Showing posts with label வெள்ளம். Show all posts
Showing posts with label வெள்ளம். Show all posts

Saturday, 26 December 2015

வைகை வெள்ளம் – தமிழர் பேரிடர் மேலாண்மை



இந்த ஆண்டு (2015) டிசம்பரில், சென்னையில் அடையாறில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பினையும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தோம். அந்நாளில் மதுரையில் வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைப் பற்றியும், அப்போது மதுரையைக் காப்பாற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பரஞ்சோதி முனிவர் எழுதிய ’திருவிளையாடற் புராணம்”  சொல்லுகிறது. (மண்சுமந்த படலம்) ஏதோ ஒரு காலத்தில் வைகையில் வெள்ளம் அளவு கடந்து வந்திட, அதனை ஒட்டி எழுந்த புராணம் என்று எடுத்துக் கொள்ளலாம். கதை சொல்லப்பட்டது புராணத்தில் என்றாலும், ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு, உடைப்பு ஏற்பட்டபோது பழந் தமிழர்கள் என்ன செய்தார்கள் என்பதனை தெரிந்து கொள்ளவே இந்த கட்டுரை.

மன்னன் உத்தரவு:

வானத்தை தொட்டுவிடுவது போன்று வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரியகடல் ஒன்றின் அலைகள் இடையே தத்தளிக்கும் மரக்கலம் போன்று மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. உடனே பாண்டிய மன்னன் தனது அமைச்சர்களை அழைத்து, ” கரையை நோக்கிவரும் வெள்ள நீரைக் கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள் “ என்று உத்தரவு பிறப்பிக்கின்றான்.

அமைச்சர்கள் பணி:

உடனே அமைச்சர்கள் வேறு வேறாக உள்ள பல குடிகளையும் குறிப்பிட்டு, யார் யார் ஆற்றின் கரையை எப்படி அடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, அடைக்க வேண்டிய பகுதிகளையும் வைகைக் கரையில் அளவுகோலால் அளந்து, கோடிட்டு காட்டியும் உத்தரவு செய்தனர். அதன்படி மதுரை நகரம் முழுக்க ‘அவரவர் பங்கை அடையுங்கள்” என்று பறையறிவிக்கப்பட்டது. உடனே நகர மக்களும் ‘என்னே மதுரைக்கு வந்த சோதனை” என்று , வைகைக் கரையில் அவரவர் பங்கை அடைக்க குவிந்தனர். உடல் வலிவுள்ளவர்கள், அவர்களே களத்தில் இறங்கி மண்ணை வெட்டிப் போட்டு  வேலை செய்தனர். முடியாதவர்களோ கூலிக்கு ஆள் வைத்து இந்த காரியங்களைச் செய்தனர். 

கூலியாட்கள் உடைப்பை சரிசெய்தல்:

கூலிக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றவுடன் , மண்வெட்டியும் கூடையும் கொண்டு வருபவர்கள், மரங்களைச் சுமந்து வருபவர்கள், விரிந்த அகலமான பசுந்தழையை சுமந்து வருபவர்கள், வைக்கோலை சுமந்து வருபவர்கள் என்று வைகைக் கரையில் கூலியாட்கள் நிரம்பத் தொடங்கினர். இவர்களால் அந்த பகுதி முழுக்க ஒரே ஆரவாரம்; இரைச்சல்.

நீண்ட நெடிய மரங்களை நெடுக்காகவும் நெருக்கமாகவும் நடுகின்றனர். குதிரை பாய்வது போன்று வேகம் வேகமாக, சட்டென்று நிறுத்துவதால் இவற்றிற்கு ‘குதிரை மரம்’ என்று பெயர். அந்த குதிரை மரங்களின் கீழ், வைக்கோலைப் பாம்புபோல் பிரி பிரியாகச் செய்து, உருட்டி கிடத்துகிறார்கள். அவற்றின் மீது பசுந்தழைகளைப் போட்டு, வெட்டிய மணலையும் நிரப்புகிறார்கள். அப்போது எல்லோரையும் அதட்டி ” சீக்கிரம், சீக்கிரம்” என்று வேலை வாங்குகின்றனர்; இருந்தும் சிலசமயம் அடைக்கப்பட்ட பகுதிகளில் உடைப்பு ஏற்பட “ அன்னையே! வைகையே அளவிடமுடியாத கோபம் எதற்கு? சினம் ஆறுவாயாக” என்று ஆற்றினை வணங்கி விட்டு, மீண்டும் மீண்டும் மணலைக் கொட்டி சரி செய்கின்றனர். உடைப்பு அடைபட்டவுடன் சீழ்க்கை ஒலி, பறை ஒலி, குரவைப் பாடல்கள் என்று ஒரே அமர்க்களம் செய்கிறார்கள்.  இவ்வாறு அவரவர் பங்கை , கூலியாட்களின் மூலம் வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட உடைப்பை சரி செய்கின்றனர்.
                  
