Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Saturday, 26 December 2015

வைகை வெள்ளம் – தமிழர் பேரிடர் மேலாண்மை



இந்த ஆண்டு (2015) டிசம்பரில், சென்னையில் அடையாறில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பினையும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தோம். அந்நாளில் மதுரையில் வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைப் பற்றியும், அப்போது மதுரையைக் காப்பாற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பரஞ்சோதி முனிவர் எழுதிய ’திருவிளையாடற் புராணம்”  சொல்லுகிறது. (மண்சுமந்த படலம்) ஏதோ ஒரு காலத்தில் வைகையில் வெள்ளம் அளவு கடந்து வந்திட, அதனை ஒட்டி எழுந்த புராணம் என்று எடுத்துக் கொள்ளலாம். கதை சொல்லப்பட்டது புராணத்தில் என்றாலும், ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு, உடைப்பு ஏற்பட்டபோது பழந் தமிழர்கள் என்ன செய்தார்கள் என்பதனை தெரிந்து கொள்ளவே இந்த கட்டுரை.

மன்னன் உத்தரவு:

வானத்தை தொட்டுவிடுவது போன்று வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரியகடல் ஒன்றின் அலைகள் இடையே தத்தளிக்கும் மரக்கலம் போன்று மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. உடனே பாண்டிய மன்னன் தனது அமைச்சர்களை அழைத்து, ” கரையை நோக்கிவரும் வெள்ள நீரைக் கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள் “ என்று உத்தரவு பிறப்பிக்கின்றான்.

அமைச்சர்கள் பணி:

உடனே அமைச்சர்கள் வேறு வேறாக உள்ள பல குடிகளையும் குறிப்பிட்டு, யார் யார் ஆற்றின் கரையை எப்படி அடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, அடைக்க வேண்டிய பகுதிகளையும் வைகைக் கரையில் அளவுகோலால் அளந்து, கோடிட்டு காட்டியும் உத்தரவு செய்தனர். அதன்படி மதுரை நகரம் முழுக்க ‘அவரவர் பங்கை அடையுங்கள்” என்று பறையறிவிக்கப்பட்டது. உடனே நகர மக்களும் ‘என்னே மதுரைக்கு வந்த சோதனை” என்று , வைகைக் கரையில் அவரவர் பங்கை அடைக்க குவிந்தனர். உடல் வலிவுள்ளவர்கள், அவர்களே களத்தில் இறங்கி மண்ணை வெட்டிப் போட்டு  வேலை செய்தனர். முடியாதவர்களோ கூலிக்கு ஆள் வைத்து இந்த காரியங்களைச் செய்தனர். 

கூலியாட்கள் உடைப்பை சரிசெய்தல்:

கூலிக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றவுடன் , மண்வெட்டியும் கூடையும் கொண்டு வருபவர்கள், மரங்களைச் சுமந்து வருபவர்கள், விரிந்த அகலமான பசுந்தழையை சுமந்து வருபவர்கள், வைக்கோலை சுமந்து வருபவர்கள் என்று வைகைக் கரையில் கூலியாட்கள் நிரம்பத் தொடங்கினர். இவர்களால் அந்த பகுதி முழுக்க ஒரே ஆரவாரம்; இரைச்சல்.

நீண்ட நெடிய மரங்களை நெடுக்காகவும் நெருக்கமாகவும் நடுகின்றனர். குதிரை பாய்வது போன்று வேகம் வேகமாக, சட்டென்று நிறுத்துவதால் இவற்றிற்கு ‘குதிரை மரம்’ என்று பெயர். அந்த குதிரை மரங்களின் கீழ், வைக்கோலைப் பாம்புபோல் பிரி பிரியாகச் செய்து, உருட்டி கிடத்துகிறார்கள். அவற்றின் மீது பசுந்தழைகளைப் போட்டு, வெட்டிய மணலையும் நிரப்புகிறார்கள். அப்போது எல்லோரையும் அதட்டி ” சீக்கிரம், சீக்கிரம்” என்று வேலை வாங்குகின்றனர்; இருந்தும் சிலசமயம் அடைக்கப்பட்ட பகுதிகளில் உடைப்பு ஏற்பட “ அன்னையே! வைகையே அளவிடமுடியாத கோபம் எதற்கு? சினம் ஆறுவாயாக” என்று ஆற்றினை வணங்கி விட்டு, மீண்டும் மீண்டும் மணலைக் கொட்டி சரி செய்கின்றனர். உடைப்பு அடைபட்டவுடன் சீழ்க்கை ஒலி, பறை ஒலி, குரவைப் பாடல்கள் என்று ஒரே அமர்க்களம் செய்கிறார்கள்.  இவ்வாறு அவரவர் பங்கை , கூலியாட்களின் மூலம் வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட உடைப்பை சரி செய்கின்றனர்.
                  
