Thursday 19 March 2015

முதுகுவலியும் நானும்


சுமார் 25 வருடங்களுக்கு முன்னர். எப்போதும் போல நான் பணிபுரிந்த வங்கிக்கு எனது வீட்டிலிருந்து மொபெட்டில் சென்று வந்து கொண்டிருந்தேன். திடீரென்று வலதுகால் சுண்டுவிரல் தொடங்கி வலது தோள்பட்டை வரை சிறிது வலியெடுத்தது. எல்லோரும் சதைப்பிடிப்பு , தைலம் தேய்த்தால் சரியாகி விடும் என்று சொன்னார்கள். எனவே தைலம் தேய்த்துக் கொண்டேன். இரண்டொரு நாட்களில் முதுகெலும்பு முழுதும் வலி (முதுகுவலி Back pain) வர ஆரம்பித்து விட்டது. எனவே வேலைக்கு பஸ்ஸில் செல்ல ஆரம்பித்தேன். அதிகமாக வலியெடுக்க ஆரம்பித்தவுடன் வலி நிவாரண தைலத்தை தேய்த்துக் கொண்டேன். எல்லாம் கொஞ்சநாள் தான்.

முதுகுவலி வந்த கதை:

ஒருநாள் வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்தபோது மதியம் இருக்க இருக்க, வலி அதிகமானதோடு, வலது காலை தூக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது. எனது கஷ்டத்தைப் பார்த்த என்னோடு பணிபுரிந்த நண்பர்கள், என்னை சிறப்பு மருத்துவரான டாக்டர் ஜான் கருப்பையா (ஆர்த்தோ) அவர்களிடம் ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்றனர். இவர் திருச்சியில் பிரபலமான நல்ல மருத்துவர்.

மருத்துவ மனையில் வழக்கம்போல எக்ஸ்ரே முதலான சோதனைகள். எக்ஸ்ரேயில் இடுப்புக்கு மேலே முதுகெலும்பில் சிறிது விரிசல் இருப்பது தெரிய வந்தது. எனவே டாக்டர் என்னிடம் என்றாவது மேலேயிருந்து அல்லது வண்டியில் செல்லும்போது கீழே விழுந்து விட்டீர்களா? என்று கேட்டார். அப்போதுதான் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஒருநாள் நானும் என்னோடு பணிபுரிந்த  நண்பர் ஒருவரும் எனது மொபெட்டில் சென்று கொண்டு இருந்தோம். நான் வண்டியை ஓட்டினேன். பின்னிருக்கையில் அவர் இருந்தார். திருச்சி தெப்பக்குளம் (இது நெரிசலான பகுதி) பக்கம் கடைவீதியில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென குறுக்கே ஒருவர் சாலையைக் கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்ட போது இருவரும் கீழே விழுந்து விட்டோம். பெரிதாகக் காயம் ஏதும் இல்லை. நண்பருக்கு ஏற்கனவே இதுபோல் அனுபவம் உண்டு. எனவே அவர் அவரது டாக்டரிடம் காண்பித்து ஒன்றும் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டார். நான் நமக்குத்தான் ஒன்றும் இல்லையே என்று அசட்டையாக இருந்து விட்டேன். அதன் விளைவு இந்த முதுகுவலி.

சிகிச்சை முறைகள்:


எனது கதையைக் கேட்ட டாக்டர் ஆறு மாதத்திற்கு வண்டி ஓட்டக் கூடாது, ஆட்டோவில் பயணம் செய்யக் கூடாது என்று கூடாதுகள் - பட்டியல் ஒன்றைச் சொன்னார். மேலும் மாத்திரைகள், ETHNORUB என்ற தைலம், சுடுநீர் பை (HOT WATER POUCH) ஆகியவற்றை எழுதிக் கொடுத்ததோடு தூங்கும்போது எப்படி தூங்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படியும் சரியாகாமல் போனால் ஆபரேஷன் மூலம் முதுகில் இரும்புத் தகடு (STEEL PLATE ) வைக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்தார்.மேலும் ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார்.


