மெயின் ரோட்டிலிருந்து நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வர ஒரு சந்து முனையைக் கடந்து வர வேண்டும். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒருநாள் பகல்வேளை, அந்த வழியே வரும்போது ஒரு நடுத்தர வயது ஆசாமி சுவர் மீது சிறுநீர் கழித்துக் கொண்டு இருநதார். அதுவும் நின்றபடியே. அந்த பகுதியில் மறைவிடமே கிடையாது. அந்த பக்கம் வண்டியில் வந்த நான் மனசு கேட்காமல் ” பெண்கள், குழந்தைகள என்று எல்லோரும் வரும் வழியில் இப்படிச் செய்யலாமா? “ என்று கேட்டேன். அதற்கு அந்த ஆள் கோபமாகச் சொன்ன பதில் “ யோவ்! உன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டு போய்யா ” என்பதுதான்.
ஒரு சமயம் இரு சக்கர வண்டியில் நால் வழிச் சாலையில் போய்க் கொண்டு இருந்தபோது, ஒருவர் இருசக்கர வண்டியில் எதிர் திசையில் வந்தார். அவரிடம் ஒரு வழிப் பாதையில் இப்படி வரலாமா? என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசாமி சொன்ன பதில் “ உன்னுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போ “ என்பதுதான்.
அதேபோல ஒரு சம்பவம். அன்று ரேசனில் சர்க்கரை போட்டார்கள். எங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை மட்டும்தான். எனவே வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆள் வரிசையின் குறுக்கே உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்து “ வரிசையில் வரக் கூடாதா? “ என்று கேட்டேன். அதற்கு அவன் ரொம்பவும் கோபமாகச் சொன்ன பதில் “ உங்களுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போங்க சார் ” என்பதுதான்.
சிக்னலில் சிவப்பு விளக்கு. எனவே வண்டியில் வந்த நான் நின்று விட்டேன். எனக்குப் பின்னால் மனைவியோடு இரு சக்கர வண்டியில் வந்த ஒருவர் என்னை இடித்து விட்டு போக முயன்றார். “சார் சிக்னல் வருவதற்குள் இப்படி முந்தலாமா? என்று கோபமாகவே கேட்டேன். அப்போது அவர் சொன்ன அதே பதில் “ சார் உங்களுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போங்க ” என்பதுதான்.
ஒரு முறை நடந்து வந்து கொண்டிருந்தேன். மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி. கணவன் பைக்கை ஓட்ட, வண்டியின் பின்னால் உட்கார்ந்து இருந்த அவருடைய மனைவி கணவனின் காதில் செல் போனை வைத்தபடி இருந்தார். செல் போனில் பேசியபடியே அவர் பைக் ஓட்டி வந்தார். நான் அவர்களை நிறுத்தி “ ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி பேசி விட்டுத்தான் போங்களேன். “ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ எல்லாம் எங்களுக்குத் தெரியும், உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் சார்! “ என்பதுதான்.
ஒவ்வொரு இடத்திலும் என்னுடைய வேலை என்ன என்றுதான் ஆரம்பத்தில் எனக்கும் தெரியவில்லை. இரண்டு மூன்று இடங்களில் இதுபோல சொல்லப் போய் எனது வேலைகள் கெட்டுப் போனதுதான் மிச்சம். மேலும் வீண் வாக்கு வாதங்கள், டென்ஷன் என்று ஒரே படபடப்பு இவைகள்தான் முடிவு.. பார்த்துக் கொண்டிருக்கும் பொது ஜனங்களும் நம்மை ஆதரித்துப் பேசுவதில்லை. இதனால்தான் ஒவ்வொருவரும் “ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ “ என்று சொல்கிறார்கள் போல இருக்கிறது.