                                                              
                                            PICTURE COURTESY : GOOGLE IMAGES    
 
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் – மண்சுமந்த படலம்
   கருங்க டற்றிரை யிடைக்கி டந்துசுழல்
        கலமெ னககன முகடளாய்
    வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர்
        மறுகி யுட்கமற வேலினான்
    ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை
        சுமந்தொதுக்கிவரு மோதநீர்ப்
    பொருங்க தத்தினை யடக்கு வீரென
        வமைச்சருந் தொழுது போயினார். 2
   
 வெறித்த டக்கைமத யானை மந்திரிகள்
        வேறு வேறுபல குடிகளுங்
    குறித்தெ டுத்தெழுதி யெல்லை யிட்டளவு
        கோல்கி டத்திவரை கீறியே
    அறுத்து விட்டுநக ரெங்க ணும்பறை
        யறைந்த ழைத்துவிடு மாளெலாஞ்
    செறித்து விட்டவ ரவர்க்க ளந்தபடி
        செய்மி னென்றுவரு வித்தனர். 3
 
   மண்டொ டுங்கருவி கூடை யாளரு
        மரஞ்சு மந்துவரு வார்களும்
    விண்டொ டும்படி நிமிர்ந்து வண்டுப டு
        விரிபசுந் தழைப லாலமுங்
    கொண்ட திர்த்துவரு வாரும் வேறுபல
        கோடி கூடிய குழாமுநீர்
    மொண்ட ருந்தவரு மேக சாலமென
        வருபு னற்கரையின் மொய்த்தனர். 4
 
    கிட்டு வார்பரி நிறுத்து வாரரவு
        ருட்டு வாரடி கிடத்துவார் 
    இட்டு வார்தழை நிரப்பு வார்விளி
        யெழுப்பு வார்பறை யிரட்டுவார்
    வெட்டு வார்மண லெடுத்து வார்செல
        வெருட்டு வார்கடிது துடுமெனக்
    கொட்டு வார்கரை பரப்பு வாருவகை
        கூரு வார்குரவை குழறுவார். 5
 
    கட்டு வார்கரை யுடைப்ப நீர்கடுகல்
        கண்டு நெஞ்சது கலங்குவார்
    மட்டி லாதமுனி வென்னை யன்னையினி
        யாறு கென்றெதிர் வணங்குவார்
    கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ்
        கொள்ளு வார்குரவை துள்ளுவார்
    எட்டு மாதிரமு மெட்ட வாயொலி
        யெழுப்பு வார்பறை யிரட்டுவார். 6
 
இந்நிலை யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர்
துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் 7
 
 

Monday, 27 October 2014

மதுரையில் வலைப்பதிவர்கள்!




       பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
                    
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை-
                    
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
                    
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
                                                                                          -  வில்லிபாரதம்  


கடந்த ஒரு வார காலமாக தென் தமிழ்நாட்டில் ஐப்பசி மழை!மதுரைக்குப்  போகாதீங்கஎன்பது போல,  மாநாட்டிற்கு முதல்நாள் இரவும் திருச்சியில் மழை கொட்டி தீர்த்தது. என்ன மழை பெய்தாலும் மதுரைக்கு எப்படியும் போய்த் தீருவது என்ற முடிவில் நான் இருந்தேன். அப்போதெல்லாம் கட்சி கூட்டம் நடக்கும்போது, மழை பெய்தால் கழகக் கண்மணிகளில் ஒருவர் மேடையில் ஏறிஅடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடக்கும்என்று பேசிவிட்டு செல்வார்.  அதுபோல, மழையை நினைத்து எங்கே பதிவர்கள் வராமல் போய் விடுவார்களோ என்று நினைத்து மழையில்லை... வாருங்கள் வலைப்பதிவர்களே என்ற பதிவினை திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஒரு அவசரமான முக்கிய பதிவை வெளியிட்டார்.


மறுநாள் (26.10.2014 ஞாயிறு) அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து விட்டு மதுரைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லார் விட்ட பாணத்திற்கு பயந்தோ என்னவோ மழை இல்லை! விழா நடந்த வண்டியூர் தெப்பக்குளம் மேற்குக் கரையினில் இருக்கும் கீதா நடன கோபால நாயகி மந்திர்  அரங்கத்திற்கு முன்னதாகவே போய் விட்டேன்.

