Showing posts with label செல்ல நாய். Show all posts
Showing posts with label செல்ல நாய். Show all posts

Wednesday, 15 July 2015

தெரு நாய்களும் நானும்



சின்ன வயதில் நாய்கள் என்றால் எனக்கு ஒரே பயம். அப்புறம் பெரியவன் ஆனதும்தான் பயம் தெளிந்தது. எனது அம்மாச்சியின் (அம்மாவின் அம்மா) வீட்டில் ஒரு நாட்டு நாய் இருந்தது. பெயர் மணி. அதோடு பழகிய பின்னர் நாய்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் (உண்டு. இருந்தாலும் நாய் என்றால் கொஞ்சம் தள்ளியே இருப்பது வழக்கம். இந்த நிலையில் ஒரு அழகான நாட்டு நாய் ஒன்றை   எனது மகன் (பள்ளி  மாணவனாக இருந்தபோது, (இன்றைக்கு 12 வருடங்களுக்கு முன் ) தூக்கி வந்தான். ’ஜாக்கிஎன்று பெயரிட்டு வளர்த்தோம்.

(படம் – மேலே) இறந்து போன எங்கள் வீட்டு ஜாக்கி

ஜாக்கியோடு:

சொந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இந்த வீடு, வாசல் எல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் நாம் வளர்க்கும்  செல்ல நாயானதுஇந்த வீடு, வாசல் எல்லாம் நம்முடையதுஎன்று நினைப்பில், ஒரு குருவி, காக்கையைக் கூட உள்ளே விடாது அவ்வளவு கண்டிப்பு.

ஜாக்கி சிறு வயது குட்டியாக இருக்கையில், காம்பவுண்டிற்குள் சுற்றி சுற்றி விளையாடும். அப்போது எங்கள் தெருவுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மைதானத்தில் இருந்து இரண்டு குட்டி நாய்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து ஏதாவது கிடைக்காதா என்று நிற்க ஆரம்பித்தன.  ஜாக்கிக்கு உணவு கொடுக்கும் போது இவைகளுக்கும் கொடுத்தோம். அன்றிலிருந்து இந்த இரண்டு நாய்களும் எதிரில் உள்ள இரண்டு காலிமனைகளில் வாசம். அவற்றில் ஒன்று குட்டையாக இருந்ததால் குட்டையர் என்றும், இன்னொன்றிற்கு நெற்றியில் கோடு இருந்த படியினால் நாமம் என்றும் சொல்லிக் கொண்டோம். நான் எங்கள் ஜாக்கியை ’வாக்கிங்’ இற்காக வெளியே அழைத்துச் செல்லும் போதெல்லாம் இவை இரண்டும் கூடவே வருவார்கள். இதில் நாமம், அடுத்த ஏரியாவில் இருந்த என் அம்மாவின் வீட்டிற்கு சென்றபோது, என் கூடவே வந்து அங்கேயே தங்கி விட்டது. 


                                            (படம் – மேலே): குட்டையர், நாமம் என்ற இரண்டு நாய்கள்


INTERNATIONAL ANIMAL RESCUE
  
திருச்சியில் எங்கள் ஏரியாவிற்கு அருகில் ஓலையூர் என்ற கிராமத்திற்கு அருகில் INTERNATIONAL ANIMAL RESCUE  என்ற உலகளாவிய அமைப்பின் சார்பாக  வளர்ப்பு பிராணிகளுக்கான பெட் கிளினிக் ( PET CLINIC  ) ஒன்று இருந்தது. இந்த மருத்துவ மனையில் ஜெர்மனியிலிருந்து வந்த, இளம் பெண் டாக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்து வந்தார். அரசு அனுமதியோடு இந்த பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள்; அந்த நாய்களுக்கு உடம்புக்கு ஏதேனும் இருந்தால் சிகிச்சை அளிப்பதோடு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து விட்டு மீண்டும் கொண்டு போய் ஏதேனும் ஒரு மைதானத்தில் விட்டு விடுவார்கள்.  நாய்களைக் கொல்ல மாட்டார்கள். அப்படி வந்தவைதாம் மேலே சொன்ன குட்டி நாய்கள். இந்த மருத்துவ மனையில் எங்கள் ஜாக்கியையும் காண்பித்து இருக்கிறோம். அந்த ஜெர்மன் டாக்டர் இருந்தவரை இந்த மருத்துவமனை நன்றாக நடந்தது. அவர் மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பியவுடன் இங்குள்ளவர்களால் சரிவர நடத்த முடியவில்லை; மூடி விட்டார்கள்.

