Friday, 2 January 2015

வி.கிரேஸ் பிரதிபா – துளிர் விடும் விதைகள் (நூல் அறிமுகம்)



சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் (05.10.2014, ஞாயிறு) மாலை புதுக்கோட்டை, நகர்மன்றத்தில் ஒரு இனிய விழா நடை பெற்றது. ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது மூன்று  நூல்கள் வெளியீட்டு விழாதான் அது. நானும் போயிருந்தேன்.அப்போது அய்யா முத்துநிலவன் அவர்களும் மற்ற நண்பர்களும் “ தேன் மதுரத் தமிழ் கிரேஸ் என்ற வலைப்பதிவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும், வலைப் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்துடன் வந்து இருக்கிறார். அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். தமிழார்வம் மிக்கவர் ‘ என்றும் சொன்னார்கள். அவரை அறிமுகமும் செய்து வைத்தனர். தேன் மதுரத் தமிழ் கிரேஸ் எனப்படும் அந்த பதிவர் சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள். அவருடைய வலைத் தளத்தின் பெயர் (http://thaenmaduratamil.blogspot.com) தேன் மதுரத் தமிழ் என்பதாகும். இன்னும் http://innervoiceofgrace.blogspot.com மற்றும் http://sangamliteratureinenglish.blogspot.com என்ற தன்னுடைய ஆங்கில வலைத் தளங்களிலும் எழுதி வருகிறார்.

சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள் எழுதிய துளிர் விடும் விதைகள் என்ற கவிதை நூலை அறிமுகம் செய்து எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலும் இவரது கவிதைகள், புதுக் கவிதைகளுக்கே உரிய “இயல்பு நவிற்சி அணி கொண்டு அலங்கரிக்கின்றன.

தமிழின் பெருமை:

தமிழுக்கு தமிழ், செந்தமிழ், தீந்தமிழ் என்று பல பெயர்கள். சொல்லிக் கொண்டே போகலாம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார். செவ்வாயோ எவ்வாயோ  எக்கிரகம் சென்றிடினும் தமிழ் கொண்டே சென்றிடுவாய் (பக்கம்.23) என்ற கொள்கை கொண்ட நமது சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள்,

பல மொழி கேட்பினும்
அயல் மொழி பயன்படுத்தினும்
இன்னுயிராய்க் குருதியோடு கலந்தது தமிழன்றோ?
வாய் மொழி மாறினும் உயிர் மொழி மாறுமோ?
இடையில் துவங்கி இடையில் போன மொழிபல உண்டு
இடையூறு பல தாண்டித் தொன்றுதொட்டு
என்றும் இளமையுடன் செம்மொழியாய் இனிப்பினும்
இனிப்பது எம் தமிழ் அன்றோ!
                                       - (பக்கம்.22)

என்று சொல்லி மகிழ்கிறார்.

தந்தையின் பங்கு:

ஒரு குழந்தையின் வளர்ப்பினில் அந்த குழந்தைக்கு தாய் செய்யும் தியாகங்கள் போன்றே தந்தையின் தியாகமும் மகத்தானது. சமுதாயத்தில்  தாயின் தியாகம் போற்றப்படும் அளவிற்கு, தந்தையின் தியாகம் நினைக்கப் படுவதில்லை. திருவள்ளுவர், தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என்றும், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்றும் பேசுகிறார். நமது கிரேஸ் அவர்கள்,

என் தந்தாய்
நீ
எல்லாம் தந்தாய்
எதுவும் எதிர்பாராமல்

என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே   
                     - (பக்கம்.26)

என்று, தந்தையர் தினத்தன்று, தந்தையின் பெருமையைச் சொல்லி சிறப்பிக்கின்றார்.

