Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Friday, 5 February 2016

அசெம்ப்ள்டு கம்ப்யூட்டரா?



தலைப்பைப் பார்த்ததும் உலகில் உள்ள எல்லாமே அசெம்ப்ள்டுதானே – உருவாக்கப் பட்டவைதானே – இது என்ன என்று திட்டி விடாதீர்கள். நீங்கள் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கும்போது, ஆலோசனை கேட்டால்   அசெம்ப்ள்டா அல்லது கம்பெனியா என்று கேட்பார்கள். இதில் கம்பெனி என்றால் ப்ராண்டேடு (BRANDED) என்று அர்த்தம். அசெம்ப்ள்டு (ASSEMBLED) என்றால் தனிநபர் ஒருவர் வெவ்வேறு கம்பெனி பாகங்களை ஒன்றாக இணைத்து (அவை புதிதா? அல்லது பழையதா?) ஒரு செட் உருவாக்கி தருவார். கம்பெனி செட்டைவிட நன்றாக இருக்கும்; விலை குறைவு என்பார். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரேடியோ விற்பனைக் கடைகளில், அசெம்ப்ள்டு ரேடியோ செட்தான் விற்பனை அதிகம். அப்புறம் டிரான்சிஸ்டர்களில் ‘டெல்லி செட்’ வந்து அந்த பெயரையே வைத்து விட்டார்கள்.

முதல் கம்ப்யூட்டர்:

ஏழு வருடங்களுக்கு முன்னர், முதன் முதல் ஒரு கம்ப்யூட்டர் வாங்குவதற்காக, எல்லோரையும் போல தெரிந்தவர்களிடமும், அனுபவஸ்தர்களிடமும் ஆலோசனை கேட்டேன். வழக்கம் போல ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கூறினார்கள். நான் பணி புரிந்த இடத்திற்கு வரும் கம்ப்யூட்டர் பாடம் படித்த டிப்ளோமோ என்ஜீனியர்கள் தாங்களே ஒரு நல்ல செட் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தியில்லை. எனவே தூர்தர்ஷனில் அப்போது பணிபுரிந்து கொண்டு இருந்த எனது நண்பரிடம் விவரம் சொன்னேன். அவரும், என்னைப் போலவே, ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுவிட்டு, அண்மையில் தான் வாங்கிய கம்ப்யூட்டர் பற்றிய விவரத்தைச் சொன்னார். தான் இப்போது கொடைக்கானல் பக்கம் இருப்பதாகவும் திருச்சிக்கு வந்தவுடன், அவரது வீட்டிற்கு வரச் சொன்னார். அப்படியே சென்றேன். அவர் வாங்கிய கம்பெனி  ப்ராண்டேடு கம்ப்யூட்டர் பிடித்து இருந்தது. 

அவர் வாங்கிய இடத்திலேயே ‘COMPAQ‘ டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை வாங்கினேன். விலையும் எனது பட்ஜெட்டிற்குள்ளேயே வந்தது. windows xp யை கம்ப்யூட்டரில் நிறுவியதோடு வேண்டிய மற்றைய நிரல்களையும் இணைத்துக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இந்த கம்யூட்டர் நன்றாகவே உழைத்தது. அவர்கள் அவ்வப்போது கொடுத்த சர்வீஸ்சும் நன்றாகவே இருந்தது.

அசெம்ப்ள்டு செட்:

