Thursday 24 November 2011

தாம்பரமும் வேண்டாம்! ராயபுரமும் வேண்டாம்! எழும்பூரே இருக்கட்டும்!


                      (Egmore - Photo thanks to Wikipedia)
எழும்பூர் ரெயில் நிலையம் என்பது ஆங்கிலேயர் காலத்து பழமையான ஒன்று. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chis Holm) என்ற ஆங்கிலேயர் கட்டிட 
வரைபடத்தை அமைத்துக் கொடுக்க, சாமிநாதப் பிள்ளை என்ற தமிழர் கட்டினார். எழும்பூர் ரெயில் நிலையமானது, சென்னையின் எல்லா பகுதி மக்களும் வந்து செல்ல சாலைப் போக்குவரத்து கொண்டது. தமிழ் நாட்டின் தென் மாவட்ட அனைத்து ரெயில்களும் வந்து போகின்றன.

ஆனால் இப்போது இனிமேல் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்கள் அனைத்தும் எழும்பூருக்குப் பதில் தாம்பரத்திலிருந்து கிளம்பும் என்றும், அதற்கான மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாம்பரத்திற்கு பதில் தங்கள் பகுதியில் உள்ள ராயபுரத்திற்கு கோரிக்கை வைக்கிறார்கள். இரண்டுமே வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே இன்னும் அகலப்படுத்தி மாற்றம் செயதால் போதும்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில், இப்போதுதான் சில வருடங்களுக்கு
முன்னர் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்தார்கள். பராமரிப்பு நடந்த சமயம் எழும்பூர் ரெயில் நிலையம் பல நாட்கள் பூட்டியே இருந்தது. அப்போது எழும்பூர் இல்லாமல் பொதுமக்கள் எத்தனை கஷ்டம் அடைந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், துறைமுகம் இவற்றை மையப்படுத்தியே சென்னை நகர் வளர்ந்தது. பல அலுவலகங்கள், சென்னை உயர்நீதி மன்றம், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்தன.. எல்லா தரப்பு மக்களும் வந்து போகவும், தங்கவும் வசதியான நிலையம் எழும்பூர் ரெயில் நிலையம் ஆகும்.

தாம்பரம் நிலையத்தில் எல்லா ரெயில்களையும் நிறுத்துவது என்பது சென்னை பயணத்தின் பாதியிலேயே பொது மக்களை இறக்கிவிடுவது போலாகும். கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது போல சிலர், ராயபுரத்திலிருந்து ரெயில்களை இயக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ராயபுரம் என்பது எவ்வளவு நெருக்கடியான பகுதி என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் புயல், மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம். ராயபுரம் கொண்டு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இதனால் எழும்பூர் நெரிசல் ஒன்றும் தீரப் போவது இல்லை. மேலெழுந்த வாரியாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மாற்றாதே என்று போராடுவது போல காட்டிக் கொண்டு தாங்கள் வசிக்கும் வட சென்னைக்கு மாற்ற கோரிக்கை வைக்கிறார்கள். இவர்களோடு ஊர்க்காரர்கள் என்ற முறையில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ராயபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்தச் சொல்லி   போராடலாம். அதனை விடுத்து, அனைத்து ரெயில் பயணிகள் நலன் என்ற பெயரில் அனைத்து ரெயில்களையும் தங்கள் பகுதியிலிருந்து தான்  இயக்க வேண்டும் என்பது சரியா?. இவர்களைப் பார்த்து அப்புறம் தாம்பரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலிருந்துதான் அனைத்தும் என்று தொடங்கி விடுவார்கள். மற்ற பகுதி மக்களும் சும்மா இருப்பார்களா? அவர்கள் பங்கிற்கு ஆங்காங்கே போராட்டம்தான்.

எனவே தாம்பரமும் வேண்டாம், ராயபுரமும் வேண்டாம். இருக்கின்ற எழும்பூர் ரெயில் நிலையத்தையே மேம்பாடு செய்தாலே போதும். எல்லோருக்கும் நல்லது. எழும்பூரே இருக்கட்டும். இதில் அரசியல் வேண்டாம்.