                                                              
                                            PICTURE COURTESY : GOOGLE IMAGES    
 
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் – மண்சுமந்த படலம்
   கருங்க டற்றிரை யிடைக்கி டந்துசுழல்
        கலமெ னககன முகடளாய்
    வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர்
        மறுகி யுட்கமற வேலினான்
    ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை
        சுமந்தொதுக்கிவரு மோதநீர்ப்
    பொருங்க தத்தினை யடக்கு வீரென
        வமைச்சருந் தொழுது போயினார். 2
   
 வெறித்த டக்கைமத யானை மந்திரிகள்
        வேறு வேறுபல குடிகளுங்
    குறித்தெ டுத்தெழுதி யெல்லை யிட்டளவு
        கோல்கி டத்திவரை கீறியே
    அறுத்து விட்டுநக ரெங்க ணும்பறை
        யறைந்த ழைத்துவிடு மாளெலாஞ்
    செறித்து விட்டவ ரவர்க்க ளந்தபடி
        செய்மி னென்றுவரு வித்தனர். 3
 
   மண்டொ டுங்கருவி கூடை யாளரு
        மரஞ்சு மந்துவரு வார்களும்
    விண்டொ டும்படி நிமிர்ந்து வண்டுப டு
        விரிபசுந் தழைப லாலமுங்
    கொண்ட திர்த்துவரு வாரும் வேறுபல
        கோடி கூடிய குழாமுநீர்
    மொண்ட ருந்தவரு மேக சாலமென
        வருபு னற்கரையின் மொய்த்தனர். 4
 
    கிட்டு வார்பரி நிறுத்து வாரரவு
        ருட்டு வாரடி கிடத்துவார் 
    இட்டு வார்தழை நிரப்பு வார்விளி
        யெழுப்பு வார்பறை யிரட்டுவார்
    வெட்டு வார்மண லெடுத்து வார்செல
        வெருட்டு வார்கடிது துடுமெனக்
    கொட்டு வார்கரை பரப்பு வாருவகை
        கூரு வார்குரவை குழறுவார். 5
 
    கட்டு வார்கரை யுடைப்ப நீர்கடுகல்
        கண்டு நெஞ்சது கலங்குவார்
    மட்டி லாதமுனி வென்னை யன்னையினி
        யாறு கென்றெதிர் வணங்குவார்
    கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ்
        கொள்ளு வார்குரவை துள்ளுவார்
    எட்டு மாதிரமு மெட்ட வாயொலி
        யெழுப்பு வார்பறை யிரட்டுவார். 6
 
இந்நிலை யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர்
துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் 7
 
 

Wednesday, 9 December 2015

உயிரா/ உடைமையா? – சென்னை அவலம்



சென்னையில், இந்த வருட (2015) தீபாவளியை (நவம்பர், 10 ஆம் தேதி) யாரும் சரியாகக் கொண்டாடி இருக்க மாட்டார்கள். காரணம்  சென்ற நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து இன்றுவரை ஒருமாதமாக சென்னையில் நல்ல மழை.