பெரும்பாலும் நான் எப்போதும் டாக்டர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றக் கூடியவன். எனவே முதுகுவலிக்கு டாக்டர் ஜான் கருப்பையா அவர்கள் சொன்ன ஆலோசனைகளை அப்படியே பின்பற்றினேன். முதல் வேலையாக இருசக்கர வண்டி ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்தேன். சரியாக நேரம் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொண்டேன். நகர் மத்தியில் இருந்த, நான் பணிபுரிந்த வங்கிக்கு பஸ்ஸில் சென்று வந்தேன். என்னோடு பணி புரிந்த துணைநிலை ஊழியர் ஒருவர் தைலம் தேய்த்து உதவினார். மாலையில் வேலை முடிந்ததும், துணைநிலை ஊழியர்கள் ஓய்வறையில் எனது நடு முதுகில் மேலிருந்து கீழ் வரை ETHNORUB என்ற தைலத்தை அவர் நன்கு அழுத்தி தேய்த்து விடுவார். அப்போது சட்டை, பனியன் இல்லாமல் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு வெற்றுடம்போடு இருப்பேன். அப்போது அங்கு வரும் சக ஊழியர்கள் என்னை “என்ன பயில்வான் வேலைக்கு போகிறீர்களா?  என்று கிண்டல் செய்வார்கள். வீட்டிற்கு வந்ததும் மாலையில் டாக்டர் சொன்னபடி வாங்கிய சுடுநீர் பையில்(HOT WATER POUCH) மிதமாக வெந்நீர் நிரப்பி ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன். இரவில் தூங்கும்போது இரண்டு தலையணைகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து உயரமாக்கிக் கொண்டு, அவற்றின் மேல் கால்களை வைத்துக் கொண்டு  தலைக்கு ஏதும் வைத்துக் கொள்ளாமல் தூங்கினேன். எல்லாம் சரியாகி குணமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனாலும் காலையில் எழுந்தவுடன் நடைப் பயிற்சி (Walking)  செல்லும்போது அதிக தூரம் செல்ல முடியவில்லை. முதுகிலும் காலிலும் வலி எடுக்க ஆரம்பித்தது.

முதுகு வலியிருந்து விடுதலை:

ஒருமாதம் கழித்து டாக்டரை மறுபடியும் சென்று பார்த்தபோது இதனைச் சொன்னேன். அவர் உடனே என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி “ உங்களை யார் முதுகுவலியோடு வாக்கிங் போகச் சொன்னார்கள்? என்று கேட்டுவிட்டு மறுபடியும் ஒருமாதம் கழித்து வரச் சொன்னார். நான் வாக்கிங் போவதை நிறுத்திக் கொண்டு மற்றவற்றை தொடர்ந்தேன். முதுகுவலி போன இடம் தெரியவில்லை. ஒருமாதம் கழித்து டாக்டரிடம் மூன்றாவது முறை சென்றேன். எக்ஸ்ரே மற்றும் மற்ற சோதனைகள் செய்துவிட்டு நான் முழு குணம் அடைந்து இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்கு அப்படியே தொடர்ந்து இருந்துவிட்டு சிகிச்சை முறைகளை நிறுத்திக் கொள்ளச் சொன்னார்.

முதுகு வலிக்காக அப்போது டாக்டரைப் பார்த்ததுதான். இப்போது எனக்கு வயது அறுபது. கடந்த 25 வருடங்களாக  எப்போதும் போல எனது மொபெட்டில் வெளியே சென்று வந்தேன். இப்போது நான் முதுகுவலியிலிருந்து குணம் அடைந்து விட்டேன். மொபெட்டில் செல்வது எங்கள் ஏரியாவோடு சரி. வாக்கிங் அதிகதூரம் செல்வது இல்லை. இப்போதும் நான் தூங்கும்போது பெரும்பாலும் கால்களுக்கு தலையணை போன்ற எதனையும் வைத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் எப்போதாவது (அதிகம் பயணம் செய்தால்) முதுகுவலி எனக்கு வரும். வெறும் கட்டாந்தரையில் பாய்போட்டு, தலைக்கும் கால்களுக்கும் தலையணை ஏதுமின்றி மல்லாக்க நீட்டி படுத்து ஓய்வு எடுக்க சரியாகிவிடும்.

