கட்டுரையைத் தொடங்குவதற்கு முன்பே சொல்லி விடுகிறேன். எனக்கு பீடி,சிகரெட்
புகைக்கும் பழக்கமோ; வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் பழக்கமோ; மது அருந்தும் பழக்கமோ
கிடையாது.
ஆட்சியைப் பிடிக்க:
இந்த அரசியல்வாதிகள். ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்நாட்டில் ஒரு
பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள். விலைவாசி உயர்வு, படி அரிசித் திட்டம், ஊழல் ஒழிப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மது விலக்கு, இன்ன பிற என்று சொல்லலாம். உண்மையில் பெரும்பாலான
மக்கள் இந்த பிரச்சினைகளை முன்னிட்டு ஓட்டு போடுவதில்லை. இன்று தி.மு.க. நாளை அ.தி.மு.க
என்றுதான் அரசியல் போய்க் கொண்டு இருக்கிறது. அதிலும் “யார்தான் ஊழல் செய்யவில்லை; ஊழல் செய்தால் தப்பே இல்லை” என்று வியாக்கியானம்
செய்யும் காலமாக இன்று மாறி இருக்கிறது.
இப்போது டாஸ்மாக் எதிர்ப்பு. டாஸ்மாக்கை மூடிவிட்டால் உடனே தமிழ்நாட்டில் இதுவரை அங்கே குடித்துக்
கொண்டு இருந்த குடிகாரர்கள் எல்லோரும் குடிப்பதை விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க
முடியாது. இந்த குடிகாரர்கள் அப்படியே கள்ளச் சாராயத்தை தேடுவார்கள். அல்லது சாராயக்
கடை உள்ள பாண்டிச்சேரி போன்ற பக்கத்து மாநிலத்திற்கு போய் வருவார்கள் கட்டாய ஹெல்மெட்
போலீசார் போல் மதுவிலக்கு போலீசாரும் அதிகமாக உழைப்பார்கள். கள்ளச்சாராயம், கள்ளச்சாராய
சாவுகள், கள்ளச்சாராய புள்ளிகள் என்று செய்திகளை அடிக்கடி பத்திரிகையில் காணலாம். எனவே
ஒருநாளில் எல்லோரையும் திருத்திவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய வேண்டும்.
பழைய காங்கிரஸ் ஆட்சியில்:
எனது சின்ன வயதில், (அறுபதுகளில்) அப்போது காங்கிரஸ் ஆட்சியில்
மதுவிலக்கு தீவிரமாக இருந்தது; சிவப்பு தொப்பி அணிந்த முழங்காலுக்கு மேலே முட்டி தெரிய
காக்கி டவுசர், சட்டை போட்ட (உயரமான) போலீசார் வருவார்கள். ஆசாமி குடித்திருக்கிறானா
இல்லையா இல்லை என்பதை தெரிந்து கொள்ள வாயை ஊதச் சொல்லுவார்கள். சாராய வாடை வீசினால்
உடனே அவர்களை ‘லபக்கி’ கருப்புநிற போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்று தண்டனை வாங்கிக்
கொடுப்பார்கள். எனவே போலீஸ்காரர்கள் என்றாலே குடிகாரர்களுக்கு பயம்தான். டவுனில் மட்டும்
இல்லாது கிராமத்திலும் இந்த ரெய்டுகள் நடக்கும். உண்மையில் மதுவிலக்கு இருந்தது.
எனது அனுபவம்:
பல குடிகாரர்கள் சாராயத்தை (அப்போது கள்ளச் சாராயம்தான் ) குடித்துவிட்டு
ரோட்டில் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டு அருவெறுப்பு அடைந்தவன் குடித்துவிட்டு தனது
குடும்பத்தை நாசமாக்கியவர்களை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். மேலும் நான் பார்த்த
சினிமாப் படங்களில் எனது ஹீரோ எம்ஜிஆர்தான். அவருடைய ரசிகன். எம்ஜிஆர் அவர்கள், தான்
நடித்த படங்களில் மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததோடு அவரும் தனது தனிப்பட்ட வாழ்வில்
அப்படியே கடைபிடித்தார். இதனால் இயல்பாகவே மது என்றால் எனக்கு வெறுப்பு. குடிகாரனாக
இல்லை. (அவரே ஆட்சிக்கு வந்த பிறகு, பின்னாளில் இந்த சாராயக்கடைகளைத் திறந்தபோது மனவேதனை
அடைந்தேன்)
மதுவிலக்கு பிரச்சாரம்:
எனவே இந்த மதுவை ஒழிக்க சிறந்தவழி தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம்
மற்றும் ஊர் தோறும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் செய்தல் மட்டுமே ஆகும். அப்புறம்
குடிப்பவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது மற்றவர்களிடையேயும்
இந்த மதுவிலக்கு பிரச்சாரத்தை தொடர்வார்கள். அப்புறம் கடையே இருந்தாலும் குடிக்க ஆள்
இருக்காது. ”தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?” என்ற எம்ஜிஆரின் சினிமாப்பாடலை கண்டு கேட்டு சிந்திக்க கீழே உள்ள இணையதள முகவரியைச்( CLICK ) சொடுக்கவும்
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)