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் கம்ப்யூட்டர் வாங்கிய ஏஜென்சிக்காரர்கள் வேறு ஒரு மார்க்கெட்டிங்கிற்கு போய் விட்ட படியினால், வேறு ஒரு சர்வீஸ் என்ஜீனியருக்கு மாற வேண்டியதாயிற்று. அவர் அவ்வப்போது வருவார். என்னோடு பணிபுரிந்த ஒருவர் வழியாக அறிமுகம். சென்ற வருடம் மானிட்டரில் வர்ணங்களாக வர ஆரம்பித்ததால் அதனை அவரிடம் சொல்லி அதனை மட்டும் (டெல்) மாற்றினேன். இப்போது CPU வில் பிரச்சினை. நான் பேசாமல் கம்பெனி தயாரிப்பையே நேரிடையாக (மானிட்டர் டெல் என்பதனால் ) வாங்கி இருக்கலாம். விதி வலியது. அவரிடமிருந்து அசெம்ப்ள்டு CPU ஒன்றை வாங்கினேன்.. வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. சண்டிமாடு போல் அடிக்கடி படுத்துகிறது. ஒரு சில சாப்ட்வேர் பிரச்சினைகளை, அனுபவம் காரணமாக நானே சரி செய்து விடுவேன். ஆனால் ஹார்டுவேர்தான் உதைக்கிறது. கம்பெனி தயாரிப்பிற்கும், அசெம்ப்ள்டு செட்டுக்கும் அப்படி ஒன்றும் விலை வித்தியாசம் அதிகம் இல்லை. பேசாமல் கம்பெனி (ப்ராண்டேட்) தயாரிப்பையே வாங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதில் வாரண்டி உண்டு. அசெம்ப்ள்டு பி.சி இல் இல்லை.

என்ன நண்பர்களே உங்கள் அனுபவம் எப்படி.? வலையுலகில் நிறையபேர் கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்கள் மற்றும் அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறீர்கள்.?

                                          (PICTURE COURTESY: GOOGLE IMAGES)



Tuesday, 23 December 2014

என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?



திருவிளையாடல் படத்தில் நடிகர் பாலையா சொல்லும் ஒரு வசனம். “என்னே மதுரைக்கு வந்த சோதனை?என்பதாகும். அதே போன்று எங்கள் வீட்டு கம்ப்யூட்டருக்கும் சில சோதனைகள். என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?. சில மாதங்களாகவே வீட்டிலுள்ள கம்யூட்டர் ரொம்பவும் மெதுவாகவே இயங்கிக் கொண்டு இருந்தது. நானும் கம்ப்யூட்டரில் DISK CLEANUP, SYSTOM RESTORE – என்று எனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி வந்தேன். அது எதற்கும் மசியவில்லை. எங்கள் வீட்டு கம்யூட்டரை அடிக்கடி வந்து பழுது நீக்கும், சர்வீஸ் சென்டர்காரர்கள் புதிதாக ஒன்று வாங்கும்படி சொன்னார்கள். எனது மகனும் அவ்வாறே புதிதாக ஒன்றை வாங்கி விடலாம்என்றே சொன்னார்.

நானும் ஒரு சராசரி இந்தியன்

பொதுவாகவே இந்தியர்களுக்கு ஒரு நல்ல குணம். பொருட்களை உபயோகப் படுத்தும் விஷயத்தில் இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் காண்பவர்கள். ஜப்பானியர்,அமெரிக்கர் போன்று, இந்த பயன்படுத்து / தூக்கியெறி (USE  & THROW)  என்ற சித்தாந்தத்தை கடை பிடிக்க விரும்பாதவர்கள்.. என்ன ரிப்பேர் ஆனாலும், ஸ்பேர் பார்ட்ஸ் (SPARE PARTS) வாங்கிப் போட்டு ஓட்ட பார்ப்பார்கள். சிலசமயம் ஒவ்வொரு முறையும் செய்யும் ரிப்பேர் செலவை மொத்தமாக கூட்டிப் பார்த்தால், அந்த பொருளின் வாங்கிய விலையை விட அதிகம் போய்விடும்.

இப்போதுதான் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கினேன். மேலும் எதிர்பாராத செலவுகள்.  எனவே இப்போதைக்கு வேண்டாம் என்று கம்ப்யூட்டர் வாங்கும் விஷயத்தை தள்ளிப் போட்டேன். நானும் ஒரு சராசரி இந்தியன் தானே. இந்த கொள்கை காரணமாக அடிக்கடி செலவு.