( குறிப்பு: எனக்கு வந்த இந்த முதுகுவலி நீங்கிய அனுபவம், இதேபோல  வலி உள்ள மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம் என்பதால் இந்த பதிவு )


                                 (ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)
 

Tuesday 17 March 2015

நடிகர் S.A. அசோகன்


தமிழ் திரைப்பட வில்லன் நடிகர்களில் எனக்கு பிடித்தவர்களில் நடிகர் அசோகன் அவர்களும் ஒருவர். பள்ளி வயதினில் எம்ஜிஆரின் ரசிகனாக இருந்த எனக்கு இவர் நடிப்பின் மீதும் ஈடுபாடு உண்டு. இதற்கு முக்கிய காரணம் இவர் எங்கள் திருச்சிக்காரர் என்பதுதான். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போய் விட்டது. (திரையுலகில் திருச்சியைச் சேர்ந்தவர்கள் வரிசையில் இன்னும் பலர் உண்டு என்பது வேறு விஷயம்).

வில்லன் நடிகர்

இவர் தமிழ் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு. குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி, கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் மொட்டைத் தலையுடன், ஒற்றைக் கண்ணுக்கு மட்டும் திரை போட்ட வில்லனாக வருவார். இதில் இவரது நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

கந்தன் கருணை படத்தில் சூர பத்மனாக வரும்போது அவருடைய தோற்றம், நடை, உடை, தொனி எல்லாம் நேரடியாகவே ஒரு சூர பத்மனைப் பார்ப்பது போலிருக்கும்.

கால்களில் ஆறுவிரல்கள் உள்ள, வில்லியுடன் சேர்ந்து கொண்டு அடிமைப் பெண் படத்தில் செய்யும் செங்கோடன் என்ற வில்லன் வேடத்தை இனி யாராலும் செய்ய முடியாது. இந்த படத்தில் சத்தமிட்டு, தனது சபதத்தை நினைவுபடுத்தி, சூட்டுக் கோலால் தனக்குத் தானே சூடு போட்டுக் கொள்ளும் காட்சியை மறக்க முடியுமா என்ன? 

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து விடுவார் என்று எதிர்பார்த்த நேரம். அப்போது ரிக்‌ஷாக்காரன் என்ற படம் வெளி வந்தது. தனது மாமா (மேஜர் சுந்தரராஜன்) பெரிய நீதிபதி என்ற தைரியத்தில் , நீதியையே வளைக்கும் பெரிய மனிதனாக ஆட்டம் போடும் நடிகர் அசோகனை இந்த படத்தில் காணலாம். அந்த படத்தில் வரும் ஒரு பாடல் “ அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், “ என்று தொடங்கும். கவிஞர் வாலி எழுதியது. இந்த பாடல் எம்ஜிஆர் பற்றிய பல அரசியல் யூகங்களுக்கு விடை அளித்தது. எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு, அதிமுக தொடங்கியவுடன் அவரது கட்சி மேடைகளில் அடிக்கடி முழங்கிய பாடல் இதுவேயாகும்.

கேமரா கர்ணன் அவர்கள், பலவித ஆங்கிள்களில் சண்டை காட்சிகளை படம் ஆக்கிய படம் எங்க பாட்டன் சொத்து.  இதில் ஆங்கிலப் படங்களில் வரும் கௌபாய் பட ஸ்டைலில் வில்லன் வேடம் அசோகனுக்கு. இதே ஸ்டைலில் கங்கா  என்று ஒரு படத்தையும் கர்ணன் எடுத்தார். எங்க பாட்டன் சொத்து போன்று இந்த படம் ஓடவில்லை. இரண்டிலுமே நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகன்; அசோகன் வில்லன்.

குணச்சித்திர நடிகர்

எனக்கு வேலை கிடைத்த பிறகு, இவரது பழைய படங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தேடிப் பிடித்து போய் பார்த்த படங்களும் உண்டு.

ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, அசோகன், சந்திரபாபு என்று நட்சத்திரப் பட்டாளம் நடித்த படம் பாதகாணிக்கை. இதில் மாமனார் (எம்.ஆர்.ராதா) பேச்சைக் கேட்டுக் கொண்டு, சொத்துக்காக, தனது அப்பாவை (எஸ்.வி.சுப்பையா) கோர்ட்டுக்காக இழுக்கும் மகன் வேடத்தில் அசோகன் நடித்து இருந்தார். குடும்பக் கதை. இதில் அசோகன் தனது முழுத் திறமையையும் காட்டி நடித்து இருந்தார். இதில் “ ஆடிய ஆட்டம் என்ன?என்று தொடங்கும்,

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
 
என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு,  ஒரு காலை இழந்த மகனாக, ஊன்றுகோலுடன் அசோகன் பாடும்போது என்னையும் அறியாமல் கண்ணீரி வந்து விட்டது. சோகக் காட்சி பார்ப்பவர் கண்களை குளமாக்கும்.

