Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, 8 February 2016

ஸ்ரீரங்கம் – வலைப்பதிவர்கள் சந்தி்ப்பு (2016)



சென்ற மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தின்போது, திரு.வெங்கட் நாகராஜ் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, நியூஸிலாந்திலிருந்து வலைப்பதிவர் துளசி டீச்சர் (துளசி கோபால்) அவர்கள், அடுத்த மாதம் ஸ்ரீரங்கம் வர இருப்பதாகவும், ஸ்ரீரங்கத்தில் வலைப்பதிவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், எனக்கு தகவல் சொல்வதாகவும் சொல்லி இருந்தார். 

அதேபோல, சென்ற வாரம், ஞாயிறு (07.02.16) அன்று மாலை நான்கு மணிக்கு ஶ்ரீரங்கம், அம்மாமண்டபம் சாலையில், திருமதி  கீதா சாம்பசிவம் அவர்களின் இல்லத்தில், வலைப்பதிவர்கள் சந்திப்பு நடக்க இருப்பதாக எனக்கு மின்னஞ்சல் வந்தது. வெங்கட் நாகராஜ் மற்றும் கீதா சாம்பசிவம் ஆகியோர் அழைத்து இருந்தனர். இதுபற்றி மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) பேசியதில் அவரும் அந்த கூட்டத்திற்கு வருவதாக சொல்லி இருந்தார்.

’கோஸி நெஸ்ட்’
 
நானும் நேற்று மாலை நாங்கள் குடியிருக்கும் K.K.நகர் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றேன். தை அமாவாசையை (இன்று) முன்னிட்டு நேற்று கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. எனவே சரியான நேரத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வதில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. எனவே V.G.K. மற்றும் வெங்கட் நாகராஜ் இருவரும் செல்போனில் நான் எங்கு வந்து கொண்டு இருக்கிறேன் என்று கேட்டனர். நான் இப்படியே பஸ்ஸில் போனால், இருக்கும் நெரிசலில், இன்னும் நேரம் ஆகும் என்பதால், காவிரிப் பாலம் தாண்டியதும், மாம்பழச் சாலையில் இறங்கி, ஒரு ஆட்டோவைப் பிடித்து கூட்டம் நடக்கும் ’கோஸி நெஸ்ட்’ (COZY NEST) அபார்ட்மெண்ட் (அம்மாமண்டபம் சாலை) சென்று விட்டேன். (4.15 p.m.). மேடம் கீதா சாம்பசிவம் அவர்களது ப்ளாட்டில் எனக்கு முன்னரே எல்லோரும் அங்கு விஜயம்.

வலைப்பதிவர்கள் :

அங்கு வந்திருந்த வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணமான துளசி டீச்சரும் , அவரது கணவர் திரு.கோபால் அவர்களும் நியூஸிலாந்திலிருந்து வந்து இருந்தனர். திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது மனைவி திருமதி. ஆதி வெங்கட் மற்றும் மகள் ரோஷிணி (இருவரும் வலைப்பதிவர்கள்) ஆகியோருடன் வந்து இருந்தார். எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தனது மனைவியுடன் (பெயர் கேட்க மறந்து விட்டேன்) வந்து இருந்தார். இன்னும் மூத்த வலைப்பதிவர்கள் திருமதி ருக்மணி சேஷசாயி, திரு. வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோரும் (மூவருமே எழுத்தாளார்கள்) வந்து இருந்தனர்.

(படம் – மேலே) துளசி கோபால் தம்பதியினர்
(படம் – மேலே) கீதா சாம்பசிவம் மற்றும் துளசி கோபால் தம்பதியினர்
(படம் – மேலே) துளசி டீச்சர் அவர்களிடம் நான் புத்தகம் கொடுத்தபோது

அன்பான உபசரிப்பும் கலந்துரையாடலும்:

தங்கள் இல்லத்திற்கு வந்து இருந்தவர்களை கீதா சாம்பசிவம் தம்பதியினர், சூடான ரவாகேசரி, சூடான போண்டாக்கள் (சட்னியுடன்), சுவையான சூடான காபி தந்து அன்புடன் வரவேற்று உபசரித்தனர். 