ஜாக்கிக்குப் பிறகு:

இவை வந்த பிறகு காலிமனைகளில் இருந்த பாம்புகள் இந்த பக்கம் வரமுடியாது. இரண்டும் சேர்ந்து விரட்டி விடும். இப்படியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்க, எங்கள் ஜாக்கி நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. எங்கள் வீட்டில் சோகம் என்றால் சோகம். அவ்வளவு சோகம் இது பற்றியும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். (“ஜென்மம் நிறைந்தது - சென்றதுஜாக்கி - http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

எங்கள் ஜாக்கி இறந்த பிறகு, அதன் நினைவாக தினமும் வாசலில், இந்த நாய்களுக்கு தீனி வைத்தோம். இதனைப் பார்த்த அடுத்ததெரு நாய்களும் சிலருடைய வளர்ப்பு நாய்களும் தினமும் காலையிலும் மாலையிலும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டன. இதனால் தெருவாசிகளிடமிருந்து கண்டனக் குரல்; சிலர் முனிசிபல் கார்ப்பரேசனில் புகார் தரப் போவதாகவும் சொல்லி விட்டார்கள். என்னவோ செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.

(படம் மேலே) கட்டையாக இருப்பதால் கட்டையர் என்று பெயர். எங்கள் வீட்டிற்கு அடுத்து இருக்கும் ஆங்கிலோ – இந்தியன் வீட்டிற்கு அடைக்கலமாக வந்தது. இப்போது எங்களோடும் பழக்கம்.


(படம் மேலே) வெள்ளை சடைநாய்: அடுத்த ஏரியாவிலிருந்து வழிதவறி  வந்து பழக்கமான ஒற்றைக்கண் நாய். அடிக்கடி வரும். அப்புறம் வரவே இல்லை. என்னவென்று விசாரித்ததில் ஒரு கண்ணில் ஏற்பட்ட உட்காயம் புரையோடி இறந்து விட்டதாகச் சொன்னார்கள்.   

(படம் மேலே) ரோஜர்: இது நாங்கள் இருக்கும் வீதிக்கு அடுத்த வீதியில் இருந்த எங்கள் ஏரியாக்காரர் வளர்த்த நாய். வாலில் ஏதோ தொற்று நோய் பிரச்சினை. அதனால் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து வாலை எடுத்து விட்டார்கள். எங்கள் வீட்டுப் பக்கம் வராமல் இருக்காது. சில மாதங்களுக்கு  முன்னர் இறந்து போனது. இறக்கும் போது எங்கள் வீட்டு சுற்று சுவர் அருகே வந்து கிடந்தது.


(படம் மேலே) ரோசி: இதுவும் நாங்கள் இருக்கும் ஏரியாவில், அடுத்த தெருக்காரர் வளர்க்கும் நாய். நல்ல உயரம்; நீளமானதும் கூட. சின்ன குட்டியாக இருக்கும்போது ஆசையாக கொஞ்சி வளர்த்தவர்கள், பெரிய நாயாக வளர்ந்தவுடன் தெருவுக்கு விரட்டி விட்டார்கள். தெரு நாயாகிப் போன அது பசிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டுப் பக்கம் வந்து போகும். 


(படம் மேலே) மெர்சி: சென்ற ஆண்டு மழைக்காலம். சின்ன குட்டியாக  அருகிலிருந்த மைதானத்திலிருந்து அடைக்கலம் தேடி வந்து எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே வளர்த்து பெரியதானவுடன் வெளியில் விட்டுவிட்டோம். பூனைகளிடம் நட்புடன் வளர்ந்த நாய் இது. இப்போது எங்கள் வீட்டு எதிரில் உள்ள காலி மனையில் இருக்கிறது. இந்த மெர்சியைப் பற்றி தனியே ஒரு பதிவு கூட எழுதி இருக்கிறேன். (மியாவ் மியாவும் நாய்க் குட்டியும்  http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_17.html )