நடிகர் ஜெய்சங்கரின் முதல் படம் இரவும் பகலும். டைரக்‌ஷன் ஜோசப் தளியத் (JOSEPH THALIYATH) அந்த படத்தில் வரும், அப்படி இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான்” - என்ற பாடல் அசோகன் தனது சொந்தக் குரலில் பாடியது. கையில் கோலூன்றிய முதியவராக வரும் நடிகர் அசோகனின் நடிப்பும், பாடலின் கருத்தும்  (பாடல்: ஆலங்குடி சோமு) என்னை மனம் கவர்ந்தவை. இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK )


வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தில் நடிகை மணிமாலா இவருக்கு ஜோடி. அந்த படத்தில்  “ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்என்ற பாடலுக்கு மிகவும் அமைதியாக நடித்து இருப்பார். அதே படத்தில் நடிகர் மனோகருடன் சேர்ந்து “பைத்தியமே கொஞ்சம் நில்லுஎன்ற பாட்டிற்கு இருவருமே செய்யும் சேஷ்டைகள் நகைச்சுவையாக இருக்கும். ஒரு பணக்கார குடும்பத்தில், நெஞ்சுவலி கொண்ட அண்ணன் பாத்திர படைப்பில் அதே கண்கள்  படத்தில் அமைதியாக நடித்து இருப்பார்.

நேற்று இன்று நாளை என்ற படத்தை எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து எடுத்தார். பல்வேறு காரணங்களால் அந்த படத்தை முடிபபதற்குள் அசோகனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. எம்ஜிஆருக்கும் அசோகனுக்கும் இடையில் மனக்கசப்பே உண்டானதாக சொன்னார்கள்.

உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக அசோகன் நடித்து இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். அந்த படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. இதேபோல அசோகன் நடித்த பல படங்களைப் பார்க்க நேரம் இல்லாமல் போய் விட்டது.

( அண்மையில் அய்யா G.M.B அவர்கள் “இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும். http://gmbat1649.blogspot.in/2015/03/blog-post_14.html என்று எழுதி இருந்தார். சில நாட்களாக வெளியூர் பயணம், முதுகு வலி காரணமாக (அடிக்கடி ஓய்வு எடுப்பதன் மூலம் இப்போது பரவாயில்லை) என்னால் தொடர்ந்து வலைப் பதிவில் எழுத இயலவில்லை. எனவே யோசித்ததில், நாம் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எழுதாவிட்டாலும் பரவாயில்லை. பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது எழுதுவோம் என்று எழுதிய பதிவு இது.) என்னை மின்னஞ்சல் வழியே நலம் விசாரித்த அய்யா G.M.B அவர்களுக்கு நன்றி)


                        (ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)


Saturday 7 March 2015

எது சுகம்?



நான் முதன்முதல் வேலைக்கு சேர்ந்த புதிதில், அங்கே இருந்த சீனியர் ஒருவர் என்னைப் பார்த்து “தம்பி சொகம்னா என்னான்னு தெரியுமா? என்று கேட்டார். என்ன சொல்வது? நான் ஒன்றுமே சொல்லாமல் சிரித்தேன். அவரோ விடாமல் “வயிற்றை கலக்கும்போது, டாய்லெட்டுக்கு போய்விட்டு வந்த பிறகு, அப்பாடான்னு உட்காருகிறோம் பாரு, அதுதான் சொகம் “ என்று சொன்னார். அவர் வயிற்றுவலி அவருக்கு. விரக்தியிலும் ஒரு சிரிப்பு. அதிலும் ஒரு சுகம் காணுகிறார் அவர்.

ஒவ்வொரு உயிரும் பிறக்கிறது. இறுதியில் ஒருநாள் இறக்கிறது. இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் எவ்வளவு விஷயங்கள். ஒவ்வொரு உயிரும் இன்பமாகவே வாழ ஆசைப்படுகிறது. ஒருவர் வாழ்வதை வசதி, வாய்ப்பு, சொத்து, சுகம் என்பார்கள். இதில் சுகம் என்ற சொல்லைக் குறிக்கும் மற்றொரு சொல்தான் இன்பம் என்பது. ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றொருவருக்கு துன்பமாக இருக்கிறது.

