Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Saturday, 23 June 2018

திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …



திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பேராசிரியர் நல்லுசாமி மற்றும் இவரது மனைவி பேராசிரியர் ஜானகி நல்லுசாமி குடும்பத்தினர். இவர்கள் இருவருமே சமூக நல்லெண்ணம் மிக்கவர்கள். அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்த காலத்தில் நிறைய பேருக்கு குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தவர்கள். புதுக்கோட்டையில் இருந்ததால், அந்த மாவட்ட ஆசிரியர்கள் பலருக்கும் அறிமுகம் ஆனவர்கள். மேலும் பேராசிரியர் ஜானகி நல்லுசாமி அவர்கள் ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலியில் முன்னாள் முதல்வராக பணிபுரிந்தவர். பேராசிரியர்களான தம்பதியர் இருவரும் பணி ஓய்வு பெற்ற பின்னரும் இப்போதும் பல சமுக நலக் காரியங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள்.

இவர்களின் ரே அன்பு மகள் N.லாவண்யா (04.02.1978 – 16.06.2011 – Senior Manager, Canara Bank, Mumbai – Ex.Asst Manager, MTNL, Mumbai) அவர்களது 7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு ( சென்றவாரம் - 16.06.2018 – சனிக்கிழமை), திருச்சி ஏர்போர்ட் அருகே அமைந்துள்ள, அன்னை ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இவர்கள் குடும்பம் சார்பாக  மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து இருந்தார்கள். நானும் அங்கு சென்று இருந்தேன். இந்த அன்னை  ஆசிரமத்தில் பேராசிரியர் ஜானகி அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர் (Excutive Committee Member) ஆகவும் இருந்து வருகிறார். 

அன்னை ஆசிரமம்

 படம் மேலே அன்னை ஆசிரமம் முகப்பு தோற்றம்


படங்கள் மேலே அன்னை வீரம்மாள் நினைவு மணிமண்டபம்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஏழை விசாயக் குடும்பத்தில் பிறந்த அன்னை வீரம்மாள் (1924 – 2006) அவர்கள், திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவர்; திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு 2 குழந்தைகளுக்குத் தாயான இவர், 57 ஆண்டுகள் இல்லறத் துறவியாக தனது வாழ்நாளின் இறுதிவரை, எளிய வெள்ளை உடை உடுத்தி, எளிய உணவு உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்து பிறர்நலத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கத்தை நிறுவினார்கள். இன்று இச்சங்கத்தின் அங்கமாக 1. திக்கற்ற குழந்தைகள் இல்லம் 2.ராஜீவ்காந்தி தேசீய குழந்தைகள் காப்பகம் (Creche) 3. டாக்டர் கமலம்மா பாலகிருஷ்ணன் முதியோர் இல்லம் 4.அன்னை மேல்நிலைப்பள்ளி 5.எம்.எம்..தொடக்கப் பள்ளி 6.ஓய்வூதியர் இல்லம் 7.பணிபுரியும் மகளிர் விடுதி 8.கணினி பயிற்சி மையம்  9.தையற் பயிற்சி மையம் 10. Palliative Care Centre ஆகியவை ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு, பொதுநல நோக்கத்துடன், சிறப்பாக இயங்கி வருகின்றன. அன்னை வீரம்மாள் மறைந்தவுடன் அவரது விருப்பத்திற்கிணங்க அவரின் உடல் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

முதியோர் இல்லத்தில்

படம் மேலே ஆசிரமத்தின் எதிரே உள்ள முதியோர் இல்லம் வழிகாட்டும் அறிவிப்பு பலகை

படம்  மேலே முதியோர் இல்லத்தின் நுழைவாயிலின் உள்ளே உள்ள முற்றம்

அன்னை ஆசிரமத்தின் எதிரே தனி கட்டிடத்தில் இருக்கும் முதியோர் இல்லம் சென்று, அங்கிருந்த ஹாலில் தங்கி இருந்தோம். முன்னதாக ஆசிரமம் வழக்கப்படி ஹாலில் இறை வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் முதியோர்களுக்கு என இருக்கும் சாப்பாட்டு மண்டபத்தில் (Dining Hall) அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 
 
