Showing posts with label குருச்சேவ். Show all posts
Showing posts with label குருச்சேவ். Show all posts

Wednesday, 8 March 2017

அப்போது ஏன் இவர் மவுனமாக இருந்தார்?



எதிர்பாராது ஏதாவது நடந்து விட்டால், நண்பர்களில் சிலர் ‘அப்போதே சொன்னேன் கேட்டியா?” என்று அங்காலாய்த்துக் கொள்வதை நம்மில் பலபேர் கேட்டு இருக்கலாம். இப்போது நிறையபேர் பொதுவெளியில் சொல்லும் வார்த்தை ‘அப்போது ஏன் இவர் மவுனமாக இருந்தார்?” என்பதுதான். 

அதிகாரிகள் முன்னிலையில்

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆரம்ப பள்ளிகளில், அதிகாரி வருகை என்று ஒன்று உண்டு.. பெரும்பாலும் திடீர் விசிட் என்பது இருக்காது. சொல்லி வைத்தே எல்லாம் நடப்பது போல் இருக்கும். அந்த அதிகாரியும், சில சமயம் பள்ளி மாணவர்களிடம் உங்களுக்கு இங்கு ஏதேனும் குறை இருந்தால் என்னிடம் இப்போதே இங்கு சொல்லலாம் என்று சொல்லுவார். அங்கு கூடவே நிற்கும், தமது வகுப்பு ஆசிரியையும், தலைமை ஆசிரியையும் மீறி யார் என்ன சொல்லிவிட முடியும்? மவுனம் காத்து விடுவார்கள்.

அதேபோல அரசு அலுவலகங்களிலும் சில தனியார் கம்பெனிகளிலும், உயர் அதிகாரிகள் வரும்போதும், இதே போல சம்பிரதாயமாக கேட்பார்கள். அங்கே நிற்கும் அதிகாரிகளை மீறி அங்குள்ள ஊழியர்கள் என்ன சொல்லி விட முடியும்? அப்படியே சொல்லி விட்டாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. சொல்லி வம்பை விலைக்கு வாங்குவதை விட, எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது. எனவே மவுனம்தான் நிலவும்.

அப்போது மவுனம் காத்தவர்கள் எல்லாம், வெளியில் வந்தவுடன், மவுனத்தை கலைத்து விடுவார்கள். அப்போது சொல்ல நினைத்தை சொல்லுவார்கள். 

குருச்சேவ் மவுனம்

விளாதிமர் லெனினுக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவின் ஆட்சியாளராக இருந்தவர் ’இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலின். அவர் தனது ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் முன்னிட்டு, கட்சியிலும் ஆட்சியிலும் சில கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். இதனால் இவரை சிலர் சர்வாதிகாரி என்று சொல்வார்கள். ஸ்டாலினுக்குப் பிறகு பிரதமராக வந்தவர் குருச்சேவ். ஜோசப் ஸ்டாலின் உயிரோடு இருந்தவரை அவர் குறித்து ஏதும் சொல்லாத குருச்சேவ், அவர் இறந்த பிறகு அவரைப்பற்றி நிறையவே கடுமையாக விமர்சனம் செய்தார். இப்போது பேசும் குருச்சேவ் அப்போது ஏன் மவுனமாக இருந்தார் என்ற கேள்வியும் அப்போதே உண்டு. இதுபற்றி ஒரு தகவலும் உண்டு.


1956 பிப்ரவரி 25 ஆம் தேதி. நடைபெற்ற ஒரு ரகசிய கூட்டம் அது. கதவுகள் மூடிய அரங்கில், சோவியத் ரஷ்யாவின், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நிரம்பி இருக்கின்றனர். அப்போது, அங்கே அந்நாட்டின் அதிபராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்த குருச்சேவ் தனக்கே உரிய ஸ்டைலில் ஒரு நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். இதற்கு முந்தைய ஆட்சியில் இருந்த, ஸ்டாலினை ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சி மோசமானது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் “அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ” என்று கேட்டார். உடனே குருச்சேவ் அதட்டலாக, ”யார் அது? எழுந்து நின்று சொல்லவும்” என்று சொன்னார்.. ஆனால் பயம் காரணமாக யாரும் எழுந்து நிற்கவில்லை. கூட்டத்தில் அமைதி நிலவியது. உடனே குருச்சேவ், சிரித்துக் கொண்டே, ” நல்லது. நம்மால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டு இருப்பீர்கள் “ என்று சொன்னார். 

குருச்சேவ் தகவல் பற்றி எழுத துணை நின்றவை (நன்றியுடன்)
ஆனந்த விகடன் (10 செப்டம்பர் 2008 ) & தினமணி ( 12 ஏப்ரல் 2016 )