Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Sunday, 12 June 2016

மனித்தப் பிறவியும் வேண்டுவதே



பசியேப்பம் விடுபவன் ஆனாலும் சரி, புளியேப்பம் விடுபவன் ஆனாலும் சரி இருவருக்குமே சிலசமயம் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. என்னடா பொல்லாதா வாழ்க்கை என்றோ அல்லது ஏண்டா பிறந்தோம் என்றோ ஒரு அங்காலய்ப்பு மனதிற்குள் உண்டாகி விடுகிறது. அதிலும் தொடர் சோதனைகள் வந்தால் ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று நினைத்து மனம் படாதபாடு படுகிறது.

மனித்தப் பிறவி:

இலக்கியங்களையும், அறிஞர்கள் பொன்மொழிகளையும் வைத்துப் பார்க்கும்போதும், மற்ற உயிரினங்களின் வாழ்க்கை முறையை ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் இந்த பிறவி சிறந்த ஒன்றாகவே சொல்லப் படுகிறது.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்தல் அரிது

என்று பாடுகிறார் அவ்வையார்.

அதிலும் இந்த மனிதப் பிறவியை அடைவதற்கு முன்பு எத்தனை, எத்தனை பிறவியோ எடுக்க வேண்டி இருக்கிறது என்பது ஆன்மீக நம்பிக்கை. ஒரு உயிரானது, புல்லாக, பூண்டாக, புழுவாக , மரமாக, பல்வேறு மிருகங்களாக, பல்வேறு பறவைகளாக, பாம்பாக, கல்லாக என்று பிறவிகள் பல எடுத்து உழலுவதை

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந் திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
-                                               - மாணிக்கவாசகர் (திருவாசகம்)

என்று சலித்து, இறுதியில் இறைவன் அடிகளைக் கண்டு வீடுபேறு அடைந்ததாக விவரிக்கிறார் மணிவாசகப் பெருமான் என்று அழைக்கப்பெறும். மாணிக்கவாசகர். 

மனித்தப்பிறவியின் துன்பங்கள்:

இவ்வாறெல்லாம் பெருமை வாய்ந்த மனித்தப் பிறவியில் வாழ்க்கை என்பது இன்பமயமாக இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இல்லற வாழ்விலும், வாணிபத்திலும் சிறந்தவராக இருந்த பட்டினத்தார் துறவியாக மாறிய பின்னர், இந்த உடம்பைப் பற்றி சொல்லும் வாசகங்கள் இவை.

கள்வர்ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்;
சலமலப் பேழை,                                                 
இருவினைப் பெட்டகம், 
நாற்றப் பண்டம்,                        
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்,
ஓயா நோய்க்கு இடம்,                                       
சோற்றுத் துருத்தி,
காற்றில் பறக்கும் பட்டம்.

எனவே, வாழ்க்கை துன்ப மயமாகவே இருக்கிறது. இதன் எதிரொலிதான், கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன சில சலிப்பான வார்த்தைகள்.. குசேலபாக்கியானம் என்று ஒரு நூல். இதனை எழுதியவர் வல்லூர் தேவராச பிள்ளை என்பவர். கிருஷ்ணாவதாரத்தின் போது, கண்ணனின் நண்பனாக இருந்த ஏழைக் குசேலனின் கதை சொல்லும் செய்யுள் நூல் இது. அதில் ஒரு பாடல் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை ஆளாக்கும் வரை படும் துன்பத்தைச் சொல்லுகிறது.

 மதலையைப் பெறுநாள் துன்பம்
          
வளர்த்திடும் நாளும் துன்பம்
 
விதலைநோ யடையின் துன்பம்
          
வியன்பரு வத்துந் துன்பங்
 
கதமுறு காலர் வந்து
          
கைப்பற்றிற் கணக்கில் துன்பம்
 
இதமுறல் எந்நாள் சேயால்
          
எற்றைக்குந் துன்ப மானால்.
                                             - குசேலபாக்கியானம் ( 118 )

( பாடலுக்கான தெளிவுரை )  ஒரு குழந்தையைப் பெறுகின்ற காலத்திலும் துன்பம், அதனை , வளர்க்கின்ற  ஒவ்வொரு நாளும் துன்பம், அந்த குழந்தைக்கு பயப்படும்படியான  நோய்கள்  ஏதேனும் வந்தாலும் துன்பம் ,  வாலிப வயதை அடையும்போதும் துன்பம், ஏதேனும் ஆகி விட்டாலும் துன்பம், எனவே குழந்தையால் எக்காலத்தும் துன்பமே என்றால், குழந்தையைப் பெற்று  நிம்மதியாக இருக்கும் நாள்  எந்நாளோ?  

மனித்தப் பிறவியும் வேண்டுவதே:

இவ்வாறெல்லாம் மனிதப் பிறவியில் துன்பங்கள் அடைந்தாலும் இந்த மனிதப் பிறவியும் வேண்டும் என்கிறார் ஒருவர். அவர் அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசர். இவர் தனது இளம் வயதினில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர். அப்போது சமண சமயத்தில் இருந்தார். அவரது தமக்கையார் திலகவதியார்  இவரை சைவ சமயத்தில் சேரச் சொல்லி, வயிற்றுவலியை குணப்படுத்தியதாகச் சொல்வார்கள். அதன் பிறகு அவர்  ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் சென்று இறைவனைப் பாடுகிறார். அவ்வாறு செல்கையில், தில்லை நடராசர் கோயிலில் இறைவனின் திருமேனி குறித்து பரவசம் ஆனவராய்ப் பாடுகின்றார்.  

                                                                                                                                                         
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
                                                                                        -திருநாவுக்கரசர்

( இதன் பொருள் ) வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே தோன்றும் புன்னகையையும், பனியின் ஈரம் படர்ந்த சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்ற திருநீற்றீனையும், , இனித்தமுடன் தூக்கிய திருவடிகளையும் காணும் பேறு பெற்றால், இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் வேண்டும்தான்.

கவிஞர் வாலி தனது திரைப்படப் பாடல் ஒன்றில் ( ராக்கம்மா கையைத் தட்டு – படம்: தளபதி ) இந்த தேவாரப் பாடலை, இணைத்து எழுதியுள்ளார். இந்த தேவாரப் பாடல் வரிகள் மட்டும் உள்ள வீடியோ இங்கே. நன்றி: செல்வகுமார் / https://www.youtube.com/watch?v=6478pdqRjw8