Monday 30 April 2012

அபாயம்: சாலை ஓரக் கிணறுகள்



அண்மையில் ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து ஈரோட்டிற்கு பஸ்சில் சென்றேன். கரூரைத் தாண்டியதும் ஈரோடு முடிய சாலை ஓரம் சுற்றுச் சுவர் இல்லாத தரைமட்டக் கிணறுகள் வழி நெடுக ஆங்காங்கே இருப்பதைப் பார்த்தேன். நன்கு ஆழமாகவும்  தண்ணீரோடும் இருக்கின்றன சில இடங்களில் சாலை வளைந்து திரும்பும் திருப்பங்களிலும் உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி அவை இருப்பதே தெரியாது. பஸ்ஸில் செல்லும் போது எந்த நிமிடம் எந்த கிணற்றில் பாயுமோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். ஆனால் வழக்கமாக தினமும் அந்த வழியே பயணம் செய்வோர் அதனைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சேலம் நாமக்கல் பகுதியில் பஸ்சில் பயணம் செய்யும் போதும் இதே அனுபவம். சாலை ஓரம் தடுப்புச் சுவர் இல்லாத தரை மட்ட கிணறுகள் அதிகம் உள்ளன.. நாடு முழுக்க இந்த நிலைமைதான்

அந்த கிணறுகளின் உரிமையாளர்களோ அல்லது அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளோ இது குறித்து ஏதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை விடுங்கள். எதற்கெடுத்தாலும் கொடி பிடிக்கும் அரசியல் கட்சியினரோ அல்லது உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர்களோ கூட இதுபற்றி வாய் திறப்பதில்லை.

அண்மைய (28.04.12) செய்தி இது. வேலூர் மாவட்டம் வடகடப்பந்தாங்கல் ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவர் இல்லாத 80 அடி ஆழ் கிணற்றில் பாய்ந்து 7 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இது போல சாலை ஓரம்  சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக்  கிணறுகளில் வாகனங்கள் பாய்ந்து விபத்தில் சிக்குவது, உயிர்ப் பலி என்று அடிக்கடி செய்திகளாக வருகின்றன. இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டம் மல்லூரில் சாலை ஓரம் இருந்த சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றில் வாகனம் ஒன்று விழுந்து 13 பேர் பலி ஆனார்கள். அப்போது இருந்த ஆட்சியாளர்கள் உடனே சுற்றுச் சுவர் இல்லாத அனைத்து தரை மட்ட கிணறுகள் யாவற்றிலும் சுவர் கட்டும்படியும் கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு அத்தோடு சரி. நடைமுறைப் படுத்தவில்லை இன்னும் விபத்துக்கள் தொடர் கதையாகத்தான் உள்ளன.

தினமலர் பத்திரிக்கையில் இந்த அபாயகரமான் கிணறுகளைப் பற்றி செய்திக் கட்டுரைகளாக அடிக்கடி எழுதுகிறார்கள். தினமலரில் வந்த மூன்று படங்கள்.

                                         
                     ( படங்கள்: நன்றி தினமலர் (Google )

முன்பெல்லாம் சாலை ஓரம் அதிகம் மரங்கள் இருந்தன. பள்ளத்தில் பாயும் வாகனங்களை அந்த மரங்கள் ஓரளவு தடுத்து நிறுத்தின. இப்போதோ மரங்களே இல்லாத நால்வழிச் சாலைகள். சில இடங்களில் சாலை மிகவும் உயரத்தில் செல்கிறது. அருகே அதிக ஆழமும் தண்ணீரும் உள்ள சுற்றுச் சுவர் இல்லாத தரை மட்டக் கிணறுகள். அத்தோடு சரியாக மூடப்படாத பள்ளங்கள், தூர் நிரம்பிய கிணறுகள். இந்தச் சூழலில் நால்வழிச் சாலையில், அதிக பயணிகளோடு அதி வேகத்தில் செல்லும் பயணிகள் பேருந்துகள், கார்கள். எப்போது என்ன நடக்குமோ என்று நினைக்கவே .... பயமாகத்தான் உள்ளது. ஏற்கனவே நான்கு வழிச் சாலையில் அடிக்கடி அதிக விபத்துகள். இது போன்று சாலைகள் ஓரம் பலி வாங்கக் காத்திருக்கும் அபாயமான கிணறுகளை அப்புறப் படுத்தினால் நல்லது. எனவே சம்பந்தப் பட்டவர்கள் இது குறித்து  நடவடிக்கை எடுத்தால் நல்லது.  




    



Friday 13 April 2012

சித்திரைப் பெண்ணே!

எத் திரை போட்டாலும்
சித்திரைப் பெண்ணே! உன்
முத்திரையை மறைக்க முடியுமா?

இளவேனில் தாலாட்டில்!
இளஞ் சோலைகள் எங்கும்
இயற்கை இன்பம் பொங்கும்!
தேரோடும் வீதிகளில் மக்கள்
ஊர் கூடி தேர் இழுப்பர்!

பதமாய்ப் பருகிட பதநீர்!
இனிப்பும் கரிப்புமாய் இளநீர்!
சுவைத்து மகிழ்ந்திட                         
சுவையான பழங்கள்!                          
பள்ளிக்கு கோடை விடுமுறை
துள்ளிக் குதித்திடும் பிள்ளைகள்!

மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு!
உன்னை ஒளித்து வைக்க
யாரால் முடியும்!
முகத்திரை போட்டிடும்
அரசியல் இங்கு வேண்டாம்!
அனைவருக்கும் 
எனது உளங் கனிந்த
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


(படம்: திருமழபாடி சிவன் கோயில்)

Friday 6 April 2012

உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போ!

மெயின் ரோட்டிலிருந்து நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வர ஒரு  சந்து முனையைக் கடந்து வர வேண்டும். எப்போதும் ஆட்கள்  நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒருநாள் பகல்வேளை, அந்த வழியே வரும்போது ஒரு நடுத்தர வயது ஆசாமி சுவர் மீது சிறுநீர் கழித்துக் கொண்டு இருநதார். அதுவும் நின்றபடியே. அந்த பகுதியில் மறைவிடமே கிடையாது. அந்த பக்கம் வண்டியில் வந்த நான் மனசு கேட்காமல் பெண்கள், குழந்தைகள என்று எல்லோரும் வரும் வழியில் இப்படிச் செய்யலாமா? “ என்று கேட்டேன். அதற்கு அந்த ஆள் கோபமாகச் சொன்ன பதில் “ யோவ்! உன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டு போய்யா என்பதுதான்.
 
ஒரு சமயம் இரு சக்கர வண்டியில் நால் வழிச் சாலையில் போய்க் கொண்டு இருந்தபோது, ஒருவர்  இருசக்கர வண்டியில் எதிர் திசையில்  வந்தார். அவரிடம் ஒரு வழிப் பாதையில் இப்படி வரலாமா? என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசாமி சொன்ன பதில் “ உன்னுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போ “ என்பதுதான்.

அதேபோல ஒரு சம்பவம். அன்று ரேசனில் சர்க்கரை போட்டார்கள். எங்கள் குடும்ப அட்டைக்கு சர்க்கரை மட்டும்தான். எனவே வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆள் வரிசையின் குறுக்கே உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்து “ வரிசையில் வரக் கூடாதா? “ என்று கேட்டேன். அதற்கு அவன் ரொம்பவும் கோபமாகச் சொன்ன பதில் “ உங்களுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போங்க சார் என்பதுதான்.

சிக்னலில் சிவப்பு விளக்கு. எனவே வண்டியில் வந்த நான் நின்று விட்டேன். எனக்குப் பின்னால் மனைவியோடு இரு சக்கர வண்டியில் வந்த ஒருவர் என்னை இடித்து விட்டு போக முயன்றார். “சார் சிக்னல் வருவதற்குள் இப்படி முந்தலாமா? என்று கோபமாகவே கேட்டேன். அப்போது அவர் சொன்ன அதே பதில் “ சார் உங்களுடைய வேலையப் பார்த்துக் கொண்டு போங்க என்பதுதான்.

ஒரு முறை நடந்து வந்து கொண்டிருந்தேன். மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி. கணவன் பைக்கை ஓட்ட, வண்டியின் பின்னால் உட்கார்ந்து இருந்த அவருடைய மனைவி கணவனின் காதில் செல் போனை வைத்தபடி இருந்தார். செல் போனில் பேசியபடியே அவர் பைக் ஓட்டி வந்தார். நான் அவர்களை நிறுத்தி “ ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி பேசி விட்டுத்தான் போங்களேன். “ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ எல்லாம் எங்களுக்குத் தெரியும், உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் சார்! “ என்பதுதான்.

ஒவ்வொரு இடத்திலும் என்னுடைய வேலை என்ன என்றுதான் ஆரம்பத்தில் எனக்கும் தெரியவில்லை. இரண்டு மூன்று இடங்களில் இதுபோல சொல்லப் போய் எனது வேலைகள் கெட்டுப் போனதுதான் மிச்சம். மேலும் வீண் வாக்கு வாதங்கள், டென்ஷன் என்று ஒரே படபடப்பு இவைகள்தான் முடிவு.. பார்த்துக் கொண்டிருக்கும் பொது ஜனங்களும் நம்மை ஆதரித்துப் பேசுவதில்லை. இதனால்தான் ஒவ்வொருவரும் “ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ “ என்று சொல்கிறார்கள் போல இருக்கிறது.

Monday 2 April 2012

கண்ணீர்க் கவிதை!


சென்ற ஆண்டு எனது மகள் திருமண ஏற்பாடுகளை நான் செய்து கொண்டு இருந்த நேரம். திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் போது, ஒரு துயரம் நிகழ்ந்தது. அன்று (02.04.2011)  எனது தங்கை மகன், சிறு வயது, பள்ளி மாணவன் (அப்போது பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவன்) நண்பர்களோடு விளையாடப் போவதாகச் சொல்லிச் சென்றவன், குளத்தில் மூழ்கி இறந்து விட்டான். பெயர் K.சுரேந்தர் பாபு. அப்போது நாங்கள் பட்ட மன வேதனை சொல்ல முடியாதது. ஓராண்டு முடிவடைந்தது! எனது  நினைவஞ்சலி! அவன் நினைவாக ஒரு கண்ணீர்க் கவிதை!

தண்ணீருக்கு தாகம் எடுத்ததால்
  தன்னுயிர் தந்தவனே! நாங்களோ
கண்ணீரால் இன்னும் கரைகின்றோம்!

நீ குதித்து விளையாடிய குளத்தில்
   அலைகள் ஓய்ந்து விட்டன!
எங்கள் மனக் குளத்தின் அலைகளுக்கு
   இன்னும்  ஓய்வு இல்லை!

என்ன பாடு பட்டாயோ அப்போது?
எப்படித்தான் மூச்சை விட்டாயோ?
நண்பர்களே காரணம் ஆனாரோ?
விதியின் பிழையில் யாரைச் சொல்வது?

விடை தெரியாத கேள்விகள் ஓராயிரம்!
   ஒருநாள் வருவேன் உன்னிடம்!
சொல்வாய் விடைகள் என்னிடம்!