Showing posts with label மாணவர். Show all posts
Showing posts with label மாணவர். Show all posts

Saturday, 9 May 2015

ஆசிரியரும் பிள்ளைகளும் – அன்றும் இன்றும்



யார் வேண்டுமானாலும் என்ன தப்பு வேண்டுமாலும் செய்யலாம். ஆனால் வாத்தியார் மட்டும் எந்த தப்பையும் செய்யக் கூடாது. ஆசிரியர் மீது அவ்வள்வு மரியாதை.  கிராமத்தில் ஒரு ஆசிரியர் எல்லோருக்கும் தெரிந்தவராக இருப்பார். அவர் அவசரத்துக்கு கூட ஒரு மூலையில் ஒதுஙகக் கூடாது. கையில் நாலு பேருக்கு தெரிய சிகரெட்டைக் தொடக் கூடாது. வாத்தியாருக்கே இப்படி என்றால் டீச்சருக்கு கேட்கவே வேண்டாம். டீச்சர் என்றால் அது ஆசிரியை மட்டுமே குறிக்கும். வாத்தியார் என்றால் அது ஆசிரியரைத்தான் குறிக்கும்.  

அவ்வளவு ஏன் நான் பள்ளி விடுமுறையில் எங்கள் அம்மாச்சி ( அம்மாவின் அம்மா) ஊருக்கு செல்லும்போது, எனது தாத்தா, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய மாடுகளை கட்டுத்தறியில் கட்டச் சொல்வார். அவை எனக்கு நன்றாகவே டேக்கா கொடுக்கும். அப்போது கூட எனது தாத்தா என்னை திட்ட மாட்டார். “ மாட்டைப் புடிச்சி கட்டத் தெரியல ... பள்ளிக் கூடத்திலே என்னாத்த சொல்லித் தர்ராங்க என்றுதான் சொல்லுவார்.

பிள்ளைகளை அடித்தல்:


                                        (PICTURE – COURTESY:  www.thebetterindia.com )

அப்பொழுதெல்லாம் பிள்ளைகளைப் பற்றி சொல்லும்போது “ அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும் “ என்று சொல்லுவார்கள். பிள்ளைகளை பள்ளியில் கொண்டு வந்து விடும்போதே “ சார் நீங்க என் மகனை தலைகீழா கட்டி வைச்சு அடிச்சு வேணுமானாலும் சொல்லிக் கொடுங்க. நான் எதுவும் கேட்க மாட்டேன். என்னோட பிள்ளைக்கு படிப்பு வந்தா போதும் “ என்று சொன்ன பெற்றோர்களும் உண்டு. ஆசிரியர் அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் உடல் வலிமை மன வலிமை அன்றைய பிள்ளைகளுக்கு இருந்தது. அவ்வளவு ஏன், நண்பர்களுக்குள் பள்ளி இடைவேளையின் போது உடைத்த பாதி வேப்பங் கொட்டையை விரல் முட்டிகளில் வைத்து, இன்னொரு கையால் ஓங்கி அடித்து வலுவை சோதித்து விளையாடியதும் ஒரு காலம்.    

ஆனால் இப்போதோ பிள்ளைகள் கெட்டுப் போக வீட்டிலேயே எத்தனையோ சமாச்சாரங்கள். டீவி, செல்போன், இண்டர்நெட், சினிமா என்று கவனத்தை ஈர்க்கும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள். இவற்றையெல்லாம் மீறி மாணவனை ஆசிரியர்  படிக்கச் செய்ய வேண்டும். இந்த காலத்து பிள்ளைகளை ஒரு சொல் சொல்ல முடியாது. அப்புறம் அடித்தால் என்னாவது.? இந்த காலத்து பிள்ளைகளுக்கு அவ்வளவாக மனவலிமையோ, உடல் வலிமையோ இல்லை என்பதே உண்மை. பள்ளியை நடத்துபவர்களும், பெற்றோர்களும் எதற்கெடுத்தாலும் ஸ்டேஷன், கோர்ட் என்று சென்று கல்விக் கூடங்களை நுகர்வோர் பொருட்களாக மாற்றி விட்டனர்.                                             

                               (PICTURE – COURTESY: www.moneyandshit.com/walkman )

அன்றைய படிப்பு:

அன்றைய படிப்பு தமிழ் மீடியமாக இருந்தாலும் ஆங்கில மீடியமாக இருந்தாலும் வாழ்க்கைக் கல்விக்கும் உதவியது. ஆசிரியராக இருந்தாலும் மாணவராக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு சுய கட்டுப்பாடு இருந்தது. விலகிச் சென்றவர்கள் மட்டுமே வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் ஓட முடியாமல் நின்று விட்டார்கள்.

இன்றும் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம் - என்ற ஔவைப் பாட்டியின் ஆத்திச்சூடி போன்றவை முன் வந்து நிற்கின்றன. அன்று நான் படித்த (ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த) கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகள்கள்தான் (மனப்பாடமாக) இன்றும் எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. வங்கிப் பணி செய்த போதும் இந்த எளிய முறைகள்தான் உதவின. இன்று ஒரு சாதாரண கணக்கிற்கு கூட, இன்றைய பிள்ளைகளில் பெரும்பாலானோர்  கால்குலேட்டர் தேடும் காலமாக உள்ளது.  

மேலே சொன்ன அனைத்தும் 50 வருடங்களுக்கு முந்திய, நான் பள்ளிப் படிப்பை தொடங்கிய காலத்து சமாச்சாரங்கள். நான் சொன்னதற்கு காரணம், இவை அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல. அன்றைக்கு சூழ்நிலை அப்படி இருந்தது என்பதனை பதிவு செய்தேன். அவ்வளவுதான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதனையும் மறுப்பதற்கில்லை. அதே சமயம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்கள் மனதில் விதைக்க முடியும் என்பதனையும் மறுக்க இயலாது.

                              (PICTURE – COURTESY: http://commons.wikimedia.org)

(சென்ற ஆண்டு ஆசிரியர் தினத்தன்று வெளியிட வைத்திருந்த கட்டுரை. ஏனோ மேற்கொண்டு இதில் மேலும் விவரித்து எழுத முடியாமலும், அன்றே வெளியிட முடியாமலும் போனது)