முன்னறிவிப்பு:

சென்னை வானிலை மையம் வரப் போகும் புயல், மழை விவரத்தை முன்கூட்டியே சொன்னது. யாரும் அதனை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ரமணன் சார் சொன்னால் பள்ளிக்கூடங்களுக்கு லீவு கிடைக்கும் என்றே இருந்து விட்டார்கள். இந்த அரசாங்கமும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் செய்யவில்லை. முழுதும் நிரம்பிக் கொண்டு இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடப் போகிறோம் என்ற அறிவிப்பு கூட செய்யவில்லை என்கிறார்கள். இன்னும் சிலர், போலீஸ் மூலம் அறிவிப்பு செய்ததாகச் சொல்கிறார்கள். முன்பெல்லாம் இதுமாதிரியான சமயங்களில் மக்கள் கூடும் இடங்களில் அல்லது தெருக்களில் தமுக்கு அடித்து அறிவிப்பு செய்வார்கள். அவர்களே எதிர்பாராத பேரிடர் இது.

உயிரா/ உடைமையா?

சாதாரணமாக யாரும் உயிருக்கு ஆபத்து என்றால், பாதுகாப்பான இடம் தேடி ஓடுவது இயல்பு. ( 1977 இல் திருச்சியில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தின் போது, போட்டிருந்த பேண்ட், சட்டையோடு,  நான் உயிர் தப்பியது தனிக்கதை) ஆனால் இப்போது ஏற்பட்ட பெரும் மழையின் போது, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், சென்னை நகர மக்கள் பலரும் ( நகர், புறநகர் இரண்டிலுமே ) தங்கள் குடியிருப்புகளை விட்டு உடனே வெளியே வர முடியவில்லை. எப்போதும் போல மழை பெய்யும், தண்ணீர் இரண்டுநாள் இருக்கும், அப்புறம் வடிந்துவிடும் என்றே நம்பினார்கள். வெளியே வந்தால் பாதுகாப்பு இருக்காது என்றும்; எங்கே நம் வீட்டில் இருக்கும் கார், பைக், டீவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களும் மற்றும் நகைகளும் காணாமல் போய் விடுமோ என்று பயந்தும் அவற்றை பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்து விட்டார்கள். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், படகுகளில் வந்து கூப்பிட்டபோது கூட பலரும் வராததை டீவி செய்திகளில் காண முடிந்தது.

திருட்டு பயம்:

மக்கள் அச்சப்பட்டதிலும் காரணம் இருக்கிறது. நல்ல நாளிலேயே பூட்டிய வீட்டை கொள்ளை அடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நடக்கும் திருட்டுக்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. வெளியில் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. விளைவு அதிக உயிர்ச்சேதம் மற்றும் அவஸ்தைகள். இப்போதும் பல இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளைகள் நடப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. சினிமா துறையில் வேலைபார்க்கும், எனது உறவினர் ஒருவர் தனது விலையுயர்ந்த கேமரா, வீடியோ கேமரா போன்ற பொருட்களை, அப்படி அப்படியே போட்டு , தனது ஸ்டுடியோவை பூட்டி விட்டு, கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு, சொந்த ஊர் வந்து விட்டார். அவரது மனமெல்லாம் இப்போது அங்கேதான். ஊரே வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும்போது காவல்துறை மட்டும் என்ன செய்ய முடியும். அவர்கள் அவர்களது குடும்பத்தை மட்டுமே கவலைப்பட முடியும்.

ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்:

’வாங்க வாங்க … தாம்பரத்திற்கு அருகில்தான்……  முடிச்சூரிலிருந்து சென்னைக்கு முப்பது நிமிசம்தான் …செங்கல்பட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான்….. ” – என்று கூவிக் கூவி அழைக்கும் சின்னத்திரை, பெரியத்திரை நட்சத்திரங்களின் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை இப்போது டீவியில் காணவில்லை. மழை நின்று, வானம் வெளுத்து, வெயில் வந்து, பூமி காய்ந்ததும் மறுபடியும் வந்து விடுவார்கள்.

சென்னையில் ஓடும் கூவத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பல வருடங்களாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள். கூவம் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு விட்டது.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

‘அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்” (படம்: அன்னை) https://www.youtube.com/watch?v=U4e2qAlHLzg

‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” (படம்: அனுபவி ராஜா அனுபவி)

மெட்ராஸை சுத்திப் பாக்கப் போறேன்” (படம்: மே மாதம் )

’சென்னை வட சென்னை” (படம் மெட்ராஸ்)

ஆகிய திரைப்பாடல்களில் வரும் அந்த சுவாரஸ்யமான பழைய மெட்ராஸை எப்போது மீட்டெடுக்கப் போகிறோம்?

