பேப்பர் போடும் பையன் “ சார் இந்து பொங்கல் மலர் வேண்டுமா?” என்று கேட்டார். ” ஆமாம் வேண்டும்” என்றேன். தாமதமாகச்
சொன்னதால் இந்துவின் முதல் தீபாவளி மலர் (2013) கிடைக்காமல் போனது. எனவே அவரே
கேட்டுவிட்டார்.அந்த பையன் சொன்னபடியே இன்று காலை (10.01.2014) தி இந்துவின்
பொங்கல் மலரைக் கொடுத்து விட்டார். எப்போதும் போல புதிதாக வாங்கிய புத்தகத்தை
புரட்டினேன்.
எனக்குத் தெரிந்து மற்ற
பத்திரிககைகள் பொங்கல் மலரை சிறப்பாக வெளியிட்டது கிடையாது. பெரும்பாலும் அவை
தீபாவளி மலர் வெளியிடுவதில்தான் அக்கறை காட்டும். மேலும் தீபாவளிக்கும்
பொங்கலுக்கும் இடையில் இடைவெளி, கொஞ்ச நாட்கள் என்பதும் ஒரு காரணம்.
வடிவமைப்பு:
இந்த ஆண்டு தி இந்துவின் முதல் பொங்கல் மலரை சிறப்பாகவே வெளியிட்டு
இருக்கிறார் இந்து என் ராம் அவர்கள். உலகத் தமிழர்களுக்கு வணக்கம் கூறி ஆசிரியர்
கே அசோகன் அவர்கள் வரவேற்கிறார். ஆசிரியர் பக்கத்தில். மலரை வெளியிடுபவர்,
ஆசிரியர், பொறுப்பாசிரியர், ஆசிரியர் குழு, வடிவமைப்பாளர்கள் பெயர்கள். பொங்கல்
மலரின் உள்ளே என்ன இருக்கிறது என்பதனை பொருளடக்கமாக சொல்லியுள்ளனர். இதன் மூலம்
பத்திரிகை உலகில் தாங்கள் பழமையானவர்கள் என்பதனை உணர்த்தி இருக்கின்றனர்.
படங்களும், புகைப்படங்களும்:

பத்திரிகைகளில் மலர் என்றாலே, புகைப்படங்கள்தான் பிரதானமாக இருக்கும். பழைய
தீபாவளி மலர்களில் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் கண்ணைக் கவரும். தெளிவான படங்களுடன்
கூடிய செய்திகள் வெளியிடுதல் இந்துவின் சிறப்பம்சங்களில் ஒன்று. இந்த ஆண்டு வந்த
இந்துவின் பொங்கல் மலரில் இவற்றைக் காணலாம். காமிராவின் கண் தடங்கள் தலைப்பில்
வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் சென்னையில் ஒரு மார்கழிக் காலை விடியல் படங்கள் நல்ல
உதாரணம்.
கட்டுரைகள்:
காட்டுயிர்த் தடங்களில் ப ஜெகநாதன்
அவர்கள் அழகிய புகைப்படங்களுடன் தகவல்கள் தந்துள்ளார். சமூகம் பண்பாடு என்ற
பகுதியில் ஜல்லிக்கட்டு, சேவக்கட்டும் பொங்கல் பற்றிய சமூகச் செய்திகளை அழகிய
வண்ணப் படங்களுடன் காணலாம். தமிழ் சிறுகதை இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான
கு.ப.ராஜகோபாலனின் ” வீரம்மாளின் காளை” என்ற சிறுகதையை பெருமாள் முருகன் என்பவர் விமர்சனம்
செய்துள்ளார். இதற்கான அழகிய படங்களைத் தந்தவர் ஏ.எம்.சுதாகர்.
வாழும்போது வைக்காதேடா சேத்து
ஏதும் அனுபவிக்காம போய்விடுவேடா செத்து
என்று பாடுகிறார் மரணகானா விஜீ.
சாவு வீடுகளில் பாடப்படும் கானா பாடல்கள்
பற்றி நல்ல அலசல் செய்து இருக்கிறார் த. நீதிராஜன்.
சேவக்கட்டு எனப்படும் சண்டைக்
கோழிகள் பற்றி ஒரு கட்டுரை (ஏ வி பி தாஸ்)
ஆர்.சி.ஜெயந்தன், ஜல்லிக்கட்டு காளைகள்
பற்றியும், இப்போது மாறி வரும் சூழ்நிலையைப் பற்றியும் ஆதங்கத்தோடு
வெளிப்படுத்துகிறார்.
