Wednesday 19 October 2011

தமிழ் மணம்: பதிவர்கள் சர்ச்சை


ஒரு பதிவர் நகைச்சுவை என்ற பெயரில் தமிழ் மணத்தைப் பற்றி கிண்டல் செய்து தமிழ் மணத்திலேயே பதிவிடுகிறார். அந்த பதிவரை இதைப் போலவே நையாண்டி செய்தால் அவர் சும்மா இருப்பாரா? அதே போல் இவரது நையாண்டி பதிவினை தாங்க  இயலாத ஒருவர் அவரது பதிவில் பின்னூட்டமாக பெயரிலி என்ற பெயரில் பதில் தர முற்படுகிறார். (எதிர்வினை தான்.) அவருடைய நோக்கம் அந்த பதிவருக்கு ஒரு காட்டமான பதில் தன்னால் தரப் பட வேண்டும  என்பதுதான். அப்போது சில வார்த்தைகளை கொட்டி விட்டார். இந்த விஷயம் இந்த இருவருக்கும் இடையில் நடந்தது. இருவருமே இந்த அளவுக்கு பதிவர்கள் கட்சி பிரிவார்கள் என்று எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். வலைப்பதிவு சமாச்சாரம் என்பதால் வெளியே வந்ததில் இப்போது பதிவுகளில் இடசாரி வலசாரியாக விளாசிக் கொண்டு இருக்கிறார்கள்..

வலைப்பதிவில் எழுதும் பதிவர்களில் பலர் புனை பெயர் போன்ற “முகமூடிஅணிந்துதான் எழுதுகின்றனர்; தன்னைப் பற்றிய முழு விவரங்களை (அச்சம் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றினாலோ) தர விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் ஒரு முகமூடி அணிந்துள்ளனர். இந்த சுதந்திரம்தான் எல்லோரையும் எல்லா விஷயங்களைப் பற்றியும் எழுத வைக்கிறது. மேற்படி நையாண்டி பதிவினைப் போட்டவரைப் பற்றிய விவரங்களை அவரது பதிவில் தேடினாலும் தேவையான குறிப்புகள் இருக்காது. பின்னூட்டக்காரர்களும் இவ்வாறே. இதனால்தான் இத்தனை கலகம்.

சிலர் தமிழ் மணத்தை விட்டு எல்லோரையும் வெளியே வாருங்கள் என்று சொல்கிறார்கள். சிலர் வெளியேறி விட்டதாக குட் பை சொல்கின்றனர். சிலர் ரெட் கார்டு போட்டு தடை செய்து விடுவதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பட்டியல் போட்டு இத்தனை பேர் வெளியேறி விட்டதாக புள்ளி விவரம் தந்து கொண்டு இருக்கிறார்கள்.

பிராமணர்களைப் பற்றியும் தலித்துகளின் இட ஒதுக்கீடு குறித்தும் ஜாதி வேற்றுமை பற்றியும், இந்து முஸ்லிம் -கிறிஸ்தவம் குறித்தும், பெரியாரைப் பற்றியும் அரசியல் கட்சிகளைப் பற்றியும், மத்திய மாநில அரசு ஊழியர்களைப் பற்றியும், சூடான  விமர்சனங்கள் வலைப்பதிவுகளில் வந்துள்ளன; வந்து கொண்டும் இருக்கின்றன.அப்போதெல்லாம் யாரும் யாருடனும் குழு சேர்த்துக் கொண்டு “மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!என்று எழுதவில்லை. அந்த வலைப் பதிவுகளை நீக்கச் சொல்லி போராடவும் இல்லை.அந்த பதிவுகளை திரட்டியவர்களுக்கு எதிராக எதுவும் செய்து விடவில்லை.ஆனால் இப்போது யாருமே எதிர்பாராத ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வர்ணம் கொடுத்துக் கொண்டு இருப்பது தேவைதானா?

பொதுவாகவே எந்த திரட்டியிலும் யார் நடத்துகிறார்கள், யார் நிர்வாகி என்ற விவரங்களைத் தேடினால் கிடைக்காது பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள் என்று எல்லோரும் தமிழ் என்ற பிணைப்பினால் இணைந்துள்ளனர். எல்லோராலும் எல்லா நேரத்திலும் எழுதிக் கொண்டே இருக்கமுடியாது. முன்பு அடிக்கடி எழுதும் பழைய பதிவர்களை இப்போது பார்க்க முடியவில்லை. பல வாசகர்கள் “படித்தவுடன் கிழித்து விடவும்என்று போய் கொண்டே இருக்கிறார்கள். பலருக்கு வலைப் பதிவுகளில் பின்னூட்டம் இட நேரமே இருக்காது.


தமிழ் மணமும் தனது விளக்கத்தினை தந்துவிட்டது.தமிழ் மணத்தின் வாசகர்களாக இருந்தவர்கள்தான் தமிழ் மணத்தின் பதிவர்களாக மாறியுள்ளனர். எனவே பதிவர்களே மீண்டும் தொடருங்கள்.



3 comments:

  1. பதிவில் இலக்கியம் தான் பரிமாறப்படவேண்டும்,ஆனால் இத்தனைநாளாக சில பதிவர்கள் வடை,பஜ்ஜியய்தானே பரிமாறிகொண்டார்கள்.டீக்கடையாக இருந்த தமிழ்மணம் இனிமேலாவது,நல்ல நூலகமாக விளங்கட்டும்.

    ReplyDelete
  2. வணக்கம் அருள்!தங்கள் வருகையை புதுமையான முறையில் தெரிவித்தமைக்கு நன்றி!உங்கள் “பசுமை பக்கங்கள்”வலைப் பதிவில் மேற்படி கட்டுரைகளை படித்து விட்டேன்.விரைவில் எனது கருத்துக்களை உஙகள் பதிவில் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் பொ.முருகன்! தங்கள் வருகைக்கு நன்றி!உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

    ReplyDelete