வாழ்க்கை நல்ல மாதிரி ஓடிக் கொண்டு இருக்கும் வரை மனிதன் எனது திறமை, எனது உழைப்பு என இறுமாந்து நிற்கிறான். கொஞ்சம் பிசிறினாலும் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும் என்தலையெ ழுத்து, என் விதி, போன ஜென்மத்து வினை என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறான். மரணத்திற்கு முன்னும் பின்னும் மனித உயிரின் அம்சம் என்னவென்றே யூகிகக முடிவதில்லை. வாழ்வில் எதிர்பாராது நடக்கும் சில நிகழ்வுகளுக்கு சில கேள்விகளுக்கு நம்மால் விடை காண முடிவதில்லை. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டதில்லை. எல்லாம் ஒரு அனுமானம்தான்.
காவிரிக் கரையில் பிறந்து வளர்ந்து வாழ்வைத் தொடங்கிய கோவலன் தனது மனைவி கண்ணகியோடு பிழைப்பைத் தேடி மதுரை சென்றான். அங்கே வஞ்சகன் சூழ்ச்சியால் கள்வன் எனக் கைதாகி கொலைக் களத்தில் இறக்கிறான். தன் கணவன் குற்றமற்றவன் என்று அரசவையில் நிரூபித்த கண்ணகி சினம் கொண்டு மதுரையை சாபமிட்டு எரிக்கிறாள். அப்போது மதுரை மாநகரின் காவல்தெய்வமான மதுராபதி தோன்றி கண்ணகியின் இந்த துயர நிலைக்கு முற்பிறவியில் கோவலன் செய்த ஒரு காரியம் என்று கதையைக் கூறுகிறது. அந்த பிறவியில் பரதன் என்ற பெயரில் கோவலன் வாழ்ந்தபோது சங்கமன் என்பவனை கள்வன் என பொய்க் குற்றம் சாட்டி அரசனிடம் மரண தண்டனை வாங்கித் தந்ததாகவும், அதனால் சங்கமனின் மனைவி
” எம்முறு துயரம் செய்தோர் யாவதும்
தம்முறு துயரமிற் றாகுக ‘
என்று கொடுத்த சாபமே இந்த பிறவியில் கோவலன் இந்த நிலைமை அடைந்ததாக சொன்னது. இந்தக் கதையை எழுத வந்த இளங்கோ அடிகள், “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் “ என்று சொல்கிறார்.
மேய்ச்சலுக்கு காலையில் வெளியில் சென்ற மாடுகள் மாலையில் கொட்டில் திரும்புகின்றன. கன்றுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அத்தனை பசுக்களிலும் கன்றுகள் தன் தாயை சரியாகக் கண்டடைகின்றன. அது போல ஒருவன் செய்த முன் வினையானது அடுத்த பிறவியில் அவனைக் கண்டு சேரும். இதனால் அவனுடைய வாழ்க்கை வினைப்படியே அமையும். இந்தக் கருத்தினைச் சொல்வது நாலடியார்.
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே தன்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
என்பது பாடல்.
உடம்பில் உயிர் இருக்கும்வரை உடம்பானது தனக்கு எது நேர்ந்தாலும் உணர்கிறது. உடம்பை விட்டு உயிர் போன பின்பு அந்த உடம்பை அதனை வெட்டி எரித்தாலும் அது உணராது. இதிலிருந்து உடம்பை விட்டு ஏதோ ஒன்று வெளியேறியுள்ளது என்று உணரலாம். அதுதான் உயிர். வெளியேறிய உயிர் தன் விதிப் பயனை அடைய வேறொரு பிறவி எடுக்கும். இதனைச் சொல்வது மணிமேகலைக் காப்பியம்.
உற்றதை உணரும், உடல் உயிர் வாழ்வுழி ;
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் ;
தடித்து எரியூட்டினும் தான் உணராது எனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டுஎன உணர் நீ ;
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது ;
யானோ அல்லேன், யாவரும் உணர்குவர் ;
உடம்பு ஈண்டு ஒழிய, உயிர் பல காவதம்
கடந்து, சேண் சேறல் கனவினும் காண்குவை ;
ஆங்கனம் போகி, அவ்வுயிர் செய்வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளி, நீ !
- மணிமேகலை (ஆதிரை பிச்சையிட்ட காதை)
திருவள்ளுவரும் விதியிலிருந்து தப்பவில்லை. ஊழ் என்று ஒரு அதிகாரமே (பத்து குறட்பாக்கள்) தந்து விட்டார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
என்று முடிக்கிறார். தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு பாடல்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!
............... ...................... ............... ................ ................
விதியின் கரங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா! சிறு மனமும் கலங்குதடா!
-கவிஞர் கண்ணதாசன் (படம்: அவன்தான் மனிதன்)
எனவே ஊழ்வினைப் பயன் என்பது விடை தெரியாத ஒன்று.