NHM தமிழ் எழுதியை மீட்டேன்

ஆரம்பத்தில் தமிழ்வலையுலகில் கருத்துரை எழுதுவதற்கு இகலப்பை (‘ikalappai) என்னும் தமிழ் எழுதியை பயன்படுத்தினேன். சில மாதங்கள் கழித்து அது எனது கம்யூட்டரில் டக்கப்போர்  செய்ய ஆரம்பித்து காணாமலே போய்விட்டது. அப்புறம் ஒரு வழியாக NHM Writer  பற்றி தெரிந்து கொண்டு அதன் தமிழ் எழுதியை தரவிறக்கம் செய்து, ஐந்து வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன். இதற்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இதுவும் சென்ற மாதம் சில நாட்கள் டக்கப்போர்செய்து கம்ப்யூட்டரை விட்டு காணாமல் போனது. சரி, என்று வழக்கம் போல் கூகிள் (GOOGLE) உதவியுடன் NHM Writer 2.0 என்ற புதிய பதிப்பை (New version) தரவிறக்கம் செய்தேன். ஆனால் இது கடைசிவரை எனது கம்ப்யூட்டர் திரைக்கு வரவில்லை. எனது மகன் “ நமது கம்ப்யூட்டர் வாங்கி ரொம்ப நாள் ஆகி விட்டது. அதனால் அது புதியவற்றை (LATEST DOWNLOADS)  ஏற்றுக் கொள்ளாது. ஒன்று கம்யூட்டரை மாற்றுங்கள். இல்லையேல் பழைய பதிப்பையே (Old Version) வைத்துக் கொள்ளுங்கள்என்றார். (அவருக்கென்று தனியே லேப் டாப் இருப்பதால், அவருக்கு பிரச்சினை இல்லை.) எனக்கு மின்னல் வெட்டாய் அப்போதுதான் “ AUTOMATIC DOWNLOAD “ காரணமாக, புதியவை வந்து நமது பழைய கம்ப்யூட்டரில் பழைய தமிழ் எழுதிகளை காலியாக்கி விட்டன, என்ற ஞானோதயம் வந்தது. உடனே “ AUTOMATIC DOWNLOAD “ இற்கு வேண்டாம் (NO) சொல்லி விட்டு NHM Tamil Writer இன் பழைய பதிப்பையே (NHM Writer 1.5.1.1 Beta) தரவிறக்கம் செய்தேன். இப்போது எல்லாம் சரியாகி விட்டது. இப்போது வலைப்பக்கம் எனக்கு எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று மீண்டும் வந்து விட்டேன்.

BSNL நெட்நொர்க் காலி

தமிழ் எழுதி பிரச்சினை முடிந்த கையோடு அடுத்த பிரச்சினை BSNL BROADBAND வடிவில் வந்தது. நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அடுத்த பகுதியில், இரண்டு வாரத்திற்கு முன்னர், மாநகர கார்ப்பரேசன் ஊழியர்கள், குடிநீர் பதிப்பதற்காக சாலைகளில் பொக்ளின் உதவியோடு பள்ளங்கள் தோண்டினார்கள். இதில் B.S.N.L நெட்வொர்க் முழுதும் காலி. எனவே எனது மகனிடம் லேப்டேப்பில் இருக்கும் TATA நெட்வொர்க்கை அவ்வப்போது இரவலாக வாங்கி பயன்படுத்த வேண்டி இருந்தது. இதனால் வலைப்பக்கம் அதிகம் வர முடியாமலும், கருத்துரைகள் அதிகம் எழுத இயலாமலும் போய்விட்டது. நேற்று மாலைதான் BSNL ஊழியர்கள் சரி செய்தனர்.

திரையின் ஆட்டம்

வரிசையில் வந்த அடுத்த பிரச்சினை இது. கடந்த மூன்று நாட்களாக  கம்ப்யூட்டர் மானிட்டரின் திரை ஆடிக் கொண்டிருந்தது.

