Monday, 20 November 2017

வலைப்பதிவர் சந்திப்பு – சில ஆலோசனைகள்அண்மையில் நமது ஆசிரியர் N.முத்துநிலவன் அய்யா அவர்கள் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பது குறித்து ‘புத்தகத் திருவிழா - வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைப்பு’ http://valarumkavithai.blogspot.com/2017/11/blog-post_17.html   என்ற  தனது பதிவினில் சொல்லி இருந்தார்கள்; உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்தான். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் நானும் இருக்கிறேன்.

சந்திப்புகளும், மாநாடுகளும்

பொதுவாகவே தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு என்பது ஆங்காங்கே, எண்ணிக்கையில் அதிகம் இல்லாத பதிவர்கள் கூட்டமாக, நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதுசமயம் பதிவர்கள் தமக்குள் ஒரு கலந்துரையாடல் மூலம் பதிவர் சந்திப்பு என்பதன் நோக்கம் நிறைவேறுகிறது.

ஆனால் எப்போதோ நடக்கும், பெரிதான வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில், வலைப்பதிவர் கலந்துரையாடல் என்பதே இல்லாமல் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதிலும் முக்கியமான பெரியமனிதர் அந்த விழாவில் கலந்து கொண்டால், அவரை வரவேற்பதிலும், அவரைப் புகழ்வதிலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் என்று மேடை நிகழ்வுகள் நகர்ந்து விடுகின்றன.
  
எனது முந்தைய பதிவு

மேலே சொன்ன ஆதங்கத்தை வெளிப்படுத்தி, ( வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும் http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_60.html ) என்ற எனது பதிவினில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டேன்.

// பொதுவாகவே ஆங்காங்கே நடைபெறும் வலைப்பதிவர்களின் சிறிய சந்திப்புகள் இந்த ஆதங்கம் இல்லாமல் செய்து விடுகின்றன. இதில் உள்ள மனநிறைவு, கலந்துரையாடல் (Discussion) குறித்து அவரவர் பதிவுகளில் எதிரொலிக்கக் காண்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பல உறவினர்களைச் சந்திக்கிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவர்களோடு நீண்ட நேரம் அளவளாவுகிறோம். யாரும் கட்டுப் படுத்துவதில்லை. ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால்  யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. இதுவே இந்த ஆதங்கத்திற்கு காரணம். இதை நீக்க ஒரே வழி, இனி வரும் நிகழ்ச்சிகளில், ”வலைப்பதிவர்கள் சந்திப்புஎன்ற தலைப்பிற்கேற்ப கலந்துரையாடல் மட்டுமே நிகழ்த்துவது. அல்லது மேனாட்டுப் பதிவர்கள் நடத்துவது போன்று இரண்டு நாள் நிகழ்ச்சிகள்; அல்லது காலையில் கலந்துரையாடல், உணவு இடைவேளைக்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம். //
 
இந்த பதிவினுக்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்கள் பலரது கருத்தினில் வலைப்பதிவர்கள் கலந்துரையாடலுக்கு ஆதரவு இருந்ததையும், இரண்டுநாள் கூட்டம் என்பதற்கு வரவேற்பு இல்லாததையும்  அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் தொலைவில் இருந்து வருபவர்கள் மதியம் ஊர் திரும்பும் அவசரத்தில் இருப்பார்கள். எனவே அவர்கள் வசதிக்காக மதிய உணவுக்கு முன்னரேயே வலைப்பதிவர்கள் அறிமுகம், மற்றும் கலந்துரையாடல் இருந்தால் நலம். 

நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் சொல்வதற்கு இன்னும் நிறையவே இருக்கின்றன. பார்ப்போம்.
                 
