Friday 31 October 2014

எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?



பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். எனவே பழைய பாடல்களை அடிக்கடி கேட்பதற்கு வசதியாக, கம்ப்யூட்டரில் MP3 வடிவில் ஒரு போல்டரில் (FOLDER) போட்டு வைத்துள்ளேன். இவற்றை அப்படியே எனது செல்போனுக்கும் மாற்ற்ம் செய்து கொண்டேன். அதேபோல சில பாடல்களின் வரிகளையும் இணையம் வழியே சேமித்து வைத்துள்ளேன். அவற்றில் பாடல் முதல் வரி, படத்தின் பெயர், படம் வெளி வந்த ஆண்டு, பாடலாசிரியர், பாடியவர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் ஆகிய விவரங்கள் இருக்கும். கிடைக்காத சில பாடல்களுக்கு பாடலைக் கேட்டுக் கொண்டே ஒவ்வொரு வரியாக டைப் செய்து வைத்துள்ளேன்.

அவ்வாறு அடிக்கடி நான் கேட்கும் தததுவப் பாடல்களில் ஒன்று, எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம் என்று துவங்கும் பாடல். படத்தின் பெயர் “பாசமும் நேசமும்”. 1964 இல் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, M.R.ராதா நடித்து வெளிவந்த படம். பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ். இசையமைப்பாளர் வேதா. (இணையத்தில் சிலர் தவறாக வேறு ஒரு இசையமைப்பாளர் பெயரைச் சொல்லுகின்றனர். வேதா என்பதே சரி)

இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துள்ளவை. இசையமைப்பும் அருமை. இந்த காட்சியில் நடனமாடும் பெண்களின் அசைவுகளும் இசையும் கைகோர்த்து செல்வதை உணரலாம்.
 
நான் எவ்வளவோ முயற்சித்தும் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே உறுதியாகத் தெரிந்தவர்கள் இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த பாடலின் இறுதி வரிக்கு முதலில் வரும் வரியில் “ போய்விடு தாயே “ என்பதா அல்லது “போய்விடுவாயேஎன்பதா என்று சரியாக விளங்கவில்லை.

இந்த படம் (பாசமும் நேசமும்) ராஜ்கபூர் (RAJKAPOOR) - நர்கிஸ் (NARGIS) நடித்த அனாரி (ANARI) என்ற இந்தி (1959) திரைப்படத்தின் தமிழாக்கம் என்பார்கள். இந்தியில் இசை அமைத்தவர் சங்கர் ஜெய்கிஷன். அறுபதுகளில் வெளியான சில தமிழ் படங்கள் மற்றும் பாடல்கள் இந்தி படங்களின் தழுவல்களே. பாடல்களின் மெட்டும் அப்படியே காப்பி செய்யப்பட்டு இருக்கும்.


இந்த பாடலை தமிழில் கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)

இந்த பாடலை இந்தியில் கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



தமிழ் பாடலின் வரிகள்:

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

பார்ப்பதை அறிவேன் பார்த்தவை தானே
பால்போல் மனதை கெடுத்தவள் நீயே
பாடுவதறியேன் பாட வைத்தாயே
பாடலை பாதியில் நீ முடித்தாயே

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

வேடிககை உலகம் செல்வர்கள் இல்லம்
வேடிககை உலகம் செல்வர்கள் இல்லம்
வேதனை உலகம் ஏழைகள் உள்ளம்
வேதனை உலகம் ஏழைகள் உள்ளம்

தெரியா நிலையில் தோழியும் ராணி
தெரியா நிலையில் தோழியும் ராணி
தெரிந்து விட்டால் அவள் ராணியின் தோழி

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

உண்மையில் ஒருநாள் பொய்மையில் பலநாள்
ஒவ்வொரு நாளும் உங்களின் திருநாள்
எங்களின் இதயம் சிறியது தாயே
இதையும் ஏனோ உடைத்து விட்டாயே
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

புரியா மனிதன் எதையோ சொன்னால்
புரியா மனிதன் எதையோ சொன்னால்
பொறுத்தருள்வாயே போய்விடு தாயே
பொறுத்தருள்வாயே போய்விடு தாயே
நடந்ததையெல்லாம் மறந்திடுவாயே
நடந்ததையெல்லாம் மறந்திடுவாயே
மாளிகை கிளியே வாழிய நீயே

பாடல் முதல் வரி:  எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
படம்: பாசமும் நேசமும்  ( 1964 )
பாடல்:
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
இசை: S. வேதா
நடிகர்கள்: ஜெமினி கணேசன், சரோஜாதேவி, M.R.ராதா
டைரக்‌ஷன்: D.யோகானந்த் Dasari Yoganand shorty D. Yoganand

மறுபடியும் நினைவூட்டுகிறேன் உறுதியாகத் தெரிந்தவர்கள் இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Monday 27 October 2014

மதுரையில் வலைப்பதிவர்கள்!




       பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
                    
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை-
                    
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
                    
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
                                                                                          -  வில்லிபாரதம்  


கடந்த ஒரு வார காலமாக தென் தமிழ்நாட்டில் ஐப்பசி மழை!மதுரைக்குப்  போகாதீங்கஎன்பது போல,  மாநாட்டிற்கு முதல்நாள் இரவும் திருச்சியில் மழை கொட்டி தீர்த்தது. என்ன மழை பெய்தாலும் மதுரைக்கு எப்படியும் போய்த் தீருவது என்ற முடிவில் நான் இருந்தேன். அப்போதெல்லாம் கட்சி கூட்டம் நடக்கும்போது, மழை பெய்தால் கழகக் கண்மணிகளில் ஒருவர் மேடையில் ஏறிஅடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடக்கும்என்று பேசிவிட்டு செல்வார்.  அதுபோல, மழையை நினைத்து எங்கே பதிவர்கள் வராமல் போய் விடுவார்களோ என்று நினைத்து மழையில்லை... வாருங்கள் வலைப்பதிவர்களே என்ற பதிவினை திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஒரு அவசரமான முக்கிய பதிவை வெளியிட்டார்.


மறுநாள் (26.10.2014 ஞாயிறு) அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து விட்டு மதுரைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லார் விட்ட பாணத்திற்கு பயந்தோ என்னவோ மழை இல்லை! விழா நடந்த வண்டியூர் தெப்பக்குளம் மேற்குக் கரையினில் இருக்கும் கீதா நடன கோபால நாயகி மந்திர்  அரங்கத்திற்கு முன்னதாகவே போய் விட்டேன்.

அங்கு மண்டபத்தினுள் அய்யா அன்பின் சீனா, அவர்களது மனைவி திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்கள் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், பகவான்ஜி (ஜோக்காளி), மகேந்திரன், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் பம்பரமாக சுழன்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு இருந்தனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில் சொன்னபடி  விழா தமிழ்த்தாய் வணக்கத்துடன் இனிதே தொடங்கியது. முற்பகல் சிறப்பு சொற்பொழிவாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை. புதுக்கோட்டையிலிருந்து வந்த ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பத்திரிகை செய்திகளில் வருவது போல “திடீர் மணமகன் “ ஆனார். கவிஞர் அய்யா அவர்கள் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர். நல்லதொரு சொற்பொழிவைத் தந்தார். எல்லோரும் எதிர்பார்த்த  மதுரை ஜிகர்தண்டா எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கின. எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரை செய்தார். வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள்  எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம் என்ற குறும்படம், மற்றும் வலைப் பதிவாளர்கள் கரந்தை ஜெயக்குமார், கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்), மு.கீதா (வேலு நாச்சியார்) P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை)  ஆகியோர் எழுதிய நூல்கள்  வெளியிடப்பட்டன. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நன்றியுரை சொல்ல, தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிந்தது.