நான் வங்கிப் பணியில் இருந்தபோது, இது மாதிரி ஆட்டம் போடும் கம்ப்யூட்டர் மானிட்டரின் தலையிலும், பக்கவாட்டிலும் என்னடா கண்ணுஎன்று செல்லமாக தட்டுவோம். சரியாகி விடும். எல்லாம் மாலைநேரம் வரைதான். சிலசமயம் சில ரொம்பவே அடம் பிடிக்கும். அப்புறம் சர்வீஸ் என்ஜீனியர்கள் வந்து வேறு ஒன்றை வைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டு கம்ப்யூட்டரை சரி பார்க்கும்  சர்வீஸ் சென்டர்காரர்களும் வேறு மானிட்டரை வைக்க வேண்டும் என்றார்கள். நான் முன்பு இருந்த COMPAQ  கம்பெனி மானிட்டரையே வைக்கச் சொன்னேன். அவர்களோ DELL 21.5 மானிட்டர்தான் தங்களிடம் கிடைக்கும் என்று சொல்லி அதனை வைத்து விட்டார்கள் விட்டாலாச்சாரியா படத்தில் வருவது போல, இப்போது எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் DELL மானிட்டரும் COMPAQ – CPU வும் உள்ளன. கம்ப்யூட்டரும் வேகமாக செயல்படுகிறது. எல்லாம் நன்மைக்கே. கடந்த இரண்டு வார காலமாக விட்டுப்போன கம்ப்யூட்டர் பணிகளை முடிக்க வேண்டும்.

ஒரு வழியாக கம்ப்யூட்டருக்கு வந்த எல்லா பிரச்சினைகளும்  இப்போதைக்கு முடிந்துள்ளன. அலைகள் ஓய்வதில்லை. அடுத்து என்ன? (What is next?) 


                    (ALL PICTURES THANKS TO GOOGLE)   




Thursday, 25 July 2013

எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )



சகோதரி தென்றல் சசிகலாஅவர்கள்
( http://veesuthendral.blogspot.in ) முன்பு  ஒருமுறை 
 எனது ஊர் தொடர் பதிவு “ என்ற தலைப்பில் எழுத அழைத்தார்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. மின்னல் வரிகள் பால கணேஷ், மதுரைத் தமிழன் ( அவர்கள் உண்மைகள்) வரிசையில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள மறுபடியும் தொடர்பதிவு கணினி அனுபவம் குறித்து எழுத அழைத்துள்ளார். நான் ஒருநாள் அனுபவம் என்று எழுத இயலாது. ஏனெனில் எனது பணிக்காலத்தில், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் வங்கிப் பணியின் நிமித்தம் கம்ப்யூட்டரிலேயே காலம் ஓடியது. எனக்கு அவர்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் சுருக்கமாக எழுதுகிறேன்! தென்றலுக்கு நன்றி! (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர்)

வங்கிக்குள் நுழைந்த கம்ப்யூட்டர்:

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே “ –  என்ற நன்னூல் இலக்கண வரிகள் எந்த காலத்திலும் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. அந்த வகையில் வங்கித் துறையிலும் பல மாற்றங்கள் நுழைந்தன. அவற்றுள் ஒன்று கணினி மயமாக்குதல். இருக்கின்ற பணியாளர்களை வெளியே அனுப்பாமல், அவர்களுக்கு  வங்கி சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தனர். மேலும் அதற்கென்று தனியே ஒரு படி ( Computer allowance) தந்தார்கள்.
 
