Friday 30 September 2011

கலைஞர் கருணாநிதியை கவிழ்த்த டெல்லி அரசியல்


பொதுவாக வட இந்திய அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து யார் வந்து டெல்லியில் நாட்டாமை செய்தாலும் அவர்களுக்கு பிடிக்காது.இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் திட்டிக் கொள்வார்கள்.ஆனால் ஊழல் குற்றசாட்டில் உள்ளேபிடித்துப் போடும் அளவுக்கு பெரிதாக எதுவும் நடந்து விடாது.

ஒரு முறை கருணாநிதியிடம் நீங்கள் ஏன் பிரதமர் பதவிக்கு ஆசைப் படவில்லை என்று கேட்டபோது “என் உயரம் எனக்கு தெரியும்என்று பதிலளித்தார்.இவ்வாறெல்லாம் உஷாராக இருந்தவர் டெல்லி அரசியலில் சிக்கியது வருத்தமான விஷயம்தான். பி.ஜே.பியும் சரி காங்கிரசும் சரி ஆட்சிக் கட்டில் ஆடாமல் இருக்க கருணாநிதியின் ஆதரவைத்தான் எதிர்பார்த்தனர்.உள்ளே நுழைந்து நாட்டாமை செய்வதை விரும்பவில்லை.ஆனால் கருணாநிதி சிலரை நம்பி டெல்லி அரசியலில் நுழைந்தது தப்பாக போய் விட்டது. கற்றுக் குட்டிகளுக்கு பெரிய பதவிகளை வாங்கிக் கொடுத்ததும் ஒரு காரணமாகிவிட்டது.அவர்கள் போனில் பேசக் கூடாதவர்களிடம் பேசி சிக்கலில் சிக்கிவிட்டனர்.

ஊழல் என்றால் “ஸ்பெக்ட்ரம்மட்டும்தான் ஊழலா?வேறு எதிலும் ஒன்றுமே நடக்கவில்லையா?இதை இந்த அளவுக்கு ஊதிக் கொண்டே போகக் காரணம் இதில் இழுத்து விடப்பட்டவர்கள் தமிழ் நாட்டு அரசியலை விட்டு டெல்லி அரசியலில் மூக்கை நுழைத்தவர்கள்.முக்கியமான பதவிக்காரர்கள்.இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் அடிபட்ட பெயர் நீரா ராடியா.இவர் பல அரசியல் கட்சிகளுக்கு(எந்த ஆட்சி வந்தாலும்) நன்கு பரிச்சயமானவர்..இவரைப் பற்றிய பேச்சே இப்போது இல்லை.

மாநிலத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி மத்தியில் ஆதரவு மட்டும் என்ற நிலைப்பாட்டினை கலைஞர் கருணாநிதி எடுத்து இருந்தால் இன்றைய நிலைமை  தி.மு.க வுக்கு வந்து இருக்காது.



Wednesday 28 September 2011

நீங்கள் என்ன ஜாதி?


நீங்கள் என்ன ஜாதி?..........
தெரிந்தோ தெரியாமலோ தமிழ் நாட்டில் எந்த விஷயத்திற்கும் ஜாதிதான் அளவு கோலாக உள்ளது.ஒரு இடத்திற்கு ஒரு அதிகாரியை நியமனம் செய்தால் போதும், பலர் விசாரித்து வைத்துகொள்வது அந்த மனிதர் நம்ம ஆள்தானேஎன்பதுதான்.வெளியே மட்டும் தமிழ் தமிழன் என்று பீற்றிக் கொள்வார்கள்.அதே போல உள்ளூர் பள்ளி, வங்கி, தபால் அலுவலகம், போலிஸ் ஸ்டேஷன் என்று எதனையும் விட்டு வைக்க மாட்டார்கள்.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் லஞசம் வாங்கும் ஆசாமிகள் ஜாதி பார்த்து தள்ளுபடி ஏதும் செய்யப் போவதில்லை.
நீங்கள் ஒரு இடத்திற்கு குடி போனாலோ அல்லது புதிதாக வேலைக்கு போனாலோ அங்கிருப்பவர்களுக்கு உங்கள் ஜாதியை
தெரிந்து கொள்ளாவிடில் தலையே வெடித்து விடும்.சிலர் நேரிடையாகவே நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டு விடுவார்கள்.சிலர் சுற்றி வளைத்து உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டுவிட்டு, கடைசியாக அந்த ஊரில் இவருக்கு தெரிந்த சிலரைப் பற்றி கேள்விகேட்டு நம்மை கிண்டுவார்கள்.
ஒவ்வொரு ஜாதியிலும அழகும் படிப்பும் குணமும் இருந்தும் பணவசதி இல்லாத காரணத்தால் மணமாகாத பெண்கள் உண்டு. அதே போல இளம் விதவைகளும் உண்டு.சரி நம்ம ஜாதிப் பெண்ணாயிற்றே என்று இவர்களுக்கு இந்த ஜாதி அபிமானிகள் வாழ்க்கை கொடுக்க வருவதில்லை.கவலைப் படுவதும் கிடையாது.அதேபோல எந்த ஜாதி தலைவரும் தன்னுடைய சொந்த ஜாதியிலேயே தன் வீட்டு பிள்ளைகள் ஏழைப் பெண்ணை மணந்து கொள்வார்கள் என்றோ அல்லது விதவை மறுமணம் செய்வார்கள் என்றோ சொல்லமாட்டார்கள்.அப்போது ஜாதிக்குள் ஜாதி.பணக்கார ஜாதி.

ஆனாலும் எல்லோரும் சொல்லிக்கொள்வது தமிழ் – தமிழன்.

(குறிப்பு:வேறு ஒரு வலைப் பதிவில் புனை பெயரில் என்னால் எழுதப்பட்டது.)




Monday 26 September 2011

கட்டாய ஹெல்மெட் சட்டம்


நடந்து முடிந்த 2011- சட்ட மன்ற தேர்தலில் பலருடைய ஓட்டு தி.மு.க.விற்கு விழாமல் போனதற்கு, மின்சார வெட்டிற்கு அடுத்தபடியாக, இந்த சட்டமும் ஒரு காரணம்.. பெரும்பாலும் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஹெல்மெட் அணிவதையும் போகும் இடமெல்லாம் ஹெல்மெட்டை சுமந்து செல்வதையும் விரும்பவில்லை.வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் சொல்லவே வேண்டாம்.ஆனால் தேர்தல் சமயத்தில் போலீசார் இந்த சட்டத்தை ரொம்பவும் கடுமையாக கையாண்டனர்.சிலர் இந்த சட்டத்தை வைத்து காசு பார்க்கவும் செய்தனர்.

பெரும்பாலான நடுத்தர மக்கள் சொந்த உபயோகத்திற்கு வைத்து இருப்பது இரு சக்கர வாகனங்களைத்தான்.கடைக்குச் செல்ல,காய்கறிகள் வாங்க,பிள்ளைகளை பள்ளிகளில் கொண்டு விட,அலுவலகம் செல்ல என்று அனைத்து அவசரமான மற்றும் முக்கிய வேலைகளுக்கும் சாதாரண நடுத்தர மக்கள்
மொபட்,ஸ்கூட்டர்,பைக் என்று இரு சக்கர வாகனங்களைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. காவல் துறையினர் எப்போது ஹெல்மெட் போடாதவர்களைப் பிடிப்பார்கள் அல்லது விடுவார்கள் என்று தெரியவில்லை. சிலபேரை அபராதம் செய்கின்றனர்.சிலபேரை விட்டு விடுகின்றனர்.ஹெல்மெட் அணிவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன கட்டாய ஹெல்மெட் சட்டம் உண்மையில் மக்களை அரசின் மீது வெறுப்பு கொள்ளவே செய்கிறது. முன்பும் இதே போல் சைக்கிளில் செல்பவர்களிடம் இருவர் செல்லக்கூடாது என்றும் விளக்கு, பிரேக் உள்ளதா என்றும் தொந்தரவுகள் செய்தனர். எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஆட்சியில் இந்த விதிமுறைகளை நீக்கி  நடுத்தர மக்கள் குறிப்பாக கிராம மக்கள், போலீஸ் பயமின்றி சைக்கிள்களை ஓட்ட வழி வகுத்தார்.

இந்த பதிவிற்காக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் என் மீது பாயலாம்.  

