Saturday, 20 February 2016

மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான்



பணியில் இருக்கும்போது அடிக்கடி காபி குடிப்பது வழக்கம். விருப்ப ஓய்வில் வீட்டுக்கு வந்த போது அப்படி அடிக்கடி இல்லாவிட்டாலும், இடையில் இரண்டு முறையாவது காபி குடிக்க வேண்டும். இல்லா விட்டால் தலைவலிதான். வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒருவித சலிப்பு வந்துவிடும் என்பதால் அவ்வப்போது வெளியே போய் வருவேன். வெளியூர் பயணமும் இதில் அடக்கம். தினமும் முற்பகல் 11 மணி, மீண்டும் மாலை 4 மணி என்று காபி சாப்பிட எங்கள் ஏரியாவின் அருகில் உள்ள, பழையமில் பக்கம் உள்ள பேக்கரிக்கு செல்வது வழக்கம். அங்கு என்னைப் போலவே ’ரிட்டையர்டு’ ஆன நண்பர்களும் வருவார்கள். ரியல் எஸ்ட்டேட் ஆசாமிகளும் கூடி தங்களுக்குள் வியாபாரம் பற்றி பேசிக் கொள்ளுவார்கள். கடையின் முன் விசாலமான இடம், பெரிய அடர்ந்த வேப்பமரம், பக்கத்திலேயே டவுன் பஸ் ஸ்டாப் என்று எல்லோருக்கும் வசதியான இடம்.

மீண்டும் அம்மாதான்

அன்றைக்கும் அப்படித்தான். மாலைநேரம். காபி சாப்பிடப் போனபோது அங்கே எதிரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர். ஒரு காலத்தில் கலைஞரின் தீவிர அனுதாபியாக இருந்தவர்., என்னைப் போல. வழக்கம்போல நலன் விசாரிப்பிற்குப் பின், அவர் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி “ வரும் தேர்தலில் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்பதுதான். நான் உடனே “எனக்குத் தெரிந்தவரை, கூட்டிக் கழித்துப் பார்த்தால் அம்மாதான்” என்று சிரித்தபடியே சொன்னேன். “என்ன நான் நினைப்பதையே நீங்களும் சொல்லுகிறீர்கள்” என்றார். மேலும், இங்கு பலரும் அவரிடம் இதேபோல் சொன்னதாகச் சொன்னார். இதுதான் இங்குள்ள எதார்த்தமும் கூட.

கலைஞர் செய்தால் … :

அண்மையில் மறைந்த வலைப்பதிவர் ராஜ நடராஜன் அவர்களது பதிவினில் நான் எழுதிய கருத்துரை இது.

// எம்ஜிஆர் காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் ஒரு பார்வை கலைஞர் மீது விழுந்து விட்டது. அது என்னவென்றால், கருணாநிதி எது செய்தாலும் தப்பு; கருணாநிதி செய்தால் ஊழல்; அதே காரியத்தை எம்ஜிஆரோ, ஜெயாவோ செய்தால் தப்பு இல்லை; ஊழல் இல்லை. கருணாநிதி ஆட்சியில் பால் விலையில், பஸ் கட்டணத்தில் கொஞ்சம் ஏற்றினாலும் போதும் எல்லோரும் குதிகுதியென்று ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அதே சமயம் அம்மா ஆட்சியில் எவ்வளவு ஏற்றினாலும் தாங்கிக் கொள்வார்கள். அது என்னவோ அவர் ராசி அப்படி; இவர் ராசி இப்படி.//

எனவே தேர்தல் திருவிழாவில் எதிர்க்கட்சிகளின் ’செம்பரம்பாக்கம்’ போன்ற பேச்சுக்கள் எடுபடாமல் போகவே வாய்ப்புகள் அதிகம்.  

கலைஞரும் தமிழும் தமிழ்நாடும்:

திராவிட இனம், தமிழ் மொழி என்ற உணர்ச்சி பூர்வமான அடித்தளத்தில் எழுந்ததுதான் தி.மு.க.வின் வரலாறு. அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் கருணாநிதியை தமிழையும் தமிழர்களையும் உய்விக்க வந்த ஒரு மாமன்னர் போன்று சித்தரித்துக் காட்டினார்கள். அவரும் மேடை தோறும் தமிழ், தமிழ் இனம் என்று வாளை சுழற்றி வந்தார். இன்னும் சிலர் அவர்தான் போனபிறவியில் மனுநீதிச்சோழன் என்றுகூட தட்டினார்கள். இதில் அந்தக்கால தமிழாசிரியர்களின் பங்கு அதிகம். இவ்வாறு நம்பியவர்களை, நட்டாற்றில் விட்டு விட்டு தனது குடும்பநலனே தன் அரசியல் என்று ஆன பிறகு, அவரை விட்டு பலரும் விலகி விட்டனர். ஒவ்வொரு மாவட்டமும், வட்டமும் குறுநில மன்னர்களாகவும், குட்டி ஜமீன்தார்களாகவும் வலம் வந்தது கண்கூடு. கைக்காசைப் போட்டு ஒரு சிங்கிள் டீ குடித்துவிட்டு  கட்சிக்கு வேலைசெய்த, அந்நாளைய தொண்டர்கள் இன்று கட்சியில் இல்லை. தேர்தல் நேரத்தில் விலைபோகும் ஆட்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.

