Showing posts with label மதுவிலக்கு. Show all posts
Showing posts with label மதுவிலக்கு. Show all posts

Tuesday, 11 August 2015

தமிழர்களும் மதுவும்



தெனாலிராமன் பூனை பாலை வெறுத்த கதையாக, தமிழ்நாட்டில் இப்போது ஆளாளுக்கு மதுவை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சத்தத்தில் யார் முதன் முதல் கோஷம் போட்டது என்பது மறந்தே போய் விட்டது.

இலக்கியங்களில்:

தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் மதுவை ஒரு மகிழ்ச்சிக்காகவே எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. சங்ககால தமிழிலக்கியங்களில் தமிழர்கள் மது அருந்தியதை ஒரு சாதாரண நிகழ்வாகவே சொல்லி இருப்பதைக் காணலாம். ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியங்களான இலியதம் (ILIAD) ஒதிஸியம், (ODYSSEY)  இரண்டிலும் மக்கள் மதுவை உண்டு களித்ததாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. (நான் இவைகளின் தமிழாக்க நூல்களைப் படித்து இருக்கிறேன்).

மதுவைப் பற்றி  சொல்லும்போது மது, நறவு, கள், பெரியகள், சிறியகள், தேறல், சொல்விளம்பி என்றெல்லாம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்போது மதுவை உணவாக , உணவே மருந்தாக உண்டார்கள். ( இப்போது போதைக்காக, உடல் திமிருக்காக சாராயம் எனப்படும் மதுவை நாடுகிறார்கள்)

தனக்கு அதியமான் கள் கொடுத்ததையும் , அவனோடு அமர்ந்து கள் உண்டதையும் அவ்வையார்,

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் – மன்னே!
பெரிய கள் பெறினே
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!  ( புறநானூறு 235)

என்று சொல்லுகிறார். (இங்கு சிறிய கள், பெரிய கள் என்பது அளவைக் குறிக்கும்)

வேள் பாரியின் புகழ்பாட வந்த கபிலர்,

மட்டுவாய் திறப்பவும் மையிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்  (புறநானூறு 113)

என்ற பாடல் வரிகளில் மது இருந்த ஜாடி (மட்டுவாய்) பற்றியும் கறிசோறு (அந்தக் கால பிரியாணி போலும்) பற்றியும் சொல்லுகிறார்.
அடுத்த பாடலில், அதே கபிலர், பாரி வந்தவர்களுக்கு மதுவை வழங்கியதையும் குறிப்பிடுகிறார்.

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.  – (புறநானூறு 114)

காவிரிபூம் பட்டினத்தில், கடற்கரையில் கள்ளுக்கடைகள் பிற கடைகளைப் போன்றே அடையாளக் கொடிகளோடு இருந்தமையை பட்டினப்பாலை சொல்லும்.

மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு தொடைக் கொடியோடு    - ( பட்டினப்பாலை 176-180)

தமிழர்கள் போர் நெறியைப் பற்றி ஐயனாரிதனார் எழுதிய “புறப்பொருள் வெண்பாமாலை” என்ற நூலில் தெரிந்து கொள்ளலாம். இந்த நூலில், வீரர்கள் மது அருந்தி விட்டு ஆடிப்பாடியதை ’உண்டாட்டு” என்று சொல்கிறது.

கவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்கள், பாரசீகக் கவிஞன் உமர்க்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் ஒன்று இது.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசுந்தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு,
தெரிந்து பாடநீயுண்டு
வைய்யம் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ

நமது கவிஞர் கண்ணதாசன், தான் வாழும் காலத்திலேயே எழுதிய (அப்போது காங்கிரஸில் இருந்தார்) வரிகள் இவை.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
                   - ( கவிஞர் கண்ணதாசன்; படம்: ரத்தத்திலகம்)

மேலே சொன்ன மேற்கோள்களிலிருந்து , தமிழர்கள் வாழ்வில் மதுவும் ஒரு முக்கிய அம்சமாக இருந்ததை தெரிந்து கொள்ளலாம். ஆனாலும் இந்நாள் போன்று அந்நாளில் குடிகாரர்கள் வீதிகளில் செய்த அலம்பல்கள் பற்றி ஒன்றும் சொல்லக் காணவில்லை.

