Showing posts with label அரவாணி. Show all posts
Showing posts with label அரவாணி. Show all posts

Monday, 17 September 2012

அரவாணி என்ற பெயர்க் காரணம்.




நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்திற்கு சென்றபோது வித்தியாசமான ஒரு உறவினரைப் பார்த்தேன். சிறுவனான எனக்கு அவரின் பேச்சும் நடவடிக்கையும் வினோதமாக இருந்தன. ஆள் வாட்ட சாட்டமாக நல்ல உயரம். தலைக்கு கிராப்பு. ஆனால் மீசை வைத்துக் கொள்ள மாட்டார். பெரும்பாலும் வேட்டியும் கைவைத்த வெள்ளை பனியனும்தான். பனியன் மேல் ஒரு பெரிய துண்டை பெண்கள் மாராக்கு போடுவது போல் போட்டுக் கொள்வார். நெளிந்து நெளிந்து நடப்பார். குரலும் வித்தியாசமாக இருக்கும். கிராமத்திற்கு வெளியே சாமான்கள் வாங்கச் சென்றால், பெண்கள் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொள்வதைப் போல, ஒரு கூடையை வைத்துக் கொள்வார். கிராமத்தில் பெண்கள் மத்தியில் வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பது அவர்கள் கூந்தலில் சிக்கல் எடுப்பது பேன் பார்ப்பது என்று இருப்பார். அவருக்கென்று ஒரு பெயர் இருந்தபோதும் ஊரில் எல்லோரும் அவரை பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. அவரும் அதைப் பற்றி கவலைப்பட்டது கிடையாது. இந்த நிலையிலும் அவரை ஒரு சொந்தக்கார பெண் திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் இல்லாததால் தம்பியின் குழந்தைகளை தன் பிள்ளைகளாக வளர்த்தார்.

திருநங்கை என்ற பெயர்:

தமிழ்நாட்டில் இந்து சமயத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்த பெரியவர். ஸ்ரீராமானுஜர். வைணவனாகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே,  இங்கு ஏற்றத்தாழ்வு கிடையாது என்று சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களை திருக்குலத்தார் என்று அழைத்தார். அவர் திருக்குலத்தார் என்று முன்பு அழைத்த பெயரைப் போன்று இப்போது திருநங்கை என்ற பெயர் வந்துள்ளது.   முன்பு அரவாணிகள் என்றும் அலிகள்  என்றும் தமிழ்நாட்டில் அழைக்கப்பட்டவர்களை இப்போது திருநங்கைகள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்..

அரவான்  கதை:

பஞ்சபாண்டவர்கள் நாடு நகரம் இழந்து வனவாசம் செல்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவனான அர்ச்சுனன் மட்டும் தீர்த்தயாத்திரை செல்லும் நிலை வருகிறது. அர்ச்சுனன் பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டு கங்கைநதி உற்பத்தி ஆகும் இடத்திற்கு வந்து நீராடுகிறான். அப்போது அவனது அழகில் மயங்கிய உலூபி என்னும் நாகக்கன்னி அவனை இழுத்துக் கொண்டு நாகலோகம் சென்றுவிடுகிறாள். அர்ச்சுனனும் ஒரு காதல் மன்னன். அங்கு இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.  அங்கேயே இருவரும் வாழ்க்கை நடத்துகின்றனர். அப்போது அவர்கள் இருவருக்கும் பிறந்தவன்தான் இளவரசன் அரவான் . பின்னர் அர்ச்சுனன் அவர்கள் இருவரையும் நாகலோகத்தில் இருக்கச் செய்துவிட்டு தனது இருப்பிடம் அடைகிறான்.

பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு மீண்டும் தாங்கள் இழந்த நாடு நகரம் அடைய கௌரவர்களுடன் போர் செய்ய வேண்டியதாயிற்று. மகாபாரதப் போர் தொடங்கியதை கேள்விப்பட்ட, நாகலோகத்தில் இருந்த அரவான் தனது தந்தை அர்ச்சுனனோடு சேர்ந்து போர் செய்ய கிளம்புகிறான். அவனது தாய்  உலூபி அர்ச்சுனன் அழைத்தால் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் என்று அவனைத் தடுத்துவிட்டாள்.

