Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Monday, 19 January 2015

மாற்றம் ஒன்றே மாறாதது



பெரும்பாலும் வீட்டில் குடும்பத்துடன் நான் டீவி பார்ப்பதில்லை. இதனால் பல திரைப்படங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க இயலாமல் போய்விடும். முக்கிய காரணம், வேறொன்றுமில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து பார்க்குமளவுக்கு டீவி நிகழ்ச்சிகளும், படங்களும் இல்லை என்பதுதான். இதன் காரணமாக நான் தனியே டீவியில் படம் பார்த்தால் ஒன்று பாதிப் படமாக இருக்கும்; அல்லது படம் முடியும் தறுவாயில் இருக்கும். இதன் காரணமாக அண்மையில் ஜெயா டீவியில் ஒளி பரப்பிய கோச்சடையான் படத்தில் வரும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலையும் அது சார்ந்த சில காட்சிகளையும் மட்டுமே காண முடிந்தது. அப்புறம் வழக்கம் போல யூடியூப்பில் (YOUTUBE) அந்த பாடலை பார்த்தேன். இந்த பாடலில் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த  பொன்மொழியை அடிக்கடி பத்திரிகைகளிலும் வலைப் பதிவுகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பலர் சுட்டிக் காட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையை சொன்னது யார் என்று சொல்வதில்லை.

என்றும் மாறாதது

ஆதியில் தொடங்கிய மனிதனின் நடை பயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கும் அதற்கு அப்பாலும் நீண்டு போய்க் கொண்டு இருக்கிறது. காலத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொண்டவர்களுக்கு பிழைப்பு கிடைத்தது. உதாரணத்திற்கு நம் நாட்டில் பார்ப்போம். கைரிக்‌ஷா போய் சைக்கிள் ரிக்‌ஷா வந்தது. அப்புறம் ஆட்டோவாக மாறியது. இந்த தொழில் செய்தவர்களில் மாற இயலாதவர்கள் காணாமல் போனார்கள். பல இடங்களில் சுனாமி வந்தது வாரி சுருட்டியது. இதில் பலநாட்டின், பலருடைய வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்னும் கம்ப்யூட்டர் , செல்போன் என்று எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக மாற்றம் ஒன்றே மாறாதது.   

ஹெராகிளிடஸ் (HERACLITUS)

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS)என்ற கிரேக்க அறிஞர். (படம் மேலே) இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only immutable) மற்றும்மாற்றம் ஒன்றே நிலையானது  (Change is the only constant) என்று இரண்டு விதமாக மொழிபெயர்த்தனர். இன்னும் சிலர் There is nothing permanent, except Change” என்றும் எழுதினர்.

ஹெராகிளிடஸ், Ephesus  என்ற நகரில் (இது ஆசியா மைனர் என்ற இடத்தில், தற்போதைய துருக்கி நாட்டில் உள்ளது) ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரமான சிந்தனையாளர். உலகளாவிய ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை உள்ளவர். தனிமை விரும்பி. புலம்பல் ஞானி (Weeping Philosopher) என்று அழைக்கப்பட்டவர். தனக்கென்று பின்தொடரும் மாணவர் பட்டாளம் ஏதும் இல்லாதவர். இவரது காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு 535 கி.மு 475) ஆகும்.

இந்த பொன்மொழி பிரபலமானது எப்படி?


பராக் ஒபாமா (BARACK OBAMA) அவர்கள் 2008 - இல் அமெரிக்க குடியரசுத் தலைவராக வந்தார். (இப்போது இரண்டாம் முறை) அப்போது தனது உரை ஒன்றில் மாற்றம் தேவை என்று உரையாற்றினார். அன்றுமுதல் இந்த பொன்மொழியும் ஊடகங்களில் கூடவே சேர்ந்து பிரபலமாயிற்று.

