Showing posts with label சமயபுரம். Show all posts
Showing posts with label சமயபுரம். Show all posts

Wednesday, 17 August 2016

சமயபுரம் – நண்பர்களின் அன்னதானம் (2016)



நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை (15.08.16), இந்திய சுதந்திர தினத்தன்று பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கும் திருத்தலத்தில், கடைவீதியில்  29 ஆவது வருடமாக ஒரு அன்னதானம். ஆண்டுதோறும் நண்பர்கள் செய்து வருவது. நான் கடந்த ஒன்பது வருடங்களாக அவர்களோடு இணைந்துள்ளேன். திரும்பத் திரும்ப இதே விஷயத்தைப் பற்றி வருடம் தோறும் எழுத வேண்டுமா? என்று எனக்குள் ஒருவன் கேட்டான். அன்று புதுக்கோட்டையில் “வரலாறு முக்கியம் நண்பரே!” என்று என்னிடம் சொன்ன கவிஞர் வைகறையின் குரல் மனதுக்குள் ஒலித்ததால் இந்த கட்டுரை.

அன்னதானமும் அரசின் கட்டுப்பாடுகளும்:

முன்பெல்லாம் ஸ்ரீரங்கம். சமயபுரம் போன்ற இடங்களில்; தனிப்பட்ட முறையில் அன்னதானம் என்பது மதிய உணவாகவே இருந்தது. சிலர் ஒரு பெரிய பந்தல் போட்டு அல்லது கல்யாண சத்திரங்களை வாடகைக்கு எடுத்து சாப்பாடு போட்டனர். தயிர்சாதம், சாம்பார் சாதம் என்று கொடுத்தனர். தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களில் அன்னதானம் என்ற திட்டத்தைத் தொடங்கிய பிறகு, நிறையபேர் மதிய உணவை அன்னதானமாக வழங்குவதற்கு பதிலாக, திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவதோடு நின்று விட்டனர். எங்களது நண்பர்கள், ஆரம்பத்தில் புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் கடுமையாக்கப் பட்டதால். தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ள, கோகுல சமாஜம் அறக்கட்டளை மூலம், சமயபுரம் கடைவீதியில் பக்தர்களுக்கு காலை உணவை (இட்லி, பொங்கல், காபி) அன்னதானமாக நண்பர்கள் வழங்கினார்கள்.. அப்போது என்னால் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் இங்கே. 
 
சமயபுரம் கடைவீதியில்:

(படம் மேலே) அன்னதானம் நடந்த கருப்பண்ண சாமி கோயில் வாசல்






 



(படம் மேலே) பால்குடம் கொண்டு வந்த பக்தர்கள் தேர்.

சமயபுரம் கோயில் முன்பு:

எப்போதுமே, வருடம் முழுவதும், சமயபுரம் கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும். கோயிலுக்குள் நுழைய முடியாது. அம்மன் தரிசன வரிசையும் நீண்டு காணப்படும் எனவே பல பக்தர்கள் கோயில் வாசலிலேயே (கிழக்கு) தேங்காய் உடைப்பு, சூடம் கொளுத்துதல், அகல் விளக்கு ஏற்றுதல் என்று வழிபட்டு சென்று விடுவார்கள். நானும் அவ்வாறே அன்று சூடம் ஏற்றி வழிபட்டு வந்தேன். அங்கு கோயில் வாசலில் எடுக்கப்பட்ட சில படங்கள் (கீழே) 





ஒரு முக்கிய அறிவிப்பு:

சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, 11.07.2016 முதல் மூலவரான அம்மன் தரிசனம் கிடையாது. அதற்குப் பதில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மனின் வண்ணப்படம் மட்டுமே தரிசனமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே சமயபுரம் அம்மனை நேரடி தரிசனம் செய்ய விரும்புபவர்கள் குடமுழுக்கு நடந்த பின்னர் (தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை) செல்வது நல்லது. (படம் கீழே)


                                                                                                                                                                     
இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம் http://tthamizhelango.blogspot.com/2012/08/blog-post_13.html
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013) http://tthamizhelango.blogspot.com/2013/08/2013.html   
அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html 
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014) http://tthamizhelango.blogspot.com/2014/08/2014.html 
சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015) http://tthamizhelango.blogspot.com/2015/08/2015.html 

Tuesday, 18 August 2015

சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)



பத்து நாட்களுக்கு முன்னர் நண்பர் சங்கர் அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு (இவரும் நானும் ஒன்றாக பணிபுரிந்தோம்) “ இந்த ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி சமயபுரத்தில் அன்னதானம். காலையிலேயே வந்து விடுங்கள்.” என்று தகவல் சொன்னார். நானும் “சரி வழக்கம் போல வந்து விடுகிறேன்” என்றேன். எப்போதும் தினமும் காலையில் 5 மணிக்கு உறக்கத்திலிருந்து எழுவது வழக்கம். அன்றைக்கு (17.08.2015, ஞாயிறு) 4 மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்து விட்டு சமயபுரம் செல்ல கே.கே.நகர் (திருச்சி) பஸ் ஸ்டாண்ட் வந்தேன். இதற்கு முன்னர்  எனது TVS மொபெட்டில் செல்வேன். இப்போது எங்கு சென்றாலும் பஸ் பயணம்தான். மக்களோடு மக்களாய் சிறுபிள்ளை போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பஸ் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

சத்திரம் பஸ் நிலையம் வந்தேன். சமயபுரம் பஸ் நிற்கும் இடத்தில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கூட்டம். முன்பெல்லாம் சமயபுரத்திற்கு சில சிறப்பு தினங்களில் மட்டும் செல்வார்கள். இப்போது வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  காலியாக நின்ற பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்ந்தேன். காவிரிப் பாலம் வந்தது. ஆடி  பதினெட்டிற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைந்து அரை ஆறாக காவிரி சலசலத்துக் கொண்டு இருந்தது. காவிரி பாலத்திலிருந்து சமயபுரம் வரை நிறைய பக்தர்கள் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார்கள். பக்தர்களின் அடையாளமாக மஞ்சள் ஆடை, துண்டு அணிந்து இருந்தார்கள். பல பெண்கள் தலை முடியில் வேப்பிலையை சூடி இருந்தனர்.  எல்லோரும் தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தார்கள். சமயபுரத்திற்கு முன்னர் உள்ள வாய்க்கால் எப்போதும் ஆறுபோல் இருக்கும். பெரும்பாலான நடை பக்தர்கள் அதில்தான் குளியல் போடுவார்கள். இன்று வாய்க்காலில் தண்ணீரே இல்லை. எல்லோரும் வழியில் கிராமங்களில் இருந்த தண்ணீர் தொட்டி குழாய்களிலும் அடி பம்புகளிலும் குளியல் போட்டுக் கொண்டும் துணிகளை பிழிந்து கொண்டும் இருந்தனர்.

பஸ் சமயபுரம் நெருங்கியதும் காலை நேரம் என்பதால் கடைத்தெருவில் எல்லா கடைகளிலும் ஊதுவத்தி சாம்பிராணி மணத்தோடு பக்திமணம் நிரம்பிய பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதபடியினால், சமயபுரம் கோயில் குளத்திலும் கட்டணக் குளியல் இடங்களிலும்  குளிக்க கும்பல் அலை மோதியது.

நண்பர்கள் அன்னதானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் காலை நேரம் என்பதால் பக்தர்களுக்கு பன்னும் டீயும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கப்புறம் இட்லியும் சாம்பாரும் சுடச்சுட கொடுக்கப்பட்டன.

இந்த வருடமும் வழக்கம் போல,  இன்று அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி (கவிஞர் கண்ணதாசன் ஊர்) அருகே உள்ள அரிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இவரோடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மற்றும் ஓய்வு பெற்ற நண்பர்கள் சிலரும் இணைந்துள்ளனர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன். இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) மற்றும் மேலே சொன்ன செல்வம் இருவரும்தான். நேற்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.


















இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)


Friday, 22 August 2014

சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)



(படம் மேலே) அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலின் கிழக்கு வாசல் 

எனது நண்பர்கள் சிலர் 25 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஒருநாள் சமயபுரத்தில் அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த அன்னதானத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக இணைந்துள்ளேன்.

ஆரம்பத்தில் சமயபுரத்தில் கடைத் தெருவில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய சத்திரத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இந்த அறப்பணி நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு முதல்நாள் மாலையிலேயெ சென்று விடுவோம். சத்திரம் என்றால் ஒவ்வொன்றும் ஒரு கல்யாண மண்டபம். ஒரு விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்று சமையல்காரர்களை வைத்து சமையல் வேலை நடக்கும். பெரும்பாலும் புளி சாதம்தான். நண்பர்கள் எல்லோரும் ஒரு குழுவாக ஆளுக்கு ஒரு வேலையாக புளிசாதத்தை 500 அல்லது 600 பொட்டலங்களாக போட்டுவிடுவோம். அடுத்தநாள்  புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் ஆகியவை அந்த சத்திரத்து வாசல் படியிலேயே சமயபுரம் வரும் பக்தர்களுக்கு வழ்ங்கப்படும். ஆனால் சமீப காலமாக சுகாதாரத்தை முன்னிறுத்தி அன்னதானம் செய்வதில் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.     

சென்ற ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்

// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //

என்று குறிப்பிட்டு இருந்தார்.

எனவே சென்ற ஆண்டு முதல் முறைப்படி உணவுக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கோகுல சமாஜம் அறக்கட்டளை தயார் செய்து கொண்டு வந்த உணவு வகைகளை காலை உணவாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை தினசரி அன்னதானம், கல்வி, மருத்துவம் மற்றும் கோசாலை சம்பந்தப்பட்ட தொண்டுகளை செய்து வருகின்றனர்.  இந்த ஆண்டும் 27 ஆவது வருடமாக சென்ற ஆண்டைப் போலவே 18.08.14 திங்கட் கிழமை அன்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது. சமயபுரம் கடைத் தெருவில் உள்ள அருள்மிகு கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே இந்த அன்னதானம் செய்யப்பட்டது. காலை இனிப்பு பன், இட்லி சாம்பார் மற்றும் காபி ஆகியவை சமயபுரம் வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.  (அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே)

(படம் மேலே) அன்னதானம் நடைபெற்ற அருள்மிகு கருப்பண்ண சாமி மதுரைவீரன் சாமி கோயில் வாசல்

(படம் மேலே) கோயில் உள்ளே வேனில் கொண்டு வரப்பட்ட உணவு வகைகள்.)

 

   

(படங்கள் மேலே) அன்னதானம் நடைபெறுகிறது

(படம் - மேலே) அன்னதானம் - பக்தர்கள் வரிசை

(படம் - மேலே) வரிசைப்படுத்தும் அன்பர்கள்

(படம் - மேலே) வரிசைப்படுத்தும் அன்பரோடு நான்

(படம் - மேலே) சமயபுரம் கடைவீதி

  

Thursday, 22 August 2013

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி



விக்கிரமாதித்தன் கதைகள் படிப்பது என்றால் நேரம் போவதே தெரியாது. பள்ளிக்கூட விடுமுறையில் எங்கள் அம்மாவின் கிராமம் சென்று இருந்தபோது அங்கு கிடைத்த பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் படித்தேன். அன்றிலிருந்து விக்கிரமாதித்தன் என்றால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பின்னாளில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மாகாளிக்குடியில் உள்ள காளி கோயில் சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்று ஒருகதை சொன்னார்கள். அன்றிலிருந்து அங்கு போய்வர எண்ணி, இப்போதுதான் முடிந்தது.