எல்லோரும் எதிர்பார்த்த  பாரதப்போர் தொடங்குகிறது. போர் தொடங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டிய சடங்குகள் செய்கின்றனர். அந்நாளில் போரில் வெற்றிபெற காளிதேவியை வணங்கி அங்ககுறைபாடு இல்லாத ஒருவரை நரபலி கொடுப்பது வழக்கமாக இருந்தது. எனவே நாகலோகத்தில் இருக்கும் அர்ச்சுனனது மகன்  அரவான் தகுதியாவன் என்று அவனை அழைத்து விவரம் சொல்லுகின்றனர். அது கேட்ட அரவானும் தனது தந்தைக்காக தன்னை களப்பலியாக்கிக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறான். அதற்கு இரண்டு வரங்கள் கேட்கிறான்.1. தனக்கு நரபலி கொடுக்கும் முன்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும். 2. இறந்த பின்பும் துண்டிக்கப்பட்ட தனது தலை போர் முழுவதையும் காணும் சக்தி வேண்டும் என்றும் கேட்கிறான். இதற்கு கிருஷ்ணனும் ஒத்துக் கொள்கிறான். முதல் நாள் திருமணம் செய்து கொண்டு அடுத்த நாள் மரணமடையப் போகும் ஒருவனை எந்த பெண்ணும் மணக்க முன் வரவில்லை. எனவே கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து கொள்கிறார். அடுத்த நாள் களப்பலி ஆகிறான் அரவான். அவன் கேட்டபடி அரவானின் தலை பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரினைக் காணுகிறது. இதனால்தான் அரவான் வழிபாட்டில் வெட்டுண்ட தலை மட்டும் இருக்கிறது.

வில்லிபுத்தூரார் எழுதிய வில்லிபாரதம் என்ற நூலில் அரவான் களப்பலி பற்றி சில பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. வில்லிபாரதத்தில் அரவான் என்ற பாத்திரம் இராவான் என்று அழைக்கப்படுகிறது.

( காளி கோயில் முன்னர் இராவான் தன்னைப்  பலி கொடுத்தல் )

அவ் வரம் அவற்கு நல்கி, அத் தினத்து, அவ் இராவில்,
தெவ்வரை ஒளித்து, தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்;
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ

                                             -  வில்லிபாரதம் (களப்பலியூட்டுச் சருக்கம்)

அரவாணி என்ற பெயர்:

பொதுவாகவே நமது நாட்டில் நாட்டார் வழக்கத்தில் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகளில் வரும் கதாபாத்திரங்களையும் இடங்களையும் இணைத்துச் சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. உதாரணமாக பஞ்சபாண்டவர் ரதம் ( மகாபலிபுரத்தில் உள்ளது )  வாலி கண்டபுரம் ( பெரம்பலூர்),  பஞ்சவடி( புதுச்சேரி) முதலானவற்றை சொல்லலாம்.

ஆணாகிய கிருஷ்ணன் அரவானுக்காக ஒருநாள் பெண்ணாக மாறுகிறார். அவன் இறந்தவுடன் ஒரு மனைவி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்கிறார். இங்கே கிருஷ்ணன் அரவானுக்காக எடுத்த வடிவம்தான் அரவானின் பெயரோடு சம்பந்தப்பட்டு அரவாணி என்று அழைக்கப் படுகிறது. அரவு, அரவம் என்றால் பாம்பு என்று பொருள். ( அரவு > அரவம் > அரவான் >அரவாணி)

மேலும் நாகவழிபாடு என்பது நமது நாட்டில் தொன்மையானது. அரவான் நாகலோகத்தில் வாழும் உலூபி என்னும் நாககன்னிகை மகன். அரவ இளவரசன் என்பதால் அரவான். அரவானை மணந்த மோகினி அரவாணி. எனவேதான் அரவாணிகள் தங்களை கிருஷ்ணரின் மறுவடிவமாக எண்ணி (விழுப்புரம் அருகே உள்ள) கூவாகம் என்ற ஊரில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சடங்குகள் செய்கின்றனர் 

மூடநம்பிக்கை:

மேலெழுந்தவாறு பார்க்கையில் களப்பலி என்பது ஒரு சடங்கு போன்று தெரிந்தாலும் உண்மையில் அது ஒரு நரபலியாகும். அதனை நிலைநிறுத்துவது போல் சிலர் அதனை தியாகம் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். நரபலி என்பது ஒரு மூடநம்பிக்கை. நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும், நோய் தீரும், மற்றவர்கள் செய்து வைத்த பில்லி சூன்யம் தீரும், வெற்றி கிடைக்கும்  என்ற மூட நம்பிக்கையின் காரணமாக, இன்னும் சிலர் இதுமாதிரியான காரியங்களை செய்து வருகின்றனர். இது தவறு.




(ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ”)