Friday 18 November 2011

பேருந்து நிலைய கழிப்பிடங்கள், உணவு விடுதிகள்

நாம் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருப்போம். பேருந்து ஒவ்வொரு ஊரையும் கடந்து சென்று கொண்டு இருக்கும். முக்கியமான ஒரு ஊரையோ அல்லது நகரத்தையோ அடையும் போது நம்மையும் அறியாமல் மூக்கை பொத்திக் கொள்வோம். அந்த ஊரின் பேருந்து நிலையத்தை நெருங்கி விட்டோம் என்பதற்கு அடையாளம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஊரின் பேருந்து நிலையமும் இந்த நிலைமைதான். அங்குள்ள கழிப்பிடங்களின் துர்நாற்றம் இவ்வாறு நம்மை மூக்கை பொத்தச் செய்கின்றன.

பேருந்து நிலையங்களில் இருக்கும் இலவச கழிப்பிடங்களைப் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. ஆண்கள் பெண்கள் என்ற எழுத்துக்களையோ அல்லது படங்களையோ காணமுடியாது. சுவர்கள் முழுக்க எரனியா ஆபரேஷன் , ஆண்மைக் குறைவு வைத்திய விளம்பரங்கள்தான். தப்பித் தவறி போய்விட்டால், அன்று முழுக்க குமட்டல்தான். கட்டணக் கழிப்பிடங்களில் தண்ணீர் வைத்து இருப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி சுகாதாரத்தை தேட வேண்டும். பாசி படர்ந்த தரை,  ஓட்டை கதவுகள், உடைந்து போன குவளைகள் என்று வெறுப்பேற்றும் சமாச்சாரங்கள். மழைக் காலத்தில் கால் வைக்க முடியாது. உடல் ஊனமுற்றவர்கள் நிலைமை சொல்ல வேண்டியதில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அனைத்து பேருந்து நிலையங்களிலும், அந்த கழிப்பிடங்களை ஒட்டியே பல உணவு விடுதிகள், டீக் கடைகள் அமைந்திருக்கும். அந்த கடைகளின் பின்புற ஜன்னல்கள் அல்லது அல்லது ஏசி மெஷின்களின் பின்புறம், கழிப்பிடங்களை ஒட்டியே அமைக்கப்பட்டு இருக்கும். சில இடங்களில் அந்த கடைகளுக்கும் கழிப்பிடங்களுக்கும் ஒரே குழாயில் தண்ணீர் வசதிக்காக இணைப்புகள் கொடுத்து  இருப்பார்கள். அந்த கடைகள் பெரும்பாலும் ஊராட்சி அல்லது நகராட்சிகளால் வாடகைக்கு விடப்பட்டவைகளாக இருக்கும். அந்தக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுபவர்கள் யாரும் அருவருப்பு  அடைவதாகத் தெரியவில்லை. அந்தக் கடைகளில் இருக்கும் உணவுப் பொருட்களினால் வரக்கூடிய நோய்களைப் பற்றி யாரும் கவலைப்பட்ட மாதிரியும் இல்லை. அந்த ஊர் சுகாதார
ஆய்வாளர்கள் என்ன ஆனார்கள்?

இனிமேல் புதிய பேருந்து நிலையங்களை அமைக்கும் புண்ணியவான்கள் இந்த விஷயங்களையும் கவனித்தால் நல்லது.

Tuesday 15 November 2011

ஸ்ரீரங்கத்தில் தலைமைச் செயலகம்

சென்னைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கொஞ்ச நாளாகவே ஒத்து வரவில்லை. இவர் முன்பு தனது ஆட்சியில் சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட முயன்றார். ஏகப்பட்ட தடைகள். எதிர்ப்புக் குரல்கள். அவர் செய்ய எண்ணியதை கருணாநிதி முடித்துக் கொண்டார். இப்போது ஜெயலலிதா  சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.. தனி மெஜாரிட்டி இருந்தாலும், சென்னையில் எந்த காரியம் தொடங்கி னாலும், கோர்ட் அது இது என்று இழுத்துக் கொண்டு போகிறது.