பாடல் வரிகள் மற்றும் வீடியோ:
       

ரஜினி வசனம்:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ரஜினி வசனம்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை செயல்

குழு:
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

ரஜினி வசனம்:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

குழு:
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

பாடல்: வைரமுத்து  - படம்: கோச்சடையான்
இசை: A.R.ரகுமான்
பாடியவர்கள்: ரஜினிகாந்த், ஹரிசரண்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது” - என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் (YOUTUBE) இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



கட்டுரை எழுத துணை நின்றவை (நன்றியுடன்):
கோச்சடையான் பாடல் வரிகள்

                      (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")

  

Wednesday, 23 January 2013

இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )



வலைப்பதிவுகளில் அடிக்கடி நான் காணும் ஒரு வாசகம்இதுவும் கடந்து போகும்  என்பது. ஆங்கிலத்தில்THIS TOO SHALL PASS ” . இந்த வாக்கியத்தை எப்போதோ எதிலோ படித்ததாக நினைவு! உடனே நினைவுக்கு வரவில்லை. எனவே அங்கும் இங்கும் தேடியதில் எழுதியது இந்த கட்டுரை.

சாலமன் மன்னன் ( KING SOLOMON)
 
பண்டைய ஒன்றுபட்ட யூதா இஸ்ரேல் நாட்டின் மன்னரா இருந்தவர் மன்னன் சாலமன் (King Solomon). இவர் தாவீதின் குமாரர். இசுலாமியர்கள் இவரை சுலைமான் என்று அழைக்கிறார்கள். இவரது ஆட்சியில் ஜெருசலேம்(Jerusalem) நாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு உலகின் முதல் கோயிலை (First temple) சாலமன் கட்டியதாகச் சொல்கிறார்கள். மன்னன் சாலமனைப் பற்றி பல கதைகள் உண்டு. மன்னன் சாலமனின் தீர்ப்புகள் ( Solomon's birth and judgments);  மன்னன் சாலமனின் அறிவுக் கூர்மை (Solomon's wisdom and knowledge);  மன்னன் சாலமனின் அதிகாரமும் பெருமையும் (Solomon's power and magnificence); மன்னன் சாலமனின் மந்திரக் கம்பளம் (Solomon's magic carpet); மன்னன் சாலமனும் இளவரசி ஷீபாவும் (Solomon and the Queen of Sheba; daughter of the pharaoh) என்று நிறைய கதைகள்.

சாலமன் என்றதும் எனது நினைவுக்கு வருவது சின்ன வயதில் நான் படித்த “ SOLOMON GRUNDY”  என்ற ஆங்கிலக் கவிதைதான். இந்த கவிதையை 1842 இல்  முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர் James Orchard Halliwell என்பவர்.

Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.

மேலே சொல்லப்பட்ட ஆங்கில கவிதை (Nursery rhyme) சொல்லும் சாலமன் க்ரண்டி,  மன்னன் சாலமனைக் குறிக்கவில்லை.

மன்னன் சாலமன் கேட்ட அதிசய மோதிரம்:

மன்னன் சாலமனுக்கு விசுவாசமான ஒரு அமைச்சர் இருந்தார். பெயர் பெனையா பென் யெஹோயடா ( Benaiah ben Yehoyada.) ஒருநாள் அந்த அமைச்சரிடம் சாலமன்  அமைச்சரே! ஒரு அதிசயமான மோதிரம் ஒன்று உள்ளது. அதனை நீ கொண்டு வரவேண்டும். உங்களுக்கு அதனைக் கண்டுபிடிக்க ஆறுமாத காலம் அவகாசம் தருகிறேன். வரும் சுகோட் (Sukkot) திருவிழா சமயம் அதனை நான் என் கைவிரலில் அணிய வேண்டும்என்றார். அமைச்சர் உடனேமாட்சிமை பொருந்திய மன்னரே! இந்த உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நான் அந்த மோதிரத்தைக் கண்டு கொண்டு வருவேன்! அந்த மோதிரத்தில் அப்படி என்ன அதிசயம் உள்ளது?” என்று கேட்டார். அதற்கு மன்னன் சாலமன்  " மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவன் அந்த மோதிரத்தைப் பார்த்தால் துயரமாகி விடுவான்; துயரமாக இருக்கும் ஒருவன் அதனை பார்த்தால் மகிழ்ச்சியாகி விடுவான் (“If a happy man looks at it, he becomes sad, and if a sad man looks at it, he becomes happy.") என்று சொன்னார்.

