இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது மனைவியும், மகளும் நர்சரியில் இருந்து ஒரு பூச்செடியை வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். வீட்டின் முன்பக்கம், சுற்றுச் சுவருக்கு உட்புறம், செடியை நட்டு வைத்தார்கள். என்ன செடி என்று கேட்டதற்கு இட்லிப் பூ செடி என்று சொன்னார்கள். எனது மகளுக்கு திருமணம் முடிந்து அவரது கணவர் வீடு, சென்று விட்டார். அதன்பிறகு அந்த செடிக்கு நானும் எனது மனைவியும் தண்ணீர் விட்டு கவனித்துக் கொண்டோம். சென்ற ஆண்டு செடி நன்கு பெரிதானதும் பூக்கள் பூத்தன. பூக்கள் சிவப்பாக, நன்கு பெரிதாக இட்லி வடிவத்தில் இருந்தன. அந்த இட்லிப் பூக்களை யாரும் பறிப்பதில்லை. செடியிலேயே பூத்து, செடியிலேயே இருந்து விட்டு, நாளடைவில் காய்ந்து உதிர்ந்து விடும். மனித வாழ்க்கையும் இப்படியேதான் போய் விடுகிறது.
வெட்சிப் பூ:
சிலநாட்களுக்கு முன்னர் வலைப் பதிவில் ஒரு இலக்கியக்
கட்டுரை எழுத வேண்டி இருந்தது. தமிழர்களின் போர்முறைகள் பற்றிய கட்டுரை அது. அதில்
வெட்சி, கரந்தை
என பன்னிரண்டு துறைகளைப் பற்றியும், அந்த மலர்களைப் பற்றியும் படித்து குறிப்புகள்
எடுத்துக் கொண்டு இருந்தேன். . கல்லூரி நாட்களிலிருந்து வெட்சி , கரந்தை என்று
சொல்லிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அந்த மலர்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது..
படித்த போது இலக்கிய ஆசிரியர்களும் காட்டியதில்லை. நாங்கள் படித்த காலத்தில்,
இப்போது இருப்பதுபோல் இவ்வளவு புத்தகங்களோ
அல்லது இண்டர்நெட் வசதியோ கிடையாது. குறிப்புகள் எடுக்க எதுவாக இருந்தாலும் நூலகம்தான்
ஓட வேண்டும். அதற்கும் நேரம் இருக்காது. இப்போது
வீட்டிலேயே இண்டர்நெட் வந்து விட்டது. எனவே சங்க இலக்கிய மலர்கள் பலவற்றைக் கூகிள்
( GOOGLE ) துணையோடு
தேடினேன்.
அப்போது அங்கு தெரிந்த மலர்களில் ஒரு மலர் எங்கள் வீட்டில்
உள்ள இட்லிப் பூவாக இருந்தது. அதன் இலக்கியப் பெயர் வெட்சி மலர் அல்லது வெட்சிப்
பூ. இத்தனை நாட்கள் எங்கள் வீட்டில் இருந்து வரும் இட்லிப் பூ, தமிழ்
இலக்கியத்தில் சொல்லப்படும் வெட்சிப் பூ என்பதிலும் ஒரு மகிழ்ச்சிதான். வெண்ணிற
வெட்சி, செந்நிற வெட்சி என இரண்டுவகை. எங்கள் வீட்டில் இருப்பது செந்நிற வெட்சி.
எங்கள் வீட்டில் உள்ள வெட்சி செடி:

இலக்கிய மலர்:
எங்கள் வீட்டில் உள்ள வெட்சி செடி:

முதற் படம் மற்றும் மேலே
உள்ள அனைத்துப் படங்களும் CANON - POWER
SHOT A800 என்ற கேமராவால் இன்று (14.06.2013) எடுக்கப்பட்டவை.
கீழே உள்ள படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னால் NOKIA X2 செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டவை.
இலக்கிய மலர்:
பண்டைத் தமிழர்கள் பல்வேறு குழுக்களாக (நாடுகளாக)
இருந்தனர். ஒரு நாட்டினரிடம் இருந்த ஆநிரைகளை கொள்ளையடிக்க, மற்ற நாட்டினர் தொடுத்த போர் வெட்சிப் போர் எனப்பட்டது.
அப்போது வீரர்கள் அடையாளமாக வெட்சிப் பூவை
அணிந்தனர். இலக்கண நூல்கள் ”வெட்சித்
திணை” என உரைத்தன.
தமிழ் இலக்கியத்தில் மலர்கள் என்றாலே கபிலர் பாடிய
குறிஞ்சிப் பாட்டுதான் நினைவிற்கு வரும். ஆரிய மன்னன் பிரகத்தத்தன் என்பவனுக்கு
தமிழைப் பற்றிச் சொல்லும்போது, அந்த
பாட்டில் கபிலர் பல்வேறு மலர்களைப் பற்றி சொல்லுகிறார். வெட்சிப் பூவை 63 ஆவது
வரியில் சொல்லுகிறார்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், வெட்சிப் பூவைப் பற்றி
வேட்டுவ வரியில் குறிப்பிடுகிறார்.
திருமுருகாற்றுப்படையில்,
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் “ செங்கால் வெட்சி “ ( வரி எண்.21 ) என்று
சிறப்பிக்கிறார்..இதன் பொருள் ”சிவந்த
கால்களை உடைய வெட்சி” என்பதாகும்.
குறுந்தொகை 209 ஆவது பாடலில் பாலை பாடிய பெருங்கடுங்கோ “ முடச்சினை
வெட்சி “ (வளைந்த கிளைகளைக் கொண்ட வெட்சி) என்று விவரிக்கிறார்.
“ இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி “
என்று அகநானூறு (133) சொல்கிறது. 14-8. ( சிவலின் ( சிவல் - ஒருவகைப் பறவை ) காலிலுள்ள முள்ளை ஒத்த, அரும்பு முதிர்ந்த
வெட்சிப்பூக்கள்) பாடலாசிரியர் உறையூர் மருத்துவன் தாமோதரனார்
ஏறு
தழுவலின் போது வெட்சிப்பூவை வீரர்கள் சூடிக் கொண்டார்கள். அதனைப் பற்றிச் சொல்ல
வந்த புலவர் ” புல்லிலை வெட்சி “ – என்று கலித்தொகையில் (103)
சிறப்பிக்கிறார். முல்லைக் கலி - ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்