கடந்த ஒரு மாத காலமாக திருச்சியில் தொடர்ந்து மேகமூட்டம் மற்றும்
அவ்வப்போது நல்ல மழை. அதிலும் நாங்கள் இருப்பது புறநகர் பகுதி. எங்கு பார்த்தாலும்
சுற்றி சுற்றி தண்ணீர்; அங்கங்கே ரோடுகளில் வாய்க்கால் போன்று நீரோட்டம். வெளியில்
எங்கும் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே அடைபட்டு கிடக்க வேண்டியதாயிற்று.
நேற்று (13.12.15 – ஞாயிறு) திருச்சிக்கே உரிய வெயில் பளீரென்று
அடித்தது. தொடர் மழை காரணமாக வானத்தில் காற்று வெளியிடையே தூசி தும்பட்டை இல்லை; உடம்பில்
வெயில் பட்டதும் சுளீர் என்று உறைத்தது. திருச்சி டவுன் கடைவீதிப் பக்கம் போய் ரொம்ப
நாளாகி விட்டது. எனவே நேற்று டவுனுக்கு பஸ்ஸில் சென்று வந்தேன். அந்த முற்பகல் வேளையிலும்
(11 மணி) பஸ்ஸில் நல்ல கும்பல்; பஸ் மத்திய பேருந்து நிலையம் வந்தபோதும் அங்கும் நல்ல
மக்கள் வெள்ளம். திருச்சி டவுனுக்கு வந்து, பஸ்ஸை விட்டு இறங்கியதும் மாவட்ட மைய நூலகம் சென்று வந்தேன். கடைவீதிக்கு சென்றால்,
அங்கும் திருவிழாக் கூட்டம் போல மக்கள் வெள்ளம். பத்தாதற்கு தெப்பக்குளம் – மலைக்கோட்டை
செல்லும் என்.எஸ்.பி ரோட்டில் அய்யப்ப பக்தர்கள் சீசன் காட்சிகள்.
அப்போது திருச்சி தெப்பக்குளம் நடுவே மண்டபத்தில், கறுப்பாக நூற்றுக்
கணக்கான பறவைகள் தங்கி இருப்பதையும், எ3ல்லோரும் வேடிக்க பார்ப்பதையும் கவனித்தேன்.
முன்பு தெப்பக்குளத்தில் இரண்டு முதலைகள் கிடந்தபோது எந்த பறவையும் வந்ததில்லை. அவற்றை
அப்போதே பிடித்து விட்டார்கள். மேலும் இப்போது திருச்சி மலைக்கோட்டை கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு அண்மையில்தான் சுத்தம் செய்து இருந்தனர்; குளத்தில் நிறைய நீர். எனவே அந்த
கறுப்பு பறவைகள் சுதந்திரமாக இருந்தன. அந்த பறவைகளைப் பார்த்தால் நீர்க்கோழிகள் போன்று
தெரியவில்லை. கிழக்குக் கரையில், கம்பிவேலி வழியாக, சில இளைஞர்கள் படம் எடுத்துக் கொண்டு
இருந்தனர். இந்த கரையில் படம் எடுத்தால் (எதிர் வெயில் காரணமாக) சரியாக விழாது என்பதற்காக
, தெப்பக்குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் எடுத்த படங்கள் கீழே.
(மேலே) தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும்போது போடப்பட்ட மிதவை, வைக்கோல்,
கழிகள் அப்படியே கிடக்கின்றன. (வாழ்க தூய்மை திருச்சி)
(இரண்டு வாரமாக BSNL BROADBAND இணைப்பு இல்லை; இதனால் வலைப்பக்கம்
தொடர்ந்து வர இயலவில்லை. எனது மகனிடம் இருக்கும் TATA Photon வயர்லெஸ் நெட் இணைப்பு
மூலம் (அவ்வப்போது வாங்கிக் கொள்வேன்) இந்த பதிவை வெளியிட முடிந்தது)