சென்ற முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது  ராணிமேரிக் கல்லூரியின் இடத்தை தேர்ந்தெடுக்காமல், வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தால்,  தலைமைச் செயலகத்திற்கு இவரது காலத்திலேயே புதிய கட்டிடம் உருவாகி இருக்கும். அப்போது பிரச்சினை என்று வந்தபோது மற்ற மாவட்ட மக்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள். இவரை ஆதரித்து அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னைக்கே முதலிடம் தருகின்றனர். சென்னை நகருக்கு மட்டுமே புதிய சாலைகள்,புதிய பேருந்துகள், புதிது புதிதாக மேம்பாலங்கள். மெட்ரோ ரயில், பெரிய நூலகங்கள், துணை நகரத் திட்டங்கள், பூங்காக்கள் என்று சென்னைக்கே அள்ளித் தந்தனர். சென்னையை மட்டுமே முதன்மை படுத்தினார்கள். மற்ற மாவட்ட மக்களுக்கு கிள்ளி கூட தரவில்லை. இன்னும் மற்ற மாவட்டங்களில் உள்ள சாலைகளும், பாலங்களும், குடிநீர்த் தொட்டிகளும், ஆண்டுக் கணக்கில் பராமரிப்பு கூட இல்லாமல் இருக்கின்றன. காவிரிக் கரையில் உள்ள திருச்சி போன்ற நகரங்களில் உள்ள மக்கள் இன்னும் தண்ணீர் தேடி குடங்களோடு அலைகின்ற சூழ்நிலை.

எனவே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தி.மு.க ஆட்சி போன்று சென்னைக்கு மட்டுமே முதலிடம் தராமல் மற்ற மாவட்ட மக்களுக்கும் புதிய திட்டங்களை உருவாக்கினால் சரித்திரத்தில் அவர் பெயர் நிற்கும். அதற்கு முன்னோடியாக தமிழகத்தின் நடுவில் இருக்கும் அவரது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினால் முதல்வர் ஜெயலலிதா பெயர் சொல்லும். யாரும் எதிர்த்து பேச முடியாது. ஸ்ரீரங்கமும் சுற்றியுள்ள இடங்களும் வளர்ச்சி பெறும். மற்ற மாவட்டங்களில் சில புதிய அலுவலகங்களை  தொடங்கலாம். அனைத்து மாவட்ட மக்களும் பயனடை வார்கள். எதற்கெடுத்தாலும் சென்னையிலேயே எல்லோரும் குவிய வேண்டியதில்லை. செய்வாரா?

Saturday 12 November 2011

திருச்சி : கவிமாமணி சாந்த.முத்தையா



திருச்சியில் வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு தொடங்க வந்த போது ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளராகவே அவர் அறிமுகம் ஆனார். அழைப்பின் பேரில், அவர் பங்கேற்ற இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டேன். அப்போதுதான் அவருக்குள் இருந்த கவிதை வேகம், தமிழ் மீது கொண்ட காதல் எனக்கு தெரிய வந்தது. ஒரு சிலரைப் போல வார்த்தைகளை வெட்டி,ஒட்டி,மடக்கி எதுகை மோனை யோடு எழுதினாலே கவிதை என்று எழுதவில்லை. நல்ல கவிதைகளை உணர்வு பூர்வமாக வாசித்தார். 1936-இல் பிறந்த சாந்த. முத்தையா அவர்கள் இந்த வயதிலும் எழுதிக் கொண்டே இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது இல்லம் சென்றபோது அவர் எழுதிய கவிதை நூல்களைத் தந்தார். அந்த நூல்களிலிருந்து .. ..

கவிஞர் தான் கண்ட இயற்கையை இவ்வாறு வர்ணிக்கிறார்.

ஆற்றோரம் கரைதனிலே நடந்து சென்றேன்!
  அணியணியாய் தென்னைகளோ அடர்ந்து நிற்கும்!
நாற்புறமும் வேலியிட்ட தோட்டத் திற்குள்
  நல்லினிப்புப் பலாக்கனிகள் மரத்தில் தொங்கும்!
மேற்புறத்தே படர்ந்திருக்கும் மாம ரத்தின்
  மஞ்சள்செவ் வண்ணமாங் கனிகள் தொங்கும்!
நூற்றுக்கணக் கானகொய்யா நிறைந்து தொங்கும்!
  நன்மாது ளைகள்தா லாட்டம் ஆடும்!
                                                        (ஆற்றங் கரையினிலே, பக்கம் 1)

பாரதியார், பாரதிதாசன் என்று எல்லோரையும் பாராட்டிய கவிமாமணி அவர்கள் கண்ணதாசனை,

நல்ல தமிழ்ப்பாட்டை நாட்டில் திரைப்படத்தில்
மெல்லப் புகுத்தியவன் ; முத்தமிழில் சொல்லியவன்
பண்கள் பரிந்தொலிக்கும் பாடல்கள் பாடியவன்
கண்ணதாசன் நீதான் கவி!
                          (ஆற்றங் கரையினிலே,பக்கம் 38)
                              
என்று உச்சி முகர்கிறார்.அவரது நூல்கள் எங்கும் நல்ல தமிழ் விளையாடுகின்றது. மேலும் கவிஞர் தனது வாழ்க்கை அனுபவங் களையும், சீர்திருத்தக் கருத்துக்களையும், தலைவர்கள் பற்றியும்
கவிதைகளால் வார்த்துள்ளார்.

கவிஞர் சாந்த.முத்தையா அவர்கள் ஒரு பொறியாளர். அவர் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் “தூணக்கடவு அணை கட்டுமானப் பணியில் இருந்தபோது எழுதிய வரிகள் இதோ...

இரவுக் குளிரில் தொடர்ந்து போடும்
  கான்கிரீட்டையும் கலவி
  கான்கிரீட்டையும் நின்று
துரிதமாகப் போட வைத்து
  தளத்தை நிரப்பு வோம் உயர்
  தரத்தை  நிறுத்து வோம்!
                                     (மகிழ மலர்கள், பக்கம்.41)

கவிமாமணி சாந்த.முத்தையா எழுதிய நூல்களில் “அம்பேத்கார் காவியம் “ என்ற நூல் சிறப்பானது ( Master Piece ) ஆகும். பணியிலி ருந்து ஓய்வு பெற்றதும் இதனை எழுதியுள்ளார். அதில்,

ஊருக்கு வெளிப்புறத்தே ஒதுக்கி வைத்த
   ஊர்ச்சேரி யில்மட்டும் உறைதல் வேண்டும்!
ஊருக்குப் பொதுவான கோவி லுக்குள்
   உட்புகாமல் வெளிநின்றே வணங்க வேண்டும்!
ஊரிருக்கும் பள்ளியிலோ படிக்கச் சென்றால்
   ஓரத்து மூலையில்தான் அமர்தல் வேண்டும்!
ஊரிறந்த மாடுதூக்கிப் புதைத்தல் வேண்டும்!
   உழவாரக் கூலியென உழைத்தல் வேண்டும்!

என்று அக்கால தீண்டாமை குறித்து கண்ணீர் வடிக்கின்றார்.
(பக்கம் 2 ) நூல் முழுதும் டாக்டர் அம்பேத்கரின் வரலாறு. அம்பேத்கர் இறப்பை தாங்க மாட்டாதவராய்

தீண்டாதார் வாழ்வு யர்த்த
  தமது வாழ்க்கை யை-முற்றத்
  துறந்தவரின் மூச்சு காற்றில்
  தோய்ந்து விட்டதே1

என்று அரற்றுகிறார்.(பக்கம் 150)

கவிஞரின் நூல்கள் :
1.ஐந்தாண்டுத் திட்டத்தின் சாதனைகள்(1961) 2.சோலைப் பூக்கள் 3.காவிரி நீர் வெள்ளத்தடுப்பு பணிகளும் நீர்மேலாண்மையும் 4.மகிழ மலர்கள் 5.அம்பேத்கார் காவியம் 6.மலரும் நினைவுகள்
7.ஆற்றங்கரை தனிலே

கவிஞரின் முகவரி:
கவிஞர் Er.சாந்த.முத்தையா, 33/20 மல்லிகை இல்லம், கீதா நகர், அல்லித்துறை சாலை, திருச்சி 620 017. செல் எண்: 9843510447


Wednesday 9 November 2011

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் படும்பாடு


(Photo Thanks to Tribune photo by Sayeed Ahmed)

முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் பணம் கட்டவோ, எடுக்கவோ வங்கிக்குச் சென்றால். பணம் வாங்க, பணம் பட்டுவாடா செய்ய என்று தனித் தனியே காசாளர்கள் இருப்பார்கள். அவ்வளவாக நேரம் ஆகாது. ஆனால் இப்போதோ ஒரு நூறு ரூபாய் கட்டு வதற்கு கூட மணிக் கணக்கில் வரிசையில் நின்று கொண்டிருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நகர்ப் புறங்களில்  உள்ள வங்கிகளில் எப்போதும் காசாளர்கள் முன்பு கூட்டம்தான். சிலசமயம்  கவுண்ட ரில் ஒரே சத்தம். பின்னால் உள்ள ஊழியர்கள்,அதிகாரிகள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். வங்கிகளில் கம்ப்யூட்டர் வந்த பிறகு விரைவான சேவை என்றார்கள். முன்பை விட இப்போதுதான் அதிக தாமதம் ஏற்படுகிறது.. காரணம் என்ன?

முன்பு பழைய முறையில் பணம் வாங்க, கொடுக்க என்று தனித் தனியே கவுண்டர்கள் இருந்தன. பணம் பெற்றுக் கொள்ள ஒரு கவுண்டரில் டோக்கன் வாங்க வேண்டும். பணம் தரும் காசாளர் அழைத்ததும் டோக்கனைத் தந்து விட்டு பணத்தை (அது சிறிய தொகையாக இருந்தாலும், பெரியதொகையாக இருந்தாலும்) பெற்றுக் கொள்வார்.அதே போல் டிராஃப்ட் எடுக்க, கணக்குகளில் வரவு வைக்க, பிற கணக்குகளுக்கு மாற்றம் செய்ய பணத்தை காசாளாரிடம் கட்டிய வுடன் அவர், பணம் கட்டிய ரசீதை பின்னால் உள்ள ஊழியர்களுக்கு அனுப்பி வைப்பார். வேலை முடிந்துவிடும். கம்ப்யூட்டர் வந்த பிறகும் இது நடைமுறையில்  இருந்து வந்தது. வாடிக்கையாளர் சேவை என்பது நன்றாகவே இருந்தது.

ஆனால் இப்போது முன்னால் உள்ள ஒரே ஊழியரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.அதாவது வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்துச் சேவையும் பெறுவர். காசாளரே பணம் வாங்கி, அவரே கணக்குப் புத்தகத்தையும் பதிவு செய்ய வேண்டும்.டிராஃப்ட் டிற்கு அவரே பணம் வாங்கி அவரே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த வேலை முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. சில சமயம் CONNECTIVITY FAILURE என்று அறிவிப்பு பலகை மாட்டி விடுவார்கள். மணிக் கணக்கில் நின்று கொண்டு இருக்கும் ஒரு நூறு ரூபாய் கட்டுபவர் கோபப் படாமல் இருக்க முடியாது. நம் நாட்டில் எல்லா வங்கிகளிலும் இந்த ஒற்றைச் சாளர அமைப்பு ( SINGLE WINDOW SYSTEM ) நடைமுறையில் உள்ளது. அதாவது ஒருவரே பருத்தியில் பஞ்செடுத்து  நூல் நூற்று அவரே நெய்து அவரே சட்டை தைத்து கொடுப்பது போல.இதனால் கால விரயம்தான் அதிகம். இந்த முறையை மற்ற சில அலுவலகங்களும் பின்பற்றுகின்றன.

இப்போது வங்கி வாடிக்கையாளர்கள் அதிகமாகி விட்டனர். தனியார், அரசு என்று எல்லா ஊழியர்களுக்கும் வங்கி மூலம் தான் சம்பள பட்டுவாடா நடைபெறுகிறது. என்னதான் ATM மூலம் பணம் எடுத்தாலும் சில பண பரிமாற்றங்களுக்கு வங்கியின் கிளைக்கு போய்த்தான் ஆக வேண்டியுள்ளது. எனவே வாடிக்கை யாளரை அதிகம் சிரமப்படுத்தாத பழைய முறையையே கம்ப்யூட்டர் முறையில் வங்கியில் கொண்டு வந்தால் நல்லது. வாடிக்கையாளர்களும் ஒரு சிறிய தொகைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. வேலையும் சுலபமாக முடியும்.

Monday 7 November 2011

கலைஞர் கருணாநிதி குறளோவியத்திற்கு தடை!


கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தை மாற்றி ஆஸ்பத்திரி கொண்டு வரப் போகிறார்கள் என்றவுடன் குதி குதியென்று குதித்தார்கள். இப்போது ஒன்றுமே சத்தம் இல்லை. கோர்ட்டில் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மேல் சபை ஒழிப்பு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. கருணாநிதிக்கு வேண்டிய தமிழ்ப் புலவர்கள் அறிவு ஜீவிகளூக்கு இடமில்லையா என்று சலசலத்தார்கள்.  இதே போல்தான் தலைமைச் செயலகம் மாற்றம் என்றவுடன் ஏதோ உலகமே புரண்டது போல கூப்பாடு எழுந்தது. கொஞ்ச நாள்தான். அப்புறம் உள்ளாட்சி தேர்தல் வந்தவுடன் எல்லோரும்  தோளில் துண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார்கள். சமச்சீர் கல்வி விஷயத்தில்  சிலர் உச்ச நீதி மன்றம் வரை துரத்திக் கொண்டே சென்றதால் ஏதோ தப்பியது. தமிழ் நாட்டில் வேறு எந்த வேலையும் இல்லாமல் கருணாநிதியையே நினைத்து கொண்டு காரியங்கள் நடை பெறுகின்றன. என்ன காரணம்?

ஒரு சமயம் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் உச்ச கட்டத்தில் இருந்தது. அப்போது நன்றாக பேசும் மேடைப் பேச்சா ளர்களுக்கு நல்ல கூட்டம். காங்கிரஸை விட தி.மு.க.வில்மேடைப் பேச்சாளர்கள் அதிகம். ஒரு சோடாவையோ அல்லது ஒரு சிங்கிள் டீயையோ குடித்து விட்டு மணிக் கணக்கில் பேசிக் கொண்டு இருப்பார்கள். காமராஜரையும், கக்கனையும், சம்பத்தை யும், பக்தவச்சலத்தையும் பற்றி அப்படி விமர்சிப்பார்கள். கண்ணதாசன் மேடைகளில் படாதபாடு பட்டார். அதன் எதிரொலிதான் இன்றைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கடுமையான விமர்சனம்.

எம்ஜிஆருக்குப் பின் இப்போது ஜெயலலிதாவை முன்னிறுத்தி கருணாநிதி எதிர்ப்பு அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் கருணாநிதியின் அரசியல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் களாக அல்லது பழி வாங்கப் பட்டவர்களாக இருந்திருப்பார்கள். .அந்த வெறுப்பில் கருணாநிதியின் பெயரை தமிழ் நாட்டிலிருந்து நீக்கி விட்டால் தங்கள் பகையும் பழி வாங்கும் உணர்ச்சியும் தீர்ந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதா மூலம் தங்கள் நப்பாசையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்  சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைப் பவர்கள்.

இதைப் போன்ற காரியங்கள் எம்ஜிஆர் ஆட்சியிலும் நடந்தன. அப்போது கருணாநிதி குறளோவியம் எழுதிக் கொண்டு இருந்தார். கருணாநிதி திருக்குறளுக்கு உரை எழுதுவதா? பார்த்தார்கள். எம்ஜிஆர் காதில் போட்டார்கள். உடனே அவரும் திருக்குறளுக்கு ஏற்கனவே நிறைய உரைகள் இருக்கின்றன. புதிதாக யாரும்  எழுத வேண்டியதில்லை என்று சட்டம் கொண்டு வரப்படும் என்றார். நல்லவேளை அந்த பைத்தியகார காரியத்தை அவர் செய்யவில்லை ஒருவேளை எம்ஜிஆர் அதனை சட்டமாக்க சட்டசபையில் முயற்சி செய்திருந்தால் கூட நிறைய பேர் கை தூக்கி இருப்பார்கள். கருணாநிதி எம்.எல்.சி ஆக மேல் சபையில் இருந்த நேரம். எம்ஜிஆருக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவை மேல் சபையில் எம்.எல்.சி ஆக்க வேண்டும் என்று ஒரு ஆசை. யாரோ ஒரு புண்ணியவான் நிர்மலாவின் இன்கம் டாக்ஸ் விஷயத்தை கிளறி கோர்ட்டுக்குப் போக அவர் மேல் சபைக்கு போக முடியவில்லை. இதற்கு எல்லாம் காரணம் கருணாநிதி என்று எம்ஜிஆர் நினைத்தார். வெண்ணிற ஆடை நிர்மலா எம்.எல்.சி ஆக நுழைய முடியாத ஒரு மேல் சபை தேவையா? அந்த சபையையே தமிழ்நாட்டில் இல்லாது செய்தார் எம்ஜிஆர். கருணாநிதியும் எம்.எல்.சி பதவியை இழந்தார்.

கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது, இன்னும் அவருக்கென்று
உள்ள  ஒரு செல்வாக்கையே காட்டுகிறது. செல்வாக்கு இல்லை என்றால், அவரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?


Thursday 3 November 2011

ஓம் சக்தி தீபாவளி மலர் ( 2011 )


தீபாவளி மலர் என்றாலே அழகிய வண்ணப் படங்களும்,கதை, கட்டுரை, கவிதை என்று பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பின ரையும் படிக்க வைக்கும். இந்த ஆண்டு (2011) நவம்பர் மாதம் வந்துள்ள ஓம் சக்தி (ஆசிரியர் நா.மகாலிங்கம்) மாத இதழ் தீபாவளி மலராக பழமை
யும், புதுமையும் கலந்து வெளி வந்துள்ளது.

பூமியில் ஆப்பம் சுட்டுக் கொண்டிருந்த அவ்வைப் பாட்டி நிலாவுக்கு எப்படி போனார்?. பழைய அவ்வையார் கதைகளை தனக்கே உரிய நடையில் நகைச் சுவையாக தருகிறார் கி.ராஜநாராயணன். கூச்சலும் குழப்பமுமாக இருந்த பாராளுமன்ற கூட்டங்களை பொறுமையுடன் நடத்திய முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் சுவையான பேட்டிக்கட்டுரை. நெல்லை முத்து என்பவரின் கட்டுரையில் எதேச்சையாகவும், தற்செயலாகவும் எப்படி விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு வந்தது என்பதனை இயல்பாகச் சொல்லு கிறார். கல்லாடத்தில் உள்ள இசைக் குறிப்புகள் குறித்து கன்னியாஸ்திரி டாக்டர் மார்கரெட் பாஸ்டின் ஒலிக்கிறார். கொச்சி சமஸ் தானத்தில் நிலவிய சமூக வேறுபாடுகளை ஏ.எம்.சாலன் என்பவர் தொகுத்து அளித் துள்ளார்.

நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் நா,மகாலிங்கம் அவர்கள் “கிராமத்து வறுமை போக்கும் திட்டம் எது?என்று கேள்வி கேட்கிறார்.  அந்த காலத்து ரயில்வே குவாட்டர்ஸ், டிஸ்பென்சரி, ரயிவே ஊழியர்கள் என்று அசோகமித்திரன் இழுத்துச் செல்கிறார்.. சில சமயம் சிலருக்கு யாரோ காதுக்குள் யாரோ பேசுவது போல் இருக்கும்.இதனை வழக்கம் போல கேலி செய்து நகைச்சுவை பண்ணுகிறார், பாக்கியம் ராமசாமி. இன்னும் தமிழ் எழுத்துலகில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிரம்பி வழிகின்றது. எழுத்தாளர்களின் புகைப் படங்களை அவர்களது படைப்புகளின் பக்கங்களிலேயே வெளியிட்டு இருப்பது ஓம் சக்தி தீபாவளி மலரின் தனிச் சிறப்பு ஆகும். இதனால் எழுத்தாளர்களின் முகங்களைக் காணலாம்.


மேலும் சக்தி தீபாவளி மலரில் எதிபார்த்ததைப் போலவே வண்ண வண்ண படங்கள் விரவிக் கிடக்கின்றன. கட்டுரைகளுக்கு ஏற்ற புகைப் படங்கள் மின்னுகின்றன. விளம்பரதாரர் படங்களும் அவ்வாறே. நூலின் விலை அதிகமில்லை. ரூபாய் 70 மட்டுமே. இலக்கிய விருந்து படைத்திட்ட ஓம் சக்தி பணி தொடரட்டும். 








Tuesday 1 November 2011

எம்ஜிஆரின் “டெல்லிக்கு தலை வணங்கு”


திமுக வில் எம்ஜிஆர் இருந்தபோது அவர் புரட்சி நடிகர். இந்த  பட்டத்தை அவருக்கு தந்தவர் கலைஞர் கருணாநிதி. இருவருமே திரையுலகிலிருந்து வந்தவர்கள். இவர்களால் திமுக வளர்ந்தது. திமுகவால் இவர்கள் வளர்ந்தனர். தொழில் முறையாலும், ஒரே கட்சிக் காரர்கள் என்பதாலும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் என்னவோ திமுகவாக இருந்தாலும் அப்போதைய பட அதிபர்கள் பலரும் காங்கிரஸ் காரர்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரனாக இருப்பதில் அவர்களுக்கு பல அனுகூலங்கள். படம் எப்படி எடுத்தால் காசு பார்க்கலாம் என்பது இவர்களுக்கு அத்துபடி. எனவே அவர்கள் இவர்கள் இருவரையும்வைத்து படம் பண்ணினார்கள். நஷ்டம் வராத வியாபாரம்தான் முக்கியம்.மேலும் அப்போது மக்களிடையே திமுக நல்ல ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ந்து இருந்தது. எனவே பல பட அதிபர்கள் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் சொன்னபடி காட்சிகளை அமைத்தார்கள் பாடல்களைஅமைத்தார்கள். அதே போல் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களையும் படங்களில் அனுமதித்தார்கள். படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