(படம் மேலே) கிரேஸி: இது மேலே சொன்ன மெர்சிக்கு தங்கை. தனது தாயுடன் தனது அக்கா மெர்சியைத் தேடி வந்தது. எதிரே காலி மனையில் தனது அக்காவைக் கண்டவுடன் இங்கேயே அம்மாவுடன் தங்கி விட்டது. இது நோஞ்சானாக இருந்த படியினால் எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே இரண்டுமாதம் வளர்த்து வெளியே விட்டோம். எதிர்பாராத விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர், எங்கள் வீதிப்பக்கம் வந்த ஒரு காரில் அடிபட்டு இறந்து போய்விட்டது. இது சோகமான விஷயம்தான்


(படம் மேலே) முன்பு குறிப்பிட்ட மெர்சி, கிரேஸி இரண்டு நாய்களின் தாய் இது. இப்போது மறுபடியும் புதிதாய் இரண்டு குட்டிகளுடன். (ஆறு குட்டிகள் போட்டதில் இப்போது எஞ்சி இருப்பவை இவை)

 


(படம் மேலே) அருகிலுள்ள ஒரு தோட்டத்திலிருந்து வந்த நாய்.  அதுவும் அதன் குட்டியும் அங்கிருந்து இங்கே வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்று விடுவார்கள். எதிர்பாராத விதமாக இந்த குட்டி, மைதானத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த காலவாதியான மருந்து பாட்டிலில் இருந்ததை தின்று தோட்டத்திலேயே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.


(படம் மேலே) இறந்து போன தோட்டத்து குட்டிநாய்  

தினமும் இந்த நாய்களுக்காகவும் மற்றும் பூனைகளுக்காகவும் நூறு ரூபாய்க்கு குறையாமல் செலவாகிறது. இவைகளுக்கு செய்யும் செலவைப் பற்றி நான் கணக்கு பார்ப்பது கிடையாது. இவைகள் எவற்றையும் நான் தொடுவது கிடையாது. ஆனாலும் அடிக்கடி கையில் திரவ சோப்பை (Liquid Soap ) போட்டு கழுவிக் கொள்ள வேண்டி உள்ளது. மனிதனை விட பாசமானவை இந்த நாய்கள். சிலசமயம் எனது வண்டியின் பின்னாலேயே எங்கள் ஏரியா பஸ் ஸ்டாண்டு வரை தொடர்ந்து வருபவைகளும் உண்டு. இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. மற்றபடி வேறு ஏதும் (மூட நம்பிக்கை) ஒன்றும் இல்லை.


                 வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
                                       மனிதர்க்குத் தோழனடி பாப்பா 
                                                                     - (மகாகவி சுப்ரமண்ய பாரதியார்)


              
 

Wednesday, 17 December 2014

மியாவ் மியாவும் நாய்க் குட்டியும்



எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் அவரும், அவரது மனைவியும்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள் சென்னை மற்றும் பெங்களூரில். அதனால் அடிக்கடி பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு சென்று விடுவார்கள். அவர் தனது வீட்டு மாடியில் கீற்றுக் கொட்டகை ஒன்றை போட்டு , ஒரு அறையைப் போல் தடுத்து, பழைய சாமான்கள் போட்டு வைக்கும் ஸ்டோர் ரூமாகவைத்து இருந்தார். அவர் ஒரு தடவை ( கடந்த ஏப்ரல் மே ) வெளியூர் போன சமயம், அந்த அறையில் ஒரு பெண்பூனை குடித்தனம் நடத்தி குட்டிகள் போட்டு குடும்பம் நடத்தியது. அவர் ஊரிலிருந்து வந்ததும் முதல் வேலையாக அவைகளை பயமுறுத்தி வெளியே அனுப்பினார். மேலேயிருந்த அவை கீழே வந்தன. கீழேயும் அவர் பயமுறுத்த எங்கள் வீட்டு மாடிப்படிகள் வழியே மேலே இருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வெளியே இருந்த ஷெட்டில் அடைக்கலம் ஆகி விட்டன. தாய், குட்டிகள் எல்லாமே வெள்ளை.