ரவாகேசரியைப் பார்த்தவுடன் எழுத்துலக நண்பர்களுக்கு தாங்கள் பெண் பார்க்கப் போனபோது, பெண் வீட்டார் கொடுத்த ரவாகேசரியை ‘இனிமையாக’ நினைவு கூர்ந்தனர். எழுத்தாளர்கள் திரு. ரிஷபன், திரு. V.G.K மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி மூவருமே BHEL இல் பணி புரிந்த நாளிலிருந்து நண்பர்கள்; (திரு V.G.K பணி ஓய்வு பெற்று விட்டார்). மூவரும் நகைச்சுவையாக நிறைய ஜோக்குகளையும் எழுத்துலக அனுபவங்களையும் சொன்னார்கள். வெங்கட் கேமராவும் கையுமாக இருந்தார். எல்லோரையும் தனது கேமராவினால் சுட்டார். விரைவில் அவரிடமிருந்து அதிக படங்களுடன் பதிவு ஒன்றை எதிர்பார்க்கலாம். துளசி டீச்சரும், அவரது கணவர் கோபால் சாரும் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

(படம் – மேலே) வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோருடன் நான்
(படம் – மேலே) ரிஷபனின் மனைவி, ருக்மணி சேஷசாயி, ரோஷிணி, கீதா சாம்பசிவம், ஆதி வெங்கட் மற்றும் துளசி கோபால்


(படம் மேலே) திரு (கீதா) சாம்பசிவம் அவர்களுடன் வை.கோபாலகிருஷ்ணன்
 (படம் மேலே) துளசி கோபால், ருக்மணி சேஷசாயி மற்றும் வெங்கட் நாகராஜ்

எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தான் எழுதிய ‘முற்று பெறாத ஓவியம்’ என்ற நுலினை எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினார். ‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ என்ற நூலினை டீச்சர் துளசி கோபால் அவர்களிடம் கொடுத்தேன். ( இந்த கையேடு வலைப்பதிவர் திருவிழா – 2015 வில், கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை வெளியிட்டது ஆகும்). டீச்சர் ருக்மணி சேஷசாயி அவர்கள் தனது கையினால் செய்ஆ மணிமாலைகளை, அன்று அங்கு வந்திருந்த பெண்களுக்கு அன்புப் பரிசாக வழங்கினார்; மேலும் மறுபடியும் அவர்கள் சென்னைக்கே சென்று குடிபோகப் போவதாகவும் சொன்னார். 

(மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் சோர்வாக இருந்தார். அவரது பதிவைப் பார்த்த பிறகுதான், அவருக்கு அன்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட விஷயம் தெரிய வந்தது) 

மாடியிலே: 

எல்லோரும் ஓரளவுக்கு பேசி ஓய்ந்ததும், திரு. சாம்பசிவம் அவர்கள் எல்லோரையும் தாங்கள் இருக்கும் அபார்ட்மெண்ட் மாடிக்கு அழைத்துச் சென்றார். (மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் மட்டும் வீட்டிலேயே இருந்து கொண்டார்), மாடியிலிருந்து காவிரியைக் கண்டதும் ’நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடத் தோன்றிற்று. 

(படம் மேலே) மேற்குச் சூரியன்
(படம் மேலே) தென்னைகள் நடுவினில் தெரியும் மலைக்கோட்டை
(படம் மேலே) கம்பீரமான ராஜகோபுரம் –
(படம் மேலே) குடிநீர்க் குழாய்கள்


V.G.K. அனுப்பி வைத்த படங்கள்:

கூட்டம் தொடங்கியதிலிருந்து திரு.V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களும் மற்றவர்களும் நிறைய படங்கள் எடுத்து இருந்தனர். நானே அவரிடம், அவர் எடுத்த போட்டோக்களை கேட்டுப் பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நான் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி! அவற்றிலிருந்து சில படங்கள் (கீழே).

                                                               – x – x – x –
இந்த பதிவர் சந்திப்பு பற்றிய மற்றைய நண்பர்களது பதிவுகள்:

திருச்சி, ஶ்ரீரங்கத்தில் பதிவர்கள் மாநாடு!
http://sivamgss.blogspot.in/2016/02/blog-post_7.html

திருவரங்கத்தில் பதிவர் சந்திப்புஃபிப்ரவரி 2016 http://venkatnagaraj.blogspot.com/2016/02/2016.html
 

Saturday, 24 October 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும்


இப்போது புதுக்கோட்டையிலும், சென்ற ஆண்டு (2014) மதுரையிலும் நடந்த வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு சென்று வந்துள்ளேன். இவைகளுக்கு முன்னர் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற இந்த சந்திப்பு விழாக்களுக்கு நான் சென்றதில்லை. ஒவ்வொரு விழா முடிவிலும், விழா பற்றிய பதிவு எழுதிய நண்பர்களும், அவற்றிற்கு பின்னூட்டம் எழுதிய அன்பர்களும், சொல்லும் ஒரு பொதுக் கருத்து என்னவெனில், “நிறைய பேரோடு பேச வேண்டும் என்று வந்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது” என்பதுதான்.

நானும் புதுக்கோட்டை சந்திப்பிற்குப்பின் எழுதிய, எனது பதிவினில்,

“ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், அய்யா கவிஞர்  ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது மேற்பார்வையில் , நல்ல ஒருங்கிணைப்பில், நல்ல திட்டமிடலின் அடிப்படையில் சிறப்பாக எந்தவித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற்றன.”  

என்று பாராட்டி எழுதினேன். அந்த பதிவினில்,  ஜோதிஜி (திருப்பூர்) அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியில், 

”உங்கள் வாசகர் வட்டம் பெரியது. அவர்களில் நானும் ஒருவன். உங்களோடு நேற்று புதுக்கோட்டையில், நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் பேச முடியாமல் செய்து விட்டது. வேறு எந்த நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல், வெறும் வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் மட்டுமே வைத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும் போலிருக்கிறது”

என்று எழுதினேன். இதனைப் படித்த நமது நா. முத்துநிலவன் அய்யா அவர்கள்.

“எப்போது வைப்போம் சொல்லுங்கள் - எனக்கும் இப்படி ஒரு கருத்து உண்டு(ஏதாவது சுற்றுலாத் தளத்தில் எல்லாரும் சந்தித்தால்தான் உண்டு, நாள் இடம் பற்றிப் பேசுவோமா? சென்னை? புத்தகத் திருவிழாவுக்கும் வருவது மாதிரி ஒரு தேதியாக இருந்தால் நல்லது? புத்தகத்திருவிழாவின் முதல் ஞாயிறு?) அல்லது ஊட்டியில் மேமாதம்...? இதுபற்றி நீங்கள் ஒரு பதிவிடலாம் அய்யா”

என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் எதிரொலியே இந்த ஆதங்கப் பதிவு.

பொதுவாகவே ஆங்காங்கே நடைபெறும் வலைப்பதிவர்களின் சிறிய சந்திப்புகள் இந்த ஆதங்கம் இல்லாமல் செய்து விடுகின்றன. இதில் உள்ள மனநிறைவு, கலந்துரையாடல் (Discussion) குறித்து அவரவர் பதிவுகளில் எதிரொலிக்கக் காண்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பல உறவினர்களைச் சந்திக்கிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவர்களோடு நீண்ட நேரம் அளவளாவுகிறோம். யாரும் கட்டுப் படுத்துவதில்லை. ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால்  யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. இதுவே இந்த ஆதங்கத்திற்கு காரணம். இதை நீக்க ஒரே வழி, இனி வரும் நிகழ்ச்சிகளில், ”வலைப்பதிவர்கள் சந்திப்பு” என்ற தலைப்பிற்கேற்ப கலந்துரையாடல் மட்டுமே நிகழ்த்துவது. அல்லது மேனாட்டுப் பதிவர்கள் நடத்துவது போன்று இரண்டு நாள் நிகழ்ச்சிகள்; அல்லது காலையில் கலந்துரையாடல், உணவு இடைவேளைக்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம்.

அண்மையில் புதுக்கோட்டையில் (11.10.2015 ஞாயிறு அன்று) நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை யூடியூப்பில் கண்டு களிக்க கீழே உள்ள, இணைய முகவரிகளைச் சொடுக்குங்கள் (CLICK)