Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

Tuesday, 3 December 2013

அரிக்கேன் விளக்கு – அனுபவம்



இப்போது மின்வெட்டு என்றாலே வீடுகளில் அலறுகிறோம். ஆனால் முழுக்க முழுக்க மின்சாரமே வீடுகளில் இல்லாத காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிறையபேர் மறந்து விட்டோம். அப்போது அரிக்கேன் விளக்குதான் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. Hurricane  என்றால் புயல் என்று பெயர். எந்த புயல் காற்றிலும் விளக்கு அணையாத வண்ணம் வடிவமைக்கப் பட்டதால் Hurricane lamp என்று பெயர். தமிழில் அரிக்கேன் விளக்கு ஆயிற்று.

நகர்ப்புறம்:

அப்போது தமிழ்நாட்டில் மின்சாரம் என்பது தொழிற்சாலைகளில் மட்டும்தான். வீடுகளில் அவ்வளவாக பயன்பாட்டிற்கு வராதநேரம் நகரமாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் மின்சார இணைப்பு இருக்காது. மின் இணைப்பு உள்ள ஸ்டோர் வீடுகளை கட்டி வாடகைக்கு விடுபவர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு மட்டுமே எரிய அனுமதிப்பார். ஒரே ஒரு மெயின் ஸ்விட்ச் மட்டுமே இருக்கும். மின்சாரத்திற்கென்று தனி சார்ஜ் வசூலிக்கப்படும். .ஓட்டல்களில் அல்லது அரசு அலுவலங்களில் மட்டும் என்று ஒன்றிரண்டு இடங்களில் குண்டு பல்புகள் எரிந்து கொண்டு இருக்கும். வீடுகளில் கெரசினால் எரியும் அரிக்கேன் விளக்கு அல்லது சிம்னி விளக்குதான். எனவே இப்போது மின்வெட்டு போல அப்போது கெரசின் எனப்படும் மண்ணெண்ணைக்கு ( சீமை எண்ணெய்) ஏற்படும் தட்டுப்பாட்டில் மக்கள் கஷ்டப்பட்டார்கள்


எனது ஆனாஆவன்னா படிப்பு தொடங்கியபோது வீட்டில் இருந்தது அந்தக் கால அரிக்கேன் விளக்குதான். பள்ளிப் படிப்பு வரை இரவுநேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன். படிக்கும்போது அரிக்கேன் லைட் கண்ணாடியில் இங்க் பேனாவினால் பெயர் எழுதியது, சின்னச் சின்ன படங்கள் வரைந்தது என்பது அந்தக்கால சந்தோஷங்களில் ஒன்று. அதே போல நண்பர்களோடு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கைவிரல்களைக் வைத்து  சுவற்றில் மான், கொக்கு, பாம்பு வடிவங்களை காட்டி விளையாடுவதும் உண்டு. மழையில் நனைந்து வரும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் ஈரமாக இருக்கும். அவற்றை காய வைக்க அரிக்கேன் விளக்கு கண்ணாடி அருகே கொஞ்ச நேரம் காட்டினால் போதும். அவை காய்ந்து பழைய நிலைக்கு வந்துவிடும்.



(PICTURE THANKS  TO  Trashball! A Subsidiary of Ex-Communicated Communications, Inc.)

அரிக்கேன் விளக்கில் தினம்தோறும் கெரசின் ஊற்றி விளக்கையும் கண்ணாடியையும்  சுத்தம் செய்வது என்பது அப்போது பெரிய வேலை. கண்ணாடியை அதில் மாட்டுவது அல்லது கழட்டுவது  என்பது ரொம்பவும் கவனமான விஷயம். அதிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். இல்லையேல் கண்ணாடி உடைந்துவிடும்.

கிராமங்களில்:

கிராமத்தில் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் அரிக்கேன் விளக்குதான். சமையல் கட்டில் மினுக்மினுக் என்று எரியும் சிறிய சிம்னி விளக்குதான். பெரும்பாலான சமயம் அதற்குரிய கண்ணாடி எப்போதோ உடைந்து போயிருக்கும். நடு வீட்டில் உள்ள கொஞ்சம் பெரிய சிம்னி விளக்கில் மட்டும கண்ணாடி இருக்கும். உடைந்தாலும் உடனே வாங்கி விடுவார்கள். அரிக்கேன் விளக்கை பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் கட்டி தொங்க வைத்து இருப்பார்கள். அல்லது திண்ணையிலேயே இருக்கும். இதன் வெளிச்சம் நடு வீட்டிற்கும் திண்ணைக்கும் தெருவிற்கும் வரும்.

