போட்டோ ஸ்கேப் (PhotoScape) உதவியுடன் தமிழ் இலக்கியம் - பாடல் வரிகள், பொன்மொழிகள் எழுதப்பட்ட படங்கள் அவ்வப்போது இங்கு வெளியிடப்படும்.
(வலையுலகில் என்னால் முடிந்த தமிழ்ப் பணி.)
பிற்சேர்க்கை (21.04.2016):
திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மேலே உள்ள
புறநானூற்றுப் பாடலுக்கான தெளிவுரை இங்கே தந்துள்ளேன்.
தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. -
புறநானூறு 189
( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார் )
இதன் எளிமையான பொருள்: -
ஒரு குடைக்கீழ் அமர்ந்து இந்த உலகம் முழுவதும்
ஆளும் மன்னனும், இரவு பகல் என்றும் பாராது அலைந்து திரிந்து வேட்டையாடும் கல்லாத வறியவனும்,
உண்பது நாழி அளவுதான்( நாழி என்பது ஒரு முகத்தல்
அளவு); உடுப்பது மேலாடை, கீழாடை என்ற இரண்டுதான். இவை போன்றே மற்ற எல்லாத் தேவைகளும்.
எனவே செல்வத்துப் பயன் என்பது (தன் தேவைக்குப் போக மீதி உள்ளதை) இல்லாதவருக்கு வழங்குதல்
ஆகும். நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம் என்று வைத்துக் கொண்டாலும், கிடைக்காமல் போவது
பல ஆகும் ( அனுபவிப்பது சிலதான்)