(பாடல்களை youtube இல் கண்டு கேட்டிட அந்தந்த இணைய முகவரிகளை க்ளிக் செய்யவும்) 




Thursday, 3 December 2015

இன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்



சென்னையில் புயல், மழை,வெள்ளம் காரணமாக, இப்போது (2015) ஏற்பட்டு இருக்கும் அழிவை சொல்ல வார்த்தைகள் இல்லை. விடிய விடிய நாள் முழுவதும் மழை; ஏரிகளில், ஆறுகளில் உடைப்பு. குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர். மின்சாரம் கிடையாது; தகவல் தொடர்பு இல்லை. சென்னைக்கு பஸ், ரெயில் போக்குவரத்து கிடையாது. வரலாற்றில் முதன்முறையாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. சென்னை தனித் தீவானது.

தகவல் தொடர்பு:

இந்த இடர்ப்பாடில் சென்னையில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்ள போனிலும் செல்போனிலும் முயற்சி செய்தேன். பலரிடம் தொடர்பே கொள்ள முடியவில்லை. காரணம் சென்னையில் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது ; ஆனால் அவர்கள் செல்போன் பேட்டரியில் சார்ஜ் இல்லை; சார்ஜ் செய்யலாம் என்றால், அவர்கள் ஏரியாவில் மின்சாரம் துண்டிப்பு. (அதுவுமல்லாமல் தரைதளத்தில் அமைக்கப்பட்டு இருந்த, செல்போன் கோபுரங்களின் ஜெனரேட்டர்கள், தண்ணீரில் மூழ்கி அவையும் செயல் இழந்து விட்டதாக டீவியில் செய்தி வாசித்தார்கள்}

சோலார் கால்குலேட்டர்கள்:

ஆரம்பத்தில் பாக்கெட் கால்குலேட்டர்கள் எனப்படும் சிறிய கால்குலேட்டர்கள் வந்த புதிதில் அவை பேட்டரியில் இயங்கக் கூடியவைகளாக இருந்தன. உபயோகத்தைப் பொறுத்து அடிக்கடி பேட்டரிகள் மாற்ற வேண்டியது இருந்தது. அப்புறம் சோலாருடன் பேட்டரியும் உள்ள பாக்கெட் கால்குலேட்டர்கள் வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இன்று செல்போனிலேயே கால்குலேட்டர் வசதி இருந்தாலும், கடைகளில், சிறு வியாபார நிறுவனங்களில் இந்த வகை கால்குலேட்டர்கள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன.

சோலார் செல்போன்கள்:

நமதுநாட்டில் செல்போனின் அத்தியாயம் தொடங்கி பல  வருடங்கள் ஆகின்றன.. இன்னும் அதே பேட்டரி முறைதான் நடைமுறையில் உள்ளது. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியது உள்ளது. ஸ்மார்ட் போன்களும் வந்து விட்டன. இந்தவகை போன்களில் சார்ஜ் அடிக்கடி தீர்ந்துவிடும். எனவே எப்போதுமே சில சமயம் தொடர்ச்சியாக சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஸ்மார்ட் போன்களுக்கு என்று தனியாக பவர் பேங்க் (Power Bank) எனப்படும் சேமிப்பு பேட்டரி முறை வந்து விட்டது. வெளியூர் பயணம் அடிக்கடி செல்பவர்களுக்கு நல்ல துணை.

எந்த செல்போனாக இருந்தாலும் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. ஆனால் நம்நாட்டில் மின்வெட்டு சமயங்களில் செல்போனில் முன்கூட்டியே சார்ஜ் செய்யாவிடில் படும் அவஸ்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையிலும் சார்ஜ் இருந்தால்தான் போச்சு; இல்லையேல் கஷ்டம்தான்.