வசந்தகாலம் முடிந்து கோடைகாலமும் வந்தது. அமைச்சரால் எங்கு தேடியும் அந்த அதிசய மோதிரத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு மோதிரமே கிடையாது. மன்னன் விளையாட்டாகச் சொன்னதைக் கேட்டு அமைச்சர் அதனை தேடிக் கொண்டிருந்தார். சுகோட் திருவிழாவிற்கு முதல்நாள் ஜெருசலேம் நகரின் கடைத் தெருவில் சோகமாக சென்று கொண்டிருந்தார் அமைச்சர். அப்போது  வியாபாரத்தை முடித்துவிட்டு தனது பொருட்களை பழைய கம்பள விரிப்பு ஒன்றில் வைத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவரைக் கண்டார். தான் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார். அந்த பெரியவர் தனது கம்பளவிரிப்பைத் திறந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அதன்மேல் சில சொற்களை செதுக்கி கொடுத்தார். அந்த மோதிரத்தில் இருந்த வாக்கியத்தைப் படித்துப் பார்த்த அமைச்சரின் முகத்திலே புன்னகை தோன்றியது. மோதிரம் கிடைத்து விட்டது.

அடுத்தநாள் சுகோட் திருவிழா. அரசவையில் மன்னன் சாலமன் அமைச்சரிடம் புன்னகைத்தவாறேஎன்ன நண்பரே! பொருள் கிடைத்ததா?” என்று கேட்டார். எல்லோரும் நகைப்புடன் அமைச்சரைப் பார்த்தனர். உடனே அமைச்சர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம்மாட்சிமை பொருந்திய மன்னருக்கு! இதோ!” என்று தான் வாங்கிய மோதிரத்தைக் கொடுத்தார். மோதிரத்தை வாங்கிய மன்னர் சாலமன் அதன்மேல் இருந்த வாசகங்களைப் படித்தார்.அவது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது


அந்த மோதிரத்தின் மேல்  ” இதுவும் கடந்து போகும்  (THIS  TOO SHALL PASS ) “  என்ற அர்த்தம் பொதிந்த மூன்று ஹீப்ருமொழி சொற்கள் இருந்தன. அதனைப் படித்த மன்னன் சாலமனுக்கு  தன்னிடம் இப்போது இருக்கும் அதிகாரம், அளவற்ற செல்வம், அறிவு யாவும் ஒருநாள் நீங்கிவிடும் என்ற ஞானம் பிறந்தது.. இதனால் அவருடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து துயரம் வந்தது. கொஞ்சநேரம் சிந்தனையில் இருந்த மன்னன் சாலமன் தான் அணிந்து இருந்த வைரமோதிரத்தை எடுத்துவிட்டு அமைச்சர் கொடுத்த அந்த அதிசய மோதிரத்தை அணிந்து கொண்டார்.


பழமொழியின் உட்பொருள்:


இதுவும் கடந்து போகும்  ( THIS TOO SHALL PASS )என்ற இந்த வாக்கியத்தின் உட்பொருள்எதுவும் நிலையில்லாததுஎன்பதுதான். மனித வாழ்வில் மகிழ்வும் துயரமும் மாறி மாறி வருவன.எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பவனின் மகிழ்ச்சியும் ஒருநாள் முடிந்து போகும். துயரத்தையே நினைத்துக் கொண்டிருப்பவனின் துயரமும் ஒருநாள் முடிந்து போகும். எனவே எல்லாமே சிலநாட்கள் மட்டுமே. 

இது ஒரு நாட்டுப்புற இலக்கியம் (Folklore) ஆகும். மக்கள் மத்தியில் சொல்லப்படும் கிராமிய நாடோடிக் கதைகளில் ஒன்று. பைபிளில் (Bible) இந்தகதை இல்லை. இந்த பழமொழியானது துருக்கி நாட்டு பழங்கதைகளிலும் பாடல்களிலும் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது சொற்பொழிவு ஒன்றில் இந்த வாக்கியத்தை மேற்கோள்  காட்டி பேசினார். அன்று முதல் இந்த சொற்றொடர் பிரபலமாகி விட்டது.   

இந்த வாக்கியம் பொறிக்கப்பட்ட ஸ்டெர்லிங் சில்வர் மோதிரம் அணிந்து கொள்வதும்  நாகரிகம் (Fashion) ஆக உள்ளது.
 





கட்டுரை எழுத உதவியவை:
MY THANKS TO:
https://www.google.co.in