருச்சியில் எந்த புத்தகக் கண்காட்சி நடந்தாலும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இப்போதும் மக்கள் வெள்ளம் அதிகம் இருந்தது. நிறைய தெரிந்த முகங்களைக் காண முடிந்ததது. 

திருமதி ஜெயலக்ஷ்மி ( கல்வி அதிகாரி; ’நிற்க அதற்குத் தக’ – வலைப்பதிவர்) அவர்கள் தனது மகன் வினோத்துடன் வந்து இருந்தார். (இந்த வினோத் சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி, திருச்சி மருத்துவமனை ஒன்றில் ICU வில் இருந்தார்; அப்போது அவரைப் பார்க்க அங்கு சென்றபோது, பார்க்க அனுமதி இல்லாததால் திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களிடம் மட்டும் விசாரித்து விட்டு வந்து விட்டேன். நேற்று அவர்கள் இருவரையும் சந்தித்து நலம் விசாரித்ததில் மிக்க மகிழ்ச்சி) மேலும் சில நண்பர்களையும் சந்தித்தேன்.

அங்கு இருந்த ஒவ்வொரு புத்தகக் கடைக்கும் சென்று வந்தேன். சில நூல்களை மட்டுமே வாங்கினேன். வலைப்பதிவர் பேராசிரியர் மதுரை ‘தருமி’ அவர்கள்  மொழி பெயர்த்த ’பேரரசன் அசோகன் ’ என்ற நூல் திருச்சியிலேயே இங்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரு V.G.K அவர்கள் குறிப்பிட்ட 87 ஆம் எண் ஸ்டாலில் (சந்தியா பதிப்பகம்). ஜீவி அவர்களது நூலை வாங்கினேன். அங்கேயே நமது வலைப்பதிவர் துளசி டீச்சரின் (துளசி கோபால்) எழுதிய ‘அக்கா’ என்ற நூலும் கிடைத்தது. கடைசியாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

புகைப்படங்கள்:

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

(படம் – மேலே) திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்

(படம் – மேலே) NCBH அரங்கத்தில் நான்.

(படம் – மேலே) பேராசிரியர் அ.நல்லுசாமி அவர்களுடன் நான்.

 
வாங்கிய நூல்கள்:

பேரரசன் அசோகன் – சார்ல்ஸ் ஆலன் (தமிழில்: தருமி) – எதிர் வெளியீடு
பெண் ஏன் அடிமை ஆனாள்? – பெரியார் ஈ.வெ.ரா – திராவிடன் புத்தக நிலையம்
தமிழ்நாடு – நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் – ஏ.கே.செட்டியார் - (சந்தியா பதிப்பகம்)
ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை – ஜீவி (சந்தியா பதிப்பகம்)
அக்கா – துளசி கோபால் (சந்தியா பதிப்பகம்)
நாட்டார் வழக்காற்றியலும் வெகுசன ஊடகமும் – சண்முகம் (புதுப்புனல்)
வங்கியில் போட்ட பணம் – சி.பி.கிருஷ்ணன் (பாரதி புத்தகாலயம்)
நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு சுப.தனபாலன் (பிராம்ப்ட் பதிப்பகம்)
ரியல் எஸ்டேட் வழிகாட்டி - சுப.தனபாலன் (பிராம்ப்ட் பதிப்பகம்)
கவர்மெண்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தீ (காலச்சுவடு)

ஒரு ஆலோசனை:

திருச்சி புத்தகக் கண்காட்சி நடந்த இடம், நகரின் மையப் பகுதியில் என்றாலும், பஸ் போக்குவரத்து வசதி இல்லாத இடம். மழை பெய்தால், அந்த இடம் அவ்வளவுதான். அந்த ஏரியாவின் எல்லா தண்ணீரும் அங்கு வந்து விடும். எனவே அடுத்த முறை கண்காட்சி நடத்தும் போது, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அல்லது சிந்தாமணி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடத்த வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன். (அண்மையில் பெரம்பலூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் அமைந்த இடம், அரங்க அமைப்பு, அடிப்படை வசதிகள் யாவுமே பாராட்டும்படி சிறப்பாக அமைந்து இருந்தன)  


குறிப்பு:புத்தகக் கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை ( 04.03.2016 முதல் 13.03.2016 முடிய)