( படம் மேலே) பூனைகள் வந்த புதிதில்

எங்கள் வீட்டில் இருந்த ஜாக்கிஎன்ற செல்லநாய் இருந்தவரை எதுவும் உள்ளே வராது. அது இறந்து விட்ட படியினால், இப்போது தடுக்க யாரும் இல்லை. எங்கள் ஜாக்கிக்குப் பிறகு நாங்களும் எந்த செல்லப் பிராணியும் வளர்க்க விரும்பவில்லை. எனவே மேலே இருந்த பூனைகளை விரட்டி விட்டேன். அவைகளோ வீட்டை ஒட்டி இருந்த போர் தண்ணீர் இறைக்கும் மோட்டார் அறைக்குள் சென்று விட்டன. ஒரு கட்டத்தில் என்னைக் கண்டாலே தாய்ப்பூனை, ஓடிவிடும். அந்த குட்டிப் பூனைகள் மிரள ஆரம்பித்து கத்த ஆரம்பித்தன. இரக்கப்பட்டு, சரி இருந்து போகட்டும் என்று விட்டு விட்டேன். அப்புறம் எங்கள் வீட்டில் நான், எனது மனைவி, மகன் மூவரும் அவற்றின் மீது பரிதாப்பட்டு பால், உணவு வைக்க அவைகள் இப்போது தங்கள் அன்பினால் எங்களை நண்பர்களாக மாற்றி விட்டன.





கடந்த ஆறு மாதத்தில் நன்கு வளர்ந்து விட்டன. அந்த பூனைகள் வீட்டு வராண்டாவோடு சரி. அப்புறம் வீட்டின் கொல்லைப்புறம், செடிகள் உள்ள தோட்டம் காலியிடத்தோடு வேறு எங்கும் தொந்தரவு செய்வதில்லை. இவைகளுக்கு உணவு வைக்கும்போது எங்கிருந்தோ அக்கம் பக்கம் இருக்கும் இவைகளின்  சொந்தக்கார பூனைகளும் வந்து விடும். அவைகளும் இப்போது நண்பர்களே.

(படம் மேலே)வந்த பூனைகளின் சொந்தங்கள்

(படம் மேலே) கடந்த எனது பதிவொன்றில் வந்த படம்

சென்ற மாதம் சில நாட்களாக எங்கள் பகுதியில் நல்ல மழை. மேலும் ஒரே குளிர். அருகில் உள்ள மைதானத்தில் இருந்து, தாயைப் பிரிந்த  குட்டிநாய் ஒன்று, எங்கள் வீட்டு இரும்பு கேட் இடைவெளி வழியாக உள்ளே வந்து விட்டது.. பார்க்க பாவமாக இருந்தது. விரட்ட மனம் இல்லை. மழை முடியும் மட்டும் இருக்கட்டும் என்று, அதற்கு சாப்பிட பால் கொடுத்தோம்.

மழை விட்டும் அது போக வில்லை. இங்கேயே தங்கி விட்டது. நாங்களும் அதனைக் கட்டி போடவில்லை. அதனால் வீட்டுக்கு வெளியே போய் விட்டு, மீண்டும் உள்ளே வந்து விடும். ஆரம்பத்தில் இங்கே இருந்த பூனைகள் குட்டி நாயைக் கண்டதும் அஞ்சி ஓடின. இப்போது குட்டி நாய், பூனைகள் எல்லோரும் நண்பர்கள். அருகருகே ஒன்றாய் இருந்து சாப்பிடுகின்றன; விளையாடுகின்றன; ஒன்றையொன்று கட்டி பிடித்தபடி தூங்குகின்றன.








குட்டி நாய் கொஞ்சம் பெரியதானதும், எங்கள் வீட்டு கிரில் கேட் இடைவெளி வழியாக உள்ளே வரமுடியாது போய்விடும். அப்போது அப்படியே வெளியில் (எங்கள் கிராமத்து நாய்களைப் போன்று) விட்டு விடலாம் என்று இருக்கிறோம்

பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்
பகைவன்கூட நண்பனே
பாசம் காட்டி ஆசைவைத்தால்
மிருகம் கூட தெய்வமே

வளர்த்தப் பிள்ளையும் மாறிவிடும்
வாழும் உறவும் ஓடிவிடும்
வாயில்லாத உயிரை வளர்த்தால்
காடுவரைக்கும் கூட வரும்.

அன்புகாட்டும் முகம் தெரியும்
அணைக்கும் நண்பன் குரல் தெரியும்
பண்பு தெரியும் நன்றி தெரியும்
பதில் சொல்லாமல் துணைபுரியும்

சிரிக்கும் உறவில் நெருக்கமில்லை
சேர்ந்து துடிக்கும் பாசமில்லை
பிரியும் பொழுது பெருகும் கண்ணீர்
பேசும் பேச்சில் வருவதில்லை!

           -  பாடல்: கண்ணதாசன் ( படம்: தெய்வச்செயல்)
               

Monday, 30 September 2013

ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”



சிலநாட்களுக்கு முன் வீட்டுத் திண்ணையிலிருந்து நாங்கள் வளர்த்த ஜாக்கி( JACKIE ) (வயது 10) விழுந்து விட்டது. அதற்கு காய்ச்சல் ஏற்பட மருந்து கொடுக்க சரியானது. (சின்ன குட்டி நாயாக இருந்தபோது எனது மகன் அதனை எடுத்து வந்தான்.) அதற்கு அடுத்து சிலதினம் சென்று, வீட்டு படிக்கட்டில் நான் கால் வழுக்கி விழுந்து விட்டேன்.முதுகில் அடிபட்டதால் வலி வந்து இப்போது குறைந்து விட்டது. அப்போதிலிருந்து  மனது சரியில்லை. மேலும் சின்னச் சின்ன பிரச்சினைகளால் குழப்பம். இந்தச் சூழ்நிலையில் ஜாக்கிக்கு மறுபடியும் உடம்பு நலமில்லை. திடமான உணவை ஜாக்கியினால். சாப்பிட இயலவில்லை. சென்ற வாரம் டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். சரியாக சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். ஆனாலும் பால், தண்ணீர்  தவிர வேறு எதனையும் உட்கொள்ளவில்லை.

மனது சரியில்லாததால் படிப்பது, எழுதுவது, வலைப் பதிவுகள் பக்கம் செல்வது என்று இருந்தேன். வெள்ளிக் கிழமை (27.09.2013) காலை வலையில் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்  (http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post_26.html) என்ற ஜோதிஜியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க “ என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை வீடியோ இணைப்பாகக் கொடுத்து இருந்தார்.அந்த பாடலைக்  கேட்ட போது மனதில் இனம் புரியாத விளக்கம். இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தது. (பின்னர் எங்கு என்பதற்கு விடை கிடைத்தது )அப்போது அவர் பதிவில் கருத்துரைப் பெட்டியில் நான் எழுதியது

// தாங்கள் இறுதியில் இணைத்து இருந்த பிறப்பு இறப்பு தத்துவத்தை உணர்த்தும் பாடல், நெருடலானது. தனிமையில் இருக்கும் போது மீண்டும் இந்த பாடலை நிதானமாக கேட்டு அசை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!  //
  
அடுத்தநாள் நேற்று முன்தினம் சனிக்கிழமை  காலை முதல் இனம் புரியாத உணர்வு. ஏதோ ஒன்று நடக்கப் போவதாய் உள்ளுணர்வு. இன்னதென்று சொல்ல இயலவில்லை ஷேக்ஸ்பியர் நாடகத்தில், போரில் வெற்றி பெற்ற மாக்பெத்(MACBETH) தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில் இன்னதென்று இனம் புரியாத கலக்கம். மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.

நல்லதும் கெட்டதும் நிறைந்த இது போன்ற ஒருநாளை இதுவரை நான்  கண்டதில்லை.

So foul and fair a day I have not seen. (MACBETH -  1.3.38)


மாக்பெத் மன நிலைமையில் நான் இருந்தேன். மனதில் ஆறுதல் தேடி மீண்டும் ஜோதிஜியின் கட்டுரையிலுள்ள  இணைப்பை சென்று பார்க்கச் சென்ற போது, எனக்கான மறுமொழியில் அவர் 

//  இரவு நேரத்தில் கேட்காதீர்கள். தூக்கம் வராது // 

என்று எழுதியிருந்தார். இருந்தாலும் நேற்று முன்தினம்  இரவு (சனிக் கிழமை) அந்த பாடலைக் கேட்டேன். மேலும் GOOGLE இல் தமிழில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” - என்று பாடலின் முதல் வரியைக் கொடுத்து அதில் வந்த கட்டுரைகளைப் படித்தேன். படுக்க இரவு மணி 12 ஆகிவிட்டது.

