Showing posts with label திருவள்ளுவர். Show all posts
Showing posts with label திருவள்ளுவர். Show all posts

Saturday, 13 August 2016

தருண் விஜய் – பாராட்டுவோம்



ஹரித்துவாரில் கங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை எந்த அரசியல் கட்சி வைத்தால் என்ன? பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதிலும் வழக்கம் போல அரசியல். நம்மூர் தமிழ் மக்கள் வடக்கே போய் வள்ளுவர் சிலையை வைத்து விட முடியுமா? ஆனாலும் வள்ளூவர் மீதும் தமிழின் மீதும்  உள்ள மரியாதையின் காரணமாக, வட மாநில (உத்தரகாண்ட்) ராஜ்யசபா எம்.பி திரு தருண் விஜய் அவர்கள் அங்கே திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி எடுத்தார். உடனே அங்கே உள்ள சாதுக்கள் எதிர்ப்பு என்று செய்தி வருகிறது. இங்கு தமிழ்நாட்டிலும் சிலர் இதற்கு நோக்கம் கற்பித்து அரசியல் பேசுகிறார்கள்.

கர்நாடகாவில் வள்ளுவர் :

அண்டை மாநிலமான கர்நாடகாவில்,  பெங்களூரில், தமிழ்ச்சங்கம் சார்பில், அல்சூர் ஏரிக்கரை பூங்காவில், 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை உடனே திறக்க முடிந்ததா? ( இத்தனைக்கும் கன்னடம் நமது திராவிட மொழிகளில் ஒன்று என்று தமிழர்களாகிய நாம் பெருமை பேசி வருகிறோம்; பெங்களூரிலும் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள்..) அப்போது கர்நாடக முதல்வராக இருந்த பங்காரப்பா ( காங்கிரஸ் ) மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை 18 வருடங்களுக்கும் மேலாக சாக்கால் சுற்றப்பட்டு இருந்தது. பின்னர் அப்போதைய தமிழக முதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களது முயற்சியால் அவரது ஆட்சிக்காலத்தில், பி.ஜே.பி முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போதுதான் ( ஆகஸ்டு 9, 2009) திறந்து வைக்கப்பட்டது. அதேபோல கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் (Sarvajna) உருவச்சிலை இங்கு சென்னையில் திறந்து ( ஆகஸ்டு 13, 2009) வைக்கப்பட்டது. கவிஞர் சர்வக்ஞர் தமிழ் சித்தர்கள் போன்று ஒரு சீர்திருத்தவாதி என்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.

வடக்கே என்ன பிரச்சினை:

பொதுவாகவே வட இந்தியர்களுக்கு, தமிழ்நாடு என்றாலே அவர்கள் இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற பரவலான எண்ணம் உண்டு.(தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை; அரசியல் அதிகாரத்தின் துணையோடு இந்தி இங்கு தமிழகத்தில் கட்டாய திணிப்பு செய்வதுதான் எதிர்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தி.மு.க மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பிற கட்சி தலைவர்களும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்தனர். தி.மு.க முன்னணியிலிருந்து முன்னெடுப்பு செய்தது.என்பது வரலாறு)

மேலும் திருவள்ளுவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் சிலையை அங்கே வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. திருவள்ளுவர் இன்ன ஜாதி என்றோ அல்லது இன்ன மதத்தினர் என்றோ இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை. வள்ளுவரைப் பற்றியும் இன்னும் சில புலவர்களைப் பற்றியும் இங்கு சொல்லப்படும் கதைகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடையாது. பழைய தமிழகவரலாற்றின் பெரும்பகுதி இவ்வாறே இருக்கிறது. அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் ஒரு உலகப் பொதுமறையாளர்.  

இப்பேர்பட்ட சூழ்நிலையில் திரு தருண் விஜய் அவர்கள் வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டத் தக்கது ஆகும். 

தருண் விஜய் பற்றி:


யார் இந்த தருண் விஜய் என்று பார்க்கும்போது அவரைப் பற்றிய விவரத்தை இணையதளங்களில் காண முடிகிறது. டேராடூனில் (உத்தர்காண்ட்) மார்ச் 2 ஆம்தேதி 1956 இல் பிறந்த இவர், பி.ஏ. பட்டதாரி; எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். பாஞ்சசான்யா என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர். நூல்கள் சிலவும்  எழுதியுள்ளார். பாரதீய ஜனதா கட்சி சார்பாக, உத்தரகாண்ட் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி இந்து (தமிழ்) பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே.