பிற கட்சிகள்:

தமிழ்நாட்டில் பிற கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் எதுவுமே வலுவானவை அல்ல. அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தின் செல்வாக்கை வைத்தே கொடிகட்டி பறக்கின்றன. ஆனாலும் தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலை என்றுதான் பார்க்கிறார்கள்.

1967 இற்குப் பிறகு காங்கிரஸ், இடது வலது கம்யூனிஸ்டுகள் திராவிடக் கட்சிகளின் சார்புக் கட்சிகளாகி விட்டன. தமிழ்நாட்டு மக்கள் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலில் வாக்களிப்பதில்லை. அந்த வகையில், குதிரையில் ஏறியவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல என்பது போல,  வை.கோபால்சாமி அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு (இந்த செல்வாக்கு கருணாநிதி எதிர்ப்பு அரசியலால் உருவானது) இப்போது கிடையாது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் இருவருக்கும் மக்கள் கொடுத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே மீண்டும் இந்த தமிழகம் இன்னொருமுறை அவர்களுக்கு தங்க தாம்பாளத்தில் ஆரத்தி எடுக்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் தலித் கட்சிகள் எப்போதுமே தங்களுக்குள் ஒன்றுபடாதவர்கள்: ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருப்பதில்லை. பாரதீய ஜனதா என்பது தமிழ்நாட்டில் இன்னொரு நாடார் அமைப்பாக மாறி வருகிறது.

இதனால்தான் பா.ம.க, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், வன்னியர் இல்லாத இடங்களில், தலித்துகளைத் தவிர்த்து பிற ஜாதியினரோடு கைகோர்த்துக் கொள்ள விரும்புகிறார். இதற்காக அடிக்கடி தலித்துகள் மீது தாக்குதல் அரசியல் செய்கிறார். இதனால் தலித் அல்லாதவர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்பது அவர் நினைப்பு. (உண்மையில் தமிழ்நாட்டில் சமூக நிலைமை என்பது, தலித்துகள் பிற மக்களைச் சார்ந்தும், மற்றவர்கள் தலித்துகளின் உழைப்பைச் சார்ந்தும்தான் இருக்க வேண்டி உள்ளது. எனவே இவர் பேச்சு அதிகம் எடுபடுவதில்லை. திராவிட இயக்கங்கள் இந்த சமூக நிலைமையை நன்கு பயன்படுத்திக் கொண்டன) இதற்குப் பதிலாக இவர் தலித்துகளோடு சேர்ந்து மற்றவர்களையும் அனுசரித்து இருந்தால், அவர் தமிழ்நாட்டில் ஒரு தமிழர் தலைவராக உருவெடுத்து இருப்பார். திராவிட கட்சிகளுக்கு இணையாக அவரது கட்சியும் வளர்ந்து இருக்கும். ஆனால் இப்போதைய சூழ்நிலையில், எக்காலத்தும் பா.ம.க என்பது ஒரு பிராந்திய கட்சியாகவே இருக்கும் நிலைமைக்கு போய் விட்டது என்பதே உண்மை.

இந்நாளைய வாக்காளர்கள்:

இன்றைய சூழ்நிலையில் நாட்டில் பலபேருக்கு வாக்களிப்பதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை. ஒரு வார்டு கவுன்சிலரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் சொன்னது இது. “சார் எனது வார்டு முழுவதும் எனக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது; குறிப்பிட்ட ஒரு சில ஏரியாக்களை மட்டும் வளைத்து விட்டால் போதும்; மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை.” இதுதான் நாடு முழுக்க நடக்கும் அரசியல். நாளைய தேர்தலில் கடைசிநேரத்தில், வாக்காளர்களைக் கவரக்கூடிய விஷயங்களில் பண பலம், அதிகார பலம், ஆள்பலம் எல்லாம் உள்ள ஒரே கட்சி அம்மா கட்சிதான். மேலும் குமாரஸ்வாமி போன்ற கடவுளர்களின் அருளாசியும் உண்டு. இவற்றை எதிர் கொள்வதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. எனவே மீண்டும் அம்மாவே வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.  

எல்லாம் சரிதான். ஆனால் நாம் நினைப்பது எல்லாமே நடந்து விடுகிறதா என்ன? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பார்கள். பார்ப்போம்.