                                      ( PICTURE COURTESY: GOOGLE IMAGES)

Thursday, 9 November 2017

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றிய பாடல்.ஆகஸ்ட் 15,1947 – இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், பிரிட்டிஷ் இந்தியாவில், நேற்று வரை இந்தியன், இந்திய சுதந்திரம் என்பதே பேச்சு எனது மூச்சு என்றேல்லாம் உணர்வுப் பூர்வமாக இருந்தவர்கள், இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டதும், நான் இந்து நீ முஸ்லிம் என்றும், நான் முஸ்லிம் நீ இந்து என்றும் மாறியே போனார்கள். ஒரு தாய் மக்களாக இருந்தவர்கள் ஒரு பொழுதிற்குள் இந்தியன் என்றும் பாகிஸ்தானி என்றும் பிரிந்து போனார்கள். நீ இந்தியாவிற்கு போய் விடு; நீ பாகிஸ்தானுக்குப் போய் விடு என்று பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடிழந்து, நாடிழந்து அகதிகள் ஆனார்கள்.

தேசப்பிரிவினைக்குப் பின்

அன்று நாடு இருந்த இருப்பில் இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி மகாத்மா காந்தி ‘நவகாளி யாத்திரை’ சென்றார். இன்றும் மத வெறியர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று நம்மிடையே மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் இல்லை; உண்மையான தேசபக்தர்களும் இல்லை. மக்களிடம் ஒற்றுமையும் இல்லை.

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவர் குல்தீப் நய்யார்.(Kuldip Nayar) ஒன்றுபட்ட பிரிட்டிஷ் இந்தியாவில், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் (Sialkot, Pakistan) பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் டெல்லியில் குடியேறியவர். அவர் தன்னுடைய ‘ஸ்கூப்’ (Scoop) என்ற நூலில் ‘தேசப் பிரிவினையின் விளைவுகள்’ என்ற தலைப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

// நாடு பிரிக்கப்பட்டதற்குப் பின் பெரும் அளவில் மக்கள் இடம் பெயர்வதைப் பார்த்த முகமது அலி ஜின்னாவின் கடற்படை அதிகாரி அதிர்ந்து போனார். இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

யாரும் இதை விரும்பவும் இல்லை. ஆனால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதும் இந்துக்கள் இந்தியாவை நோக்கி வருவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த அதிகாரியின் உறவினர் கூடஎங்கோ மாட்டிக் கொண்டிருந்ததால், அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். ஏன் இந்த இடப்பெயர்ச்சி?

இதைத் தவிர்க்க முடியாதா? எவ்வளவு கொலைகள்? எத்தனை லட்சம் பேருக்கு இதனால் துயரம்? யாரைக் குறை சொல்வது? // (இந்நூல் பக்கம்.49)
… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … …… … … ……
தவறு யார் மீது இருந்தாலும் சரி, எல்லையின் இரு புறங்களிலும் அந்தச் சில வாரங்களில் நடந்த பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பல தலைமுறைகளுக்குச் சீரழித்தன. எல்லாக் கட்டங்களிலும் இந்த நாடுகள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டன. ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டின் மீது இருந்த அச்சமும் அவநம்பிக்கையும் சாதாரண விஷயங்களையும் பூதாகரமாக்கின // இந்நூல் பக்கம்.51)

( ஸ்கூப்’ (Scoop), ஆசிரியர்: குல்தீப் நய்யார் ( தமிழாக்கம்: யது நந்தன், வெளியீடு: மதுரை பிரஸ், சென்னை - இந்தியாவின் சமககால வரலாற்றைப் படிக்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது)

நாஸ்திகன் - படப்பாடல்

I.S.ஜோஹர்(I.S.Johar) எழுதித் தயாரித்த, நாஸ்திக் (Nastik) என்ற திரைப்படம் 1954 இல் இந்தியில் வெளிவந்துள்ளது. இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘நாஸ்திகன்’ என்ற பெயரில் 1955 இல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மக்கள் இடப்பெயர்ச்சி பற்றிய உருக்கமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த பாடலில் உள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக நடை பயணமாகவும், மாட்டு வண்டிகளிலும், ரெயிலிலும் இடம் பெயரும் காட்சிகள் மனதை நொறுக்கும்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘நாஸ்திகன்’ படத்திற்கு, இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம். பாடியவர்: திருச்சி லோகநாதன். இசை: C.ராமச்சந்திரா. இந்த பாடலை யூடியூப்பில் கேட்டு மனம் நொந்து போயிருக்கிறேன்.