தமிழ் மீது உங்களுக்குப் பாசம் உருவானது எப்படி

பெரும்பாலான வட இந்தியர்கள் இந்தி மொழி மீது உள்ள கர்வத்தினால், மற்ற மொழிகளை விமர்சிக் கிறார்கள். இதனால், நம் நாட்டின் மற்ற மொழிகளையும், ‘தமதுஎன ஏற்காத குணம் அவர்களிடம் இல்லாததை உணர்ந்தேன். இதைச் சரிசெய்ய விரும்பிய எனக்கு மற்ற தென் இந்திய மொழிகளில் தமிழின் மீதான ஆர்வம் அதிகமானது. தமிழின் பாரம்பரியம், கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைதான் இதற்குக் காரணங்கள். தமிழை மற்ற மொழி என்று கூறாமல், எனது தாயின் மொழிகளில் ஒன்று என ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

மாநிலங்களவையில் இந்தி மட்டும் இருக்கும் தேசிய மொழிப் பட்டியல்களில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் எழுப்பிய குரலுக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன?

எதிர்ப்பை விடப் பல மடங்கு ஆதரவுதான் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு. கருணாநிதி என்னைப் பாராட்டித் திருக் குறளைப் பரிசாக அளித்திருக்கிறார். ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் உட்படப் பலர் தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டினார்கள். அதிமுக சார்பிலும் அதன் எம்பிக்கள் பாராட்டுக் கடிதங்கள் எழுதியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் நேரில் வந்து என்னைச் சந்தித்து நெகிழ்ந்துபோனார்கள்

எதிர்ப்புத் தெரிவித்த மிகச் சிலரிடம், தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்கள் மனதையும் மாற்றுவேன்.  

(நன்றி: தி இந்து (தமிழ்) தேதி 14.செப்டம்பர் 2014 )

பாராட்டுக்குரியவர்:

ஆனாலும் திரு. தருண் விஜய் அவர்கள் அவர் ஒரு பி.ஜே.பி அரசியல்வாதி என்பதால், அவர் தமிழுக்கு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து எதிர்ப்பவர்களும் இங்குண்டு. என்னைப் பொருத்தவரை, இவர்களது கருத்துக்களை புறந்தள்ளி விட்டு, வடக்கே வள்ளுவர் சிலையை நிறுவும் திரு. தருண் விஜய் அவர்களை பாராட்ட வேண்டியது நமது கடமை என்றுதான் சொல்வேன். 

                                                               xxxxxxxxxxxxxxxxxxxxxxx

( ஹரித்வாரில் தொடர்மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இம்மாத (ஆகஸ்ட் 2016) இறுதியில் திறப்புவிழா நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது – புதிய தலைமுறை செய்தி 06.08.2016 / பார்க்க https://www.youtube.com/watch?v=I1GlIm6RbGc )

                    (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Saturday, 19 October 2013

திருவள்ளுவர் தாடி, மீசை வைத்து இருந்தாரா?



நமது  நாட்டில் போகாத ஊருக்கு வழி கேட்டால், வழி சொல்ல நிறையபேர் வருவார்கள். பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு என்ன விலை என்று சொல்லுகிறான் என்பார்கள். அடிக்கடி நம்நாட்டில் திருவள்ளுவரைப் பற்றி எழுப்பப்படும் சர்ச்சைகளில் ஒன்று அவர் தாடி, மீசையுடன்தான் இருந்தாரா? இல்லையா என்பது ஆகும். அண்மையில் ஒருவர் இந்த சர்ச்சையை கிளப்பியிருந்தார் எங்கள் வீட்டில் நாங்கள் வாங்கும் செய்தித்தாள்களில் தினமலரும் ஒன்று. நேற்று (திருச்சி பதிப்பு 18,அக்டோபர்,2013) அதில் ஒரு செய்தி. அதாவது ராணிப்பேட்டை மோகனகுமார்  என்பவர்

// அவர் (திருவள்ளுவர்) நீண்ட தலைமுடி வளர்த்து கொண்டை போட்டுக் கொண்டு, தாடி வளர்த்து வாழ்ந்திருக்க மாட்டார். அவர் தனது தலை முடியை சீவி வாரி,தமிழரின் வீரத்துக்கு அடையாளமான முறுக்கு மீசையுடனேயே வாழ்ந்திருப்பார் //


என்று சொல்லிவிட்டு ஒரு படமும் காட்டுகிறார். அதில் இருப்பவர் நாம் கம்பர் என்று சொல்லும் படத்தில் இருப்பவருக்கு தம்பி போன்று இருக்கிறார். மேலும் இதுபற்றி தமிழக முதலவர் ஜெயலலிதா அவர்களுக்கும் இவரது படத்தில் உள்ளது போல் வள்ளுவரை மாற்றச் சொல்லி கடிதம் எழுதியுள்ளார்.

