Showing posts with label புத்தூர் குழுமாயி. Show all posts
Showing posts with label புத்தூர் குழுமாயி. Show all posts

Thursday, 19 December 2013

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்


திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோயில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலும் ஒன்று. (படம்.1) திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோயிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப் படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.

கோயில் அமைந்துள்ள இடம்:

திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் தொட்டிப் பாலம் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல புத்தூர் நாலு ரோடு , பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக குமரன் நகர் செல்ல வேண்டு.ம். அங்கிருந்து இடது (தெற்கு) பக்கம் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக நடந்தும் செல்லலாம். நடக்க இயலாதவர்கள் இரு சக்கர வாகனத்திலோ காரிலோ அல்லது ஆட்டோவிலோ செல்வது நல்லது.

கோயில் வரலாறும் திருவிழாவும்:

நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோயிலில்  அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோயிலுக்கு குட்டி குடி திருவிழா என்று நடத்தப் படுகிறது. ( சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் தல புராணத்திலும் இதேபோல ஒரு மந்திரவாதி கதை உண்டு. நான் எழுதிய பதிவைக் காண்க:  சிறுவாச்சூர் மதுர காளியம்மன் http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html
  
கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால்  குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து) 

ஆபத்தான ஆறுகள்:

இந்த கோயில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோயிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.

தொட்டிப் பாலம்:

இந்த அம்மன் கோவில் அருகே கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்காலுடன் கலக்கிறது. மழைக் காலங்களில் கோரையாற்றில் வரும் வெள்ளம் இந்த கோயிலுக்கு அருகேயுள்ள புத்தூர், உறையூர் பகுதிகளை சேதப்படுத்துவதால், அதனைத் தவிர்க்க தொட்டிப்பாலம் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த பாலத்திலும் ஆங்காங்கே ஆறுகள் பற்றிய எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்துள்ளார்கள்

கோயில் படங்கள்:

இந்த மாதம் முதல் வாரத்தில் 06.12.2013 அன்று திருச்சி தீரன் நகர் செல்ல வேண்டி இருந்தது. (அங்கிருந்து காட்டுப் பகுதி வழியே உள்ள ஒருசாலை வயலூர் ரோட்டில் உள்ள குமரன் நகருக்கு செல்கிறது. வழியில் இயற்கை எழில் கொஞ்ச  குழுமாயி அம்மன் கோயில் உள்ளது.) நான் அந்த பாதை வழியே எனது TVS – XL SUPER வண்டியில் அந்த அம்மன் கோயிலுக்குச் சென்று எனது கேமராவில் படம் பிடித்தேன். திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் என்னால் எடுக்கப்பட்ட சில வண்ணப்படங்கள் இங்கே:



படம்.2 மேலே: புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் எழில் தோற்றம் 



படம்.3 மேலே: அருவியுடன் கூடிய அம்மன் கோயில்  




படம்.4 மேலே: கோயிலின் முகப்பு  
   

படம்.5 மேலே: கோயிலின் அருகே உள்ள அருவி  
     
                                           
படம்.6 மேலே: கோயிலின் அருகே உள்ள பாலம்  
   
                             
படம்.7 மேலே:  கோயிலின் அருகே உள்ள அருவியின் மற்றொரு காட்சி 

  
                                                      
படம்.8 மேலே: கோயிலின் இன்னொரு காட்சி 
        

                           

படம்.9 மேலே:  கோயிலின் அருகே உள்ள மரம் 
            



படம்.10 மேலே: கோயிலின் அருகே உள்ள ஆறு மற்றும் குமரன்நகர் செல்லும் பாதை.
                         


படம்.11 மேலே: கோயிலுக்குச் செல்ல ஆற்றைக் கடக்க உதவும் நடைபாலம்.
                                            


படம்.12 மேலே:  பாலத்தில் உள்ள எச்சரிக்கை அறிவிப்பு