சுகம் என்பது:                                              
                                               
சிலருக்கு புத்தகம் வாசிப்பதில் இன்பம். சிலர் மது அருந்துவதில் இன்பம் காண்கிறார்கள். வலைப்பதிவு (BLOG) மற்றும் பேஸ்புக் (FACEBOOK) போன்றவற்றில் அவரவர் தன் விவரங்களை (PROFILE) பார்த்தால் ஒவ்வொருவரது வெளிப்படையான விருப்பங்களை (INTERESTS) மட்டும் தெரிந்து கொள்ளலாம்.
 

கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், பாரசீகக் கவிஞர் உமர்க்கய்யாம் பாடல்களை (ஆங்கிலத்திலிருந்து) தமிழ் நடைக்கு ஏற்ப மொழி பெயர்த்து இருக்கிறார். அந்த பாடல் வரிகளில் சுகம் எங்கே இருக்கிறது என்பது பற்றிய வரிகள் இங்கே - 

வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
     
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
     
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
     
தெரிந்து பாட நீயுமுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
     
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
-          (உமர்க்கய்யாம் பாடல் வரிகள்)

கவிஞர் கண்ணதாசனின் தாகம் எல்லோருக்கும் தெரியும். தனது பலவீனங்களை வெளிப்படையாக சொல்வார். அதுவே அவரது பலமும் எனலாம். இதோ அவருக்கு சுகமான வரிகள்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல் ஒன்றில், அப்புசாமி தாத்தா தனது கால் வீக்கத்தை மெதுவாக அழுத்துவதில் சுகம் காண்பார். நல்ல மார்கழி குளிரில் இறுக்க போர்த்திக் கொண்டு படுப்பதில் சுகம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இதே குளிரில் சூடாக ஒரு கப் காபியையோ அல்லது டீயையோ அருந்துவதிலும் இன்பம் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு.

தானதர்மம் செய்வதிலும் ஒரு சுகம் உண்டு. அடுத்தவர்களுக்கு கொடுத்தலில் தர்மம் செய்வதில் சுகம் கண்டவன் கர்ணன். இதனை ஈத்துவத்தல் என்பார்கள். போர்க்களத்திலும் எதிரிகள், நண்பர்கள் என்ற பேதம் பாராது தானம் செய்தான் கர்ணன் என்கிறார் வில்லிபுத்தூரார்.

கோவல்சூழ் பெண்ணை நாடன் கொங்கர்கோன் பாகை வேந்தன்
பாவலர் மானங் காத்தான் பங்கயச் செங்கை யென்ன
மேவல ரெமரென் னாமல் வெங்களந் தன்னி னின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி.

               - வில்லி பாரதம் (கன்ன பருவம், பாடல் 33)

(இங்கு கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் பெயர்)

பிச்சைக்காரனும் கருமியும் காசு சேர்த்து வைப்பதில், அவற்றை அடிக்கடி எண்ணிப் பார்ப்பதில் சுகம் அடைகிறார்கள். சிலபேர் சும்மா இருப்பதே சுகம் என்கிறார்கள்.

அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் மன அலைகள்என்ற தனது வலைத்தளத்தில் “எது சுகம்?என்ற தலைப்பில் ஒரு பதிவினை எழுதினார். அதில் வெங்காய பஜ்ஜியை சாப்பிடுவதால் ஏற்படும் சுகத்தைப் பற்றி சொல்லி இருந்தார். அதற்கு நான், 
 
நானும் இதே தலைப்பினில் கட்டுரை எழுதுவதற்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். சில சமயம் இதுபோல் ஒரே சிந்தனையாக ஒரேசமயம் இருவர் எண்ணும்படி தோன்றி விடுகிறது. நீங்கள் முந்தி விட்டீர்கள். பரவாயில்லை. என்ன இருந்தாலும் உங்களைப் போல சுவாரஸ்யமாக நகைச்சுவையாக என்னால் எழுத முடியாது.

என்று கருத்துரை எழுதினேன். அவரும் உடனே,

அடடா, நீங்களும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெங்காய பஜ்ஜியை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது என்ன, எங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? இல்லையே.

என்று மறுமொழி தந்தார். இந்த நகைச்சுவையை ரசிப்பதிலும் ஒரு சுகம் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.  