வண்டிப் போக்குவரத்து இருக்கும் கிராமங்களில் பேருந்து நிற்கும் மெயின்ரோட்டில் இருக்கும் டீக்கடைகளில் பெரும்பாலும் இந்த அரிக்கேன் விளக்குதான். பெட்ரோமாக்ஸ் விளக்கும் சில கடைகளில் அபூர்வமாக இருக்கும். ஊர் சத்திரங்களிலும் சாவடிகளிலும் அரிக்கேன் விளக்கு வெளிச்சம்தான். கிராமத்து சாலைகளில் மாட்டு வண்டியை இரவு நேரத்தில் ஓட்டும்போது இந்த அரிக்கேன் விளக்கு வண்டியின் நுகத்தடியில் தொங்கும்

எம்ஜிஆர் நடித்த ஒரு படம் பெரிய இடத்துப் பெண். அந்த படத்தில் அவனுக்கென்ன் தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா “ என்று ஒரு பாடல். அதில்  இரவுநேரம் ஆள் இல்லாத, அரிக்கேன் விளக்கு மட்டும் தொங்கவிடப்பட்ட மாட்டு வண்டி போய்க்கொண்டே இருக்கும். இந்த பாடலை வீடியோவில் கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள் ( YOUTUBE இல் பதிவு செய்திட்ட சகோதரர் அப்துல் கபூர் அவர்களுக்கு நன்றி)


இரவு நேரத்தில் களத்து மேட்டுக்கு காவலுக்குச் செல்லும் பெரியவர்கள் ஒரு பெரிய போர்வையைப் போர்த்தியபடி ஒரு கையில் பெரிய தடியையும் இன்னொரு கையில் அரிக்கேன் விளக்கையும் கொண்டு செல்வார்கள். ஒருமுறை விடுமுறையில் மழைக் காலத்தில் கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டில் இருந்தேன். இரவு நேரம். ஐப்பசி அடை மழை. பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் மாடுகள் கத்த ஆரம்பித்தன. இரவு நேரத்தில் யாராவது புதியவர்கள் வந்தாலோ அல்லது ஏதேனும் ஆபத்து என்றாலோ அவை கத்தும். என்னுடைய தாத்தாவும் நானும் திண்ணையில் இருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு போய் பார்த்தோம். வழிதெரியாது வந்த வேறு தெரு நாய் ஒன்று மழைக்கு அங்கே ஒதுங்கி இருந்தது. அதனை விரட்டிய பின்னரே வந்தோம். அந்த மழை காற்றிலும் விளக்கு அணையவில்லை. இன்னும் பல கிராமங்களில் அரிக்கேன் விளக்கு பயன்பாட்டில் உள்ளது.

இன்னும் சில செய்திகள்:

பழைய எழுத்தாளர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கார், கல்கி, மாதவையர் நாவல்களில் அவ்வப்போது இந்த அரிக்கேன் விளக்கு வந்து போகும். ரெயில்வே லைன்மேன்கள், கேட் கீப்பர்கள்  இந்த அரிக்கேன் விளக்கை வைத்துதான் காவல் காத்தார்கள். அப்போதைய ரெயில்வே கார்டு அரிக்கேன் விளக்கில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு, பச்சை விளக்குகளைத்தான் அசைத்தார்.


இப்போது நாடெங்கும் மின்வெட்டு. இன்வெர்ட்டரும் சமயத்தில் கை
கொடுப்பதில்லை. எனவே பழையபடி பல இடங்களில் அரிக்கேன் விளக்கு உபயோகத்தில் வந்து விட்டது. மின்வெட்டைக் கண்டித்து போராட்டம் செய்பவர்கள் இப்போது “அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம்நடத்துகிறார்கள். அப்போது நாடு முழுக்க இருந்ததே அரிக்கேன் விளக்குதான்.


( PICTURES  &  VIDEO - THANKS  TO  GOOGLE )




Sunday, 21 October 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.



இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு  தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை நேற்று ( 20.10.2012 ) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.



பொதுவாகவே ஆட்சிக்கு வருபவர்கள் எந்த திட்டம் போட்டாலும் தங்களுக்கு இதில் என்ன லாபம் என்றுதான் கவனித்தார்கள். குறிப்பாக தாங்கள் ஒரு திட்டத்தை கொண்டுவந்து, பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்து அவர்களது காலத்தில் இந்த திட்டம் செயல்பட்டால் என்ன ஆவது என்று தெரிந்தால் அதனை செயல்படுத்த மாட்டார்கள். இதனாலேயே தமிழ்நாட்டில் பல நல்ல தொலைநோக்கு திட்டங்கள் அரசியல் காரணமாக செயல்படாமல் போய்விட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும்  இருக்கும் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். தற்காலிகமாக இந்த பிரச்சினையைத் தீர்க்க அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியிராமல் சூரிய சக்தியைக் கொண்டு தன்னிறைவு அடைவதுதான் ஒரேவழி என்பதனை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அவரை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இந்த திட்டத்தை இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்து இருந்தால் தமிழ்நாடு இந்த அளவுக்கு மின்வெட்டால் பாதித்து இருக்காது.


இதுபற்றி தினமணி தந்துள்ள தகவல்:


தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ன் சிறப்பு அம்சங்கள்:
சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல்.
வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.
அனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
தற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.
பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.
சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

சூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட முனைப்பான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
அ) நிகர அளவியல்
ஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்
இ)  மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்

(நன்றி: தினமணி (e- Paper ) ஞாயிறு, அக்டோபர் 21, 2012)


எந்த திட்டமாக இருந்தாலும் அதனை நிறைவேற்றும் பொறுப்பு அரசு அதிகாரிகளின் பொறுப்பில் அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது. இந்த திட்டம் முறைப்படி செவ்வனே நடந்தால் நாட்டுக்கு நல்லது.

ஒரு நல்ல நோக்கத்தோடு , தொலைநோக்கோடு இந்த தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” (Tamil Nadu Solar Energy Policy 2012) திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு.