Showing posts with label தேவாலயம். Show all posts
Showing posts with label தேவாலயம். Show all posts

Thursday, 16 July 2015

அமல அன்னை சர்ச் - அமலாஸ்ரமம் (ஸ்ரீரங்கம்)



சென்ற மாதத்தில் ஒருநாள். எனக்கு தெரிந்த கிறிஸ்தவ நண்பரிடமிருந்து போன். தனது மகனுக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள அமலாஸ்ரமம் சர்ச்சில் திருமணம் என்றும் காலையிலேயே வந்து விடும்படியும் அழைப்பு. நானும் சீக்கிரமே, அங்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அன்றைக்கு காலையிலேயே எங்கள் பகுதியில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் என்று அழைப்பு வந்தது. அதற்கும் போக வேண்டும். இதற்கும் போக வேண்டும். எனவே சர்ச்சில் நடைபெற்ற நண்பரின் மகன் திருமணத்திற்கு தாமதமாக சாப்பாட்டு வேளையில்தான் செல்ல முடிந்தது.

திருச்சி – ஸ்ரீரங்கம் சாலையில், மாம்பழச் சாலையிலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது அமலாஸ்ரமம் எனப்படும் அமல அன்னை சர்ச். இங்கு “AMALA ANNAI CAPUCHIN PROVINCE’ எனப்படும் கிறிஸ்தவ சமயத்துறவிகளின் பயிற்சி மையமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

நான்காவதோ அல்லது ஐந்தாவதோ படித்தபோது, நான் படித்த ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் (பட்டர் ஒர்த் ரோடு,திருச்சி.2) இருந்து, ஆசிரியைகள் எங்களை இந்த சர்ச்சிற்கு அழைத்து வந்தபோதுதான்  எனது முதல் வருகை. அப்போது இவ்வளவு வாகன வசதி கிடையாது. எனவே பழைய காவிரி பாலம் வழியாக நடந்துதான் வந்தோம். அப்புறம் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்த கிறிஸ்தவ நண்பர்களோடு சில தடவை வந்து இருக்கிறேன். எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த உற்சாகத்தில், மதியநேரம் என்றபோதும்,  நான் சில படங்களை எனது கேமராவில் எடுத்துக் கொண்டேன்.

 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு நான்


 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு எனது மகன் 



சிறிய தேவாலயமாக இருந்தாலும் காவிரிக் கரையில் அமைந்து இருக்கின்ற படியினால், மரங்கள் மற்றும் நந்தவனம் சூழ்ந்து மிகவும் அழகான அமைதியான  சூழ்நிலையில் இருக்கிறது. நான் சிறுவனாக (சுமார் 50 வருடங்களுக்கு முன்னர்) இருந்து இந்த தேவாலயம் வந்தபோது சுற்றிப்பார்க்க அவ்வளவு கட்டுப்பாடு இல்லை. இப்போது சூழ்நிலையின் காரணமாக வழிபாடு நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆலயத்தைப் பார்க்க கட்டுப்பாடுகள்.

அவர்கள் இணையதளத்திலிலிருந்து சில புகைப் படங்கள் இங்கே:















 













அமலாஸ்ரமம் பற்றிய மேல் அதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரியை “க்ளிக்” செய்யவும்.




Sunday, 9 September 2012

திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)


திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில், மெயின்கார்டு கேட் (MAINGUARD GATE) அருகே அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church ). இந்த ஆலயமும் இதன் வரலாறும் புனித ஜோசப் கல்லூரி (St. Josephs College )  வரலாறும்  வளாகங்களும் இணைநதே உள்ளன. இந்த ஆலயத்தின் எதிரே திருச்சி மலைக் கோட்டையும் தெப்பகுளமும் அமைந்துள்ளன. தெப்பகுளத்தின் கிழக்குக் கரையில், கிளைவ்ஸ் கட்டடம் (CLIVES BUILDING ) இருக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம்.

புனித  லூர்து அன்னை என்ற பெயர்:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னதெத் சூபிரூஸ் ( Bernadette Soubirous ) என்ற சிறுமி தனது சகோதரி மற்றும் தோழியுடன் அருகில் உள்ள காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மசபியேல் என்ற கெபி (குகை) அருகே சென்றபோது அன்னை மேரி காட்சி தந்தார். இந்த காட்சியானது பெர்னதெத்திற்கு மட்டுமே தெரிந்தது. அவளோடு சென்ற மற்ற இருவருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் அன்னை மேரி அந்த சிறுமியை அந்த இடத்திற்கு வரச் சொன்னார். அங்கு தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று அன்னை மேரி சொல்கிறார். ஒருதடவை அன்னை மேரியின் கட்டளையை ஏற்று அந்த இடத்தில் பெர்னதெத் மண்ணைத் தோண்டுகிறாள். அந்த இடத்தில் ஓர் நீருற்று உண்டானது. பின்னர் அது ஒரு ஓடையாக மாறிவிட்டது. இந்த அற்புதத்தைக் கேட்ட திருச்சபையினர் உண்மையைக் கண்டறிய விசாரணை செய்தனர். முடிவில் அங்கு பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சி அளித்து அற்புதம் நிகழ்த்தியது உண்மையே என்று அறிவித்தனர். அதன் பிறகு மசபியேல் என்ற குகை அருகே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அந்த ஓடைநீர் புனித நீராக கருதப்பட்டது. ஆலயம் அமைந்த இடம் லூர்து நகர் என்று அழைக்கப்பட்டது. அன்னை மேரி சிறுமிக்கு முதன் முதல் காட்சி அளித்த நாள் 1858  ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந்தேதி ஆகும். ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத் தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்ச்சு நாட்டைச்  சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த தேவாலயத்திற்கும் சூட்டினார்கள். “ CHURCH OF  OUR LADY OF  LOURDES “