புழல் சிறையில் திருவள்ளுவர்:

   துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
   நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.    திருக்குறள் (926)

உண்மையில் மதுவை எதிர்த்து முதன் முதல் குரல் கொடுத்தவர் நமது திருவள்ளுவர்தான். ”கள்ளுண்ணாமை” என்று ஒரு அதிகாரமே திருக்குறளில் இருக்கிறது. இன்றைக்கு அவர் இருந்திருந்தால் மதுவை எதிர்த்த குற்றத்திற்காக புழல் சிறையில் பிடித்து போட்டு இருப்பார்கள்.

திருவள்ளுவரைப்  பின்னுக்கு தள்ளி விட்டு எல்லோரும் நான்தான், நான்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு. உண்மையில் பலபேர் தேர்தலுக்காக டாஸ்மாக்கை திடீரென்று மூடுவதை விரும்பவில்லை என்பதையும், அவைகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு மூலையில் இருந்து விட்டுப் போகட்டும் என்பதையும், ஊருக்குள் மட்டும் தெருவுக்கு தெரு டீக்கடைகள் போன்று வேண்டாம் என்பதையும் பலர் சொல்ல கேட்க முடிகிறது. காரணம் இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான்.

விழிப்புணர்ச்சி தேவை:

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் (எழுபதுகளில்) ”சிலோன் பாப் இசைப் பாடல்கள்” மேடைதோறும் பாடப்பட்டது. மறக்கமுடியாத அந்தநாள் இலங்கை வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பாயின. அவற்றுள் பிரபலமான ஒன்று நித்திகனகரத்தினம் என்ற இலங்கை பாப் இசைக் கலைஞரின் “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற பாடல். மதுவைக் குடித்தவனும் அவனுக்கு அறிவுரை சொல்பவரும் பாடுவது போன்ற பாடல் இது. பாடலை கேட்டு மகிழ https://www.youtube.com/watch?v=f9gjso8qodQ என்ற முகவரியை ‘க்ளிக்’ செய்யுங்கள்.

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்
கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்
அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்
விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே
விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா
பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா
பற்றி எரியுதெந்தன் வயிறடா
பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா
கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா
வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்
உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாற்றிடும்
கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்
கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானென்றால்
ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

(நன்றி: சந்திரவதனா http://padalkal.blogspot.in/2005/03/blog-post.html )

எனவே மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப் படுத்துவோம். அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நாமே நம்மால் முடிந்த வரை மற்றவர்களோடு இன்றே உரையாடுவோம். வரும் தலைமுறையைக் காப்போம்.


Saturday, 1 August 2015

டாஸ்மாக்கை மூடிவிட்டால் போதுமா?



கட்டுரையைத் தொடங்குவதற்கு முன்பே சொல்லி விடுகிறேன். எனக்கு பீடி,சிகரெட் புகைக்கும் பழக்கமோ; வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் பழக்கமோ; மது அருந்தும் பழக்கமோ கிடையாது.

ஆட்சியைப் பிடிக்க:

 இந்த அரசியல்வாதிகள். ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள்.  விலைவாசி உயர்வு, படி அரிசித் திட்டம், ஊழல் ஒழிப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மது விலக்கு,  இன்ன பிற என்று சொல்லலாம். உண்மையில் பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினைகளை முன்னிட்டு ஓட்டு போடுவதில்லை. இன்று தி.மு.க. நாளை அ.தி.மு.க என்றுதான் அரசியல் போய்க் கொண்டு இருக்கிறது. அதிலும் “யார்தான் ஊழல் செய்யவில்லை;  ஊழல் செய்தால் தப்பே இல்லை” என்று வியாக்கியானம் செய்யும் காலமாக இன்று மாறி இருக்கிறது.

இப்போது டாஸ்மாக் எதிர்ப்பு. டாஸ்மாக்கை மூடிவிட்டால் உடனே தமிழ்நாட்டில் இதுவரை அங்கே குடித்துக் கொண்டு இருந்த குடிகாரர்கள் எல்லோரும் குடிப்பதை விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த குடிகாரர்கள் அப்படியே கள்ளச் சாராயத்தை தேடுவார்கள். அல்லது சாராயக் கடை உள்ள பாண்டிச்சேரி போன்ற பக்கத்து மாநிலத்திற்கு போய் வருவார்கள் கட்டாய ஹெல்மெட் போலீசார் போல் மதுவிலக்கு போலீசாரும் அதிகமாக உழைப்பார்கள். கள்ளச்சாராயம், கள்ளச்சாராய சாவுகள், கள்ளச்சாராய புள்ளிகள் என்று செய்திகளை அடிக்கடி பத்திரிகையில் காணலாம். எனவே ஒருநாளில் எல்லோரையும் திருத்திவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய வேண்டும்.

