அன்று மாலை, எனது அப்பாவை ( வயது 91.) ஒரு தனியார் மருத்துவ மனைக்கு
அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர் அப்பாவைப் பற்றிய நலன் விசாரித்தார்.அப்போது
அந்த நண்பர் ‘ வயதானால் பெரியவர்கள் மீண்டும் ஒரு குழந்தையாக மாறி விடுகிறார்கள்” என்றார்.
நான் அவருக்கு மறுமொழியாக ‘உண்மைதான். ஆனால் மனித வாழ்வில் முதுமை ஒரு சாபம்” என்றேன்..
அவரும் ”ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?” என்று வினவ, நானும் ‘மற்ற உயிரினங்கள் நோயுற்றாலோ
அல்லது முதுமை அடைந்தாலோ அவற்றை உணவாக உண்ணும் உயிரினங்கள் அவற்றின் உயிரைப் போக்கி
இவ்வுலக கஷ்டத்திலிருந்து விடுவித்து விடுகின்றன. ஆனால் மனிதன் முதுமை அடையும்போது படும் துன்பங்கள் சொல்லி முடியாது.” என்றேன்
முதுமை என்பது
ஒருவர் 60 வயதை கடந்து விட்டாலேயே அவரை முதியவர் என்று அழைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அவ்வாறே
குறிப்பிடுகின்றனர். இன்னும் கூடுதலாக மூத்த குடிமக்கள் ( Senior Citizens ) என்றும்
அழைக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் மற்றும் மருந்துகள் காரணமாக 60 வயதைக்
கடந்தாலும் 90 வயதுக்கு மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும்
நான் பார்த்து இருக்கிறேன்.
முதுமையில் படும் கஷ்டங்கள்
ஆனாலும் முதுமை என்ற நோய் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக,
வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாக இருக்கிறது. சிலருக்கு அறுபதில் வரலாம். அல்லது அறுபதிற்கு
மேலும் வரலாம். பட்டிமன்றத்தில் வேண்டுமானால் முதுமை ஒரு வரம் என்று வாதாடலாம். ஆனால்
நடைமுறையில் முதுமை என்பது ஒரு வரமல்ல; அது ஒரு சாபமே. சாபம் யார் கொடுத்தது என்றுதான்
தெரியவில்லை. உள்ளம் இளமையாக இருந்தாலும், தளர்ச்சியின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்க
மறுக்கிறது. ஞாபக மறதியும், நோய்களும், வீண் பயமும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. நேற்றுவரை
அதிகார தோரணையில் இருந்தாலும், இன்று கையில் காசு பணம் பவிசு என்று இருந்தாலும், பார்த்துக்
கொள்ள ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் அடுத்தவர் துணையின்றி எதனையும் செய்ய முடியாத
நிலைமை. நம்மால் மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு என்ற கவலை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
எனது அப்பா
எனது அம்மா, அப்பா ( ரெயில்வே ஓய்வு ) இருவரும். வாடகைக்குப் பிடித்த,
ஒரு தனிவீட்டில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அம்மா ( 78 ) இறந்த
பின்பும் தனியாகவே எனது தந்தை 90 வயது வரை நன்றாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொண்டும்
தனியாகவும் அதே வீட்டில் இருந்தார். என்னோடு
அல்லது எனது தங்கை வீட்டிற்கு வந்து இருந்து கொள்ளுங்கள் என்று அழைத்த போதும் வரவில்லை.
இப்போது முதுமை ஆட்கொண்டு, கடுமையான பல கஷ்டங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்
அவர் அடைந்ததால், எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். அவருக்கு இன்னும் தனியாக
இருக்கவே விருப்பம். ( அவருக்கு 91 வயது முடிந்து 92 ஆவது வயதும் முடிய இன்னும் ஒரு
மாதம்தான் இருக்கிறது ).இனிமேல் மருந்து மாயம் எதுவும் அவரிடம் செல்லாது. இருக்கும்
வரை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் நானே அருகில் இருக்கும்படியான சூழ்நிலை
எனது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில்தான் திரும்புவார்.
வேலை வாய்ப்பு கோச்சிங் கிளாஸ் சென்று வரும் எங்களது மகனும் அப்படியே. இவர்கள் இருவரும் திரும்ப
வரும் வரையிலும் நான் எங்குமே செல்ல முடியாது. எனது அப்பாவிற்கு நான் அருகிலேயே இருக்க
வேண்டும். கால் மணிக்கு ஒருமுறை அவரை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ( நண்பர்களும் உறவினர்களும், எனது தந்தைக்கு disposable diapers போட்டுவிடச் சொல்லுகிறார்கள்.) மீதி
நேரமெல்லாம் ஒன்று சேரிலேயே உட்கார்ந்து இருப்பார் அல்லது தரையில் பாயிலேயே படுத்து இருப்பார். தூங்குகிறாரா அல்லது விழித்து இருக்கிறாரா என்றே தெரியாது.
திடீரென்று 40 வருடத்திற்கு முந்தைய சங்கதியை நேற்று நடந்தது போல் சொல்லுவார். இந்தநிலையில்,நானும்
ஒரு சீனியர் சிட்டிசன். இப்போது அவர் அடைந்து
கொண்டு இருக்கும் துன்பங்கள், அவரையும் அறியாமல் அவர் செய்யும் தவறுகள் மற்றும் அவரால்
எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை சமாளித்த விதம் யாவற்றையும் இப்போது இங்கே
சொல்வது சரியாக இருக்காது ( எனது நண்பர்கள் பலர் அவரை நல்ல ஹோம் ஒன்றில் சேர்க்கும்படி சொல்லுகிறார்கள். திடீர் இடமாற்றம் எனது தந்தைக்கு எப்படி ஒத்துப் போகும் என்று யோசனையாகவும் உள்ளது..)