அரசு அங்கீகாரம் பெற்ற வள்ளுவர் படம்:


இவர்தான் திருவள்ளுவர் என்று தமிழக அரசு ஒரு படத்தினை அங்கீகாரம் செய்துள்ளது. இந்த படத்தினை வரைந்தவர் ஓவியர் வேணுகோபால் சர்மா. இவர் ஒரு கற்பனையில் தான் கண்ட கேட்ட செய்திகளின் அடிப்படையில் இப்படித்தான் வள்ளுவர் இருந்திருப்பார் என்ற யூகத்தில் படம் வரைந்தார். இந்த படம் அங்கீகாரத்திலும் ஒரு  பின்னணி உண்டு.. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு விழாவில் ( 16,ஜனவரி,2011 ) அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது :

// நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்' என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே  வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.சட்டசபையில் இந்த படத்தை வைக்கவேண்டுமென கேட்டபோது, தி.மு.க.,காரர்கள் இந்த படத்தை வைத்தால், நாங்கள் வைத்தது என அடிக்கடி கூறிக்கொள்வர் என நினைத்து, நாங்களே இந்த படத்தை வைக்கிறோம் என பக்தவத்சலம் கூறினார் //


அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் வேணுகோபால் சர்மா வரைந்த இந்த திருவள்ளுவர் படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த படத்தினைத்தான் அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் ம்ற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் வைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.  பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்ட திருக்குறளோடு இந்த வள்ளுவர் படமும் வைக்கப்பட்டது.

வள்ளுவரை மாற்றிய கருணாநிதி:



 கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார். அங்கு வள்ளுவர் சிலையை  உட்கார்ந்த நிலையில்தான் அமைத்தார். ஆனால் கன்னியா குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நின்ற கோலத்தில் அமைத்ததோடு வள்ளுவரையும் “ அய்யனே என் அய்யனே “ என்று பெயர் மாற்றம் செய்து துதி செயதார்..மேலும் சிலையானது பெண் நளினத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்றும் சொன்னார்கள். ஆனாலும் வள்ளுவர் தாடி மீசைய்டன் தான் கன்னியாகுமரியில் இருக்கிறார். இப்படி கலைஞர் கருணாநிதி வள்ளுவர் உருவத்தை அமர்ந்த கோலத்திலிருந்து நின்ற கோலத்திற்கு மாற்றம் செய்ததையும் வள்ளுவரை அய்யன் என்று மாற்றியதையும் எந்த தமிழ் உணர்வாளர்களும் கண்டு கொள்ளாததோடு கண்டிக்கவும் இல்லை.. 
 

முடிவுரை:
 
எனவே திருவள்ளுவர் தாடி மீசையுடன் வாழவில்லை என்ற கருத்து
ஏற்புடையதா என்றால் இல்லை. ஏனெனில் மயிலாப்பூரில் கிடைத்த திருவள்ளுவர் சிலையில் அவர் தாடி மீசையுடன்தான் காட்சி தருகிறார். வேணுகோபால் சர்மா மயிலாப்பூர்க்காரர். அவர் இந்த சிலையின் அடிப்படையில்தான் வள்ளுவரை தாடி மீசையுடன் வரைந்திருக்க வேண்டும்.

மேலும் சான்றோர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்களின் படங்களை வரையும் போதும் உருவச் சிலைகளை அமைக்கும் போதும் அவர்களது கடைசிகாலத்து பிம்பத்தையே  மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள். திருவ்ள்ளுவர் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் ஆவார். எனவே வள்ளுவரை தாடி மீசையுடன் இருக்கும் ஒரு குருவாகவே (ஆசானாகவே) காண்போம்.


கட்டுரை எழுத உதவியவை:
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539  ( ஐராவதம் மகாதேவன் )