அங்கு மண்டபத்தினுள் அய்யா அன்பின் சீனா, அவர்களது மனைவி திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்கள் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், பகவான்ஜி (ஜோக்காளி), மகேந்திரன், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் பம்பரமாக சுழன்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு இருந்தனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில் சொன்னபடி  விழா தமிழ்த்தாய் வணக்கத்துடன் இனிதே தொடங்கியது. முற்பகல் சிறப்பு சொற்பொழிவாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை. புதுக்கோட்டையிலிருந்து வந்த ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பத்திரிகை செய்திகளில் வருவது போல “திடீர் மணமகன் “ ஆனார். கவிஞர் அய்யா அவர்கள் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர். நல்லதொரு சொற்பொழிவைத் தந்தார். எல்லோரும் எதிர்பார்த்த  மதுரை ஜிகர்தண்டா எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கின. எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரை செய்தார். வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள்  எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம் என்ற குறும்படம், மற்றும் வலைப் பதிவாளர்கள் கரந்தை ஜெயக்குமார், கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்), மு.கீதா (வேலு நாச்சியார்) P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை)  ஆகியோர் எழுதிய நூல்கள்  வெளியிடப்பட்டன. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நன்றியுரை சொல்ல, தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிந்தது.

                   உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
                  
அனைத்தே புலவர் தொழில்.
                           திருவள்ளுவர் (குறள். 394)


அடுத்த ஆண்டு (2015) வலைப்பதிவர்கள் சந்திப்பினை புதுக்கோட்டையில் நடத்தும் பொறுப்பினை புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரங்கத்தில் நிகழ்ச்சிகளை வீடியோ, புகைப்படங்களை எடுக்க தனியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இவற்றை முழு விவரமாக சிறப்புற தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். மேலும் பல பதிவர்கள் இந்த நிகழ்ச்சியை தங்களது வலைத்தளத்தில் சிறப்பாக வெளியிட வேண்டும் என்பதற்காக தங்களது கேமராக்களில் எடுத்துக் கொண்டு இருந்தனர். அய்யா பேராசிரியர்  தருமி தனது பெரிய கேமராவினால் இளைஞனாக மாறி படங்களை எடுத்தார். எனவே இந்த சந்திப்பு சம்பந்தமாக நிறைய பதிவுகளை எதிர் பார்க்கலாம் என்பதால், நான் எடுத்த சில படங்களை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளேன்.

(படம்: மேலே) நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்


(படங்கள்: மேலே) மேடையில் வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்கள்

(படம்: மேலே) அன்பின் சீனா, கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), பகவான்ஜி (ஜோக்காளி), மற்றும் தருமி அய்யா


(படம்: மேலே) கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), தருமி அய்யா, நான் மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி

(படம்: மேலே) துளசி கோபால் தம்பதியினரை வரவேற்கும் அன்பின் சீனா தம்பதியினர்

(படம்: மேலே) அய்யா G.M.B  (G.M. பாலசுப்ரமணியம்) அவர்கள் தனது மனைவி மகனுடன்

(படம்: மேலே) பகவான்ஜி (ஜோக்காளி), பால.கணேஷ் (மின்னல் வரிகள்), கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), தேவகோட்டை கில்லர்ஜி மற்றும் கரந்தை ஜெயக்குமார் தனது மனைவி, மகளுடன்
  

(படங்கள்:மேலே) கூட்டம் துவங்கிய போது

(படம்: மேலே) தேவகோட்டை கில்லர்ஜி, மணவை ஜேம்ஸ் ஆகியோருடன் நான்


 
(படங்கள் மேலே) அரங்கத்தினுள்


(படம்: மேலே) எனக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசு


குறிப்பு: இன்றுமுதல், இந்த விழாவினைப் பற்றி வெளியாகும் பதிவுகளின் இணைப்புகள் அவ்வப்போது இந்த பதிவினில்  தொடர்ந்து இணைக்கப்படும் (UPDATE) என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவருடைய பதிவேனும் விட்டுப் போயிருப்பின், யார் தெரிவித்தாலும் இதில் இணைத்து விடுகிறேன்.

( கீழே உள்ள ஒவ்வொரு பதிவின் முகவரியிலும் (web address ) ”க்ளிக் செய்வதன் மூலம் இங்கிருந்தே அந்த பதிவுகளைக் காணலாம்)
மதுரை - மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா -


மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்



முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?

796. 3-ம் பதிவர் திருவிழா -- 1

ஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்

797. 3-ம் பதிவர் திருவிழா -- 2

பதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை



மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014 எப்படி?



மதுரையை கலக்கியது யாரு?