எனவே சுகம் என்பது அந்தந்த நேரத்திற்கு ஏற்ப அவரவர் நிலைக்கு ஏற்ப சிறிதுநேரம் லயிக்கும் பரவசம்தான். எது எப்படி இருந்தபோதும் அந்த இன்பம் சில மணித் துளிகள்தாம்.

                                                               
இன்பம் எங்கே இன்பம் எங்கே

அறத்தான் வருவதே இன்பம்என்ற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.  (குறள் 65)

என்ற குறட்பாவில் தமது குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பம்;  அந்தக் குழந்தைகளின் மழலைமொழி கேட்பது செவிக்கு இன்பம்என்று சொல்லுகிறார்.

கவிஞர் மருதகாசி சிறந்த திரைப்படக் கவிஞர். அவர் மனமுள்ள மறுதாரம் என்ற படத்திற்கு எழுதிய ஒரு பாடல் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடுஎன்பதாகும். இதோ அந்த பாடல் ...


தூங்கையிலே வாங்குகிற மூச்சு
இது சுழிமாறி போனாலும் போச்சு

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

        - பாடல்: மருதகாசி (படம்: மனமுள்ள மறுதாரம்)

மறக்கமுடியாத இலங்கை வானொலியில் இந்த பாடலை அந்தநாள் அடிக்கடி ஒலி பரப்புவார்கள். திரைப் படத்தில், இந்த பாடலுக்கு நடிகர் பாலாஜி தனது இளமையான துள்ளலுடன் ஆடிப் பாடி, நடித்து இருப்பார். பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK )



                   (ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)



Sunday 1 March 2015

திருவானைக்கோவில் சென்றேன்



மார்ச் ஒண்ணாம் தேதி (01.03.2015) அதாவது இன்று, எனது பிறந்தநாள். 60 முடிந்து 61 தொடக்கம். இனிமேல் நானும் ஒரு சீனியர் சிட்டிசன்(Senior Citizen). எந்த கோவிலுக்கு போவது என்று நான் யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், என்னோடு பணிபுரிந்த நண்பர் ஜெகதீசன் அன்றையதினம் நடக்க இருக்கும் தனது அறுபதாம் ஆண்டு நிறைவு திருமண (ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுப முஹூர்த்தம்”) விழாவிற்கு சென்றவாரமே அழைப்பிதழ் அனுப்பி வைத்ததோடு செல்போனிலும் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கும் 61 தொடக்கம். ரொம்பவும் நல்லதாகப் போயிற்று. திருவானைக் கோவில் என்று முடிவாயிற்று.

திருக்கோவில் நுழைவு:

இன்று காலை எனது பெற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு, பஸ்சில் திருவானைக்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றேன். பஸ்ஸை விட்டு இறங்கியதும், கடைத்தெருவில் ஒரு ஹோட்டலில் காலை டிபன் முடித்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

(படம் மேலே) திருவானைக்கோவில் கடைத்தெரு.


(படம் மேலே) கோயில் கோபுரம்.

கோயிலின் கோபுரம் வழியே உள்ளே நுழைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. அவ்வளவு நெரிசல். உள் வீதிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆகியோரது இருசக்கர, நாலு சக்கர வாகனங்கள். உள்ளே நுழைந்ததும் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் நுழைவு வாயில்.

(படம் மேலே) திருக்கோவில் நுழைவு வாயில். 


(படம் மேலே) முன்புற கோபுரத்தின் பின்பக்க தோற்றம்.

