Saturday, 1 March 2014

ஒரு பிதற்றல் - இன்று எனக்கு வயது 60 தொடக்கம்!



எல்லாமே நேற்று நடந்தது போலவே இருக்கிறது! பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலைக்கு சேர்ந்தது, திருமணம் செய்தது, பிள்ளைகளைப் பெற்றது, அவர்களை வளர்த்தது,ஆளாக்கியது -  எல்லாமே இன்றுவரை ஒரு கனவாகவே தோன்றுகிறது! இத்தனை வருடங்கள் ஓடியது தெரியவில்லை. இன்று எனக்கு வயது 60 தொடக்கம்! எனது  பிறந்த தேதி 01.மார்ச்.1955

பிறப்பதற்கு முன் என்னவாக இருந்தோம்? இறந்து போனால் நமக்கு என்ன நடக்கும்? இப்போது நம்முடன் இருப்பவர்கள் நாளை நமது மரணத்திற்குப் பின் நாம் இருக்கும் இடம் தேடி வருவார்களா? நானும் முன்னோர் இடத்திற்குச் செல்வேனா? விடுபடாத பாசவலை! விடை தெரியாத கேள்விகள் ஓராயிரம்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றார்கள். நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான் என்றார்கள். ஆனால் நல்லவனும் வாழ்கின்றான். கெட்டவனும் வாழ்கின்றான். நல்லது இது, கெட்டது இது என்பதும், பாவம் என்பதும் புண்ணியம் என்பதும் மனிதர்களால் மனிதர்களுக்காக செய்யப்பட்ட கட்டுமானங்கள் போலவே உள்ளன. வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்கள் யாவும் வந்து போகும் காட்சிகளாகவே தோன்றுகின்றன.

இறைவன் இருக்கின்றானா? சில நிகழ்வுகள் யோசிக்க வைக்கின்றன. ஆனாலும் நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனது நிலைமை ஒன்றும் மோசமாகவும் இல்லை. அடுத்தவர்கள் துணை தேவைப்படாத உடல் நலத்துடன், போதும் என்ற மனத்துடனேயே இருக்கிறது. எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கின்றது. இறைவனுக்கு நன்றி! இனி வரக் கூடிய காலமும் இப்படியே ஓடி விட வேண்டும்  என்றே  இறைவனிடம் வேண்டுகின்றேன்!

நேற்றுதான் பிறந்தேன் வளர்ந்தேன்
படித்தேன் பணியமர்ந்தேன்

நேற்றுதான் திருமணம் செய்தேன்
பிள்ளைகள் பெற்றேன்
படிக்க வைத்தேன் ஆளாக்கினேன்

எல்லாமே நேற்றைய நிகழ்ச்சிகள்
ஆகி விட்டன! கனவே வாழ்க்கை!

நல்லது செய்தால்
நல்லது நடக்கும் எனறே
நானும் நம்பினேன

வந்த துன்பங்கள் வதைத்தபோது
எனக்கு மட்டுமே ஏனென்று
எண்ணி எண்ணி மாய்ந்தேன்

வெளியில் வந்தே பார்த்தேன்
எல்லோர் மனதிலும் இதேதான்

அவரவர் மனதினில் இங்கு
தான்தான் நல்லவன் என்றால்
கெட்டவர் எவருமே இல்லை!


வாழ்க்கை என்றால்? வலைச்சரத்தில்
நான் எழுதிய வரிகளை கீழே நினைவு கூர்கின்றேன்!    

நான் கல்லூரி படித்த நாட்களில் கிராமத்திற்கு சென்ற போது ரொம்பவும் வயதான பெரியவர்கள் பலரைப் பார்த்து இத்தனை நாள் இருந்ததில் நீங்கள் கண்டது என்ன?”  கேட்பேன். அவர்கள் சிரிப்பார்கள். சிரித்துக் கொண்டே என்னத்தைச் சொல்றது. ஒன்னும் இல்லை என்பார்கள்.

இப்போது அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன?” என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் தெரிகிறது. இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம், துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. இனிமையான நினைவுகளை நாம்தான் அசை போட்டு கொண்டு வர வேண்டியுள்ளது. ஒரு சங்க இலக்கியப் புலவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

இன்னாது அம்ம,
இவ் உலகம்;
இனிய காண்க,
இதன் இயல்பு உணர்ந்தோரே
                     - பக்குடுக்கை நன்கணியார்  ( புறநானூறு 194 )


                                                 ( Picture above thanks to http://kaninitamilan.in )




(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)