Friday 23 September 2011

தங்க நாற்கரச் சாலை வந்த பிறகு.............


சாலையிலே புளியமரம்... ஜமீன்தாரு வச்ச மரம்என்று ஒரு பழைய பாடல் இலங்கை வானொலியில் முன்பெல்லாம் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.இப்போது அந்த பாடலை கேட்கவே முடிவதில்லை என்பதோடு சாலையில் இருந்த புளிய மரங்களையெல்லாம் நான்கு வழிச்சாலை என்ற பெயரில்
பிடுங்கி எறிந்து விட்டார்கள்.வாஜ்பாயின் கனவுத் திட்டமான “தங்க நாற்கர சாலை திட்டம் நல்ல திட்டம். நாடு பொருளாதார மேம்பாடு அடைய சாலைகளை இணைக்கும் திட்டமாகும்.நல்ல நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட இந்த சாலைகள் வந்த பிறகு மக்கள் கொத்து கொத்தாக விபத்தில் இறக்கின்றனர்.இதைப் பற்றி ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

முன்பெல்லாம் சாலைகளில் வளைவுகள் அதிகம். பயந்து பயந்தும் பார்த்து பார்த்தும் வண்டிகளை ஓட்டினார்கள்.இப்போது தொடக்கம் முதல் கடைசி வரை வேகம்...வேகம்..வேகம்தான். “U”- திருப்பம் வரை சென்று திரும்ப நிறைய பேருக்கு பொறுமை கிடையாது.அப்படியே திரும்பி ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் வருகின்றனர்.அந்த பாதையில் ஒழுங்காக வருபவர்கள் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது.செல் போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்து குறித்து நிறையபேர் பக்கம் பக்கமாக எழுதிவிட்டனர். செல்போன் அடிமைகள் யாரும் கேட்பதாக இல்லை.

நகர்ப்புறச் சாலைகளில் நின்று கொண்டு சாலை விதிகளை மீறுவோர் மீது கவனம் செலுத்தும் போலீஸார் ஏனோ நான்கு வழிச் சாலைகளில் கண்டுகொள்வது கிடையாது.விபத்துக்களை குறைக்க கடும் நடவடிக்கை தேவை என்பதோடு, மக்கள் மத்தியிலும் நான்குவழிச் சாலைகளைப் பற்றிய விழிப்புணர்வும் தேவை.

Monday 19 September 2011

நடந்தாய் வாழி காவேரி கரையில் நடக்கவே முடியவில்லை!


நடந்தாய் வாழி காவேரிஎன்று பாடியபடி காவிரியின் தொடக்கம்
குடகுமலை தலைக்காவிரி முதல் கடலில் கலக்கும் காவிரிபூம்பட்டினம் வரை இரு கரைகளிலும் நடை போடும் காலம் என்று ஒரு காலம் இருந்தது.கோவலனும் கண்ணகியும் கூட காவிரி கரை வழியாக திருவரங்கம் வந்து மதுரை சென்றதாக சொல்லுவார்கள்.ஆறுகளின் இரண்டு கரைகளும்,ஏரி குளம் இவற்றின் நான்கு கரைகளும் அவைகளுக்கே இயற்கைக்கே சொந்தம்.

ஆனால் இப்போது நிலைமை என்ன?கிட்டதட்ட கரைகளே கிடையாது.கரைகளில் ஆக்கிரமிப்பு செய்து ஆறுகளில் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர்.பல இடங்களில் பட்டாவே போட்டு விட்டனர்.ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சம்பதப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கரைகளை ஜீப்பில் வந்து கண்காணிப்பார்கள்.ஆறு ஏரி குளம் இவைகள் பாதுகாப்பாக இருந்தன.இப்போது இவைகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அசுத்தப்பட்டு கிடக்கின்றன.ஊரிலுள்ள இறைச்சிக் கடை கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள்,செப்டிக் டேங்க் கழிவு நீர்கள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகின்றன.கரைகளை சீர் செய்யவோ பலப்படுத்தவோ முடியாத நிலைமை.இதனால் மழைகாலங்களில் ஒரு சின்ன மழை பெய்தால் கூட ஊருக்குள் வெள்ளம்.

நீர் நிலைகளை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அந்தந்த ஊர் மக்களே இதனைச் செய்தால் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாகும்.