பாடலைக் கண்டு கேட்டிட கீழே உள்ள திரையை சொடுக்கவும். 
நன்றி: Youtube ( cofiboardrajamohd & Kandasamy T S )

மா நிலம் மேல் சில மானிடரால்,
என்ன மாறுதல் பாரைய்யா
மா நிலம் மேல் சில மானிடரால்,
என்ன மாறுதல் பாரைய்யா
மனிதன் மாறியதேன் ஐயா,  
மனிதன் மாறியதேன் ஐயா

வானத்தின் நிலவில் ஆதவன் திசையில்
மாறுதல் ஏதைய்யா
மனிதன் மாறியதேன் ஐயா ,
மனிதன் மாறியதேன் ஐயா .

மண்ணில் பலவித பிரிவினையாலே ,
மனிதன் மிருகமாய் மாறுவதினாலே
என்னே கொடுமை எங்கும் இந்நாளே
ஈனர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அன்பையும் பண்பையும்
தன்னலத்தால் பலி ஆக்கிடும் பேதையாய்
மனிதன் மாறியதேன் ஐயா ,
மனிதன் மாறியதேன் ஐயா .     …. (மா நிலம் மேல் சில மானிடரால்) 

ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ
பூசனை செய்வது  நாசத்தை அன்றோ
தேசம் சுடுகாடு ஆவது நன்றோ
தெய்வத்தின் பேரால் கொல்வதும் உண்டோ
நேசம் மறந்து ஆசை மிகுந்து  மோசடி புரிபவனாய்
மனிதன் மாறியதேன் ஐயா ,
மனிதன் மாறியதேன் ஐயா .  …. …. (மா நிலம் மேல் சில மானிடரால்) 

அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்
அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
தணலாய் இங்கே வீடுகள் விழுமா
தாயின் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும்
ஓய்ந்திடச் செய்பவனாய்
மனிதன் மாறியதேன் ஐயா
மனிதன் மாறியதேன் ஐயா ….. …. (மா நிலம் மேல் சில மானிடரால்) 

Saturday, 4 November 2017

திருச்சி BHEL மகாபோதி சங்கத்தில் – முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் சிறப்புரைஎனக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், உதவி பதிவாளர் – ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, முனைவர் திரு B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களை ஒரு வலைப்பதிவர் என்ற முறையில்தான் முதன்முதல் தெரியும். தமிழ் வலையுலகில் அவர் எழுதி வரும் http://drbjambulingam.blogspot.com முனைவர் ஜம்புலிங்கம் மற்றும் http://ponnibuddha.blogspot.com சோழநாட்டில் பௌத்தம் (Buddhism in Chola Country) ஆகிய இரண்டு வலைப்பதிவுகளில், பௌத்தம் பற்றிய கட்டுரைகளை ஆர்வமுடன் படிப்பதில் அவருடனான தொடர்பு ஏற்பட்டது. முதன்முதல் அவரது பௌத்தம் சம்பந்தமான கட்டுரைகளைப் படித்தபோது அவர் புத்தமதத்தைச் சேர்ந்தவர் (Buddhist) என்றே நினைத்திருந்தேன். 2014இல் புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப் பயிற்சி பட்டறையில்தான் அவர்களை முதன்முதல் நேரில் சந்தித்தேன். அவர் பௌத்தம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்ட சைவசமயத்தவர். 

கூட்டத்திற்கான அழைப்பு

நேற்று முன்தினம், தஞ்சையிலிருந்து ஜம்புலிங்கம் அய்யா அவர்கள், தனது செல்போனில் ”திருச்சியில் நாளை மாலை (03.11.17 – வெள்ளிக் கிழமை) திருச்சியில் ஒரு சிறப்புரை கூட்டம். என்னை பேச அழைத்து இருக்கிறார்கள்” என்று விவரம் சொன்னதோடு, அடுத்தநாள்  வாட்ஸ்அப்பில் (Whatsapp) எனக்கு அழைப்பும் விடுத்தார். முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களைப் படித்த, திருச்சியிலுள்ள மகாபோதி சங்கத்தினர், தங்களது 23 ஆவது, பவுர்ணமி விழாவில் இவரை சிறப்புரை ஆற்றும்படி அழைத்து இருந்தனர். 

