Showing posts with label டான் குயிக்ஸாட். Show all posts
Showing posts with label டான் குயிக்ஸாட். Show all posts

Sunday, 14 December 2014

டான் குயிக்ஸாட் (DON QUIXOTE)



முன்னறிவிப்பு: இந்த கதையைப் படித்த பிறகு யாரையேனும் நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல

எனது மாணவப் பருவத்தில் ஆங்கில இலக்கியங்களின் புகழ்பெற்ற கதைகளை ஆங்கிலத்தில் RETOLD STORIES  ஆகவோ அல்லது சுருக்கத் தமிழாக்க நூல்களாகவோ படிக்கும் வாய்ப்பு அமைந்தது. இவைகளை நூலகங்களில் எடுத்து படித்தேன். அப்படி படித்த கதைதான் மிக்யூயெல் டீ செர்வாண்டீஸ் (MIGUEL DE CERVANTES SAAVENDRA) என்பவர்  எழுதிய டான் குயிக்ஸாட் (DON QUIXOTE) என்னும் கதையாகும். ஸ்பானிஷ் மொழியில் வந்த இந்த நாவல், உலகின் முதல் நவீன நாவல்.

கதைச் சுருக்கம்

லாமாஞ்சா (LA MANCHA) என்பது ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு கிராமம். அந்த கிராமத்தில்) டான் குயிக்ஸாட் (DON QUIXOTE) என்ற மனிதர் இருந்தார். அவருடன் அவருடைய சகோதரி மகள், வயதான வேலைக்காரி மற்றும் ஒரு வேலைக்கார சிறுவன் ஆகியோர் இருந்தனர்.

குயிக்ஸாட் ஒரு புத்தகப் பிரியர். வெறியர் என்று கூட சொல்லலாம். அதிலும் இந்த வீர தீர செயல்கள், மந்திர தந்திரங்கள், போர்கள் பற்றிய கதைகள் என்றால் சொல்ல வேண்டாம். படிப்பதிலேயே காலத்தைக் கழித்தார். அது மட்டுமன்றி புத்தகங்கள் வாங்குவதற்காகவும் அதிக செலவுகள் செய்தார். படித்ததோடு மட்டுமன்றி அந்த நூல்களில் வரும் கதை மாந்தர்களாகவே நினைத்துக் கொள்வார். அடிக்கடி தன்னை ஒரு பெரிய புரட்சியாளனாக அல்லது வீரனாக அல்லது ஒரு பெரிய மன்னனாக கற்பனை செய்து கொள்வார். ஒரு கோட்டையைப் பிடிக்கப் போவதாகவும் அல்லது ஒரு தீவினைக் கைப்பற்றி அம்மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தரப் போவதாகவும் சொல்வார்.

அதிகம் படிக்கப் படிகக தானும் ஒரு வீரனாக மாறி தீரச் செயல் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. வீட்டில் இருந்த தனது தாத்தா காலத்து, இரும்பு கவசம் அணிந்து கொண்டு, ஈட்டி கேடயத்துடன், குதிரை லாயத்தில் இருந்த வயதான குதிரை மீது ஏறிக் கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு விடுதி தென்பட்டது. குயிக்ஸாட்டின் கற்பனை மனதிற்கு, அந்த விடுதி ஒரு  கோட்டையாகத் தெரிகிறது. அங்கு அவர் தங்குகிறார். அவருடைய விசித்திரமான தோற்றம், செயல், கற்பனை பேச்சுக்களை வைத்து அவரை ஒரு பைத்தியம் என முடிவு கட்டிய விடுதி முதலாளி, அவரை வெளியேற்ற நினைக்கிறான். எனவே குயிக்ஸாட் விரும்பியபடி  வீரர்(KNIGHT) என்ற பட்டத்தினை அளித்து அனுப்பி வைக்கிறான். இதனால் குயிக்ஸாட்டிற்கு தான் விரும்பியபடி வீரனாக அங்கீகரிக்கப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

வரும் வழியில் எதிரே ஒரு வியாபாரிகள் கூட்டம். குதிரைகளில் தங்கள் வேலையாட்கள் துணையோடு வந்து கொண்டு இருந்தார்கள். டான் குயிக்ஸாட் குதிரைகளில் வந்த வணிகர் கூட்டத்தை வீரர்கள் கூட்டம் என்று கற்பனை செய்து கொண்டு ஈட்டியோடு பாய்கிறார். அவர்கள் குயிக்ஸாட்டை அடித்துப் போட்டுவிட்டு போகிறார்கள். ஒரு வழியாக தனது ஊர்க்காரன் ஒருவன் உதவியோடு, வீடு திரும்புகிறார். இவ்வளவுக்கும் இவர் படித்த புத்தகங்களே காரணம் என்று  வீட்டில இருந்தவர்கள் சர்ச் சாமியார் ஒருவரின் உதவியோடு அவற்றை கொளுத்தி விடுகின்றனர்