படம் மேலே முதியோர் இல்லத்திற்கான பொது ஹால்

படம் மேலே ஹாலில் உள்ள இறைவழிபாடு இடம்

படம் மேலே ஹாலில் பேராசிரியர் நல்லுசாமி குடும்பத்தினர்

படம் மேலே ஹாலில் முதியோர் இல்லத்து முதியவர்கள்




படங்கள் மேலே ஹாலில் இறை வழிபாடு 

குழந்தைகள் இல்லத்தில்

அடுத்து ஆசிரம வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மான்ய உதவி பெறும் அன்னை ஆசிரமம் குழந்தகள் இல்லம். சென்றோம். அங்கும் இறை வழிபாடு மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

படம் மேலே குழந்தைகள் இல்லம்



படங்கள் மேலே திஉணவுக்கு முன் டைபெற்ற இறை ழிபாடு

பின்னர் இறுதியாக வந்திருந்த விருந்தினர்களான எங்களுக்கும் அன்னை ஆசிரம சாப்பாட்டு மண்டபத்தில் (Dining Hall) மதிய உணவு வழங்கப்பட்டது. எல்லோரிடமும் விடை பெற்று விட்டு வந்தோம்.

 

Saturday, 4 November 2017

திருச்சி BHEL மகாபோதி சங்கத்தில் – முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் சிறப்புரை



எனக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், உதவி பதிவாளர் – ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, முனைவர் திரு B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களை ஒரு வலைப்பதிவர் என்ற முறையில்தான் முதன்முதல் தெரியும். தமிழ் வலையுலகில் அவர் எழுதி வரும் http://drbjambulingam.blogspot.com முனைவர் ஜம்புலிங்கம் மற்றும் http://ponnibuddha.blogspot.com சோழநாட்டில் பௌத்தம் (Buddhism in Chola Country) ஆகிய இரண்டு வலைப்பதிவுகளில், பௌத்தம் பற்றிய கட்டுரைகளை ஆர்வமுடன் படிப்பதில் அவருடனான தொடர்பு ஏற்பட்டது. முதன்முதல் அவரது பௌத்தம் சம்பந்தமான கட்டுரைகளைப் படித்தபோது அவர் புத்தமதத்தைச் சேர்ந்தவர் (Buddhist) என்றே நினைத்திருந்தேன். 2014இல் புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப் பயிற்சி பட்டறையில்தான் அவர்களை முதன்முதல் நேரில் சந்தித்தேன். அவர் பௌத்தம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்ட சைவசமயத்தவர். 

கூட்டத்திற்கான அழைப்பு

நேற்று முன்தினம், தஞ்சையிலிருந்து ஜம்புலிங்கம் அய்யா அவர்கள், தனது செல்போனில் ”திருச்சியில் நாளை மாலை (03.11.17 – வெள்ளிக் கிழமை) திருச்சியில் ஒரு சிறப்புரை கூட்டம். என்னை பேச அழைத்து இருக்கிறார்கள்” என்று விவரம் சொன்னதோடு, அடுத்தநாள்  வாட்ஸ்அப்பில் (Whatsapp) எனக்கு அழைப்பும் விடுத்தார். முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களைப் படித்த, திருச்சியிலுள்ள மகாபோதி சங்கத்தினர், தங்களது 23 ஆவது, பவுர்ணமி விழாவில் இவரை சிறப்புரை ஆற்றும்படி அழைத்து இருந்தனர். 

கூட்டம் துவங்குவதற்கு முன்னர்

(படம் மேலே – முனைவர் அவர்களுக்கு வல்லிக்கண்ணன் எழுதிய ’புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலினை நான் பரிசாகக் கொடுத்தபோது)

சென்னையில் கடும் மழை, வெள்ளம் என்று ஊடகங்கள், செய்திகள் வாசித்துக் கொண்டு இருந்த நிலையில், திருச்சியில் மழை வருவதும் நிற்பதுமாகவே போக்கு காட்டிக் கொண்டு இருந்தது. இருந்த போதும், கூட்டம் நடைபெறும் BHEL – SCUU சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன் நான் சென்றபோது எனக்குப் பழக்கமான நண்பர்களும் அங்கு இருந்ததில் மகிழ்ச்சி. அங்கே முன்னதாகவே வந்துவிட்ட ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு எல்லோருமே புதியவர்கள். மேலும் நாங்கள் இருவருமே இந்த சங்கத்து உறுப்பினர்கள் இல்லை.