கிராமப்புறமும் நகர்ப்புறமும்
எனக்குத் தெரிந்து கிராமத்தில் இருக்கும் தள்ளாத முதியவர்கள் ஒவ்வொரு
நாளையும் எளிதாகவே கழித்து விடுகிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். அங்கு அவர்கள்
யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஒரு திண்ணையிலோ, அல்லது ஒரு கொட்டகையிலோ அல்லது ஒரு
தோப்பிலோ சுதந்திரமாக இருந்து கொண்டு காலத்தைக்
கழித்து விடுகிறார்கள். எனது பெரியப்பா ஒருவர், தனது கிராமத்து வீட்டு கொல்லைப் புறத்தில்
கோமணம் ஒன்றைக் கட்டிக் கொண்டு பகல் முழுக்க அங்கேயே இருப்பார். யாரேனும் வந்தால் அல்லது
ஏதேனும் எடுப்பதற்கு என்றால் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வருவார். என்னுடைய
தாத்தா தனது கடைசி காலத்தை திண்ணையிலேயே முடித்தார். இப்படியே கிராமத்து உறவுகள் பலர்.
பெரும்பாலும் கிராமத்தில் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள என்று
தனியே ஒரு ஆள் தேவைப் படுவதில்லை. வீட்டில் இருப்பவர்களும், அவ்வப்போது சுற்றி இருப்பவர்களும்
தேவைப்படும் சமயத்தில் முதியவருக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். நடக்க முடிந்தவர்கள்
ஒரு ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நடமாடுவார்கள். தங்கள் வயது நண்பர்களைச் சந்திக்கும்
போது தங்கள் முதுமையை மறந்து விடுகிறார்கள்.. ( இதையேல்லாம் யோசித்து, அப்பா ரிடையர்டு
ஆனதுமே, எனது அம்மாவையும் அப்பாவையும், எங்கள் சொந்த ஊருக்கோ அல்லது அம்மா வழி சொந்தங்கள்
இருக்கும் ஊருக்கோ சென்று விடுங்கள்; அங்கே நல்ல வசதியுடன் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளலாம்
என்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை )
ஆனால் நகர்ப்புறத்தில் முதியவர்கள் வாழ்க்கை என்பது இதனிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒரு வராண்டாவிலோ அல்லது ஒரு அறையிலோ ஒரு குறுகிய வட்டத்தில் மன அழுத்ததுடனேயே முடிந்து விடுகிறது.
ஆனால் நகர்ப்புறத்தில் முதியவர்கள் வாழ்க்கை என்பது இதனிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒரு வராண்டாவிலோ அல்லது ஒரு அறையிலோ ஒரு குறுகிய வட்டத்தில் மன அழுத்ததுடனேயே முடிந்து விடுகிறது.
முதியோர் இல்லம்
ஒரு காலத்தில் முதியோர் இல்லத்தில், பெற்ற பிள்ளைகளே தங்கள் தாய்
தந்தையரை சேர்த்தல் என்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. பாவச் செயலாகக் கருதப்
பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாத ஒன்றாக கருதப் படுகிறது. கிராமத்தில் அவர்களைத் தனியே விட்டுவிட்டு
சொந்த வேலைகளைப் பார்க்க நாம் சென்று விடலாம். ஆனால் நகர்ப்புறத்தில்
அவ்வாறு விட்டு விட்டு செல்ல முடியாது. அவர்களைக் கவனித்துக் கொள்ள என்று
தனியே ஒருவர் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துயரமான கதை உண்டு. நகர்ப் புறத்தில் கணவன் மனைவி
இருவரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க சென்று விடுகிறார்கள்.
இப்போது பெற்றோரை விட்டு விட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும்
முதியவர்களைக் கவனிக்க ஆள் தேவைப் படுகிறது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் முதியோர்
இல்லம் என்பது பாதுகாப்பானதாக தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. (இந்த முதியோர் இல்லம் குறித்து தனியே ஒரு பதிவை எழுத வேண்டும்).
இந்த முதியோர் இல்லம் குறித்து இணையதளத்தில் தேடியபோது பல சுவாரஸ்யமான
தகவல்கள். பல முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களாக நன்கொடை எதிர்பார்த்து நடத்தப் படுகின்றன.
சாதாரண கட்டணம் பெற்றுக் கொண்டு, ஒரு ஹாஸ்டல் போன்று நடக்கும் இல்லங்களும் உண்டு; கார்ப்பரேட்
கணக்காக அபார்ட்மெண்ட் ஸ்டைலில் அதிகக் கட்டணம் பெற்றுக் கொண்டு நடக்கும் இல்லங்களும்
உண்டு.
முதியோர் இல்லம் என்றவுடன், வலைப்பதிவர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி
அவர்கள் ’கனவில் வந்த காந்தி’ என்ற தொடர்பதிவு ஒன்றினை எழுதச் சொன்னபோது, நான் எழுதிய
தொடர் பதிவும், அதிலுள்ள கேள்வியும் பதிலும் நினைவுக்கு வந்தது.
( http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_17.html
கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.
)
// 4.
முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள்
அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும்
அரசாங்கமே உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும்.
இதற்காக கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த
விடுதியில் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம். //
xxxxxxxxxxxxxxxx
தொடர்புடைய எனது பிற பதிவுகள்: