ரொம்ப நாளைக்கு அப்புறம், எங்கள் சொந்த ஊருக்கு (திருமழபாடி) அருகில்
உள்ள, எனது பெரியம்மா ஊருக்கு சென்று இருந்தேன்.
ஊரின் பெயர் ஆலம்பாடி மேட்டூர். இந்த ஊர், லால்குடி மார்க்கத்தில், சிதம்பரம்
சாலையில், புள்ளம்பாடி, விரகாலூர் தாண்டி உள்ளது. கொள்ளிடம் ஆறு, வாய்க்கால், குளம்
என்று பசுமையாக இருக்கும். சின்ன வயதினில் அந்த ஊருக்கு அடிக்கடி சென்று இருக்கிறேன்.
போன தடவை போயிருந்த போது மழை இல்லாததால் வறட்சிதான். இப்போது ஒருவாரமாக நல்ல மழை. எனவே
இந்த தடவை ஊரில் நிறையவே பசுமை. வாய்க்கால் ஓரத்திலும் குளக்கரையிலும் நிறையவே சேமை
இலைச் செடிகள். சேம்பு எனப்படும் இந்த சேப்பங் கிழங்குச் செடிகள். மஞ்சள் செடியைப்
போன்று கொத்து கொத்தாக காட்சி தந்தன. (அப்போது அந்த ஊரில் எடுத்த புகைப்படங்கள் கீழே)
அந்த ஊருக்கு பள்ளி விடுமுறையில் போகும்போதெல்லாம், எனது வயதுப்
பையன்களோடு, இந்த இலைகளை வைத்து விளையாடி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து திருச்சி,
அரியலூர் மார்க்கத்தில் உள்ள ஊர்களில் பல உணவு விடுதிகளில் இந்த சேம இலையைத்தான் டிபன்
கட்ட பயன்படுத்தினார்கள். குறிப்பாக இறைச்சி கடைகளில் இந்த இலைதான். இப்போது எல்லவற்றிலும்
பிளாஸ்டிக் மயம்.
இந்த சேம்பு செடிகள் குத்துகுத்தாக, மஞ்சள் செடிகளைப் போன்றே வளரும்.
இந்த செடியின் அடியில் விளையும் கிழங்கு சேப்பங்கிழங்கு எனப்படும். சேப்பங்கிழங்கு
பொரியல், சேப்பங் கிழங்கு புளிக்குழம்பு, சேப்பங் கிழங்கு மோர்க்குழம்பு சமையலில் பிரசித்தம்.
கிழங்கு வழவழவென்று இருக்கும். செய்யும் முறையில் செய்தால் சுவையோ சுவை. ( இந்த சேப்பங்கிழங்கு
மோர்க் குழம்பை திருச்சி ஆண்டார் வீதியில் இருக்கும் ‘மதுரா லாட்ஜ்’ ஹோட்டலில் ருசித்து
சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.) இந்த சேப்பங்கிழங்கை அடிக்கடி சமையலில் சேர்த்துக்
கொண்டால் மலச்சிக்கலும் மூல வியாதியும் வராது என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப் பட்டு இருக்கிறேன்.
எங்கள் ஊர்ப்பக்க, வாய்க்கால் ஓர செடிகளாக இருக்கும், இந்த சேப்பங்
கிழங்குச் செடிகள், சில இடங்களில், வயல்களில் பயிரிடப்பட்டு நல்ல லாபத்தைத் தரும் தொழிலாக
உள்ளது.
பிற்சேர்க்கை ( 18.09.2017 – 19.05 P.M )
பிற்சேர்க்கை ( 18.09.2017 – 19.05 P.M )
ஓய்வுபெற்ற
வங்கி அதிகாரி மற்றும் வேளாண்மையில் பட்டம் பெற்றவருமான, மூத்த வலைப்பதிவர் V.N.S அய்யா
அவர்கள், கருத்துரைப் பெட்டியில், மேலே பதிவு சம்பந்தமான ஒரு கருத்துரையை, ஒரு
திருத்தத்தை கீழே சொல்லி இருக்கிறார்.
நீங்கள்
வாய்க்கால் ஓரத்தில் பார்த்தவை சேப்பங்கிழங்கு குடும்பமான Araceae வைச் சேர்ந்தவை. ஆனால்
அவை சேம்பு (சேப்பங்கிழங்கு) செடிகள்
அல்ல என எண்ணுகிறேன். . நாம்
சாப்பிடும் சேம்பு வின் தாவரப்பெயர்
Colocasia esculenta. சேம்பில்
மட்டும் ஆறு வகைகள் உள்ளன.
சேம்பைப்பற்றி
வெளியிட்டு சேப்பங்கிழங்கு வறுவலையும், மோர்க்குழம்பையும் நினைவூட்டிவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! //
