Friday 25 August 2017

கில்லர்ஜியின் - தேவகோட்டை தேவதை தேவகி



தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில், கில்லர்ஜி என்றால் அந்த மீசையும் அவருடைய ஊரான தேவகோட்டையும் தான் சட்டென்று மனதில் நிழலாடும்.. இவருடைய அப்பாவும் இந்த நூலின் உள்ளே உள்ள புகைப்படத்தில் முறுக்கு மீசையோடுதான் இருக்கிறார். நண்பர் கில்லர்ஜி,  மீசையை முறுக்குவதில் மட்டுமல்லாது, தனது ’பூவைப் பறிக்கக் கோடலி எதற்கு’ என்ற வலைப்பதிவில் http://killergee.blogspot.com நியாயமான சமூக காரணங்களுக்காகவும் கேள்விக் கணைகளை தொடுப்பதிலும், நகைச்சுவை மிளிர எழுதுவதிலும் வல்லவர். (எனக்கும் அவரைப் போல நகை உணர்வோடு எழுத ஆசைதான்; ஆனால் எனக்கு எப்படி பார்த்தாலும் கட்டுரை போலத்தான் அமைந்து விடுகிறது)

கில்லர்ஜியின் கனவு

கில்லர்ஜியை, புதுக்கோட்டையில் ஆசிரியர் முத்து நிலவன் அய்யா அவர்களது இல்லத்தில், முதன்முதல் சந்தித்தபோது, தனது எழுத்துக்களை நூல்வடிவில் கொண்டுவரும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார். சொன்னபடியே அவருடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார்
.

சென்ற ஆண்டு (2016) புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில், கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி ஒருநாள் முகாமில் அவரைச் சந்தித்தபோது. தான் வெளியிட்டுள்ள ’ தேவகோட்டை தேவதை தேவகி’ என்ற நூலை அன்பளிப்பாக அளித்தார்.. நூலை உடனே படிக்க இயலவில்லை. வாங்கி வைத்ததோடு சரி. இப்போதுதான் படிக்க முடிந்தது. நான் முதலில் இது ஒரு நாவலாக அல்லது சிறுகதைத் தொகுதியாகவே இருக்கும் என்று எண்ணினேன். எடுத்து படிக்கும் போதுதான், இவை அனைத்தும் அவருடைய வலைப்பதிவில் வந்த அவருடைய பதிவுகள் என்று தெரிய வந்தது. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் உதவியின்றி, மீண்டும் அவருடைய எழுத்துக்களை, அதே சுவாரஸ்யத்தோடு படித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நூலைப் பற்றி

நூலின் வடிவையும், அதன் நேர்த்தியையும் பார்க்கும் போது, அவர் ரொம்பவே மெனக்கெட்டு இருப்பது புரிகின்றது.. நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் தேவகோட்டை, எமனேஸ்வரம், பெரியகுளம், வள்ளியூர், குரும்பூர் என்று ஊர்களின் பெயரை முன்னிருத்தியே செல்கின்றன. இப்படியே மொத்தம் 60 கட்டுரைகள். ஆங்காங்கே இவருடைய ஆதங்கங்களும், நகைச்சுவை உணர்வுகளும் இணைந்து வெளிப்படுகின்றன. பெரும்பாலும் கேள்வி – பதில், உரையாடல் பாணியிலேயே இருக்கின்றன. ஏமாறுவோர் உள்ளவரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதனை உணர்த்தும் பல சம்பவங்கள் காட்டப் பட்டுள்ளன.

மற்றவர்களது கருத்துரைகள்

நூலின் உள்ளே நுழைந்தவுடன் நமது அன்பிற்குப் பாத்திரமான வலைப் பதிவர்கள் முனைவர் பா.ஜம்புலிங்கம்,  தஞ்சை ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார், ஆசிரியர் வே.துளசிதரன் மற்றும் வலைச்சித்தர் பொன்.தனபாலன் ஆகியோரது கருத்துரைகள் வரவேற்கின்றன.        
                                                                                                                                                        
முனைவர் பா.ஜம்புலிங்கம் (உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) அவர்கள் இந்த நூலை பக்கத்துக்குப் பக்கம் ரொம்பவே, ரசித்து எழுதியுள்ளார்.

// ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவாதிக்கும் நிலை (தேவகோட்டை, தேவதை தேவகி), பகல் கனவில் வாழ்வினை நடத்தும் சுகம் (பெரியகுளம் பெரியவர் பெரியசாமி), பேச்சாற்றலால் அமையும் நல்ல வாழ்க்கை (சென்னை செம்மொழி செண்பகவள்ளி), நிருபரிடம் அளிக்கும் பேட்டிக்கு இயல்பான மறுமொழிகளைத் தரல் (எமமேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்), நடிகை எதிர்கொள்ளும் வாழ்க்கை (கண்ணூர் கண்ணகி கருப்பாயி), வேலைக்கு சிபாரிசு செய்வதால் எழும் சிக்கல்  (அரக்கோணம் அரைக்கேனம் மரைகானம்), குழப்பம் தரும் நபரிடம் சிக்கிக்கொள்ளும் மருத்துவர் (சங்ககிரி சகுனி சடையாண்டி), வித்தியாசமாக செருப்பு தயாரித்து அனாவசிய மருத்துவச்செலவில் மாட்டிக்கொள்ளல்  (செங்கல்பட்டு செங்கல்சூளை செங்கல்வராயன்), நண்பனுக்கு அறையில் இடம் கொடுத்து புதிய பிரச்னையை உண்டாக்கிக்கொள்ளல் (மாதவனூர் மாவுடியான் மாதவன்), மனைவி காட்டும் அதீத அன்பினால் நெகிழும் கணவன் (வெள்ளையபுரம் வெள்ளந்தி வெள்ளையம்மாள்) என்ற நிலையில் ஒவ்வொரு கதையையும் வித்தியாசமான கோணத்தில் அமைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. //

நூல் விவரம்:

நூலின் பெயர்: தேவகோட்டை தேவதை தேவகி
ஆசிரியர்: கில்லர்ஜி , சாஸ்தா இல்லம், ஸ்ரீசக்தி திருமண மண்டபம் அருகில், எண்.3, தேனம்மை ஊரணி வீதி, தேவகோட்டை 630302
நூலின் விலை: ரூ 125/= ( முதற் பதிப்பு செப்டம்பர் 2016)       
பக்கங்கள்: 162 
நூல் பெற தொடர்புக்கு: K.விவேக் செல்போன் 9600688726  


பிற்சேர்க்கை (26.08.17 காலை 6.47)

இந்நூலின் ஆசிரியர் திரு கில்லர்ஜி அவர்கள், கருத்துரைப் பெட்டியில் ஒரு திருத்தம் சொல்லி இருக்கிறார்.

// நண்பருக்கு... ஒரு திருத்தம் இதில் உள்ள 60 கதைகளில் பகுதிக்கு மேல் நான் வலைப்பூவில் வெளியிடாதவையே... நூலில் வெளிட்டதால் இன்றுவரை அவைகளை வலைப்பூவில் இடாமல் இருக்கிறேன்.
மீண்டும்
கணினியில் வருவேன் கில்லர்ஜி  KILLERGEE DevakottaiSaturday, August 26, 2017 6:20:00 am //

 
               

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
 


Saturday 19 August 2017

தமிழ் – திரு 2017 விருதிற்கான எனது தேர்வு - ஆசிரியர் நா.முத்து நிலவன்



தி இந்து (தமிழ்) தினசரி இதழின் ஆயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அண்மையில் இவ்விதழ் 16 ஆகஸ்ட் 2017 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தமிழ் – திரு விருதுகள்:

// தமிழ் மொழிக்காக அளப்பறிய பணியாற்றிவரும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் எளிய அடையாளம் ‘தமிழ் – திரு’ விருதுகள். எல்லா விஷயங்களையும் வாசகர்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இந்த விருதுக்கான ஆளுமைகளைப் பரிந்துரைக்கும் பெரும் பொறுப்பையும் வாசகர்களிடமே ஒப்படைக்கிறது //

முழு விவரம் மேலே படத்தில்.

தேர்வுக்கான படிவம்:

மேலும் வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஒரு அறிவிப்பை 18 ஆகஸ்ட் 2017 அன்று வெளியிட்டு, ‘என் தேர்வு’ என்று ஒரு படிவமும் வெளியிட்டு இருந்தார்கள். (படம் கீழே)

பத்திரிகையில் வந்த, மேலே சொன்ன படிவத்தையே பரிந்துரை படிவமாகப் பயன்படுத்தி அஞ்சலில், தி இந்து, தமிழ் - திரு விருதுகள், கஸ்தூரி மையம், 124,வாலாஜா சாலை, சென்னை 600002) என்ற விலாசத்திற்கு அனுப்பலாம். அல்லது www.yaadhumthamizhe.com என்ற இணையதளம் சென்றும், பரிந்துரை செய்யலாம்.