கூட்டம் துவங்கும் முன் எடுத்த படங்கள் (கீழே)




முனைவரின் சிறப்புரை






அன்றைய கூட்டத்தில் போதி அம்பேத்கர் மற்றும் திரு தங்கசாமி ஆகியோர் வழிகாட்ட, புத்தர் திருவுருவச் சிலைக்கு முன்னர் விளக்கேற்றுதல், புத்த வந்தனம் ஆகியவற்றிற்குப் பிறகு திரு சிவானந்தம் ( BHEL ) அவர்கள் முனைவர் பற்றி அறிமுகம் செய்திட திரு B.ஜம்புலிங்கம் அவர்கள் தனது சிறப்புரையை செய்தார்.



தனது எம்ஃபில் (M.Phil) பட்டத்திற்கு, ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததையும், முனைவர் (Doctorate) பட்டத்திற்கு ”சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் சுவைபட சில நிகழ்வுகளோடு சொன்னார்.

மேலும் 1993இல் தொடங்கி தொடர்ந்து தான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது தனக்கு ஏற்பட்ட, பல அனுபவங்கள் குறித்தும், ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் விவரித்தார். 

இன்னும்,
பௌத்த சமய வரலாற்றில்  சங்க காலத்தில் பௌத்த காவிரி பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும்  சிறப்பான இடத்தை வகித்தமை,

சோழ நாட்டில் மக்கள், புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைத்து வழிபாடு செய்து வருவது குறித்தும்

கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பவுத்தம் இருந்ததற்கான சான்று (கல்வெட்டு) கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருக்கிறது என்பதனையும்,

மீசையுடன் கூடிய புத்தர் சிலை மற்றும் தலையில்லாத புத்தர் சிலை பற்றிய தகவல்கள்.

மேலும், தனது ஆய்வின்போது, சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பலவற்றை மக்கள் புத்தர் என அழைப்பதையும் சுவைபடச் சொன்னார். இருந்த போதும் அருங் காட்சியகத்தில் இருக்கும் சில புத்தர் சிலைகள், தனது களப் பணிகளால் வெளிக் கொணர்ந்து தகவல்கள் தந்திருந்த போதும் தனது பெயரை அங்கு குறிப்பிடவில்லை எனும் ஆதங்கத்தையும் வெளிப்படச் சொன்னார்.
 
கூட்டத்தின் முடிவில் திரு தமிழ்தாசன் ( BHEL ) அவர்கள் நன்றி கூறிட, இனிய இரவு சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே முடிந்தது, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  திரு செல்வம் (BHEL) அவர்கள் செய்து இருந்தார்.  

Sunday, 30 July 2017

வறண்டாய் வாழி காவேரி!



வலைப்பதிவு, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று இவை மூன்றிலும் எனக்கு தொடர்பு இருந்தாலும் நான் முதலிடம் கொடுப்பது வலைத்தளத்திற்கு மட்டுமே. ஏனெனில் வலைத்தளத்தில் பதியப்படும்  முக்கியமான செய்திகள் அடங்கிய ஒவ்வொரு பதிவும், ஒரு ஆவணமாகவே கூகிளில் பிற்காலம் அறிய வாய்ப்பு அதிகம். எனினும் கடந்து மூன்றரை மாத காலமாக, எனது தந்தையின்(92) உடல்நிலையை முன்னிட்டு, அவர் அருகிலேயே இருந்து கவனித்து வந்த படியினால், அடிக்கடி என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. (அப்பா கடந்த 08.07.17 அன்று இயற்கை எய்தினார்)  எனினும் ஒன்றிரண்டு குறுஞ் செய்திகளை அல்லது கருத்துரைகளை ஃபேஸ்புக்கில் எழுதி வந்தேன். அண்மையில் நான் ஃபேஸ்புக்கில் காவிரி ஆறு பற்றிய எழுதிய, ஒன்றை வலைப்பக்கம் ஆவணமாக்கும் எண்ணத்தில் மீண்டும் இங்கு விரிவாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன்.. (ஏற்கனவே அங்கு படித்தவர்கள், மறுபடியுமா என்று சினம் கொள்ளற்க. மன்னிக்கவும்)