                   உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
                  
அனைத்தே புலவர் தொழில்.
                           திருவள்ளுவர் (குறள். 394)


அடுத்த ஆண்டு (2015) வலைப்பதிவர்கள் சந்திப்பினை புதுக்கோட்டையில் நடத்தும் பொறுப்பினை புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரங்கத்தில் நிகழ்ச்சிகளை வீடியோ, புகைப்படங்களை எடுக்க தனியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இவற்றை முழு விவரமாக சிறப்புற தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். மேலும் பல பதிவர்கள் இந்த நிகழ்ச்சியை தங்களது வலைத்தளத்தில் சிறப்பாக வெளியிட வேண்டும் என்பதற்காக தங்களது கேமராக்களில் எடுத்துக் கொண்டு இருந்தனர். அய்யா பேராசிரியர்  தருமி தனது பெரிய கேமராவினால் இளைஞனாக மாறி படங்களை எடுத்தார். எனவே இந்த சந்திப்பு சம்பந்தமாக நிறைய பதிவுகளை எதிர் பார்க்கலாம் என்பதால், நான் எடுத்த சில படங்களை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளேன்.

(படம்: மேலே) நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்


(படங்கள்: மேலே) மேடையில் வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்கள்

(படம்: மேலே) அன்பின் சீனா, கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), பகவான்ஜி (ஜோக்காளி), மற்றும் தருமி அய்யா


(படம்: மேலே) கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), தருமி அய்யா, நான் மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி

(படம்: மேலே) துளசி கோபால் தம்பதியினரை வரவேற்கும் அன்பின் சீனா தம்பதியினர்

(படம்: மேலே) அய்யா G.M.B  (G.M. பாலசுப்ரமணியம்) அவர்கள் தனது மனைவி மகனுடன்

(படம்: மேலே) பகவான்ஜி (ஜோக்காளி), பால.கணேஷ் (மின்னல் வரிகள்), கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), தேவகோட்டை கில்லர்ஜி மற்றும் கரந்தை ஜெயக்குமார் தனது மனைவி, மகளுடன்
  

(படங்கள்:மேலே) கூட்டம் துவங்கிய போது

(படம்: மேலே) தேவகோட்டை கில்லர்ஜி, மணவை ஜேம்ஸ் ஆகியோருடன் நான்


 
(படங்கள் மேலே) அரங்கத்தினுள்


(படம்: மேலே) எனக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசு


குறிப்பு: இன்றுமுதல், இந்த விழாவினைப் பற்றி வெளியாகும் பதிவுகளின் இணைப்புகள் அவ்வப்போது இந்த பதிவினில்  தொடர்ந்து இணைக்கப்படும் (UPDATE) என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவருடைய பதிவேனும் விட்டுப் போயிருப்பின், யார் தெரிவித்தாலும் இதில் இணைத்து விடுகிறேன்.

( கீழே உள்ள ஒவ்வொரு பதிவின் முகவரியிலும் (web address ) ”க்ளிக் செய்வதன் மூலம் இங்கிருந்தே அந்த பதிவுகளைக் காணலாம்)
மதுரை - மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா -


மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்



முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?

796. 3-ம் பதிவர் திருவிழா -- 1

ஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்

797. 3-ம் பதிவர் திருவிழா -- 2

பதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை



மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014 எப்படி?



மதுரையை கலக்கியது யாரு?




