நான் எனது தொடக்கக் கல்வியை கிறிஸ்தவ மெஷினரி நடத்தும் ஒரு பள்ளியில்
படித்தேன். அந்த பள்ளியில் ஒரு சிறிய தோட்டம். தோட்டத்திற்குள் வாசலில் வெள்ளை
மற்றும் இளஞ் சிவப்பு நிறங்களில் அல்ங்கார
வண்ணபூக்கள். பள்ளியில் அவற்றை கல்லறைப் பூக்கள் என்று சொன்னார்கள்.. சிலர் இதனை சுடுகாட்டுப் பூ என்றும் சொன்னார்கள்.( பின்னாளில் இதன் பெயர்
நித்திய கல்யாணி என்று தெரிந்து கொண்டேன் )
எங்கள் பள்ளிக்கு அடுத்து இருந்தது கிறிஸ்தவர்கள் கல்லறை. பள்ளிக்கும்
கல்லறைக்கும் நடுவில் ஒரு சுவர் மட்டுமே. சுவரை ஒட்டி வரிசையாக நெட்டிலிங்க
மரங்கள். சில சமயம் நானும் எனது நண்பர்களும் அவற்றின் மீது ஏறி அருகிலுள்ள
கல்லறையை எட்டிப் பார்ப்போம். அங்கு இந்த பூச்செடிகள் அதிகம் இருந்தன.
கல்லறைப் பூக்கள் – பெயர்க் காரணம்:
இந்து மதத்தில் இறந்தவர்களைப்
புதைத்தவுடன் மண்போட்டு மேடாக்கி மண்சமாதி செய்து விடுவார்கள். பால் ஊற்றும்
சடங்கின்போதோ அல்லது 16 - ஆம் நாள் காரியத்தின் போதோ அந்த சமாதியின் தலைமாட்டில்
ஒரு மரக்கன்றை நட்டு வைப்பார்கள். தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கல்லறையிலும் மரம்
வைப்பதில்லை. பெரும்பாலும் இந்த கல்லறைப் பூக்கள் செடியைத்தான் அதிகம் வைத்தனர்.
பெரும்பாலும் மண்ணால் அமைந்த கல்லறைகளிலும், கல்லறை தோட்டங்களிலும் இந்த செடிகள்
அழகாக பூத்துக் குலுங்குவதைக் காணலாம். (இப்போது கல்லால் அல்லது சிமெண்டினால் கட்டுகிறார்கள்) எனவே நம்நாட்டு மக்கள் இந்த நித்தியகல்யாணிப்
பூக்களை கல்லறைப் பூக்கள் அல்லது சுடுகாட்டுப் பூக்கள் என்று அழைக்கின்றனர்.
எங்கள் வீட்டில்:
எங்கள் வீட்டு மனையில் முன்புறம் பின்புறம் இரண்டிலும் இடம் விட்டு வீடு
கட்டியுள்ளோம். முன்புறம், சில மாதங்களுக்கு முன்பு, அழகுக்காக இந்த நித்திய கல்யாணிச் செடிகளை
நட்டுவைத்தேன். அவை பலவாகி அடம்பலாக இருந்தன. அந்த செடிகளில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணப் பூக்களை
அழகாக பூத்துக் குலுங்கின. ஒருநாள் இரவு எங்கள் வீட்டுநாய் “ஜாக்கி” ரொம்பவும் வித்தியாசமாக குரைத்துக் கொண்டே இருந்தது. வெளி
விளக்கைப் போட்டுவிட்டு வெளியே எட்டிப்பார்த்தால் ஜாக்கி அந்த செடிகளைப் பார்த்தே
குரைத்துக் கொண்டிருந்தது. அங்கே சுமாரான நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு ஒன்று படம்
எடுத்தபடி இருந்தது. நித்தியகல்யாணி செடிகளின் நெருக்கத்தில் அது செடிகளோடு
செடியாய் இருந்தது. உடனே வீட்டில் இருந்த ஒரு மூங்கில்கழியை எடுத்து செடியை
அலசியபோது அது ஓடி விட்டது. ( இந்த மூங்கில்கழி, கிராமத்து உறவினர் ஒருவர்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த போது எங்களுக்காக வாங்கித் தந்தது). அடுத்தநாள்
நித்தியகல்யாணி செடி ஒன்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை வெட்டிவிட்டேன்.
( எங்கள் வீட்டில் அப்போது இருந்த நித்திய கல்யாணி செடிகள் பூக்களுடன்)
சில குறிப்புகள்:
ஒரு கேள்வி:
சுடுகாட்டுப் பூ, கல்லறைப்பூ என்று பெயரைச் சொல்லும்போது என்னவோ போல் இருக்கிறதே?
வீட்டில் அழகுக்காக இதனை வைக்கலாமா? நமது நாட்டில் பல விஷயங்கள் மூடநம்பிக்கையின் காரணமாக இப்படித்தான்
பார்க்கப்படுகின்றன. ஒப்பு உவமை இல்லாத ஒப்பிலியப்பன், உப்பு உணவு இல்லாத உப்பிலியப்பன் ஆக்கப்பட்டான். இந்த செடிக்கு இங்கிலீஷ்காரன் ஒரு பெயர் வைத்தான். ந்ம்ம
ஊரில் நித்தியகல்யாணி ( தினமும் பூத்து குலுங்குவதால் ) என்றார்கள். அதன் அழகையும்
பயன்பாட்டையும் நாம் பார்ப்போம். எனது கவிதை ஒன்று இங்கே
கல்லறைப்பூக்கள் (கவிதை)
நேற்றுவரை உன்னோடு
- நெருங்கி
இருந்தவர்கள்
எல்லோரும்
இன்று எங்களை
மட்டும்
விட்டுச் சென்றனர்
கண்ணீரோடு!
கவலைப் படாதே மனமே!
அவர்களும்
வருவார்கள்!
ஒருநாள் அன்போடு!
நாங்கள் என்றும் உன்னோடு!