அண்மையில் சகோதரி அருணா செல்வம் அவர்கள் ” வாழ்க்கையும் வழுக்கையும்!! (அனுபவம்)” என்று ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்.http://arouna-selvame.blogspot.com/2014/11/blog-post_17.html அந்த பதிவினில் வழுக்கத்தலை உள்ள ஒருவர் பெண் பார்க்க வந்தபோது, பெண் மறுத்து விட்டதாக தனது அனுபவத்தினை எழுதி இருந்தார். இதற்கு நேர் எதிர்மறையானது எனது அனுபவம்.
பேராசிரியர்
வீட்டில்:
ஓய்வுபெற்ற
பேராசிரியர் ஒருவரை அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். பேராசிரியரும் அவரது
மனைவியும் ( அவரும் ஓய்வு பெற்ற பேராசிரியர்) சமூக சேவைகளில் ஈடுபாடு உள்ளவர்கள்.
தாங்கள் பணிபுரிந்த காலத்தில் படிக்க வசதியற்ற எத்தனையோ மாணவர்களுக்கு உதவி
செய்தவர்கள். அவர்கள் வீட்டிற்கு தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் வரன் இருந்தால்
சொல்லுங்கள் என்று, பேராசிரியரிடம் சொல்லிவிட்டு போக நிறையபேர்
வருவார்கள்..
ஒருமுறை அவர்
வீட்டிற்கு போயிருந்த போது ஒருவர் தனது பையனை அழைத்து வந்து இருந்தார். பையனின்
அப்பா மத்திய அரசில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அதிகாரி
என்பதால், பணிக்காலத்தில் அடிக்கடி பல ஊர்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் மாறுதல்
ஆனவர். அவருக்கு இரண்டு பையன்கள். இப்போது மூத்த பையனின் திருமண விஷயமாக
பேராசிரியரைப் பார்க்க வந்திருந்தனர். பையனைப் பார்த்தேன். நல்ல சிவப்பு, இளைஞர்,
. ஆனால் தலை வழுக்கை. தலையில் முடியே இல்லை. பூனை மயிர் போல ஒன்றிரண்டு இருந்தன.
பேராசிரியரின் வீட்டில் இருந்த அவரது BIO DATA விவரங்களை என்னிடம் கொடுத்தார்கள். நல்ல படிப்பு.
சாப்ட்வேர் என்ஜீனியர். கைநிறைய சம்பளம். வெளிநாடு ஒன்றில் டெபுடேஷன் வேலை
பார்த்து விட்டு இப்போது இந்தியாவிற்கு வந்து வேலை பார்க்கிறார். எல்லாம் இருந்தும்
இந்த தலை வழுக்கை என்பது அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் பெரிய கவலை.
அந்த பையனிடம்
பேசினேன் “ இந்த தலைமுடிப் பிரச்சினை எப்போதிருந்து இருக்கிறது? சின்ன
வயதிலிருந்தா?” என்று கேட்டேன். அவர் “சார், சின்ன வயதில்
இந்த பிரச்சினை இல்லை. தலைமுடி நன்றாகவே அடர்த்தியாக கருகரு என்று இருந்தது. ஹைஸ்கூல்
படிக்கும்போது, அப்பா வடக்கே, குடும்பத்தோடு ஊரு விட்டு ஊரு மாறுதல் ஆனபோது சில
ஊர் தண்ணீர் ஒத்துக் கொள்ளாததால் தலைமுடி கொட்டி எனக்கு இப்படி ஆகிவிட்டது.” என்றார். ”உங்கள்
தம்பிக்கு எப்படி” என்று கேட்டேன். ” அவருக்கு ஒன்றும் இல்லை. எனக்கு மட்டும்தான், எந்த
வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை” என்று
கவலையோடு சொன்னார்.
”ஏதாவது செயற்கையாக விக் அல்லது தொப்பி வைத்துக்
கொள்ள வேண்டியதுதானே” என்று கேட்டேன்.
”அப்படி எல்லாம் வேஷம் போட்டு நான் யாரையும்
ஏமாற்ற விரும்பவில்லை. நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் ப்ரோபைல்
போட்டோவையும் கொடுத்து இருக்கிறேன். எனக்கு தலைமுடிதான் பிரச்சினை. மற்றபடி உடம்புக்கு
ஒன்றும் இல்லை. என்னைப் பார்த்து விருப்பப்பட்டு எந்த பெண்ணாக இருந்தாலும் கட்டிக்
கொள்வதாக இருந்தால் கட்டிக் கொள்ளட்டும். அல்லது எனக்கு கல்யாணமே ஆகாமல் போனாலும்
பரவாயில்லை” என்று பேசினார்.அவரது ம்னோ தைரியத்தையும்
வைராக்கியத்தையும் பாராட்டிவிட்டு, அங்கே கொஞ்ச நேரம் எல்லோரிடமும் பேசிவிட்டு
வந்து விட்டேன்.
பையனுக்கு
திருமணம்:
சில மாதங்களுக்கு
முன்பு அந்த பையனுடைய அப்பா, பேராசிரியரிடம் விலாசத்தை தெரிந்து கொண்டு, என்னுடைய
வீட்டிற்கு அந்த பையனுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் வைக்க வந்தார். அவரிடம்
பேசியதில், பெண் வீட்டில் எல்லோருக்கும் சம்மதம் என்றும், அந்த பெண்ணிடமே பையன்
நேரில் பேசி சம்மதம் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். மறக்காமல் அந்த
திருமணத்திற்கு சென்றேன். மண மேடையில் அந்த பையனும் பெண்ணும்
சிரித்தபடி சந்தோஷமாகவே இருந்தனர். எல்லாம் இனிதே நடந்தது.
ஆண்களுக்கு
மட்டுமல்ல. பெண்களிலும் தலை வழுக்கை உண்டு. அவர்கள் நிலைமைதான் ரொம்பவும்
பரிதாபம். தலை வழுக்கையான பெண்களிலும்
திருமணமாகி குழந்தைகளோடு இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். எனவே வழுக்கை
வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல் இல்லை. எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம்.
பிரபல ஹாலிவுட் வழுக்கைத்
தலை நடிகர்கள்
(படம் – மேலே) ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ Bruce Willis
(படம் – மேலே) பிரபல
ஹாலிவுட் நடிகர் Patrick
Stewart
(All Pictures Thanks to "GOOGLE IMAGES" )