Saturday, 8 October 2011

எம்ஜிஆருக்குப் பின் சரோஜாதேவி முதலமைச்சராக.


சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். தீவிரமான ரசிகன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, எம்.ஆர்.ராதா நடித்த படங்களை பார்த்தேன்.மேலும் எம்ஜிஆர் தொடங்கிய அரசியல் கட்சியிலும் சேரவில்லை.

அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.

அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள்.  தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.

எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த  நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும்   நெருங்கி நடித்தனர்.


காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” (தாய் சொல்லை தட்டாதே), “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”(அன்பே வா),
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),அன்று வந்ததும் இதே நிலா”(பணக்கார குடும்பம்),இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் (படகோட்டி), ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை  பந்தலிட்டு (பணத்தோட்டம்), என்ன என்ன இனிக்குது”(பரிசு),கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.

எம்ஜிஆர்-சரோஜாதேவி திருமணம் நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்த ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன். அது நடக்காமல் போனதில் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு வருத்தம்தான். ஒருவேளை அப்படி நடந்து இருந்தால் சரோஜாதேவிதான் எம்ஜிஆருக்கு பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அமைந்து இருக்கும். இப்படி ரசிகர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

2 comments:

  1. \\ஒருவேளை அப்படி நடந்து இருந்தால் சரோஜாதேவிதான் எம்ஜிஆருக்கு பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அமைந்து இருக்கும்.\\சரோஜாதேவிக்கு அந்த ஆளுமை மனோதிடம், அரசியல் நெளிவு சுளிவு இதெல்லாம் எதுவும் கிடையாது சார். அப்படிப் பார்த்தா ஜானகியம்மாவே முதல்வராயிருப்பாங்களே!! ஆனா ஒரு டவுட்டு சார், சரோஜாதேவியை கல்யாணம் செய்யாமல் விட்டதற்கு அவர் ஒரு நடிகை, இமேஜ் கெடும் என்பது தான் காரணம் என்றால், அடுத்து அவர் கல்யாணம் செய்தது யாரை?!! தமாஷா இருக்கு!!

    ReplyDelete
  2. மறுமொழி > Jayadev Das said...

    ஒரு ரசிகர் என்ற முறையில், அந்ந்நாளில் எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒரு கருத்தைச் சொன்னேன். கருத்துரை தந்த ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு நன்றி. ( மறுமொழி தராமலே போன பதிவுகளில் இதுவும் ஒன்று)

    ReplyDelete