Showing posts with label மாகாளிக்குடி. Show all posts
Showing posts with label மாகாளிக்குடி. Show all posts

Thursday, 22 August 2013

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி



விக்கிரமாதித்தன் கதைகள் படிப்பது என்றால் நேரம் போவதே தெரியாது. பள்ளிக்கூட விடுமுறையில் எங்கள் அம்மாவின் கிராமம் சென்று இருந்தபோது அங்கு கிடைத்த பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் படித்தேன். அன்றிலிருந்து விக்கிரமாதித்தன் என்றால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பின்னாளில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மாகாளிக்குடியில் உள்ள காளி கோயில் சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்று ஒருகதை சொன்னார்கள். அன்றிலிருந்து அங்கு போய்வர எண்ணி, இப்போதுதான் முடிந்தது.

கடந்த திங்கட் கிழமை (19.08.2013) சமயபுரத்தில் நண்பர்கள் நடத்திய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானம் முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அருகில் மாகாளிக்குடி என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சென்று வந்தேன். சமயபுரத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். எனவே அங்கிருந்து நடந்தே சென்று வந்தேன்.


மாகாளிக்குடியும் விக்கிரமாதித்தனும்.

உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள்.. ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு, முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்கஎன்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி தனது புத்திக் கூர்மையினால் காளியின் அருளால், தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வாங்கி விடுகிறான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்து விடுகின்றன.. இதனால் இருவரும் கவலை அடைகின்றனர். தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி  ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது.. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி காடாள்வதுஎன்ற யோசனை சொல்கிறான். இதனால் இரண்டாயிரம் வயது விக்கிரமாதித்தனுக்கும் வந்து விடும்.

இந்த “காடாறு மாதம்; நாடாறு மாதம் “ முறைப்படி வருகையில் ஒருதடவை இந்த மாகாளிக்குடி என்ற இடத்திற்கு விக்கிரமாதித்தன் வருகிறான். கூடவே அவனுடைய நண்பனும் மந்திரியுமான பட்டி மற்றும் வேதாளம்.கூடவே தான் எப்போதும் வணங்கும் உஜ்ஜயினி காளியின் விக்கிரகம். இங்கு தங்கி காடு ஆறுமாதம் முடிந்து நாடு திரும்பும் போது விக்கிரகத்தை எடுக்கும்போது எடுக்க முடியவில்லை. விக்கிரமாதித்தன் கனவில் வந்த காளி, தான் இந்த ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்ல, அவனும் அப்படியே ஒரு கோயில் ஒன்றைக் கட்டி விட்டுச் செல்கிறான்.

இதுதான் இந்த கோயிலுக்காகச் சொல்லப்படும் கதை. நமது நாட்டில் ராமாயணம், மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றில் வரும் கதை மாந்தர்களை பல கோயில்களின் தல புராணத்தோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது.  இந்த உஜ்ஜயினி மாகாளியை இங்குள்ளவர்கள், உச்சி மாகாளி என்றும் உச்சினி மாகாளி என்றும் அழைக்கின்றனர்.


மாகாளிக்குடி கோயில் படங்கள்:

கோயிலுக்குள் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இங்கே
தருகின்றேன்.

படம் (மேலே) சம்யபுரம் கோயில் அருகே உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் தோரண வாயில்.





படம் (மேலே) காளியம்மன் கோயில் வாயில் அருகே உள்ள அறிவிப்புப் பலகை


.படம் (இடது) காளியம்மன் கோயில் நுழைவு வாயில்          




படம் (மேலே)  நுழைவு வாயில் மேலே உள்ள காளியின் உருவச் சிலை


படம் (மேலே)  நுழைவு வாயில் இடப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.
 
படம் (மேலே)  நுழைவு வாயில் வலப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.




படம் (மேலே)  நுழைவு வாயில் உட்பக்கம்


படம் (இடது)  மந்திரி பட்டி (ஸ்ரீ களுவன்) மற்றும் ஸ்ரீ வேதாளம் சன்னதி


படம் (மேலே)  ஸ்ரீ மதுரை வீரன் சன்னதி

படம் (மேலே) கோயிலின் ஒரு மூலை


படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி  சன்னதி


படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி  சன்னதி மேல் உள்ள சிலை


படம் (மேலே) கோயிலின் இன்னொரு  மூலை

நான் மாகாளிக்குடியில் உள்ள காளி சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்பதால், காளி கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று என்ணினேன். ஆனால் அதற்கு மாறாக சிறிய கோயிலாகத்தான் உள்ளது.