கடந்த திங்கட் கிழமை (19.08.2013) சமயபுரத்தில் நண்பர்கள் நடத்திய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானம் முடிந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அருகில் மாகாளிக்குடி என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் சென்று வந்தேன். சமயபுரத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். எனவே அங்கிருந்து நடந்தே சென்று வந்தேன்.


மாகாளிக்குடியும் விக்கிரமாதித்தனும்.

உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள்.. ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு, முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்கஎன்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி தனது புத்திக் கூர்மையினால் காளியின் அருளால், தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வாங்கி விடுகிறான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்து விடுகின்றன.. இதனால் இருவரும் கவலை அடைகின்றனர். தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி  ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது.. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி காடாள்வதுஎன்ற யோசனை சொல்கிறான். இதனால் இரண்டாயிரம் வயது விக்கிரமாதித்தனுக்கும் வந்து விடும்.

இந்த “காடாறு மாதம்; நாடாறு மாதம் “ முறைப்படி வருகையில் ஒருதடவை இந்த மாகாளிக்குடி என்ற இடத்திற்கு விக்கிரமாதித்தன் வருகிறான். கூடவே அவனுடைய நண்பனும் மந்திரியுமான பட்டி மற்றும் வேதாளம்.கூடவே தான் எப்போதும் வணங்கும் உஜ்ஜயினி காளியின் விக்கிரகம். இங்கு தங்கி காடு ஆறுமாதம் முடிந்து நாடு திரும்பும் போது விக்கிரகத்தை எடுக்கும்போது எடுக்க முடியவில்லை. விக்கிரமாதித்தன் கனவில் வந்த காளி, தான் இந்த ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்ல, அவனும் அப்படியே ஒரு கோயில் ஒன்றைக் கட்டி விட்டுச் செல்கிறான்.

இதுதான் இந்த கோயிலுக்காகச் சொல்லப்படும் கதை. நமது நாட்டில் ராமாயணம், மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றில் வரும் கதை மாந்தர்களை பல கோயில்களின் தல புராணத்தோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது.  இந்த உஜ்ஜயினி மாகாளியை இங்குள்ளவர்கள், உச்சி மாகாளி என்றும் உச்சினி மாகாளி என்றும் அழைக்கின்றனர்.


மாகாளிக்குடி கோயில் படங்கள்:

கோயிலுக்குள் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இங்கே
தருகின்றேன்.

படம் (மேலே) சம்யபுரம் கோயில் அருகே உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் தோரண வாயில்.





படம் (மேலே) காளியம்மன் கோயில் வாயில் அருகே உள்ள அறிவிப்புப் பலகை


.படம் (இடது) காளியம்மன் கோயில் நுழைவு வாயில்          




படம் (மேலே)  நுழைவு வாயில் மேலே உள்ள காளியின் உருவச் சிலை


படம் (மேலே)  நுழைவு வாயில் இடப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.
 
படம் (மேலே)  நுழைவு வாயில் வலப்பக்கம் உள்ள ரிஷப சிற்பம்.




படம் (மேலே)  நுழைவு வாயில் உட்பக்கம்


படம் (இடது)  மந்திரி பட்டி (ஸ்ரீ களுவன்) மற்றும் ஸ்ரீ வேதாளம் சன்னதி


படம் (மேலே)  ஸ்ரீ மதுரை வீரன் சன்னதி

படம் (மேலே) கோயிலின் ஒரு மூலை


படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி  சன்னதி


படம் (மேலே) ஸ்ரீ கருப்பண்ணசாமி  சன்னதி மேல் உள்ள சிலை


படம் (மேலே) கோயிலின் இன்னொரு  மூலை

நான் மாகாளிக்குடியில் உள்ள காளி சிலை விக்கிரமாதித்தன் வைத்தது என்பதால், காளி கோயில் பெரிய கோயிலாக இருக்கும் என்று என்ணினேன். ஆனால் அதற்கு மாறாக சிறிய கோயிலாகத்தான் உள்ளது.