தேவாலயத்தின் வரலாறு:

இப்போது திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியானது ஆரம்பத்தில் நாகப்பட்டணத்தில் இருந்தது. பின்னர் அங்கிருந்து 1883 ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப் பட்டது. ஆரம்பத்தில் கல்லூரியானது கிளைவ்ஸ் கட்டடத்தில் இயங்கியது. அப்போது திருச்சியில் கோட்டைப் பகுதியில் இருந்த பெல்லார்மின் ஹால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக இருந்திருக்கிறது.. அருள் தந்தை ஜோசப் பெய் என்பவர்  1884 ஆம் ஆண்டு முதல் 1893 வரை கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் இந்த ஆலயம் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் தேவாலயம் கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டு  பணி தொடங்கப்பட்டது. அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தனம் சவரிமுத்து மேஸ்திரியார் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். அப்போது திருச்சி ஆயராக இருந்த ஜான் மேரி பார்த் என்பவர் 1890 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி , தேவாலயத்தின் அஸ்திவாரத்திற்கான முதல் கல்லை ஆசீர்வாதம் செய்து எடுத்து வைத்து தேவாலயம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். 1893 முதல் 1903 வரை ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த அருள் திரு லியோ பார்பியர் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.  1890 இல் தொடங்கப்பட்ட தேவாலய பணியானது 1898- ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுரவேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைபட்டு, பின்னர் 1903 ஜனவரி தொடங்கி 1910- டிசம்பரில் முடிந்தது.

தேவாலயத்தின் அமைப்பு:

 

   தேவாலயம் கோதிக் கட்டடக்கலை (Gothic architecture) அமைப்பில் உருவானது. ( கோதிக் கட்டடக்கலை என்பது 12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் உருவானது. பெரும்பாலும்  தேவாலயங்கள், கல்லறைகள், கோட்டைகள், அரண்மனைகள இந்த அமைப்பு முறையினால் கட்டப்பட்டன.) இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள் , ஆலயத்தை கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக் கொண்டார்.  தேவாலயம் கட்டுவதற்கு தேவையான கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன. சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில் பிரான்ஸ்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்தன்னை தேவாலயமும் கட்டப்பட்டது என்பது சிறப்புச் செய்தியாகும்.



தேவாலயத்தின் உள்ளே நுழையும் போதே நம்மை அந்த பிருமாண்டமான வாயில் சிலுசிலுவென்று வீசும் காற்றோடு வரவேற்கும். கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்கள். வெளிநாட்டிலிருந்து வரும் மேல்நாட்டவர்கள் இந்த ஆலயத்தின் அழகினை ரசித்து ரசித்து படம் எடுப்பதைக் காணலாம். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 1998) இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்போது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் (St. lourdes church) இருந்து வருகிறது.

வழிபாட்டு நேரம்:

வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m
                மாலை: 6.30 p.m
ஞாயிறு       : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m
                              மாலை: 6.30 p.m

குறிப்பு: மேலே உள்ள அன்னை மரியாள் படம் தவிர , மற்ற தேவாலயப் புகைப் படங்கள் யாவும் என்னால் இன்று (09.09.12) காலை " Canon Power Shot A800 " என்ற Digital Camera மூலம் எடுக்கப்பட்டவை.

நன்றியுடன் (கட்டுரை எழுத உதவியவை) :
1.புனித லூர்தன்னை ஆலயம் நூற்றாண்டு விழா மலர்
 (1896 1998)
      2.. www.sjctni.edu
      3. Wikipedia, the free encyclopedia -  English
      4. Wikipedia, the free encyclopedia -  Tamil
   5. பாரம்பரியம்: நூற்றாண்டைக் கடந்த ஆலயம்!                    .                அ. சத்தியமூர்த்தி - 29 May 2011 DINAMANI e-paper

இணைப்பு:


( PHOTO THANKS TO   Glyn John Willett  ( http://members.virtualtourist.com )