நம்ப ஆட்களை கணக்கு காட்டு என்றால் கவலையே பட மாட்டார்கள். எப்படியும்
ஒரு கணக்கை காட்டி விடுவார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால், குதிரைக்கு குர்ரம் அவ்வளவுதான்.
பல இடங்களில் இரண்டு கணக்கு பேரேடு இருக்கும். ஒன்று வெள்ளை. இன்னொன்று கறுப்பு. இப்போது
அப்படி கூட இல்லை. வெளிப்படையாகவே அடிக்கிறார்கள். செய்யாத வேலைக்கு செய்ததாக கணக்கு
காட்டுகிறார்கள்.
தெர்மாக்கோல் கணக்கு
அண்மையில் அமைச்சர் ஒருவர், வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல்
இருக்கும் பொருட்டு, தெர்மாகோல் அட்டைகளை வைத்து மூடும் முயற்சியில் இறங்கினார் என்றும்,
ஆனால் அம் முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.
அம்மா இருந்தவரை பம்மிக் கிடந்த பலரும், அந்த அமைச்சரை ,நெட்’டில் காய்ச்சி எடுத்து
விட்டனர். அவரும் வேறு வழி இல்லாது சமாளித்து அறிக்கை வெளியிட்டு விட்டார். முதலில்
அந்த திட்டத்திற்கு 10 லட்சம் என்று செலவுக்கணக்கு சொன்னவர்கள், பிற்பாடு, இல்லையில்லை
ரூபாய் எட்டாயிரம் மட்டுமே என்று சொன்னார்கள்.
தயிர்க் கணக்கு
ரெயில்வே கேண்டீன்கள், ரெயில்வே சமையலறைகள், ரெயில்வே மளிகை சாமான்கள்
குடோன் என்று, மத்திய ரெயில்வேயின் கேட்டரிங் பிரிவிற்கு சமையல் சாமான்கள் அனைத்தும்
ரெயில்வே கேட்டரிங் துறைதான் வாங்கிப் போட்டு விநியோகம் செய்யும். இதன் தலைமையிடம்
இருப்பது மும்பாயில். அவர்கள் எப்போதும் நஷ்டக் கணக்கையே எழுதி வந்தார்கள். பார்த்தார்
ஒருவர். அவர் பெயர் அஜய் போஸ். மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு மட்டும் ஏன் என்ற
பராசக்தி பட வசன ஸ்டைலில், அவருக்கு. வந்தது அக்கறை. வழக்கம் போல தகவல் அறியும் உரிமைச்
சட்டம் கீழ் கணக்கை கேட்டு எழுதிப் போட்டார். அவர்கள் அசைவதாக இல்லை. இவரும் விடுவதாக
இல்லை. ஒரு வழியாக பதில் தந்தார்கள். அந்த பதிலில்,ஒரு கிலோ தயிர் ரூ 9720 இற்கும்,
ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ1241 இற்கும், ஒரு பாக்கெட் உப்பு ரூ 49 இற்கும், கூல்
ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்று ரூ 59 இற்கும் வாங்கியுள்ளதாக தெரிவித்து இருந்தார்கள்.
கணக்கு கேட்டார். கொடுத்து விட்டார்கள். அப்புறம் டைப் செய்ததில் பிழை என்றார்கள்.
யானைக்கு அல்வா
மேலே சொன்ன எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்படியாக ஒரு கணக்கை
சர்க்கஸ் மானேஜர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இந்த நகைச்சுவை காட்சி வரும் அந்தக் கால
ஜெமினியின் பிருமாண்டமான படம் ‘சந்திரலேகா’. வெளிவந்த வருடம். 1948. இந்தி. தெலுங்கு
என்று மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டது. அதில் சர்க்கஸ் கம்பெனி ஒன்று
படம் முழுக்க வரும். இந்த சர்க்கஸ் கம்பெனி மானேஜராக நடிகர் எல்.நாராயண ராவ் நடித்து
இருக்கிறார். கணக்கப் பிள்ளையாக டி.ஏ.மதுரம். அந்த வசனம் இங்கே
ராவ் : (அதிகார தோரணையில்)
எழுதினியா? இன்னுமா முடியல… ஆண்களுக்கு
எளநீர் வாங்கிக் கொடுத்தது முந்நூத்து அம்பது ரூபாய்னு எழுதிக்க
எத்தனை நாழி எழுதற. உன்னையும் ஒரு
கணக்குப்பிள்ளைன்னு நான் வச்சிக்கிட்டு இருக்கிறேன்.
ம்.. சீக்கிரம் எழுது
இன்னும் ஐநூறு ஒதைக்குதே… ம்… யானைக்கு அல்வா வாங்கி போட்டது ஒரு எறநூறு
… என்ன மொறக்கிற … நான் சொல்றபடி எழுதுறியா இல்லையா … இல்லைனா … உன்னை வேலையிலிருந்து
தொலச்சிபிடுவேன். ஹ .. ஹ
..
யானைக்கு அல்வா வாங்கி போட்டது எறநூறு
எழுதியாச்சா … புலிக்கு புல்லு வாங்கி கொடுத்தது நூத்து அம்பது ….. இன்னும் நூத்து
அம்பதுக்கு கணக்கு சரியா வரலியே
(பெண் கணக்குப்பிள்ளை டி.ஏ.மதுரம்
சிரிக்கிறார் )
மதுரம்:
மொத்தக் கணக்கையும் எழுதட்டுமா ..
ஆளப்பாரு ஆளை – ஆனைக்கு அல்வாவாம் புலிக்கு புல்லாம் … ஒன்ன தலைக்கு மூளை வாங்கிக்
வச்சதுனு எழுதறேன்
ராவ்:
எழுதேன் … எனக்கு எப்படியாவது … கணக்கு
சரியாகனும் …
மதுரம்:
ம் .. அப்படில்லாம் எழுத முடியாது
ராவ்
கோவிச்சுக்காதே … மீனாட்சி நிஜமா ஐநூறு
செலவழிஞ்சிருக்கு .. கணக்கு ஞாபக மறதியாச்சு
இந்த நகைச்சுவை காட்சியைக் கண்டு கேட்டு ரசித்திட கீழே உள்ள யூடியூப்
திரையை அல்லது இணையதளத்தினை சொடுக்கிப் ( CLICK ) பார்க்கவும்.
நன்றி: https://www.youtube.com/watch?v=eljZv4L9dGA
நன்றி: https://www.youtube.com/watch?v=eljZv4L9dGA