கேமரா அனுமதிச்சீட்டு

கோயில் கோபுரத்தைக் கடந்ததும் யானை கட்டும் இடத்திற்குச் சென்றேன். யானையை படம் எடுக்க முயன்றபோது பாகன், கேமராவிற்கு, அருகிலுள்ள கோயில் அலுவலகத்தில் அனுமதிச்சீட்டு வாங்கி வரச் சொன்னார். அங்கே போனபோது, இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கோயிலுக்குள் மூலவர் சன்னதி அருகே இருக்கும் கவுண்டரில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்த ஒருவர் சொன்னார். சிரமத்தை பாராது அங்கே சென்றேன். கேமராவிற்கு அனுமதிசீட்டு கேட்டபோது உடனே கொடுக்கவில்லை. நிறைய கேள்விகள். யாரோ ஒரு கல்யாண போட்டோகிராபர், திருமண மண்டபத்தில் (சினிமாவில் படம் எடுப்பது போன்று) மணமக்களை ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இருக்கும்படி படம் எடுத்து விட்டாராம். யாரோ ஒரு பக்தர் இதனை மேலே புகார் செய்ய (நல்ல விஷயம்தான்). எனவே  இப்போதெல்லாம் ரொம்பவும் கெடுபிடி என்றார்கள். ஒருவழியாக கேமராவிற்கு அனுமதிச்சீட்டை (ரூ 30/=) வாங்கிக் கொண்டு மீண்டும் யானை இருக்கும் இடத்திற்கே வந்தேன். யானையை படம் எடுக்கும்போது மட்டும் கேமராவில் பிளாஸ்சை ஆப் செய்து கொள்வேன். மேலும் எட்டி நின்றே படம் எடுப்பேன். எனது பயத்தைத் தெரிந்து கொண்ட அவர் பயப்படாமல் கிட்டே வந்து படம் எடுக்கச் சொன்னார். 

(படம் மேலே) கேமரா அனுமதிச்சீட்டு


(படம் மேலே) யானை அகிலாவும் அதன் பாகனும்.

அதன்பிறகு கோயில் உள்ளே சென்று மண்டபத்தை அடைந்தேன். அங்கே ஒரு ஓரத்தில் பார்வையாக வைக்கப்பட்டு இருந்த யானை பராமரிப்பு உண்டியலில், என்னால் இயன்ற தொகையை போட்டேன்.

(படம் மேலே) உள்புற கோயில் கோபுரம்

(படம் மேலே) உள் மண்டபம்.

திருமண நிகழ்ச்சி

பின்னர் தனிவழி கட்டண சீட்டை (ரூ10/=) பெற்றுக் கொண்டு ஜம்புகேஸ்வரரை இறைவணக்கம் செய்தேன். சைவசமயத்தின் முக்கியமான சிறப்பு நாட்களெல்லாம் (தைப்பூசம், சிவராத்திரி போன்றவை) அண்மையில்தான் வந்து போயின. எனவே கூட்டம் அவ்வளவாக இல்லை. பின்னர் மூலவர் ஜம்புகேஸ்வரர் சன்னதியை விட்டு வெளியே வந்து கோயில் பிரகாரங்களை சுற்றி விட்டு, நண்பரின் அறுபதாம் ஆண்டு நிறைவு கல்யாணம் நடந்த நவராத்திரி மண்டபம் வந்தேன். மண்டபத்தின் அருகில்தான் அம்மனின் (அகிலாண்டேஸ்வரி) சன்னதி. அங்கு வெளியூர் கும்பல். எனவே அவர்கள் நின்று கொண்டு இருந்த வரிசைக்கு வெளியே இருந்தபடியே அம்மனை வணங்கிவிட்டு மண்டபம் வந்தேன். அங்கு நண்பரின் அறுபதாம் ஆண்டு நிறைவு திருமண நிகழ்ச்சியில் (படம் ஏதும் எடுக்கவில்லை) கலந்து கொண்டுவிட்டு, அவர் ஏற்பாடு செய்து இருந்த ஹோட்டலில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினேன்.         

மேலும் சில படங்கள்:


(படம் மேலே) உள் பிரகாரம்


(படம் மேலே) உள் பிரகாரத்துள் ஒரு மண்டபம்



(படம் மேலே) அம்மன் சன்னதி அருகே, யானை அகிலாவை மதியம் அழைத்து வந்து இருந்தார்கள். அப்போது அங்கு வந்த பக்தர்கள் பலர் அதனிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். 

நானும் பயத்துடனேயே பெற்றுக் கொண்டேன். அப்போது எனது கேமராவை அங்கு யாரிடமாவது கொடுத்து எடுக்கச் சொல்லலாம் என்ற ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. காரணம் அங்கே மண்டபத்தில் நான் கண்ட ப்ளக்ஸ் பேனர் எச்சரிக்கை வாசகம்தான்.


(படம் மேலே) எச்சரிக்கை வாசகம் அமைந்த ப்ளக்ஸ் பேனர்


(படம் மேலே) கோயில் நந்தவனம்


(படம் மேலே) உள் பிரகாரத்திலிருந்து


(படம் மேலே) 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் குடமுழுக்க பற்றிய கல்வெட்டு.