Showing posts with label மூச்சுத் திணறல். Show all posts
Showing posts with label மூச்சுத் திணறல். Show all posts

Thursday, 1 March 2018

நம்பிக்கையே வாழ்க்கை.



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இன்று எனக்கு பிறந்தநாள் (01.03.1955). வயது 63 முடிந்து 64 தொடங்கியுள்ளது. நான் உயிரோடு இருக்கிறேனா என்பதனையே, இன்று கண் விழித்த பிறகுதான் நிச்சயம் செய்து கொண்டேன். ஏனெனில், 10 நாட்களுக்கு முன்னர் (19.02.18 திங்கட் கிழமை - காலை 9.15 மணி அளவில் எனக்கு கடுமையான மூச்சுத் திணறலும் மயக்க நிலையும் ஏற்பட்டு, ஆபத்தான நிலைமையில்,  ஒரு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கு உடனடியாக எனக்கு வேண்டிய முதலுதவிகளை நன்றாகவே செய்து காப்பாற்றி விட்டார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர், எனக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும்,  உடனடியாக இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்ய வேண்டும் என்றும் சொல்லி 23.02.18 வெள்ளியன்று டிஸ்சார்ஜ் செய்தார்கள்; வீட்டுக்கு சென்றுவிட்டு ஒருவாரம் கழித்து ஆபரேஷனுக்காக வரச் சொன்னார்கள். 

(நான் ஏற்கனவே வலது முழங்கையில் வந்த பெரிய கட்டிக்கு ஒரு அறுவை சிகிச்சை, அப்புறம்  ‘appendix’ ஆபரேஷன்  மற்றும் அண்மையில் விபத்து காரணமாக இடது குதிகாலில் அறுவை சிகிச்சை – என்று மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவன். எனவே மீண்டும் அறுவை சிகிச்சையா என்று எனக்குள் ஒரு நடுக்கம்) 

வீட்டுக்கு வந்தவுடன், எதற்கும் இன்னொரு டாக்டரிடம் (Second Opinion) கேட்டுக் கொள்ளலாம் என்று, (27.02.18 செவ்வாய்க் கிழமை) மூத்த அனுபவம் வாய்ந்த M.D.,D.M – Cardiologist ஒருவரிடம் சென்று முழு விவரத்தையும், எனது பயத்தினையும் சொன்னோம். அவரது மருத்துவ மனையில்,  எனக்கு ECG Scan, BP, Urine மற்றும் Blood சோதனைகள், Echo Test மற்றும் Tread Mill Test ஆகியவை செய்யப்பட்டன
.
அதன் பிறகு மாலை 4.30 அளவில் டாக்டர் எங்களை அழைத்தார். அப்போது அவர் // இதற்கு முன்பு நீங்கள் பார்த்த, மருத்துவ மனையில் கொடுத்துள்ள CD மற்றும் ரிப்போர்ட்டுகள் அடிப்படையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன. இதய அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் இதய அறுவை சிகிச்சை செய்து விட்டதாலேயே, எல்லாம் சரியாகி விட்டது என்று யாராலும் Guarantee தர முடியாது. யாரும் சொல்லவும் மாட்டார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் RISK மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும் இங்கு செய்த சோதனைகளிலும், உங்களுக்கு இதயத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவே காட்டுகின்றன என்று சொன்னார்.

நான் எனது கருத்தாக // டாக்டர் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயமாக இருக்கிறது; முடிந்தவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலேயே மருந்துகளை எடுத்துக் கொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதன்படியே செய்கிறேன் // என்று தெரிவித்தேன்.
                                                                                                                                                        
உடனே டாக்டர் // அப்படியானால், நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளுவதில் மற்றும் பழக்க வழக்கங்களில், நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டும்; இந்த முறையிலும் Guarantee கிடையாது. RISK இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும் டாக்டர் என்னிடம் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எப்படி எல்லாம் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, முப்பது நாட்களுக்கு மருந்துகள் எழுதி கொடுத்துவிட்டு 15 நாட்கள் கழித்து வரச் சொல்லி இருக்கிறார்.

நானும் 27.02.18 செவ்வாய்க் கிழமை இரவிலிருந்து அவர் கொடுத்த மருந்தையே எடுத்து வருகிறேன். எல்லாம் இறைவன் செயல் மற்றும் அருள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையே வாழ்க்கை.

( இன்று (01.03.18) எனது ஃபேஸ்புக் பக்கம் நான் எழுதியது இது.

Wednesday, 23 May 2012

மூச்சுத் திணறல் குணமானது எப்படி?


மழை பெய்தாலோ அல்லது மார்கழி மாத இரவுப் பனியில் நனைந்தாலோ என்னால் அன்று இரவு சரியாகத் தூங்க முடியாது. காரணம் அப்போது எனக்கு ஏற்படும் மூச்சுத் திணறல்தான். காலையிலும் தடிமனோடு, கண்கள் சிவந்து பேசுவதற்கே சிரமமாக இருக்கும். சில நாட்களில் தொடர் தும்மலும் சேர்ந்து கொள்ளும். எப்போதாவது வீட்டை சுத்தம் செய்யும் போதும், புத்தக அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைக்கும் போதும் இதே நிலைமைதான். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கை அறையை விட்டு வெளியே வந்து வாசலில் காற்றாட உட்கார்ந்து கொள்வேன். அப்போது எனக்கு வயது நாற்பத்தேழு  இருக்கும்.

இந்த மூச்சுத் திணறல் எனக்கு ஆரம்பத்தில் கிடையாது. சின்ன வயதில் மழையில் நனைந்தாலும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.  டாக்டரிடம் போனால் அவர் சளித் தொந்தரவுக்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பார். அல்லது எனக்கு “ ஈசினோபீலியா” வுக்கான அறிகுறி என்று சொல்லி சில மருந்துகளை மாற்றி எழுதித் தருவார். ஒருமுறை அவர் “உங்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளைவிட இன்ஹேலர் நல்லது “ - என்று அதை உபயோகித்துப் பார்க்கச் சொன்னார். என்வே மூச்சுத் திணறல் ஏற்படும் போதெல்லாம் வாயை திறந்து புஸ் புஸ் என்று இன்ஹேலரை அடித்துக் கொள்வேன். அந்த நேரத்திற்கு கொஞ்சம் தேவலாம் என்று இருக்கும். எல்லாம் கொஞ்சநாள்தான். தொடர்ச்சியாக பயன்படுத்த பயமாக இருந்தபடியினால் அதனை நிறுத்தி விட்டேன். 

நண்பர்கள் அனைவரும் எனக்காக டாக்டர்களாக மாறி வண்டி வண்டியாக அட்வைஸ் தந்தார்கள். கொதிக்கும் நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி முக்காடு போட்டு ஆவி பிடிக்கச் சொன்னார்கள். ஒன்றும் பலன் இல்லை. சிலர் டாக்டரை மாற்றிப் பார்க்கச் சொன்னார்கள். வேறு டாக்டர்களும் பழைய டாக்டர் செய்த மருத்துவமே செய்தார்கள். இதற்கென்று  இருக்கும் டாக்டர்களையும் சென்று பார்த்தேன். அந்த ஸ்பெஷலிஸ்டுகளின் வித்தைகளுக்கும் எனது மூச்சுத் திணறல் கட்டுப் படவில்லை. இன்னும் சிலர் மூக்கைப் பிடிக்கும் மூச்சுப் பயிற்சி  செய்ய சொன்னார்கள். ஏற்கனவே மூச்சு விட சிரமமாக இருக்கும்போது மூச்சைப் பிடித்தால் என்னவாகும்? வேர்த்து விறுவிறுத்ததுதான் மிச்சம்.

 
இந்த சமயத்தில் டாக்டர் கே.ஏ.மோகனதாஸ் என்பவர் எழுதிய ஒவ்வாமை (அலர்ஜி) என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய விடியலைத் தந்தன. இதனால் நான் தொந்தரவு அடைவதற்கு காரணம் ஒவ்வாமை ( ALLERGY )தான் என்று தெரிந்தது. ஆனால் எந்த பொருள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் பளீரென்று மின்னல் வேகத்தில் மனதில் ஒரு யோசனை தோன்றியது. எனக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது புகைபிடித்தல் பழக்கமோ கிடையாது. ஆனால் மீசைக்கு மட்டும் டை அடிக்கும் பழக்கம் இருந்தது. எனது தலை நரைக்கவில்லை. ஆனால் மீசை மட்டும் நரைத்து விட்டது. எனவே இந்தியாவில் பிரபலமான ஒரு நல்ல கம்பெனி டையையே மீசைக்கு உபயோகித்து வந்தேன்.  மீசைக்கு அடிக்கும் டை ஒத்துக் கொள்ள வில்லையோ என்று தோன்றியது. எனவே மீசைக்கு டை அடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்தேன். அதேசமயம் மீசைக்கு டை இல்லாமல் வெளியே செல்லவும் கூச்சமாக இருந்தது. பல தடவை யோசித்து, நமக்கு வயதுக்கு வந்த பெண்ணும் பையனும் இருக்கும்போது இவையெல்லாம் தேவையா என்று மீசைக்கு டை அடிப்பதை நிறுத்தினேன். தலைமுடி இயல்பாகவே கருப்பாகவும் மீசை மட்டும் வெள்ளையாக இருக்க நண்பர்கள் கொஞ்ச நாள் விசாரித்தார்கள். அப்புறம் எல்லோருக்கும் எனது முகம் பழக்கமாகி விட்டது. மீசைக்கு டை அடிப்பதை நிறுத்தியதும் என்னை பீடித்து இருந்த அலர்ஜியும் மூச்சுத்திணறலும் போய்விட்டது.

இப்போது மழையில் நனைந்தாலும், வெயிலில் அலைந்து வேர்வை வந்தாலும், பனியில் திரிந்தாலும் , ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு மழையில் நனைந்தால் கூட ஒன்றும் ஆவதில்லை. தொடர் தும்மலோ, மூச்சுத் திணறலோ இப்போது கிடையாது. இது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். அவ்வளவுதான். மூச்சுத் திணறல் உள்ள அனைவருக்கும் இது அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது.

( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )