சின்ன வயதில் நாய்கள் என்றால்
எனக்கு ஒரே பயம். அப்புறம்
பெரியவன் ஆனதும்தான் பயம் தெளிந்தது. எனது
அம்மாச்சியின் (அம்மாவின் அம்மா) வீட்டில் ஒரு
நாட்டு நாய் இருந்தது. பெயர் மணி. அதோடு
பழகிய பின்னர் நாய்கள் மீது
எனக்கு அன்பும் மரியாதையும் (உண்டு.
இருந்தாலும் நாய் என்றால் கொஞ்சம்
தள்ளியே இருப்பது வழக்கம். இந்த நிலையில் ஒரு
அழகான நாட்டு நாய் ஒன்றை எனது மகன் (பள்ளி
மாணவனாக
இருந்தபோது, (இன்றைக்கு 12 வருடங்களுக்கு
முன் ) தூக்கி வந்தான். ’ஜாக்கி’ என்று பெயரிட்டு
வளர்த்தோம்.
(படம் – மேலே)
இறந்து போன எங்கள் வீட்டு ஜாக்கி
ஜாக்கியோடு:
சொந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இந்த வீடு,
வாசல் எல்லாம் நம்முடையது என்று
நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால்
நாம் வளர்க்கும் செல்ல
நாயானது ”இந்த வீடு, வாசல் எல்லாம்
நம்முடையது” என்று நினைப்பில், ஒரு
குருவி, காக்கையைக் கூட உள்ளே விடாது
அவ்வளவு கண்டிப்பு.
ஜாக்கி
சிறு வயது குட்டியாக இருக்கையில்,
காம்பவுண்டிற்குள் சுற்றி சுற்றி விளையாடும்.
அப்போது எங்கள் தெருவுக்கு பக்கத்தில்
இருக்கும் ஒரு மைதானத்தில் இருந்து
இரண்டு குட்டி நாய்கள் எங்கள்
வீட்டு வாசலில் வந்து ஏதாவது
கிடைக்காதா என்று நிற்க ஆரம்பித்தன. ஜாக்கிக்கு
உணவு கொடுக்கும் போது இவைகளுக்கும் கொடுத்தோம். அன்றிலிருந்து இந்த இரண்டு நாய்களும்
எதிரில் உள்ள இரண்டு காலிமனைகளில் வாசம். அவற்றில் ஒன்று குட்டையாக
இருந்ததால் குட்டையர் என்றும், இன்னொன்றிற்கு நெற்றியில் கோடு இருந்த படியினால்
நாமம் என்றும் சொல்லிக் கொண்டோம். நான் எங்கள் ஜாக்கியை ’வாக்கிங்’ இற்காக
வெளியே அழைத்துச் செல்லும் போதெல்லாம் இவை இரண்டும் கூடவே வருவார்கள். இதில் நாமம், அடுத்த ஏரியாவில் இருந்த என் அம்மாவின் வீட்டிற்கு சென்றபோது, என் கூடவே வந்து அங்கேயே தங்கி விட்டது.
(படம் – மேலே):
குட்டையர், நாமம் என்ற இரண்டு நாய்கள்
INTERNATIONAL ANIMAL
RESCUE
திருச்சியில்
எங்கள் ஏரியாவிற்கு அருகில் ஓலையூர் என்ற
கிராமத்திற்கு அருகில் INTERNATIONAL ANIMAL
RESCUE என்ற உலகளாவிய அமைப்பின்
சார்பாக வளர்ப்பு பிராணிகளுக்கான பெட் கிளினிக் ( PET CLINIC ) ஒன்று
இருந்தது. இந்த மருத்துவ மனையில்
ஜெர்மனியிலிருந்து வந்த, இளம் பெண்
டாக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையோடு
பணிபுரிந்து வந்தார். அரசு
அனுமதியோடு இந்த பகுதியில் உள்ள
தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள்; அந்த
நாய்களுக்கு உடம்புக்கு ஏதேனும் இருந்தால் சிகிச்சை
அளிப்பதோடு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து
விட்டு மீண்டும் கொண்டு போய் ஏதேனும்
ஒரு மைதானத்தில் விட்டு விடுவார்கள். நாய்களைக்
கொல்ல மாட்டார்கள். அப்படி வந்தவைதாம்
மேலே சொன்ன குட்டி நாய்கள். இந்த மருத்துவ
மனையில் எங்கள் ஜாக்கியையும் காண்பித்து இருக்கிறோம். அந்த ஜெர்மன் டாக்டர் இருந்தவரை இந்த மருத்துவமனை
நன்றாக நடந்தது. அவர் மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பியவுடன் இங்குள்ளவர்களால் சரிவர
நடத்த முடியவில்லை; மூடி விட்டார்கள்.
ஜாக்கிக்குப் பிறகு:
இவை வந்த பிறகு காலிமனைகளில்
இருந்த பாம்புகள் இந்த பக்கம் வரமுடியாது.
இரண்டும் சேர்ந்து விரட்டி விடும். இப்படியாக
வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்க,
எங்கள் ஜாக்கி நோய்வாய்ப்பட்டு இறந்து
போனது. எங்கள் வீட்டில் சோகம்
என்றால் சோகம். அவ்வளவு சோகம்
இது பற்றியும் ஒரு பதிவு எழுதி
இருக்கிறேன். (“ஜென்மம் நிறைந்தது - சென்றது
“ஜாக்கி” - http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html
)
எங்கள் ஜாக்கி
இறந்த பிறகு, அதன் நினைவாக தினமும் வாசலில், இந்த நாய்களுக்கு தீனி வைத்தோம். இதனைப்
பார்த்த அடுத்ததெரு நாய்களும் சிலருடைய வளர்ப்பு நாய்களும் தினமும் காலையிலும் மாலையிலும்
வந்து நிற்க ஆரம்பித்து விட்டன. இதனால் தெருவாசிகளிடமிருந்து கண்டனக் குரல்; சிலர்
முனிசிபல் கார்ப்பரேசனில் புகார் தரப் போவதாகவும் சொல்லி விட்டார்கள். என்னவோ செய்து
கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.
(படம் மேலே) கட்டையாக
இருப்பதால் கட்டையர் என்று பெயர். எங்கள் வீட்டிற்கு அடுத்து இருக்கும் ஆங்கிலோ – இந்தியன்
வீட்டிற்கு அடைக்கலமாக வந்தது. இப்போது எங்களோடும் பழக்கம்.
(படம் மேலே) வெள்ளை சடைநாய்: அடுத்த ஏரியாவிலிருந்து
வழிதவறி வந்து பழக்கமான ஒற்றைக்கண் நாய். அடிக்கடி
வரும். அப்புறம் வரவே இல்லை. என்னவென்று விசாரித்ததில் ஒரு கண்ணில் ஏற்பட்ட உட்காயம்
புரையோடி இறந்து விட்டதாகச் சொன்னார்கள்.
(படம்
மேலே) ரோஜர்: இது நாங்கள் இருக்கும் வீதிக்கு அடுத்த வீதியில் இருந்த எங்கள் ஏரியாக்காரர்
வளர்த்த நாய். வாலில் ஏதோ தொற்று நோய் பிரச்சினை. அதனால் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து
வாலை எடுத்து விட்டார்கள். எங்கள் வீட்டுப் பக்கம் வராமல் இருக்காது. சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போனது. இறக்கும் போது எங்கள் வீட்டு
சுற்று சுவர் அருகே வந்து கிடந்தது.
(படம் மேலே) ரோசி:
இதுவும் நாங்கள் இருக்கும் ஏரியாவில், அடுத்த தெருக்காரர் வளர்க்கும் நாய். நல்ல உயரம்; நீளமானதும்
கூட. சின்ன குட்டியாக இருக்கும்போது ஆசையாக கொஞ்சி வளர்த்தவர்கள், பெரிய நாயாக வளர்ந்தவுடன்
தெருவுக்கு விரட்டி விட்டார்கள். தெரு நாயாகிப் போன அது பசிக்கும் போதெல்லாம் எங்கள்
வீட்டுப் பக்கம் வந்து போகும்.
(படம் மேலே) மெர்சி: சென்ற
ஆண்டு மழைக்காலம். சின்ன குட்டியாக அருகிலிருந்த மைதானத்திலிருந்து அடைக்கலம் தேடி வந்து எங்கள்
வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே வளர்த்து பெரியதானவுடன் வெளியில் விட்டுவிட்டோம். பூனைகளிடம் நட்புடன் வளர்ந்த நாய் இது.
இப்போது எங்கள் வீட்டு எதிரில்
உள்ள காலி மனையில் இருக்கிறது.
இந்த மெர்சியைப் பற்றி தனியே ஒரு
பதிவு கூட எழுதி இருக்கிறேன்.
(மியாவ் மியாவும் நாய்க்
குட்டியும் http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_17.html
)
(படம் மேலே) கிரேஸி:
இது மேலே சொன்ன மெர்சிக்கு தங்கை. தனது தாயுடன் தனது அக்கா மெர்சியைத் தேடி வந்தது.
எதிரே காலி மனையில் தனது அக்காவைக் கண்டவுடன் இங்கேயே அம்மாவுடன் தங்கி விட்டது. இது
நோஞ்சானாக இருந்த படியினால் எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே இரண்டுமாதம் வளர்த்து
வெளியே விட்டோம். எதிர்பாராத விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர், எங்கள் வீதிப்பக்கம்
வந்த ஒரு காரில் அடிபட்டு இறந்து போய்விட்டது. இது சோகமான விஷயம்தான்
(படம் மேலே) முன்பு குறிப்பிட்ட மெர்சி,
கிரேஸி இரண்டு நாய்களின் தாய் இது. இப்போது மறுபடியும் புதிதாய் இரண்டு குட்டிகளுடன்.
(ஆறு குட்டிகள் போட்டதில் இப்போது எஞ்சி இருப்பவை இவை)
(படம் மேலே) அருகிலுள்ள ஒரு தோட்டத்திலிருந்து வந்த நாய். அதுவும் அதன் குட்டியும் அங்கிருந்து இங்கே வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்று விடுவார்கள். எதிர்பாராத விதமாக இந்த குட்டி, மைதானத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த காலவாதியான மருந்து பாட்டிலில் இருந்ததை தின்று தோட்டத்திலேயே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
(படம் மேலே) இறந்து போன தோட்டத்து குட்டிநாய்
தினமும் இந்த நாய்களுக்காகவும்
மற்றும் பூனைகளுக்காகவும் நூறு ரூபாய்க்கு குறையாமல் செலவாகிறது. இவைகளுக்கு செய்யும் செலவைப்
பற்றி நான் கணக்கு பார்ப்பது கிடையாது. இவைகள் எவற்றையும் நான் தொடுவது கிடையாது. ஆனாலும் அடிக்கடி கையில் திரவ சோப்பை (Liquid Soap ) போட்டு கழுவிக் கொள்ள வேண்டி உள்ளது. மனிதனை விட பாசமானவை இந்த நாய்கள். சிலசமயம்
எனது வண்டியின் பின்னாலேயே எங்கள் ஏரியா பஸ் ஸ்டாண்டு வரை தொடர்ந்து வருபவைகளும் உண்டு.
இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில்
எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. மற்றபடி வேறு ஏதும் (மூட நம்பிக்கை) ஒன்றும் இல்லை.
வாலைக்
குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா
மனிதர்க்குத் தோழனடி பாப்பா
- (மகாகவி சுப்ரமண்ய பாரதியார்)