“ஒருவிரல் கிருஷ்ணா ராவ்

எங்கள் வங்கியில், ஆரம்பத்தில் தினசரி வேலைகளை செய்வதற்கு BACK OFFICE முறையை நகர்ப்புற கிளைகளில் தொடங்கினார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் எங்கள் வங்கிக் கிளையில் எனக்கும் கிடைத்தது. ஆனால் யாராவது விடுப்பு எடுத்தால் மட்டுமே நான் கம்ப்யூட்டரில் உட்கார முடியும். எல்லோருக்கும் போலவே எனக்கும் வங்கியிலேயே கம்ப்யூட்டர் பயிற்சி தந்தார்கள். எனக்கு ஆங்கில டைப்ரைட்டிங் பயிற்சி உண்டு. ஆனால் வருடக் கணக்காக அந்த பக்கமே போகாததால் ஒருவிரலில் கம்ப்யூட்டரில் தட்டினேன். அப்போது ஒருவிரலில் தட்டச்சு செய்பவர்களை “ஒருவிரல் கிருஷ்ணா ராவ்என்று கிண்டல் செய்வார்கள். ( ஒரு விரல் என்ற படத்தில் நடித்ததால் கிருஷ்ணா என்பவருக்கு அந்த பெயர்) எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்ப்யூட்டர் பணிசெய்தேன். உடன் மற்றவர்களும் உதவி செய்தனர். ஒருவிரல் மூலமாகவே விரைவுப் பணி (SPEED WORK) பழக்கத்தில் வந்தது. அன்றிலிருந்து கம்ப்யூட்டர் பணி சம்பந்தமான குறிப்புகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். பின்னாளில் அந்த குறிப்புகள் நன்கு பயன்பட்டன. .

முழுதும் கணினிமயமான கிளை ( FULLY COMPUTERISED BRANCH )

சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வந்தது. முழுதும் கணினிமயமாக்கப் பட்ட திருச்சியில் உள்ள மற்றொரு கிளைக்கு SENIOR ASSISTANT ஆக மாறுதல் ஆனேன். வாடிக்கையாளர்கள் பணி செய்ய எனக்கென்று ஒரு கம்ப்யூட்டர் (வண்ணத் திரை) அங்கு ஒதுக்கப்பட்டது. BANK MASTER என்ற PROGRAMME. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின்  மற்ற வங்கிக் காசோலைகளை CLEARING செய்யும் பணிக்கென்று WORDSTAR  - ( DOS ) PROGRAMME  செய்யப்பட்ட கறுப்பு வெள்ளை கம்ப்யூட்டரிலும் பணி. நான் அதில் LOGIN செய்வது வந்த காசோலைகள் விவரங்களை அதில் ஏற்றி ப்ளாப்பியில் சேமிப்பது , பிரிண்ட் எடுப்பது மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டேன். அங்கு கம்ப்யூட்டர் அதிகாரியாக இருந்த சங்கர் என்பவர் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். வங்கி பயிலகத்திலும் பயிற்சி கொடுத்தார்கள். கம்ப்யூட்டரில் வங்கி வேலை என்பது எனக்கு மிகவும் ஆர்வமாகவே இருந்தது. சோர்வு தட்டவில்லை.

கோர் பேங்கிங் ( CORE BANKING ):

அந்த கிளையிலிருந்து பதவி உயர்வு பெற்று  SPECIAL ASST  ஆக இன்னொரு கிளைக்கு சென்றேன். கொஞ்சநாள்தான். வங்கியில் இன்னொரு புதிய மாற்றம். கோர் பேங்கிங் முறையைக் கொண்டு வந்தார்கள். இது முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள மற்ற கிளைகளோடும் உடனுக்குடன் பணபரிமாற்றம் செய்யும் முறை. அதிக கவனமாக இருக்க வேண்டும். பழைய சிஸ்டத்திலிருந்து இன்னொரு சிஸ்டத்திற்கு மாறும்போது ஏகப்பட்ட வேலைகள். இரண்டு சிஸ்டங்களையும் வெவ்வேறு கம்ப்யூட்டரில் மாறி மாறி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். ஒரு வழியாக கோர் பேங்கிங் முழு பயன்பாட்டிற்கு வந்தது. அப்புறம் ஒரு பெரிய கிளைக்கு மாறுதல். முதலில் காசாளர் அப்புறம் ATM சம்பந்தப்பட்ட ( பணம் லோடு செய்வது உட்பட) கம்ப்யூட்டர் பணிகள். அங்கிருந்த போதுதான் வீட்டிற்கென்று ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். முழுக்க முழுக்க எனது பையன் கம்ப்யூட்டர் கேம் விளையாடினான். நான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை படிப்பதோடு சரி.