தண்ணீர் தண்ணீர்:

இப்போது எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சினைதான் பெரிதாகப் பேசப்படுகிறது. இரண்டு உலக யுத்தங்கள் வந்து விட்டன. இனி மூன்றாவது உலக யுத்தம் என்ற ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். அன்று தண்ணீருக்காக அலைந்த காகம் ஒன்று, பானையின் அடியில் இருந்த கொஞ்சம் தண்ணீரைக் குடிக்க, சிறு சிறு கற்களைப் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும். நமது கவிஞர் அன்றைய கதையை நினைவு படுத்தி,  

கதை கூறிய என் சிந்தை
கவர்ந்ததே ஒரு காக்கை
தொடுத்ததே கேள்விக் கணை

கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும்  எங்கே எங்கே?
                     - (பக்கம்.32)

என்று கூழாங்கல் மறைந்து போகும் நிலைமை, மண் பானையின் பயன்பாடு அருகி வந்தமை, தண்ணீர்ப் பிரச்சினையென்று சுற்றுப்புறச் சூழல் பற்றி, சில வரிகளில் ஓவியமாய் வரைகின்றார்.

கடற்கரையில்:

கடற்கரையில் நுரைத்து வரும் நுரைக் கற்றைகளை வெள்ளிக் கொலுசிற்கு உவமையாக்கி காட்டுகிறார்.

நுரைக்கும் வெள்ளியைக்  கொலுசாய் அணிவிக்க
காலை வருடும் அலைகள்
அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
புதையச் செய்யும் மணல்

                          - (பக்கம். 61)

இந்த வரிகள் வரும் கடற்கரை என்ற கவிதையில் நிறையவே உவமைகளைக் காணலாம்.

கம்ப்யூட்டர் காலம்:

இது கம்ப்யூட்டர் யுகம். இது வந்ததும் தொலந்து போனவை எத்தனை எத்தனையோ? தபால் எழுதுவது கூட மின்னஞ்சல் வழியேதான். அதில் கையெழுத்தே கிடையாது. கவிஞரின் நுணுக்கமான சிந்தனை வரிகள் இவை.

அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணிணியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!
              
             -( பக்கம்.94) 

பாட்டு வரும்:

முன்பெல்லாம் பெண் கவிஞர்கள் காதலைப் பற்றி வெளிப்படையாக பாடுதல் அரிது. இன்று அப்படி இல்லை. வலைப்பதிவில் பல பெண் கவிஞர்கள் எழுதி வருவதைக் காணலாம். நமது சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் எழுதிய காதல் பாடல்களில் ஒன்று இதோ

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்
எழுதுகோலைக் கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்

காகிதத்தைக் கசக்கி கசக்கி
கடமையாகச் சிந்தித்தாலும்
கவிழ்ந்து படுத்து மணிக்கணக்காய்
காலாட்டி யோசித்தாலும்

வராத கவிதை நீர்வீழ்ச்சியாய்
வந்ததே உனைக் கண்டதும்

                    - ( பக்கம். 48)
  
இந்த வரிகளைப் படித்ததும், எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி பாட்டு வரும் உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்என்று பாடும் டூயட் காட்சி நினைவுக்கு வந்தது. படத்தின் பெயர் நான் ஆணையிட்டால். பாடலாசிரியர் - வாலி

ஆண்: பாட்டு வரும்

பெண்: என்ன?

ஆண்: பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்

பெண்: ம் ... ம்ஹூம் ...

ஆண்: பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
      அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
       உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
      அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

பெண்: அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
       அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் 

பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



தமிழ்ப் பணி தொடரட்டும்:

நூலினைப் பற்றி சிறப்பாக இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் (வி.கிரேஸ் பிரதிபா) அவர்கள் ஐங்குறுநூறு பாடல்களுக்கு எளிமையான உரை எழுதி இருக்கிறார். மேலும் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவைகளும் நூல்களாக வெளி வந்தால் நல்லது. தமிழ் இலக்கியத்திற்கு இவை மேலும் சிறப்பு செய்யும். வாழ்க அவரது தமிழ்ப் பணி.                                              
                                                          
இவரது இந்த கவிதை நூலானது மதுரையில் நடந்த  வலைப் பதிவர்கள் சந்திப்பு மாநாட்டில் (26.10.2014 ஞாயிறு) சிறப்பாக வெளியிடப்பட்டது. 

'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

நூலின் பெயர்: துளிர் விடும் விதைகள்
நூலாசிரியர்:   வி.கிரேஸ் பிரதிபா
பக்கங்கள்: 104  விலை ரூ 100/=
நூல் வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலாநகர், தஞ்சாவூர்
               613 007 போன்: 04362 239289