ஊர்மணம் பகுதியில் வடுவூரின் கபடி விளையாட்டு, நெல்லை மற்றும் கொங்கு
பகுதிகளின் பொங்கல், வடசென்னை வாழ்க்கை என்று பல சுவையான செய்திகள். மலைமக்களின்
வாழ்க்கைக்கு உற்ற நண்பர்களாக இருக்கும் அகமலைக் குதிரைகள் பற்றி சுவையான
செய்திகள் தருகிறார் ஜெயந்தன் .(படங்கள் பயஸ்)
இலக்கியப் பக்கங்கள
இலக்கியம் என்ற வரிசையில் கவிதைகள், சிறுகதைகள் வருகின்றன. சிறுகதைகளை ஒருநாள்
உட்கார்ந்து ரசித்துப் படிக்க வேண்டும். கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள். இறைமணம்
என்ற பெயரில் பக்திமணம்.
” கண்ணாடிகள் “ என்ற தலைப்பினில் நா.முத்துகுமாரின் ஒருபக்கக்
கவிதை. அதிலிருந்து சில வரிகள்
”லிப்டில், சலூனில்,
பைக்கில்,நகைக்கடையில் என
எங்கே கண்ணாடி தெரிந்தாலும்
தன்னிச்சையாகத் திரும்பி
தன்னைத்தானே பார்த்துக்கொள்ளாதவர்கள்
யார் இருக்கிறார்கள் உலகில்?
“எத்தனைமுறை பார்த்தாலும்
நீ காட்டும் பிம்பம் மட்டும்
ஏன் சலிப்பதேயில்லை?” என்று
கண்ணாடியிடம் கேட்டேன் “
என்று கேட்கும் கவிஞருக்கு கண்ணாடி சொன்ன பதிலைத் தெரிந்து கொள்ள தி இந்துவின்
பொங்கல் மலரில் சென்று பார்க்கவும்.
” என்மனதில் ஓடும் ஆறு” என்ற தலைப்பினில் பிரபஞ்சன்
அவர்கள் காவிரியைப் பற்றி சொல்லுகிறார். பாலாறு படும் பாட்டினை வேதனையோடு
எழுதுகிறார் அழகிய பெரியவன். இன்னும் வைகை, தாமிரபரணி ஆறுகளைப் பற்றியும் காணலாம்.
சினிமா! சினிமா!
எல்லாவற்றையும் பேசிவிட்டு சினிமாவை அதிலும் தமிழ் சினிமாவைப் பற்றி சோல்லாமல்
இருக்கலாமா? எனவே தி இந்துவின் பொங்கல் மலரில் அதுபற்றியும் சுவையான தகவல்கள்.
ஸ்டுடியோக்களில் செட்டிங்க்ஸில் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா மண்வாசனை தேடி
கிராமங்களுக்கு வந்த கதையினைச் சொல்லுகிறார் சுபகுணராஜன். ராஜ் கிரணின்
கண்டுபிடிப்பு என்றாலும். வடிவேலுவின் முதல் வெற்றி பாரதிராஜாவிடமிருந்தே
துவங்குவதாகச் சொல்கிறார் வெ.சந்திரமோகன்.
பொங்கல் படையல்:
முத்தாய்ப்பாக பொங்கல் படையல் என்ற பகுதியிலும் சுவையாகவே சுடச்சுட
படைத்துள்ளனர். நமது அனைவருக்கும் தெரிந்த “ஸ்ரீ முனியாண்டி விலாஸ்” பற்றி சுவையாகப்
படைத்துள்ளார் ரெங்கையா முருகன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த தனுஷ்கோடி அழிந்த கதையை
மறக்க முடியுமா? நினவூட்டுகிறார் – ராமேஸ்வரம் ராக்ஃபி
என்பவர். வேடந்தாங்கல் பற்றி அழகிய படங்களுடன் ஒரு மீள் பயணக் கட்டுரை. பயணம்
செய்பவர்கள் ஆதி வள்ளியப்பன் மற்றும் போட்டோ கிராபர் கணேஷ் முத்து.
முடிவுரை:
நல்ல சுவையான சூடான பொங்கல் மலரைப் படைத்துள்ளனர் தி இந்து
குழுமத்தினர்.அவர்களுக்கு நன்றி!
படங்கள் நன்றி: தி
இந்து.
முக்கிய
குறிப்பு: இங்கு மேலே உள்ள அனைத்து படங்களும் தி இந்து – பொங்கல் மலர் – 2014 இலிருந்து கேனான் டிஜிட்டல் கேமரா (CANON
POWERSHOT A800) வினால்
எடுக்கப்பட்டவை.
அனைவருக்கும் எனது உளங்கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!