கூட்டம் துவங்குவதற்கு முன்னர்

(படம் மேலே – முனைவர் அவர்களுக்கு வல்லிக்கண்ணன் எழுதிய ’புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலினை நான் பரிசாகக் கொடுத்தபோது)

சென்னையில் கடும் மழை, வெள்ளம் என்று ஊடகங்கள், செய்திகள் வாசித்துக் கொண்டு இருந்த நிலையில், திருச்சியில் மழை வருவதும் நிற்பதுமாகவே போக்கு காட்டிக் கொண்டு இருந்தது. இருந்த போதும், கூட்டம் நடைபெறும் BHEL – SCUU சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன் நான் சென்றபோது எனக்குப் பழக்கமான நண்பர்களும் அங்கு இருந்ததில் மகிழ்ச்சி. அங்கே முன்னதாகவே வந்துவிட்ட ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு எல்லோருமே புதியவர்கள். மேலும் நாங்கள் இருவருமே இந்த சங்கத்து உறுப்பினர்கள் இல்லை.

கூட்டம் துவங்கும் முன் எடுத்த படங்கள் (கீழே)
முனைவரின் சிறப்புரை


அன்றைய கூட்டத்தில் போதி அம்பேத்கர் மற்றும் திரு தங்கசாமி ஆகியோர் வழிகாட்ட, புத்தர் திருவுருவச் சிலைக்கு முன்னர் விளக்கேற்றுதல், புத்த வந்தனம் ஆகியவற்றிற்குப் பிறகு திரு சிவானந்தம் ( BHEL ) அவர்கள் முனைவர் பற்றி அறிமுகம் செய்திட திரு B.ஜம்புலிங்கம் அவர்கள் தனது சிறப்புரையை செய்தார்.தனது எம்ஃபில் (M.Phil) பட்டத்திற்கு, ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததையும், முனைவர் (Doctorate) பட்டத்திற்கு ”சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் சுவைபட சில நிகழ்வுகளோடு சொன்னார்.

மேலும் 1993இல் தொடங்கி தொடர்ந்து தான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது தனக்கு ஏற்பட்ட, பல அனுபவங்கள் குறித்தும், ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் விவரித்தார். 

இன்னும்,
பௌத்த சமய வரலாற்றில்  சங்க காலத்தில் பௌத்த காவிரி பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும்  சிறப்பான இடத்தை வகித்தமை,

சோழ நாட்டில் மக்கள், புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைத்து வழிபாடு செய்து வருவது குறித்தும்

கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பவுத்தம் இருந்ததற்கான சான்று (கல்வெட்டு) கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருக்கிறது என்பதனையும்,

மீசையுடன் கூடிய புத்தர் சிலை மற்றும் தலையில்லாத புத்தர் சிலை பற்றிய தகவல்கள்.

மேலும், தனது ஆய்வின்போது, சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பலவற்றை மக்கள் புத்தர் என அழைப்பதையும் சுவைபடச் சொன்னார். இருந்த போதும் அருங் காட்சியகத்தில் இருக்கும் சில புத்தர் சிலைகள், தனது களப் பணிகளால் வெளிக் கொணர்ந்து தகவல்கள் தந்திருந்த போதும் தனது பெயரை அங்கு குறிப்பிடவில்லை எனும் ஆதங்கத்தையும் வெளிப்படச் சொன்னார்.
 
கூட்டத்தின் முடிவில் திரு தமிழ்தாசன் ( BHEL ) அவர்கள் நன்றி கூறிட, இனிய இரவு சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே முடிந்தது, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  திரு செல்வம் (BHEL) அவர்கள் செய்து இருந்தார்.