தான் பொய்யாத காவிரி

ஆறு என்றால், வான் மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும், ஊற்று நீராலும், அதில் நீர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இவற்றை ’ஜீவநதிகள்’ என்று சொல்வர். இத்தகு ஜீவநதிகளில் ஒன்றான காவிரியை,

வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
– (பட்டினப்பாலை ( 5 – 7 )

என்று புகழ்ந்து பாடுகிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் புலவர். அந்த காவிரி, இன்றைக்கும் கர்நாடக எல்லை வரை வற்றாத ஜீவநதியாகவே இருக்கிறது. தான் பொய்க்கவில்லை. ஆனால் இந்திய மண்ணின் அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் பொய்த்துப் போய் விட்டது.

கல்லணை வேதனை:

கடந்த ஜூன் மாதம் 25.06.17 ஞாயிறு அன்று, ஒரு அவசர வேலையாக, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள எனது அம்மா ஊருக்கு நான் மட்டும் சென்று வந்தேன். முன்பெல்லாம் அந்த ஊருக்கு போய் வருவது என்றால் திருச்சியிலிருந்து கல்லணை, கோயிலடி வழியாகத்தான் செல்வது வழக்கம்.. அப்போது போகும்போதும், வரும்போதும் வழிந்தோடும் காவிரி கண்கொள்ளா காட்சி. ஆனால் இப்போதெல்லாம் அந்த வழியாக இல்லாமல் திருச்சி, திருவெறும்பூர், செங்கிப்பட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி என்று அடிக்கடி பயணம் இந்த தடவை திரும்பி வரும்போது, கல்லணை வழியாக வந்தேன். இப்போது நான் கண்ட. கல்லணையும் காவிரியும் வறட்சியின் பிடியில்; கண்கலங்க அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில.

                                                                                                                                                          
அம்மாமண்டபம் சோகம்:

அப்பா இறந்த பிறகு அப்பாவுக்கான காரியங்கள் முன்னிட்டு சென்ற வாரம், ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் செல்ல வேண்டி இருந்தது. அப்போதும் அங்கும் காவிரியின் துயரத்தைக் காண முடிந்தது. அப்போது அங்கு எடுத்த படங்கள் இவை.

(படம் மேலே) அம்மா மண்டபம் நுழைவு வாயில்

(படம் மேலே) வறண்ட காவேரி

(படம் மேலே) பக்தர்கள் விட்டெறிந்த பழைய துணிகள்

(படம் மேலே) எதிரே தெரிவது கம்பரசம்பேட்டை குடிநீர் திட்ட கிணறு

(படம் மேலே) பக்தர்களுக்கு ஆசி வழங்கும் யானை

நதியின் பிழையன்று:

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தான் எப்போதோ கேட்ட வரம் ஒன்றை, மன்னன் தசரதனிடம் நினைவூட்டி, இராமன் மகுடம் சூட்டுவதை தடுத்து, இராமனிடமும் சொல்லுகிறாள் அவனது சிற்றன்னை கைகேயி. இராமனும் ”எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,உய்ந்தனன் அடியேன்என்று கானகம் செல்லத் தயாராகிறான். செய்தி கேட்ட இலக்குவன் போர்க்கோலம் பூணுகிறான். இதனை அறிந்த இராமன், இலக்குவன் இருக்குமிடம் சென்று அவன் கோபத்தை தணிக்கிறான். அப்போது இராமன் சொல்லுவதாக ஒரு பாடல். 

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
              ( கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம்.129)

இந்த பாடலில் ஒரு நதியில், தண்ணீரே இல்லாமல் போவதற்கு காரணம் விதியின் பிழை என்று விதி மேல் பழி சொல்லப்படுகிறது. ஆனால் நமது காவிரி கர்நாடகத்தில் கரைபுரண்டு ஓடி, தமிழ்நாட்டிற்கு மட்டும் வராமல், வறண்டு போனதற்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் அன்றி வேறு யாரைச் சொல்ல முடியும். எனினும்,

உழவர் ஓதை, மதகு ஓதை,
    உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
    நடந்தாய்; வாழி, காவேரி
   (சிலப்பதிகாரம்)

என்றே வாழ்த்துவோம். நம்பிக்கையோடு இருப்போம்.