 


Wednesday 22 October 2014

மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு


தமிழ் வலைப் பதிவர்களுக்காக, :மதுரை, தெப்பக்குளம், எண் 3, மேற்கு வீதியில் அமைந்துள்ள கீதா நடன கோபால நாயகி மந்திர்  அரங்கத்தினுள் வரும் ஞாயிற்றுக் கிழமை (26.10.2014) காலை தொடங்கி மாலை வரை “ தமிழ் வலைப் பதிவர்கள் “ சந்திப்பு விழா நடக்க இருக்கிறது

  
முற்பகல் நிகழ்ச்சிகள்:

காலை 9 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. பின்னர் திரு சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அதுசமயம், அய்யா அன்பின் சீனா (வலைச்சரம்) அவர்கள் தலைமை தாங்குகிறார். கவிஞர் ரமணி (தீதும் நன்றும் ) அவர்கள் துணைத் தலைவராக இருக்கிறார். முன்னிலை வகிப்பது ஆசிரியர் மதுரை சரவணன் அவர்கள்.


தொழில் நுட்ப பதிவர்களுக்கு பாராட்டு செய்தவுடன், வலைப்பதிவர்களது சுய அறிமுகம் ( SELF INTRODUCTION) தொடங்கும். (எனவே வலைப் பதிவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் வலைதளத்தினைப் பற்றியும் சுருக்கமாக குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.)

அதன் பின்னர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரை செய்ய இருக்கிறார். அன்னாரது உரைக்குப் பின் உணவு இடைவேளை

பிற்பகல் நிகழ்ச்சிகள்:

பிற்பகல் பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரை செய்கிறார்.

பின்னர் குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள்  எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம் என்ற குறும்படம் வெளியிடப்படுகிறது. மற்றும் வலைப் பதிவாளர்கள் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய “கரந்தை மாமனிதர்கள் , கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்) அவர்கள் எழுதிய “துளிர்விடும் விதைகள் , மு.கீதா (வேலு நாச்சியார்) அவர்கள்  எழுதிய ஒரு கோப்பை மனிதம் , P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) அவர்கள் எழுதிய நல்லா எழுதுங்க ... நல்லதையே எழுதுங்க - ஆகிய நூல்கள்  வெளியிடப்பட இருக்கின்றன.

தாங்கள் வெளியிட இருக்கும் குறும்படம் மற்றும் நூல்கள் சம்பந்தமாக பதிவர்கள் வெளியிட்ட பதிவுகள்


கரந்தை மாமனிதர்கள்

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில்              
http://velunatchiyar.blogspot.com/2014/10/blog-post_97.html

துளிர் விடும் விதைகள் புத்தக வெளியீடு

நிகழ்ச்சியின் நிறைவாக திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நன்றியுரை நவிலுகிறார். அதன்பின்னர் நமது இந்திய நாட்டின் தேசியகீதம் பாடலுடன் விழா நிறைவுறும்.

வருக! வருக! வணக்கம்!

இந்த தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பினுக்கு அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்!

மேலும் விவரங்களுக்கு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் கீழ்க்கண்ட பதிவுகளைக் காணுங்கள்


ALL PICTURES THANKS TO -  www.tamilvaasi.com
 


Tuesday 21 October 2014

தீபாவளி மலர்கள் – 2014


உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது பள்ளி நூலகம் சென்றால் அந்த வருட தீபாவளி மலர்களை கண்ணில் காட்ட மாட்டார்கள். பள்ளி அலுவலக ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எடுத்து போய் இருப்பார்கள். எனவே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முந்திய கல்கி, அமுதசுரபி தீபாவ்ளி மலர்களையே நூலகர் தருவார். அதிலும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டிற்கெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. பள்ளி நூலகத்திலேயே பார்த்து விட்டு கொடுத்து விட வேண்டும். அப்புறம் கல்லூரி மாணவனாக இருந்த போது ஒன்றிரண்டு தீபாவளி மலர்களை பழைய புத்தகக் கடைகளில் பேரம் பேசி மலிவாக வாங்கிப் படித்ததுதான். ஆனால் இப்போதோ வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நிறைய தீபாவளி மலர்கள் வீட்டிற்கு வந்துவிட்டன. ஆனாலும் அப்போது படித்த, அந்த நாளைய தீபாவளி மலர்கள் போன்று இல்லை என்பது ஒரு குறை. ஒருவேளை இது வயது ஆக ஆக மனதில் ஏற்படும் சலிப்பாகவும் இருக்கலாம்.
 
கல்கி:


அன்று முதல் இன்று வரை கல்கி தனது பழமை குன்றாத தீபாவளி மலரை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறுவர்களுக்கென்று “கோகுலம் பக்கங்கள்மற்றும் மகளிர்களுக்காக “ மங்கையர்மலர் பக்கங்கள் “ இணைத்துள்ளனர். (கல்கி வெளியிட்ட அத்தனை தீபாவளி மலர்களையும் ஒன்று விடாமல் யாரேனும் வைத்து இருக்கிறார்களா? என்று தெரியவில்லை)

ஆனந்த விகடன்:


இந்த ஆண்டு விகடன் தீபாவளி மலர் சற்று முன்னதாகவே வந்து விட்டது. வழ்க்கம் போல பழமையும் புதுமையும் கலந்து வந்துள்ளது. முன்பெல்லாம் தீபாவளி மலர் அட்டைப்படமாக பிரபல ஓவியர்களின் நகைச்சுவைப் படங்கள் இருக்கும். இப்போது சில வருடங்களாக சினிமா நட்சத்திரங்கள்தான்.

அட்டையிலும் உள்ளேயும் நடிகர் சிவகார்த்திகேயன் ஜொலிக்கிறார். இன்னொரு பக்கம், மறைந்த டைரக்டர் ஸ்ரீதர் அவர்களது “காதலிக்க நேரமில்லைபடம் பற்றிய சுவையான நினைவுகள். “ ஆண்களின் நலனுக்காக உருவாக்கப் பட்டதே குடும்பம்என்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச் செல்வி. இன்னும் கம்போடியாவில் பல்லவ மன்னர்கள் எடுத்த சிலைகள், தஞ்சை சரஸ்வதி மகால் என்று காணலாம்.

தி இந்து :


தமிழில் இந்து வெளிவரத் தொடங்கியவுடன் வெளியிட்ட முதல் தீபாவளி மலரை, சென்ற ஆண்டு வாங்க இயலாமல் போய்விட்டது. இந்த ஆண்டு வந்த இரண்டாவது ஆண்டு தீபாவளி மலர் இது.. புதுமையாக பிரபலமானவர்கள் பற்றி ஒரு பக்கக் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். கோட்டோவியப் படங்களுடன். ஓவியர் மனோகர் தேவதாஸின் மதுரை நினைவுகள் பார்த்தேன். ஓவியர் சில்பி நினைவுக்கு வந்தார்.

சக்தி:


தெய்வீகக் கட்டுரைகள், கதைகள் இவற்றிற்காகவே இதனை வாங்குவது வழக்கம். இடையில் சில ஆண்டுகள் வாங்க இயலவில்லை. அண்மையில் மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கம் அவர்கள் இதன் ஆசிரியர். இவர் கொடுத்த ஆதரவில் சக்தி தீபாவளி மலர்கள் சிறப்பாக அமைந்து இருந்தன.

விருப்ப ஓய்வு பெற்றவுடன் ஏதேனும் ஒரு புத்தகம் மட்டும் வாங்குவேன். இந்த ஆண்டு பேப்பர் போடும் தம்பிக்காக (பேப்பர் பையன்?) அதிகப் படியாக தீபாவளி மலர்களை வாங்கி விட்டேன் போலிருக்கிறது. பதிவில் எழுதுவதற்காக ஒரு பார்வை பார்த்தாகி விட்டது. எல்லா மலர்களிலும் வழக்கம்போல வண்ண ஓவியங்கள், சிறு கதைகள், பேட்டிகள் என்று போகின்றன. கவிதைகள் என்றாலே பொங்கல் மலருக்குத்தான் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. வாங்கிய அனைத்து தீபாவளி மலர்களையும் முழுமையாக இனிமேல்தான் நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்!            

  அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!