அய்யா பழனி கந்தசாமி
அவர்களது பதிவுகள் ரொம்பவும் சுவாரஸ்யமானவை. அவரது வாசகர்களில் நானும் ஒருவன். சிலசமயம்
தனது கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து விட்டு, மாட்டிக்கொண்டு ”ஙே” என்று விழிப்பார்;
பின்னர் மீண்டு வந்த கதையை ஒரு பதிவாகப் போடுவார். அல்லது தான் வாங்கிய புதிய
பொருட்களைப் பற்றிய தனது அனுபவத்தினை எழுதுவார். இவை என் போன்றவர்களுக்கு மிகவும்
உபயோகமாக இருக்கும். இதுவாவது பரவாயில்லை. சில சமயம், பிரச்சினையான தலைப்புகளில்
பதிவுகளைப் போட்டு விட்டு , எக்கச்சக்கமான கருத்துரைகளை சாதகமாகவும், பாதகமாகவும்
பெற்று, எல்லாவற்றிற்கும் அசராது பதில்கள் சொல்லியும், வலையுலகில் பரபரப்பாக இருப்பார்.
கேள்வியும்-
பதிலும்:
அண்மையில், அவர்
பரபரப்பாக “குடும்பப் பெண்கள் கடைப் பிடிக்க வேண்டியவை “ என்று
ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டார். அதில் ”பொன்னியின் செல்வன்”
என்ற பெயரில் சில கேள்விகள்..
// எவ்வளவு
மூடத்தனமான
குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல்
இருக்கக் கூடாது சரி, அப்படியானால்
கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான
விஷயங்களை தாருங்கள். //
அதற்கு அய்யா பழனி.
கந்தசாமி அவர்கள்,
//அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள்
எழுதிக்கொண்டு இருக்கிறேன். அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான்
உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?//
என்று பதில்
அளித்ததோடு, இதற்காகவே ஒரு தனி பதிவு ஒன்றினை,
மூடத்தனமான
பதிவுகள்
என்று வெளியிட்டு
இருந்தார். இதில் என்ன பெரிதாக கண்டு
பிடித்து விட்டாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மேற்கொண்டு படியுங்கள்.
பொன்னியின்
செல்வன்:
பொன்னியின் செல்வன்
என்ற அந்த பதிவரின் பெயரில் கேள்வி கேட்டது பற்றியோ அல்லது அய்யா அவர்கள் பதில்
எழுதியது அல்லது பதிவு போட்டதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் பொன்னியின் செல்வன்
என்ற பதிவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி விட்டன என்பதும்,
இறந்து போன அந்த வலைப் பதிவரின் தாய், தனது மகனின் நினைவாக அந்த வலைத் தளத்தினை
தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பதும் அவர்தான் இந்த கேள்வியைக் கேட்டவர் என்றும், அய்யாவுக்கு
தெரிய வாய்ப்பில்லை. எனவேதான் இந்த பதிவு.
இறந்த மகனின்
நினைவாக அம்மா:
கார்த்திகேயன்
என்பவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். இவர் கார்த்திக் என்ற
பெயரில் “விஜயநகரம்” ( Vijayanagar – விஜயநகரம் http://vijayanagar.blogspot.in ) என்ற வலைத் தளம் ஒன்றினைத் தொடங்கி எழுதி வந்தார். இவர்
ஒருநாள் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது , சாலையில் சறுக்கி விழ, வேறு
வேலையாக அங்கு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த செந்தழல்
ரவி அவர்கள், ஓடிச் சென்று கார்த்திக்கை தனது மடியில் கிடத்துகிறார். இவரும்
ஒரு பதிவர். ஆனால் இருவருக்கும் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாது. அறிமுகம்
கிடையாது. அப்போது அங்கு என்ன நடந்தது என்பதனை, சகோதரர் செந்தழல் ரவி அவர்கள்,
கீழ்க்கண்ட தனது பதிவினில் விவரிக்கிறார். இந்த பதிவினையும் அதற்கு வந்த
பின்னூட்டங்களையும் அவசியம் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( இந்த பதிவினை நான் ஒரு
வாசகனாக , எனது வலைத்தளம் தொடங்குவதற்கு முன்பு படித்தது)
பொன்னியின் செல்வன்
என்ற கார்த்திகேயன் ( கார்த்திக்)
இறந்த பிறகு, தனது மகன் மீதுள்ள பாசத்தால், அவரது நினைவாக, அவரது தாய் அவரது ” Vijayanagar – விஜயநகரம் “ என்ற பதிவினை தொடர்ந்து
நடத்தியும், பதிவுகள் எழுதியும் வருகிறார். இந்த செய்தி மலைப்பூட்டும் செய்தியாகவே
உள்ளது. அந்த வலைத் தளத்தில், இறந்து போன கார்த்திக் பற்றிய நிறைய விஷயங்களை
தெரிந்து கொள்ள முடிந்தது. திறமைசாலியான ஒரு இளைஞன் சின்ன வயதிலேயே முடிந்து போனது
கண்ணீரை வரவழைத்தது.
என்னுடைய கருத்து:
கார்த்திக்கின் அம்மா
அவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தன மகன் பெயரிலேயே பதிவுகள் எழுதப் போகிறார்? ஒரு
மன சாந்திக்காகவே என்றாலும், மற்றவர்கள் பதிவினில் இன்னொருவர் பெயரினில் கருத்துரைகள்
எழுதுவதும் கேள்விகள் கேட்பதும் தவறு அல்லவா? சில சமயம் குழப்பமும் வரலாம். எனவே
சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்கள், தனது மகன் பற்றிய சோகத்திலிருந்து மீண்டு
வந்து, தனது பெயரிலேயே ஒரு வலைத் தளத்தினைத் தொடங்கி எழுதும்படி கேட்டுக்
கொள்கிறேன். இதில் தனது மகனைப் பற்றிய நினைவலைகளை மற்றவர்களுக்குச் சொல்லி,
மகனுக்கு அஞ்சலி செய்யலாம். அவரது மகனின் ஆன்மாவும் சாந்தி அடையும்.