விருப்ப ஓய்வு ( VRS )

முன்பு ஒருமுறை  எலலா வ்ங்கிகளிலும் விருப்ப ஓய்வு முறை கொண்டு வந்தார்கள்.. நிறையபேர் வெளியே போனார்கள். அதற்கு அடுத்து சில ஆண்டுகள் கழித்து, மறுபடியும் ஒரு விருப்ப ஓய்வு திட்டம் வந்தது. கணக்கு போட்டுப் பார்த்தேன். நான் பணியில் இருக்கும் போது (வருமான வரி போக) என்ன சம்பளம் வாங்கினேனோ அதே சம்பளம் விருப்ப ஓய்வு பெற்றாலும் கிடைக்கும் ( பென்ஷன் + வங்கி டெபாசிட் வட்டி ) என்று தெரிந்தது. நான் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து எனக்கு கடன் கிடையாது. தேவைக்கு மேல் ஆசைபட்டதும் கிடையாது. ஆடம்பர வாழ்க்கையும் இல்லை. எனவே கடன் தொந்தரவுகள் கிடையாது. யோசனையாகவே இருந்தேன். ஏற்கனவே விருப்ப ஓய்வில் சென்றவர்கள், இருப்பவர்கள், குடும்பத்தார் ஆகியோரிடம் செய்த ஆலோசனைக்குப் பிறகு விருப்ப ஓய்வில் வந்துவிட்டேன்.

விருப்ப ஓய்வில் வந்துவிட்ட பிறகு வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் வலையுலகம் நுழைந்தேன். நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) ஆனேன். இப்பொழுதும் தட்டச்சு விஷயத்தில் நான் இன்றும் ““ஒருவிரல் கிருஷ்ணா ராவ் தான்.


படம் (மேலே ) இப்போது எடுக்கப்பட்டது.

எழுத வாருங்களென அழைக்கின்றேன்: 

வலையுலகில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அழைக்கிறேன். ஐந்து பேர் என்பது முடிவல்ல என்று நினைக்கிறேன்.

சுப்பு தாத்தா http://subbuthatha72.blogspot.in

ராஜலக்‌ஷ்மி பரமசிவம்  http://rajalakshmiparamasivam.blogspot.in

ஜோதிஜி திருப்பூர்   http://deviyar-illam.blogspot.in

வை.கோபாலகிருஷ்ணன்   http://gopu1949.blogspot.in

வெங்கட் நாகராஜ்  venkatnagaraj  http://venkatnagaraj.blogspot.com

அன்பின் சீனா http://cheenakay.blogspot.in

N பக்கிரிசாமி  http://packirisamy.blogspot.com

கரந்தை ஜெயக்குமார்  http://karanthaijayakumar.blogspot.com

கே. பி. ஜனா... http://kbjana.blogspot.com

மாதேவி   http://sinnutasty.blogspot.in

ரஞ்சனி நாராயணன்  http://thiruvarangaththilirunthu.blogspot.in

சென்னை பித்தன்  http://chennaipithan.blogspot.com


இராஜராஜேஸ்வரி  http://jaghamani.blogspot.com

மதுமதி    www.madhumathi.com

மனோ சாமிநாதன்  http://muthusidharal.blogspot.in

வவ்வால்   http://vovalpaarvai.blogspot.in

தமிழ் செல்வி  http://vinmugil.blogspot.in

வேதா. இலங்காதிலகம்  http://kovaikkavi.wordpress.com