எனது தேர்வு மற்றும் பரிந்துரை:

தி இந்து (தமிழ்) இதழ் – தமிழ்திரு விருதுகள் 2017 இற்கான படிவத்தில் ஒவ்வொருவரும் கல்வி, ஆய்வு, கலை, இலக்கியம், தொழில்நுட்பம் என இந்த 5 துறைகளுக்கும், துறைக்கு ஒருவர் என்று பரிந்துரைக்க வேண்டும். நான் இலக்கியத்திற்கு மட்டுமே பரிந்துரை` செய்துள்ளேன்.

எனக்கு அஞ்சலில் அனுப்புவதைவிட, இணையதளம் வழியே பரிந்துரைப்பது எளிதாக இருந்த படியினால், நான் இலக்கியத்திற்கான பரிந்துரையில், ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் பெயரை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளேன். 

யார்:
நா.முத்துநிலவன், சீனிவாசநகர் 3ஆம் தெரு, மச்சுவாடி, புதுக்கோட்டை-622 004. செல்பேசி -94431 93293 - மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

எதனால்:
புதுக்கோட்டையில் வசிக்கும் திரு நா.முத்துநிலவன் அவர்கள் பணிஓய்வு பெற்ற தமிழாசிரியர்; சிறந்த கவிஞர்; முற்போக்கு எழுத்தாளர்; பட்டிமன்றப் பேச்சாளர்; வலைப்பதிவர்; கல்வி மற்றும் இலக்கிய சிந்தனை நூல்களை எழுதியுள்ளார்: இணையதள பயிற்சி முகாம்களை முன்னின்று நடத்தி பல வலைப்பதிவர்களை உருவாக்கியவர். இன்னும், 11 அக்டோபர் 2015இல் புதுக்கோட்டையில் நடந்தவலைப்பதிவர் திருவிழாவை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியவர்

வேண்டுகோள்:

எனவே, இந்த விருதுக்கான படிவம் அனுப்பும், தி இந்து (தமிழ்) வாசகர்களில், புதுக்கோட்டை ஆசிரியர் நா.முத்துநிலவன் மீது அன்பு கொண்ட அன்பர்கள் அனைவரும், இலக்கியத்திற்கான தேர்வில் அவரது பெயரையே தேர்வு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அதிக வாசகர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுக்கான இறுதிப்பட்டியல் உருவாகும் என்பதால், பரிந்துரைகள் ஆசிரியரின் பெயரில் குவியட்டும்.  


Tuesday 15 August 2017

நடிப்பு சுதேசிகள்



இன்று (15.08.2017) இந்தியாவின் 71 ஆவது சுதந்திரதினம் (15 ஆகஸ்ட் 1947) இந்தியா, சுதந்திரம் என்றவுடனேயே, எனது பள்ளிப் பருவத்தில், அந்நாளில் வரலாற்றுப் பாடத்தில் படித்த இந்திய விடுதலை வரலாறும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரம் பிள்ளை, போன்ற தலைவர்களின் படங்களும் நினைவில் வந்தன. கூடவே நான் பெரியவன் ஆனதும், பிற்பாடு பார்த்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற தமிழ் திரைப்படமும் நிழலாடியது. இந்த படம் 1961 இல் வெளிவந்தது. இன்றும் வ.உ.சி என்றால், இந்த படத்தில்,  சிவாஜி கணேசன் உருவாக்கிய பிம்பம்தான் முதலில் மனக்கண்ணில் வரும். அப்புறம்தான் வ.உ.சி.யின் உண்மையான தோற்றம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வ..உ..சி.யாகவே மாறி உருக்கமாக நடித்து இருக்கிறார் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் எழுதியது ஆகும். 

இவற்றுள் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ’நெஞ்சில் உரமுமின்றி’ என்ற பாடல், நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று. (திரைப்படத்தில் பாரதியின் இந்த பாடலில் ஒருசில வரிகளை மட்டுமே கையாண்டுள்ளனர்)

                           நடிப்பு சுதேசிகள்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ! 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
-    மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டிட படத்தில் ‘க்ளிக்’ செய்யுங்கள்.
                           
 
( Video Courtesy – Youtube - https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg )

    அனைவருக்கும் எனது இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.