இந்த குறையைத் தவிர்க்க சூரிய ஒளியில் இயங்கும் சோலார் செல்போன்கள் வந்து விட்டன. உலகின் முதல் சோலார் செல்போன் –  (Samsung Guru E1107 ) 2009 ஆம் ஆண்டு சாம்சங் (SAMSUNG) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வகை செல்போன்கள் இந்தியாவில் இன்னும் சரியான பயன்பாட்டுக்கு வரவே இல்லை. அதே போலத்தான் பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையும். இதற்கு முக்கிய காரணம் செல்போன் விற்பனையில் ஒளிந்து கிடக்கும் சுயநலம் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததுதான். எங்கே இந்த சோலார் செல்போன்கள் வகை போன் வந்தால் தங்கள் வியாபாரம் போய் விடுமோ என்ற எண்ணம்தான் முக்கிய காரணம்.

இப்போது சென்னையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக ஏற்பட்ட, தகவல் தொடர்பு இன்மைக்கு முக்கிய காரணம் செல்போனில் உள்ள சார்ஜிங் முறைதான் காரணம். எனவே இந்த குறையைப் போக்கிட நாட்டில் சோலார் செல்போன்கள் (ஸ்மார்ட் போன் உட்பட)  உற்பத்தியை எல்லா செல்போன் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன்களுக்கு சோலார் சார்ஜர்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


Sunday, 29 November 2015

சென்னையில் வெள்ளம் – 2015



ஐம்பது வருடங்களுக்கு முன்னர், ” வானிலை அறிவிப்பு! அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று வானொலியில் சொன்னால், கேட்டுக் கொண்டிருப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். காரணம் அன்று அவர்கள் சொன்ன காலக் கணக்கிற்கு மழை பெய்யாது; அறிவிப்பே இல்லாத நாட்களில் வானம் பொத்துக் கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டும். வானொலி அறிவிப்பில் குறையேதும் இல்லை. அன்றைய தொழில் நுட்பம் அப்படி. இன்றைய தொழில் நுட்பம் எல்லாவற்றிலும் மேம்பட்டு நிற்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்ப ரமணன் சார் டீவி அலைவரிசைகளில் சொன்னால் பெய்யெனப் பெய்யும் மழையாக இருக்கிறது. மக்களும் திரு. முனைவர் S.R.ரமணன் அவர்கள் சொன்னால்தான் நம்புகிறார்கள். தி இந்து (தமிழ்) நாளிதழ் 09.11.15 அன்று வெளியிட்ட செய்தி இது.

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை - காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும்- 2 நாள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
(http://tamil.thehindu.com  Published: November 9, 2015 08:09 IST )

ஆனாலும் என்ன பயன்? வருமுன் காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் அண்மையில் பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடானது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடிந்த பாடில்லை.

பல வலைப்பதிவர்கள் சென்னையில் இருந்தும், சென்னையில் மழை, வெள்ளம் பற்றிய பதிவுகளை ஒன்றிரண்டு பேரே எழுதினார்கள். கீழே பத்திரிகை, டீவி போன்ற ஊடகங்களில் வந்த சில காட்சிகள் கீழே.

படம் மேலே: COURTESY: BBC 19.11.15

படம் மேலே: COURTESY: Deccan Chronicle 18.11.15

படம் மேலே: COURTESY:Ground report 18.11.15

படம் மேலே: COURTESY: Hindustan Times 19.11.15

படம் மேலே: COURTESY: Huffington Post 17.11.15

படம் மேலே: COURTESY: Huffington Post

படம் மேலே: COURTESY: IBN live 13.11.15

படம் மேலே: COURTESY: Indian Express 21.11.15

 படம் மேலே: COURTESY: India real time 17.11.15

படம் மேலே: COURTESY: NDTV 17.11.15

படம் மேலே: COURTESY: One India 13.11.15

படம் மேலே: COURTESY: One India 17.11.15

படம் மேலே: COURTESY: One India 17.11.15

படம் மேலே: COURTESY: Tamil Media 16.11.15

படம் மேலே: COURTESY: The Guardian 18.11.15

படம் மேலே: COURTESY: The Quint 16.11.15

படம் மேலே: COURTESY: Vikatan 13.11.15
  
புயல், மழை, வெள்ளம் – சம்பந்தப்பட்ட எனது பிற பதிவுகள்:
திருச்சி: 1977 புயல் வெள்ளத்தில் நான் http://tthamizhelango.blogspot.com/2013/11/1977.html

ஊருக்குள் மழைநீர் – ஏன்? http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_17.html

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)