எவ்வளவு நாட்கள்தான் வீட்டிலேயே அடைந்து கிடப்பது? சிறிது நாட்கள் சென்றவுடன் டான் குயிக்ஸாட் கண்ணுக்கு தெரியாத அந்த எதிரிகளோடு சண்டைபோட அடுத்த பயணம் புறப்படுகிறார். தான் கைப்பற்றப் போகும் தீவினுக்கு உன்னை ஆளுநர் (Governor) ஆக்குகிறேன் என்று ஆசை வார்த்தை சொல்லி, சாஞ்சோ (SANCHO) என்ற தன் ஊர்க்காரனை அழைத்துக் கொள்கிறார். இவர் தனது குதிரையில் வர, அவன் தனது கழுதையில் வருகிறான். இருவரும் செல்கிறார்கள். வழியில் ஒரு சமவெளி. அங்கே நிறைய காற்றாலைகள். வழக்கம் போல டான் குயிக்ஸாட், அவைகளை ராட்சதர்களாக எண்ணி சவால் விடுக்கிறார். சாஞ்சோ தடுத்தும், முதலில் தென்பட்ட காற்றாலை மீது ஈட்டியுடன் பாய்ந்தார். காற்றாலையின் விசிறிகள் அவரையும் குதிரையையும் தூக்கிப் போட்டன. சாஞ்சோதான் இருவரையும் தூக்கி நிறுத்த வேண்டி இருந்தது. வழியில் ஒரு புல்வெளி. அங்கும் இதே மாதிரி கலாட்டாதான். அங்கு குதிரை மேய்ய்பவர்களுடன் சண்டை. ஒரு வழியாக மீண்டும் பயணம்.

வழியில் ஒரு விடுதியில் இருவரும் தங்குகிறார்கள். தங்கியதற்கு காசு கொடுக்காமல் டான் குயிக்ஸாட் தப்பிச் செல்கிறார். அவர்கள் சாஞ்சோவை பிடித்துக் கொள்கிறார்கள். ஒரு ஜமுக்காளத்தின் நடுவில் அவனை போட்டு, நான்கு மூலையிலும் ஆளுக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு அவனை தூக்கிப் போட்டு புடைத்து விளையாடுகின்றனர். மேலும் அவன் வைத்திருந்த தண்ணீர் தோல் பையையும் பிடுங்கிக் கொண்டு அனுப்பி வைக்கின்றனர். டான் குயிக்ஸாட்டைப் பின்தொடர்ந்த சாஞ்சோ அவரிடம் ஊருக்கு திரும்பி விடலாம் என்கிறான். அவரோ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஒருமுறை வழியில் வந்த செம்மறி ஆட்டு மந்தைகள் இரண்டை எதிரி வீரர்களாகப் பாவித்து சண்டை போடுகிறார். ஆடுகளை ஓட்டி வந்த மேய்ப்பர்கள் அவரை கல்லால் அடித்து துரத்துகின்றார்கள். 
இன்னொருமுறை சாலைவழியே வந்த சிங்க்க் கூண்டு ஏற்றி வந்த வண்டியை நிறுத்தி, சிங்கக் கூண்டைத் திறந்து அதனை சண்டைக்கு கூப்பிடுவார். இவர் நல்ல நேரம் அது அங்கேயே படுத்துக் கிடந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவரது கதையையும் கற்பனைகளையும் கேளிவிப்பட்ட பிரபு ஒருவர், சாஞ்சோவை தனக்கு சொந்தமான தீவு ஒன்றினுக்கு பிரபுவாக நியமனம் செய்து வைப்பார். சாஞ்சோவின் கனவும் நிறைவேறி விடுகிறது. கதையின் நடுவே குயிக்ஸாட்டின் ஒருதலைக் காதல் வேறு வரும்.

இவ்வாறாக ஒவ்வொரு முறையும் அவர் புரட்சியாகக் கிளம்பி புழுதியாக அடங்கி விடுவார். இறுதியில் அவர் எந்த தீரச் செயலையும் செய்யாமலே நோய்வாய்ப பட்டு இறக்கிறார்.

நூலின் உத்தி

மிக்யூயெல் டீ செர்வாண்டீஸ் (MIGUEL DE CERVANTES SAAVENDRA) எழுதிய இந்த நாவலை தாமஸ் ஷெல்டன் (THOMAS SHELDON) என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இது அந்த காலத்தில், ஸ்பெயினில் நிலவிய அரசியலை (குறிப்பாக பிரபுகளின் வாழ்க்கையை) கேலி செய்யும், ஒரு நையாண்டி இலக்கியம் “ (SATIRE LITERATURE) ஆகும். (இது பற்றி தனியே விவரிக்க வேண்டும்) நமது தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால், அவற்றுள் பல காட்சிகள் இந்த நாவலின் தழுவலோ என்று எண்ணத் தோன்றும்.

(தமிழில் இதன் முழு மொழிபெயர்ப்பு வெளி வந்து இருப்பதாகத் தெரிகிறது. வாங்கி படிக்க வேண்டும்.)



                                          ALL PICTURES THANKS TO :  “GOOGLE”