1967 சட்ட மன்ற தேர்தல் தொடங்கி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலவில்லை.தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கேரளா,ஆந்திரா,கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அமையவில்லை. தமிழ் நாட்டில் திமுக இருக்கும் வரை இது நடக்காது. மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் காங்கிரஸை யோசிக்க வைத்தது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, இல்லையேல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் ஆட்சி.. திமுகவை உடைத்தால் ஒழிய கதை ஒன்றும் ஆகப் போவது இல்லை. அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி .பாகிஸ்தானையே இரண்டாக உடைத்தெறிந்த அம்மையாருக்கு திமுக எம்மாத்திரம்?

எம்ஜிஆர் தனக்கென்று ஒரு பிம்பம் (image) திரைப் படங்களில் உருவாக்கி வைத்து இருந்தார். இவர் நடிக்கும் படங்களில் வெற்றிலை பாக்கு போட மாட்டார், மது அருந்த மாட்டார், நியாயத்திற்காக சண்டை போடுவார், அம்மாவை தெய்வமாக நினைப்பார்,பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் , எல்லாவற்றிலும் நியாயவானாக நடந்து கொள்வார். தனது சொந்த வாழ்க்கையிலும் அவர் இவைகளைக் கடைபிடிப்பதாக எம்ஜிஆரின் ரசிகர்கள் நினைத்தனர்.இதனால் கட்சியில் எம்ஜிஆருக்காக மிகப் பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் (Mass)  இருந்தது. இந்தஆதரவாளர் களை குறி வைத்து டெல்லியில் காய் நகர்த்தினார்கள். எம்ஜிஆருக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர்கள் மூலம் சில செய்திகள்சொல்லப்பட்டன. ஆரம்பத்தில் மறுத்த எம்ஜிஆர்  தனது இமேஜ், மேல்மட்ட அரசியல் வாதிகளால், கெட்டுப் போவதை விரும்பவில்லை. மேலும் தனிப்பட்ட முறையில் வரும் மத்திய அரசாங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தயங்கினார். என்வே தனிக் கட்சி (1972 இல்) தொடங்கினார். அரசியலில் வெற்றியும் பெற்றார்.

இதனால் அவர் மக்களின் பெரும் ஆதரவு பெற்ற முதலமைச்சர் (1977- 1987) ஆனபோதும் கூட மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியையே ஆதரித்தார். 1977-இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரித்தார். இந்திரா காந்தி பதவியிழக்கும் படியான சூழ் நிலையில் மத்தியில் ஜனதா கட்சி (1977) ஆட்சிக்கு வந்தது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். எனவே ஆட்சி மாறியதும் காங்கிரஸின் எதிரியான மொரார்ஜியை ஆதரித்தார் எம்ஜிஆர். 

இதனிடையே தஞ்சாவூர் பாராளுமன்ற  தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட நினைத்த இந்திரா காந்தி அம்மையாருக்கு எம்ஜிஆர்  மத்திய அரசு பயம் காரணமாக ஆதரவு தரவில்லை. மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் ஆட்சி (1979) வந்தபோது சரண்சிங்கின் கட்சிக்கு எம்ஜிஆர் ஆதரவு தந்தார். அந்த மந்திரிசபையில் பாலா பழனூர், சத்தியவாணிமுத்து ஆகியோர் அதிமுக சார்பாக மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.. கொஞ்ச நாள்தான். சரண்சிங்கும்கவிழ்ந்தார்.  காங்கிரஸ் மீண்டும் (1980) வந்தபோது திரும்ப காங்கிரஸை ஆதரித்தார். 


ஆக மத்தியில் எந்த கட்சிஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியோடு இணக்கமான  உறவு என்பதே எம்ஜிஆரின் அரசியல் பார்முலா. 
அதுதான் “டெல்லிக்கு தலை வணங்கு”