அன்று இரவு 1.30 மணி அளவில் வீட்டினுள்ளே வராண்டாவில் இருந்த ஜாக்கி வெளியே விடச் சொல்லி முனகியது. வெளியே சென்ற ஜாக்கி தண்ணீர் குடித்துவிட்டு மாடிப்படிகளின் மேல் சென்று படுத்துக் கொண்டது. (வீட்டின் நான்கு பக்கமும் சுற்றுச் சுவர்) நான் கதவைப் பூட்டிவிட்டு  வீட்டினுள் படுத்து விட்டேன். நேற்று (29.09.2013) ஞாயிறு காலை 6.30 மணி அளவில் ஜாக்கி ஜாக்கி “ என்று அழைத்தேன். வரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கிரில் கேட்டைத் திறந்து வெளியில் பார்த்தபோது வீட்டு வாசலில் இறந்து கிடந்தது (மாடிப்படிகளில் இருந்து கீழே ஓடிவந்து இருக்கிறது). வீட்டினுள் நான், எனது மனைவி மற்றும் எனது மகன் (கல்லூரி மாணவர்) என மூவர் மட்டுமே. எல்லோரும் அழுதோம். விஷயம் கேள்விப் பட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தனர். அடுத்த வீட்டிலும் விசாரித்தனர்.

இறந்து போன் ஜாக்கியை வீட்டின் கொல்லைப் பக்கம் புதைக்கலாம் என்றால், அந்த இடத்தைப் பார்க்கும் எனது மகன் எப்போதும் அழுது கொண்டே இருப்பான். மேலும் அதன் நினைவுகள் அடிக்கடி எல்லோரது மனதிலும் வந்து மனதை அலைகழிக்கும். எனவே வெளியில் எங்காவது புதைக்க முடிவாயிற்று. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கார்ப்பரேசன் ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஒரு சில ஊழியர்கள் புதைக்க மாட்டோம். சாக்கில் கட்டி வெளியே தொலைவிற்கு சென்று காட்டில் வீசி விடுவோம்என்றார்கள். நாங்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காலையிலிருந்து எனது டிவிஎஸ் 50 XL ஐ எடுத்துக் கொண்டு அலைந்தேன். கடைசியாக 11.30 அளவில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் இடுகாடுகளில் சவக்குழி தோண்டும் கான் என்ற முஸ்லிம் சகோதரரைச் சொன்னார்கள். அவரும் முன்வந்தார். இவர் ஒரு தட்டு ரிக்‌ஷாக்காரர். அவரது தட்டு ரிக்‌ஷாவிலேயே  ஜாக்கியை ஒரு சாக்குப் பையில் நானும் எனது மகனும் எடுத்துச் சென்று, இடுகாட்டின் ஒரு மூலையில் காம்பவுண்டு சுவர் அருகே அடக்கம் செய்தோம்.


எங்கள் ஜாக்கியைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு பதிவாக எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டது. நாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்


(மண்ணில் தோன்றிய எல்லா உயிரினமும்  இறைவன் படைப்புதான். சுயநலம் காரணமாக சில உயிர்களை நேசிக்கிறோம்; சில உயிர்களை வெறுக்கிறோம்.. கவிஞர் வைரமுத்து மனித உயிரின் பயணத்திற்காக மட்டும் இந்த கவிதையை எழுதியதாக நான் நினைக்கவில்லை. மண்ணுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்குமாகவே எழுதியதாக நினைக்கிறேன் )
  
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி! கவிதை இங்கே.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன! 


மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

-                     கவிஞர் வைரமுத்து



இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் “க்ளிக்செய்யுங்கள்.

VIDEO THANKS TO GOOGLE  ( YOUTUBE )

ஒரு சிறிய குறிப்பு :
 ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில், அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில்  கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன்  வயது 65 ஆகிறது (நன்றி: www.pedigree.com )  
தி தமிழ் இளங்கோ 06.10.2013