பழைய காங்கிரஸ் ஆட்சியில்:

எனது சின்ன வயதில், (அறுபதுகளில்) அப்போது காங்கிரஸ் ஆட்சியில் மதுவிலக்கு தீவிரமாக இருந்தது; சிவப்பு தொப்பி அணிந்த முழங்காலுக்கு மேலே முட்டி தெரிய காக்கி டவுசர், சட்டை போட்ட (உயரமான) போலீசார் வருவார்கள். ஆசாமி குடித்திருக்கிறானா இல்லையா இல்லை என்பதை தெரிந்து கொள்ள வாயை ஊதச் சொல்லுவார்கள். சாராய வாடை வீசினால் உடனே அவர்களை ‘லபக்கி’ கருப்புநிற போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்று தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். எனவே போலீஸ்காரர்கள் என்றாலே குடிகாரர்களுக்கு பயம்தான். டவுனில் மட்டும் இல்லாது கிராமத்திலும் இந்த ரெய்டுகள் நடக்கும். உண்மையில் மதுவிலக்கு இருந்தது.

எனது அனுபவம்:


பல குடிகாரர்கள் சாராயத்தை (அப்போது கள்ளச் சாராயம்தான் ) குடித்துவிட்டு ரோட்டில் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டு அருவெறுப்பு அடைந்தவன் குடித்துவிட்டு தனது குடும்பத்தை நாசமாக்கியவர்களை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். மேலும் நான் பார்த்த சினிமாப் படங்களில் எனது ஹீரோ எம்ஜிஆர்தான். அவருடைய ரசிகன். எம்ஜிஆர் அவர்கள், தான் நடித்த படங்களில் மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததோடு அவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் அப்படியே கடைபிடித்தார். இதனால் இயல்பாகவே மது என்றால் எனக்கு வெறுப்பு. குடிகாரனாக இல்லை. (அவரே ஆட்சிக்கு வந்த பிறகு, பின்னாளில் இந்த சாராயக்கடைகளைத் திறந்தபோது மனவேதனை அடைந்தேன்)

 தி.மு.க ஆட்சியின் போது கருணாநிதி கள்ளுக்கடைகளைத் திறந்த நேரம். எனது நண்பன் அவனுடைய அப்பாவிற்காக கள்ளு வாங்க சைக்கிளில் செல்லும்போது என்னையும் அழைப்பான். நானும் ஒரு ஜாலிக்காக அவன் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வேன். அப்போதெல்லாம் வீதியில், தி.மு.க கூட்டங்களில் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை ஒலி பரப்புவார்கள். நாங்கள் இருவரும் இந்த பாடலை மாற்றி “கள்ளுக்கடை திறந்த கருணாநிதி  வாழ்கவே” என்று சிரித்துக் கொண்டு பாடியபடியே செல்வோம். ஆனாலும் நாங்கள் ஒருநாள் கூட கள்ளை சாப்பிட்டது கிடையாது.  நான் வேலைக்குச் சேர்ந்தவுடன் ( தி.மு.க அல்லது அ.தி.மு.க என்று மாறி மாறி வந்த ஆட்சிகளில் மதுவிலக்கே கிடையாது) இந்த சாராயக்கடை பக்கம் போனதே கிடையாது. பணிபுரிந்த இடத்தில் நடக்கும் , இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வதே கிடையாது. ஒரு நண்பர் “ நீ ரிடையர்டு ஆவதற்குள், அரை டம்ளர் பீராவது நீ குடிக்கும்படி செய்து விடுவேன்” என்றார். அவர் ஆசை நிராசை ஆனதுதான் மிச்சம். இன்றைக்கும் என்னைப் போல, குடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.                                    

மதுவிலக்கு பிரச்சாரம்:

எனவே இந்த மதுவை ஒழிக்க சிறந்தவழி தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் மற்றும் ஊர் தோறும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு  பயிற்சி முகாம் செய்தல் மட்டுமே ஆகும். அப்புறம் குடிப்பவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.  மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது மற்றவர்களிடையேயும் 
இந்த மதுவிலக்கு பிரச்சாரத்தை தொடர்வார்கள். அப்புறம் கடையே இருந்தாலும் குடிக்க ஆள் இருக்காது.

”தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?” என்ற எம்ஜிஆரின் சினிமாப்பாடலை கண்டு கேட்டு சிந்திக்க கீழே உள்ள இணையதள முகவரியைச்( CLICK ) சொடுக்கவும்

                                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)